மென் மழை விழப்போகிறது
மொழிபெயர்ப்பு : விஜயராகவன்
கதை நிகழும் சூழலின் பின்புலம்:
இந்த சிறுகதை அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் ராணுவ மோதலின்றி பனிப்போர் நிலவிய 1950 களின் காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும். இரு நாடுகளும் பரஸ்பரமாக, அணு ஆயுத தளவாடங்களை கண்டுபிடிப்பதுவும் மேம்படுத்துவதுமாக இருந்த காலமது. தனது ஆயுத பலத்தால் எதிரி நாட்டை அச்சுறுத்தி தனது அணுவெடிகளை உபயோகிக்க வேண்டாத நிலையை அடைய இருவரும் முயன்றனர். இரண்டாம் உலகபோரின்போது ஜப்பான் மீது அமெரிக்கா இரு அணு குண்டுகளை போட்ட நிகழ்வின் காரணத்தால் அணு ஆயுத போர் மூளும் எனும் பரந்துபட்ட பயபீதியும் நிலவியது.
000
வரவேற்பறையில் இருந்த குரல் ஒலி கடிகாரம்,
"டிக்- டாக் ஏழு மணி,படுக்கையிலிருந்து எழும் நேரம், எழும் நேரம், ஏழு மணி!"
வீட்டில் உள்ளோர் எல்லோரும் உடனே எழுந்திரிக்க மாட்டார்களோ என அஞ்சி பாடியதைப்போலிருந்தது. வீட்டின் காலைநேரப்பொழுது வெறுமையாக இருந்தது. கடிகாரம் மறுபடியும் மறுபடியும் வெறுமையினூடே ஒலித்துக்கொண்டேயிருந்தது.
"ஏழு- ஒன்பது, காலை சிற்றுண்டி நேரம், ஏழு-ஒன்பது!"
சமையலறையில் இருந்த காலை சிற்றுண்டி சமைக்கும் அடுப்பு ஒரு சீழ்க்கை ஒலி எழுப்பியபடியே, சீரான பழுப்பு நிறத்தில் வெந்த எட்டு ரொட்டி டோஸ்ட் களை வெளி தள்ளியது. அரைவேக்காட்டில் வேக வைக்கப்பட்டு வெளிப்போந்த எட்டு முட்டைகள், பதினாறு துண்டு பன்றி இறைச்சி, இரண்டு கோப்பை காப்பி, குளிர்ந்த பால் இரண்டு தம்ளர்களில் என வந்து குழுமின.
"இன்றைய தினம் ஆகஸ்ட் 4, 2026," என இரண்டாவதாக ஒரு குரல் சமையலறையின் மேல் விதானத்திலிருந்து ஒலித்தது.
"இது கலிபோர்னியாவில் இருக்கும் ஆலன்டேல் நகரமாகும்"
ஞாபகப்படுத்திக்கொள்ள ஏதுவாக அந்த குரல் மூன்று முறை தேதியை திரும்பத்திரும்ப சொன்னது.
"இன்றைய தினம் திரு. பெதர்ஸ்டோனுடைய பிறந்த நாளாகும்.
டிலிட்டா வின் திருமண நாளும் இன்றுதான். ஆயுள் காப்புறுதி சந்தா தொகை மற்றும் குடி நீர் வரி, மின்சார கட்டணம், எரி வாயு கட்டணம் ஆகியவை செலுத்தப்படவேண்டிய தினமும் ஆகும்."
அறை சுவற்றில் மறைந்திருந்த பகுப்புவிசைகள் இயங்கி மின் விழிகளை தூண்ட காந்த நினைவு நாடாக்கள் சுழலத்தொடங்கின
"எட்டு - ஒன்று, டிக்- டாக்,மணி எட்டு- ஒன்று, பள்ளி, அலுவலகம் போக ஓடுங்கள்,ஓடுங்கள் எட்டு- ஒன்று!"
ஆனால் எந்த கதவும் ஓங்கி சாத்தப்பட்டு, விரைந்து ஓடி செல்லும் ரப்பர் காலணிகளின் அழுத்தத்தால் தரை விரிப்புகள் அழுந்தப்படவில்லை. வீட்டின் வெளியே மழை பொழிந்துகொண்டிருந்தது.
வெளிக்கதவில் பொருத்தப்பட்டிருந்த தட்பவெட்பமானி பெட்டியிலிருந்து,
"மழை,மழை, போய் விடு, மழை அங்கி, ரப்பர் காலணிகள் இன்று அவசியம்...." என சன்னமாக பாடியது. காலியாக இருந்த வீட்டின் மேல் மழை வீசி எதிரொலித்தது.
வெளிப்புறத்தில் அமைந்திருந்த வாகன நிறுத்தத்தின் கதவு இசை ஒலி எழுப்பியபடியே எழும்பியது. உள்ளிருந்த மகிழுந்து வெளியே தெரியலாயிற்று. வெகு நேர காத்திருப்புக்கு பின் கதவு தாழ்ந்து மூடிக்கொண்டது.
நேரம் எட்டு முப்பது ஆகும் தறுவாயில் மேஜையிலிருந்த அரைவேக்காட்டில் வெந்த முட்டைகள் ஆறி சுருங்கிப்போயின மேலும் ரொட்டி டோஸ்ட்டுகள் கல்லென இறுகிபோனது.
அலுமினியத்தால் ஆன ஒரு துடைப்பான் உணவுப்பொருட்கள் அனைத்தையும் பாத்திரங்கள் கழுவும் தொட்டிக்குள் தள்ளியது.தொட்டியில் விழுந்த சுடு நீர் பள்ளக்குழியில் இருந்த உலோக துளைக்குள் தள்ள, அங்கு அவை யாவும் அரைத்து தூளாக்கப்பட்டு தொலைவில் உள்ள கடலுக்கு அனுப்பப்பட்டது. உணவு பரிமாறப்பட்ட தட்டுகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவை கழுவும் சுடுநீர் தொட்டிக்கு செலுத்தப்பட்டு பளீரிடும் சுத்தத்தில் துடைத்து அடுக்கப்பட்டது.
"ஒன்பது- பதினைந்து," என கடிகாரம் பாடியது ,
'சுத்தம் செய்யும் நேரம்'
சுவற்றின் துளைகளிலிருந்து, சிறிய தானியங்கி எலி வடிவ இயந்திரங்கள் துள்ளி வந்தன, அவை உலோகத்தாலும் ரப்பராலும் கலந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.
மீசை போலிருந்த தங்களின் துடைப்பானால் அமரும் இருக்கைகள், தரை விரிப்புகள், ஆகியவற்றில் ஒளிந்திருந்த தூசி தும்புகளை உருஞ்சி சுத்தம் செய்துவிட்டு, மர்மமான போராளிகள் ஓடி மறைவதைப்போல தங்களின் சுவற்று பொந்துகளில் போய் மறைந்தன. அவற்றின் இளஞ்சிவப்பு நிற மின்கண்களின் ஒளிர்வு மங்கி மறைந்தது.வீடு துடைக்கப்பட்டு சுத்தமானது.
பத்து மணி.
மழையினூடே சூரியன் பிரகாசிக்க தொடங்கியது. சாம்பல்குவியல்களும் இடிபாடுகளும் நிறைந்த நகரத்தின் நடுவில் வீடு தனித்திருந்தது. இந்த ஒரு வீடுதான் சிதிலமடையாமல் முழுதாக மீதமிருந்தது.இரவில் இந்த பாழடைந்த நகரம் கதிரியக்க ஒளியால் ஒளிர்வது பல மைல் தூரத்திலிருந்தும் பார்க்க முடிந்தது.
பத்து- பதினைந்து. தோட்டத்து நீர் குழாய்கள், தங்க நிற தூவானமாக நீரை தூவத்தொடங்கியது, காலை நேர ஒளியில் நீர்துளிகள் பளீரென ஜொலித்தன. குழாயின் நீர்பீய்ச்சல் கண்ணாடி ஜன்னல்களில் விழுந்து கழுவியது. வீட்டின் மேற்க்கு பக்கம் முழுதும் ஒருசேர சமமாக கருகியிருந்ததால், அடித்திருந்த வெள்ளை நிற சாயம் குலைந்திருந்தது. அதில் ஒரு ஐந்து இடங்கள் மட்டும் சாயம் கருகாமல் வரைந்திருந்த நிழல் ஓவியப்படங்கள் அழியாமலிருந்தது. அதில் ஒன்றில் ஒரு ஆள் தோட்டத்து புல்லை ஒரேசீராக செப்பனிட்டுக்கொண்டிருப்பதும், ஒரு பெண் மலர்கொய்ய குனிந்திருப்பதும், சற்று தள்ளி இன்னொரு புறம், ஒரு சிறுவன் பந்தை வீசியெறிவதும், அவனுக்கு எதிரில் உள்ள ஒரு சிறுமி அந்த பந்தை பிடிக்க கைகளை உயர்த்தி, கீழே வராத அந்த பந்தை பிடிக்க காத்து நின்றிருப்பதுவாக, ஓவியங்கள் மட்டும் கருகாமலிருந்தது.
சாயத்தில் இந்த ஐந்து இடங்கள் மட்டும்-ஒரு மனிதன், ஒரு பெண்மணி,இரு குழந்தைகள், அந்த பந்து ஆகியவைமட்டும்- மீதமிருந்தன. சுவற்றின் மற்ற இடம் அனைத்தும் மெல்லிய கரிக்கட்டை படலம் படிந்து கருகியிருந்தது.
காலையொளியில், பூவாளித்தூவல் நீரால் தோட்டம் ஒளிர்ந்தது.
இந்த தினத்திற்கு முன்பாகவெல்லாம், வீடு தனது ஓர்மையை மிக நல்ல முறையில் பேணி வந்தது. எவ்வளவு சாக்கிரதையாக. அது வினவும் தெரியுமா,
"யார் இங்கு போவது? கடவுச்சொல் என்னவென்று சொல்லவும்?"
தனித்தலையும் நரிகளிடமிருந்தும், ஊளையிடும் பூனைகளிடமிருந்தும் எந்த பதிலும் வராததால், ஒரு மூதாட்டியின் பாதுகாப்பு செய்கையைப்போல, அது தனது ஜன்னல்களையெல்லாம் மூடி திரையிட்டுக்கொண்டது. அந்த செயல் ஒரு இயந்திரத்தனமான பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பிலிருந்தது.
வீடு, ஒவ்வொரு சத்தத்திற்கும் எதிர்வினையாக அதிர்வை கொடுத்தது. சிட்டுக்குருவி ஜன்னலருகே வந்து உரசினால்கூட ஜன்னலின் பாதுகாப்பு சட்டம் உதறி மூடியதால் பறவை பயந்து பறந்தோடியது!.
இல்லை,
ஒரு பறவை கூட இந்த வீட்டை தொட முடியாது!
இந்த வீடானது சிறிதும் பெரிதுமான பல ஆயிரம் சிப்பந்திகளின் ஊழியம் பெறும் ஆலயம் போன்றது. ஆனால் அதன் கடவுளர்கள் போய் மறைந்த பின்பும், மதத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து நடப்பதைப்போல நடந்துகொண்டிருந்தது. அது முட்டாள்தனமாகவும் உபயோகமற்றும் இருந்தும்கூட நடந்துகொண்டேதானிருந்தது.
மதியம் பன்னிரெண்டு.
வீட்டின் முன் வாசலருகே ஒரு நாய் நடுங்கிய படியே, வந்து ஊளையிட்டது. நாயின் குரலை அடையாளம் கண்டுகொண்ட முன்புற வாசல்கதவு திறந்து அதை அனுமதித்தது. ஒரு காலத்தில் பெரிதாகவும் சதைபிடிப்பானதாகவும் இருந்த அந்த நாய் தற்பொழுது, எலும்பும் தோலுமாகவும் சொறி பிடித்தும் இருந்தது. அது அழுக்கான சேற்றுக்கால்களுடன் வீட்டினுள் நுழைந்தவுடன், அழுக்கையும் சேற்றையும் மோப்பம் பிடித்த எலிவடிவ இயந்திரங்கள் வேகமாகவும் கோபமாகவும் வெளிவந்து சுத்தம் செய்தன. இந்த அழுக்கு அசௌகரியத்தால் இயந்திரங்கள் கோபமுற்றன.
வீட்டினுள் ஒரு இலை துணுக்கு விழுந்தால்கூட உடனே சுவற்றிலிருந்து செம்பு உலோக எலிகள் வெளிவந்து, ஆட்சேபத்திற்குரிய தூசி,முடி, அல்லது காகித துணுக்குகள்ஆகியவற்றை தங்களின் சிறிய எஃகு பற்களால் கவ்விகொண்டு தங்களின் பதுங்கிடத்திற்கு சென்று, அங்கிருக்கும் செலுத்துக்குழாயில் குப்பைகளை கொட்ட, அது தரைகீழ்தளத்தில் கொடிய பேய் போல் அமர்ந்திருக்கும் எரிகலனில் போய் சேர்ந்து எரிக்கப்படும்.
நாய் மாடி அறைகளை நோக்கி ஓடி ஒவ்வொரு அறையாக தேடி குலைத்துக்கொண்டே வந்தது. கடைசியாக அதற்கு வீட்டில் யாருமற்று வெறுமையான நிசப்தம் தான் கோலோச்சுகிறது என்பதை வீடு உணர்ந்துகொண்டதைப்போல தானும் அறிந்துகொண்டது.
நாய் முகர்ந்தபடியே சமையலறையின் கதவை சுரண்டியது. கதவின் மறுபுறமிருந்த அடுப்பு, மேப்பிள் சாற்றுகுழம்புடன் வேகவைத்த இறைச்சிரொட்டிகளை சுடச்சுட வெளித்தள்ளியபோது, வீடு முழுவதும் அதன் வாசனையால் நிரம்பியது.
வாசனையை முகர்ந்த நாய் வாயில் நுரை தள்ள கதவருகே படுத்துபுரண்டு கண்கள் ஒளிர எழுந்து வட்டமாக சுற்றிச்சுற்றி ஓடியது. காட்டுத்தனமாக தனது வாலையே கடித்து ஊளையிட்ட நாய் திடீரென கீழே விழுந்து இறந்து போனது. அது அங்கேயே ஒரு மணி நேரமாக கிடந்தது.
இரண்டு மணி,என குரல் இசைத்தது.
கடைசியாக இறப்பு வாடையை உணர்ந்த எலிவடிவ இயந்திரப்படை ரீங்காரமிட்டபடியே வெளிவந்து சுத்தம்செய்யத்தொடங்கின.
இரண்டு-பதினைந்து.
நாய் சுத்தமாக காணாமல் போனது.
தரைகீழ்தளத்தில் இருந்த எரிகலனிலிருந்து கொழுந்து விட்டெரிந்த நெருப்பு பொறிகள் வீட்டின் உச்சியிலிருந்த புகைக்கூண்டில் துள்ளிவிளையாடின.
இரண்டு-முப்பத்தைந்து.
வரவேற்பறை சுவற்றிலிருந்து சீட்டாட்ட மேஜை வெளி வந்து நிற்க, சீட்டு கட்டு அதன் மேல் வந்து விழுந்து நின்றது. அதன் அருகே ஓக் மர முக்காலியில் கண்ணாடி தம்ளர்களில் பானங்களும் முட்டை அவியலும்,ரொட்டி களும் வந்து நிறைந்தன. இசை இசைக்கப்பட்டு ஒலித்தது. ஆனால் சீட்டாட்ட மேஜையும், சீட்டுக்கட்டும் யாராலும் தொடப்படாமல் அமைதியாக இருந்தது.
நான்கு மணியாகும்போது அந்த மேஜையும் முக்காலியும் பெரிய பட்டாம்பூச்சி சிறகை மூடுவதைப்போல மூடிக்கொண்டு வந்த சுவற்றிலேயே போய் மறைந்தன.
நான்கு- முப்பது.
குழந்தைகள் விளையாடும் வளாகத்தின் சுவர்கள் ஜொலிக்கத்தொடங்கின.
மஞ்சள் நிற ஒட்டகசிவிங்கிகள், நீல நிற சிங்கங்கள் ரோஜா நிற மான்கள், பழுப்பு நிற சிறுத்தைகள் என மிருகங்கள் தோன்றி படிக கண்ணாடி சுவருகளில் ஓடியாடத்தொடங்கின.
மறைந்திருந்த திரைநாடாக்களின் உதவியால் நிஜ மிருகங்கள் உலாவுவதைப்போல கண்ணாடி சுவர் உயிர்பெற்றது. குழந்தைகள் காப்பக தரையானது தானிய வயல் அமைந்திருக்கும் பள்ளத்தாக்கை போல அமைக்கப்பட்டிருந்தது. இந்த வயல்தரையின் மேல் அலுமினிய கரப்பாம்பூச்சிகளும் இரும்பு சீவண்டுகளும் இதமான மென்சூடு உடைய காற்றில் மிதக்கும் செந்நிற பட்டாம்பூச்சிகளும் பறக்கும்படியாகவும், மிருகங்களின் எச்சத்தின் வாசனைகள் வரும்படியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. சுவற்றில் மறைந்திருந்த ஒலிப்பானில் இருந்து மஞ்சள் நிற தேனீக்களின் ரீங்காரமும்,சிங்கத்தின் உறுமலும் குட்டைக்கழுத்து ஒட்டைசிவிங்களின் நடைசத்தமும் கானக மழையின் துளிகள் விழும் ஓசைகளும் கலந்து ஒலித்தது. தற்போது கண்ணாடி சுவர் தொலைதூர தொடு வானத்தையும், அதன்கீழை காய்ந்த புல்தரைகள் பல மைல்தூரம் விரிந்து பரந்திருப்பதை காட்சிப்படுத்தியது. மிருகங்கள் முள் புதர்களுக்குள்ளும் நீர்நிலைகளிலும் இருப்பதாக காட்டியது.
இது குழந்தைகளுக்கான நேரம்.
ஐந்து மணி.
குளியல் தொட்டியில் தெளிவான சுடுநீர் நிரம்பியது.
ஆறு,ஏழு,எட்டு மணிகள்.
இரவுணவிற்கான பட்சணங்கள் மாயாஜாலத்தால் வரவழைக்கப்பட்டதைப்போல வந்து சேர்ந்தன. புழங்கும் அறையில் க்ளிக் எனும் சத்தத்தோடு கனப்பு அடுப்பு எரியத்தொடங்கி குளிரை அடக்கி இதமான வெப்பத்தை கொடுத்தது.
ஒன்பது மணி.படுக்கைகள் தங்களின் உள் அமைக்கப்பட்டிருந்த இணைப்புகளால் இதமான சூட்டை அளிக்கத்தொடங்கின. இந்த பகுதிகளில் இரவில் அதிக குளிர் நிலவுவதால் இந்த ஏற்பாடு.
ஒன்பது-ஐந்து. புழங்கும் அறையின் விதானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது:
" திருமதி.மெக்லீலன், இன்று மாலை என்ன கவிதையை விரும்புகிறீர்கள்?"
வீடு அமைதிகாத்தது.
அந்த குரல் இறுதியாக, "நீங்கள் குறிப்பிட்டு எந்த கவிதையையும் சொல்லததால் நானே தோராயமாக தேர்வு செய்து எடுத்துக்கொள்கிறேன்"
குரலின் பின்புலத்திலிருந்து அமைதியான இசை ஒலித்தது.
"எனது ஞாபகத்தின் படி நீங்கள் விரும்பும் சாரா டீஸ்டேல் அவர்களின் கவிதை"
மென்மழை வரப்போகிறது அப்போது
மண்வாசனை எழும்,
அப்போது
உள்ளான் சிட்டுகள் சத்தமிட்டு சுற்றி பறக்கும்;
குளக்குட்டைகளில் உள்ள தவளைகள் இரவுப்பாடல்களை பாடும்,
காட்டு பிளம் மரங்கள் வெண்பூக்களை பூக்கும்;
கருங்கரிச்சான் குருவிகள் தங்கள் சிறகுகளைஜொலிக்கவிடும்,
குட்டை வேலிக்கம்பிகளில் அமர்ந்தபிடியே தங்களின் விருப்பத்தை சீழ்க்கையொலியில் சொல்லும்;
இவை எவற்றிற்கும் போரை பற்றி எதுவுமே தெரியாது, இறுதியாக எப்போது போர் மூண்டது என்பது பற்றிய அக்கரையும் இவற்றிற்கு இல்லை.
இவைகளுக்கு இது ஒரு பொருட்டுமில்லை,
முழுவதுமாக மனித குலம் அழிந்தாலும் பறவைக்கும் மரத்திற்கும் சொல்ல ஒன்றுமில்லை;
வசந்தகால தேவதையே விடியலில் கண்விழித்தெழுந்த போது நாம் இல்லாததைப்பற்றி ஏதும் கவலைக்கொள்ளப்போவதில்லை"
கல் கனப்படுப்பில் நெருப்பு எரிந்தது.
நிசப்தமான சுவருகளுக்கிடையே ஆளற்ற இருக்கைகள் ஒன்றை ஒன்று பார்க்கும்படி எதிரெதிரே போடப்பட்டிருந்தன. இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.
பத்து மணிக்கு வீடு அடங்கத்தொடங்கியது.
சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை ஒன்று சமையலறை ஜன்னல் மீது விழுந்ததில் , அலமாரியில் இருந்த பாத்திரம் கழுவும் மென் திராவகம் வைத்திருந்த கண்ணாடி சீசா, எரியும் அடுப்பின் மேல் உடைந்து விழுந்தது. அடுப்பு நெருப்பு விரிந்து பரவி நொடியில் அறை முழுக்க எரிய ஆரம்பித்தது.
" நெருப்பு!"என ஒரு குரல் வீறிட்டது.
வீட்டின் எச்சரிக்கை விளக்குகள் பளிச்சிட்டன. கூரை மேலிருந்த நீர் குழாய்கள் நீரை பீய்ச்சியடித்தன. ஆனாலும் லினோலிய தரையில் பரவிய எரிபொருள் பொருள்களை தீண்டி புசித்து கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
பல வித குரல்கள் " நெருப்பு,நெருப்பு,நெருப்பு" என சத்தமிடத்தொடங்கின.
வீடு தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது.கதவுகள் சடாரென இறுக மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் உடைந்துபோனதால் காற்று உள்பக்கமாக வீசி நெருப்பை பெருக செய்தது.
தீக்கங்குகள் பல லட்சக்கணக்கில் பொரிந்து பரவிதால் வீடு தோற்றுப்போகலாயிற்று. சுழன்று அடிக்கும் தீயின் நாக்குககள் ஒவ்வொரு அறையாக பரவி மாடியை நோக்கி சென்றது. எலி வடிவ இயந்திரங்கள் நீரை தெளிக்க இங்குமங்கும் ஓடி பீய்ச்சியடித்தபின் மறுபடியும் நீர் கொணர ஓடின. சுவற்றில் இருந்த துளைகளிலிருந்தும் மழை போல நீர் பொழிந்தது.
ஆனாலும் இது போதவில்லை.எங்கோ ஒரு நீர் குழாய் பெருமூச்சு போல் சத்தமிட்டபடியே அமைதியானது.மேலிருந்து வீழ்ந்த நீரும் நின்று போனது. பல நாட்களாக குளியல் தொட்டிக்கும் பாத்திரங்களை கழுவவும் செலவான தண்ணீரால் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீரின் அளவானது குறைந்திருந்ததுதான் இதற்கு காரணம்.
நெருப்பு மாடிப்பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து மேல்புற சுவற்றில் மாட்டி வைத்திருந்த புகழ் பெற்ற பிக்காஸோ மற்றும் மாட்டிஸ்ஸி யின் ஓவியங்களை விருப்பமான உணவை தின்று தீர்ப்பதைப்போல புசித்தது. ஓவியம் வரையப்பட்டிருந்த நூல் கித்தான் பரப்பு கருகி கருப்பானது.
தற்போது தீ மளமளவென பெருகி படுக்கைகளை பதம் பார்த்தது. தீயில் எரிந்தபின் ஜன்னல்களின் திரைச்சீலைகள் நிறம் மாறி கருத்தன. இதன் பின்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தயார் படுத்தப்பட்டிருந்த தானியங்கி பொறிகள் தங்களின் கண்களற்ற முகத்தில் நீட்டி வைக்கப்பட்டிருந்த வாயிலிருந்து பச்சை நிற ரசாயனத்தை உமிழ்ந்தன.
இதனால் செத்த பாம்மை கண்ட யானை பின் செல்லுவதைப்போல நெருப்பு சற்று நிதானித்தது. தற்போது இருபது பாம்புகள் நெளிவதைப்போல தானியங்கிகள் ரசாயனத்தை தெளித்ததால் நெருப்பை கட்டுப்படுத்தியது. ஆனால் தீயானது புத்திசாலித்தனமாக தனது பிழம்புகளை வீட்டிற்கு வெளியே வீசியது.
ஒரு வெடிச்சத்தத்தோடு மேல் பரணில் வைக்கப்பட்டிருந்த, நீர் தெளிப்பு மோட்டார் பித்தளை துகள்களாக சிதறியது. அது தூண்களில் பட்டு தெறித்தது. தீ அலமாரிகள் தோறும் பரவி உள்ளேவைக்கப்பட்டிருந்த துணிமணிகளை எரித்து துவம்சம் செய்தது.
ஓக் மர சட்டங்களால் தூண்களாகவும் பக்கவாட்டு பலகைகளாகவும் கட்டப்பட்டிருந்த வீடு கிடுகிடுவென நடுங்கத்தொடங்கியது. எலும்புக்கூடு போல மரத்தூண்களும் சட்டங்களும் நெருப்பில் கருகி வெளித்தெரிய தொடங்கின,வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த மின் கம்பிகள் மருத்துவரின் சஸ்திர சிகிச்சையின் போது தோலை வெட்டி வெளிக்காட்டப்படும் சிவப்பு ரத்த நாளங்களும் நரம்பு தொகுதிகள் போலவும் காட்சியளித்தது. அனல் காற்று கொதித்தது.
உதவி! உதவி! நெருப்பு! ஓடு,ஓடு!
கடும் முதல் மாரிக்கால பனி முறுமுறுத்து உடைவதைப்போல தீ கண்ணாடிகளை உடைத்தது.
அப்போதும் குரல்கள் தீ, தீ, ஓடு, ஓடு என பள்ளிக்குழந்தைகளின் பாட்டைப்போல கூவிக்கொண்டிருந்தன. கூட்டாக பத்து பனிரெண்டு குரல்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் கானகத்தில் தனித்து நின்று மரணிக்கும் குழந்தைகளைப்போல் கூக்குரலிட்டன. மின் கம்பிகளின் வெளி பிளாஸ்டிக் பூச்சு உருகி செஸ்ட் நட் கொட்டைகள் பொறிப்பது போல் எரிந்தடங்கியபின் சத்தமும் நின்று போனது.
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என வரிசையாக குரல்கள் பேச்சுமூச்சற்று போயின.
குழந்தைகள் காப்பகத்தில் காடு பற்றி எரியலாயிற்று. நீல சிங்கங்கள் கர்ஜித்தன, பழுப்பு ஒட்டகசிவிங்கிகள் பாய்ந்தோடின, சிறுத்தைகள் வட்டமிட்டு ஓடிக்கொண்டிருந்தன, எரிய எரிய அவைகளின் நிறங்கள் மாறி கோடிக்கணக்கான மிருகங்கள் எரிந்து கொதிக்கும் ஆற்றில் மறைந்ததைப்போல் போய்ச்சேர்ந்தன.
மேலும் பத்து குரல்கள் அணைந்து அடங்கின. நெருப்பின் கோரதாண்டவத்தின் கடைசிக்கட்டத்தின் போது, மற்ற பலவித குரல்கள்,நேரத்தை சொல்லிக்கொண்டும்,பாட்டு இசைத்துக்கொண்டும், புல் வெட்டிக்கருவியால் தோட்டத்து புல்லை வெட்டிக்கொண்டும்,தோட்டத்து குடையை விரிப்பதுவுமாகவும், முன் கதவை திறக்கவும் ஓங்கி சாத்தி மூடவுமாக பல ஆயிர பணிகள் நடந்துகொண்டிருந்தது.
இது கடிகாரக்கடையில் உள்ள பல கடிகாரங்கள் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல விதமான நேரங்களை காட்டுவதைப்போல பையித்தியக்காரத்தனமாயிருந்தது.
இரு ஒரு சுவாதீனமற்ற குழப்படியாகவும் அதேசமயம் ஒரு ஒருமை கூடியதாகவும் இருந்தது; பாட்டு கூச்சல் இதனிடையே மிஞ்சியிருந்த சில சுத்தம்செய்யும் எலி இயந்திரங்கள் துணிந்து சென்று சாம்பலை பொறுக்கி சேகரிக்க முற்பட்டன!
இதற்கிடையே இந்த கோர தாண்டவத்தை பொருட்படுத்தாத ஒரு குரல் கவிதை படித்தது. கடைசியாக எல்லா நினைவு இழைகளும் கம்பிகளும் இணைப்புகளும் எரிந்து வெடித்து அடங்கும் வரை ஒலித்துக்கொண்டிருந்தது.
தீ வீட்டை முழுதுமாக எரித்து கீழே சாய்த்தபோதுபுகை மூட்டமும் நெருப்பு பொறிகளும் மேலே கிளம்பி தகித்தன.
எரியும் பொருட்களால் வீடு வெடித்து சிதறுவதற்கு சற்று முன்பாக சமையலறையில் அடுப்பு சித்தசுவாதீனமற்றதைப்போல நூற்றி இருபது முட்டைகள், மொத்தமாக ஆறு ரொட்டி அடுக்குகள், இருநூற்றி நாற்பது பன்றிக்கறி துண்டுகள், என இவை அனைத்தையும் சமைத்து வெளித்தள்ள, அவை அனைத்தையும் உண்டு தீர்த்த நெருப்பால் அடுப்பு மனநோயாளி ஊளையிடுவதைப்போல சத்தமிட்ட படியே மறுபடியும் உணவு பொருட்களை தயாரிக்க தொடங்கியது.
பெரு வெடிப்பு.
மேல்புற பரண், சமையலறையின்மேலும் வரவேற்பறையின் மேலும் வந்து விழ, இவை யாவும் தரைகீழ் தளத்தையும் அதற்கு கீழ் இருந்த பாதாள அறையையும் சேர்ந்து வீழ்த்தியது.
உறை கலன், சாய்வு நாற்காலி, திரை நாடாக்கள், இணைப்புகள், படுக்கைகள் போன்றவைகள் அனைத்தும் இந்த நெருப்பு கோளத்தில் ஐக்கியமாகி உருக்குலைந்தன.
புகையும் நிசப்தமும். பெருங்கொண்ட புகை மூட்டம் மூண்டது.
கிழக்கில் வானம் வெளுத்து கருக்கல் வெளிச்சம் படர்ந்தது. இந்த சிதிலமான இடிபாடுகளில் ஒரு சுவர் மட்டும் கீழே விழாமல் தனியாக நின்றது. அந்த சுவற்றிலிருந்த ஒரு தனித்த குரல் மறுபடியும் மறுபடியும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அது சூரியன் மேலேறி இந்த இடிபாடுகளின் மேல் வெளிச்சம் கொடுக்கும்போதும் கேட்டுக்கொண்டேயிருந்தது.
"இன்று ஆகஸ்ட் 5, 2026,
இன்று ஆகஸ்ட் 5, 2026
இன்று...................................."
000
நடுகல் இதழ் எண் -15
No comments:
Post a Comment