Friday, 30 June 2023

கல்லினுள் தேரை - ஆர்.சண்முகசுந்தரம்


 



 

கல்லினுள் தேரை

ஆர். ஷண்முகசுந்தரம்


நதி எங்கள் ஊரடியில் இரு கிளையாகப் பிரிகிறது. கம்பீரமாக அலை வீசிக்கொண்டு வந்த நீரின் வேகம் சற்றுத் தணிந்து, நாணிக் கோணி ஒதுங்கும் கன்னிப் பெண்போல் இரண்டு புறமும் பாய்ந்து வழியும் வெள்ளத்தின் காட்சியே காட்சி! அதைப் பார்க்கப் பார்க்க ஆனந்தம் பொங்கிக் கொண்டுதான் இருக்கும். கிழக்கே வெகு தொலைவில் மறுபடியும் இரு கிளையும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஐக்கியமாகிப் போவதைப் பார்த்தால், ஒவ்வொரு மனத்திற்கும் தகுந்தபடி எத்தனையோ தத்துவங்களை அதில் காணலாம்.

 

எனக்கு இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதிலே பேரானந்தம்; திருப்தி. சுகமாக மணல் பரப்பின்மீது படுத்துக்கொண்டு நீரின் ஓசையிலே நெஞ்சைச் செலுத்தி, 'தன்னை மறந்த லயம் தன்னில்' ஆழ்ந்து விடுகிறது உண்டு. இப்படி ஒருநாள் மிகவும் பவசத்துடன் வழக்கமாக உட்காரும் இடத்தைத் தாண்டிக் கொஞ்சதூரம் கரையோரமாக நடந்து சென்று ஓரிடத்தில் உட்கார்ந்தேன்.

 

அங்கொரு கற்சிலை கிடப்பது தெரிந்தது. சுமார் மூன்று மூன்றரை அடி உயரம் இருக்கும். வெயிலாலும், மழையாலும் சற்று மங்கிப்போயிருந்தாலும் அதிகக் களையுடன் தான் இருந்தது. இடது பக்கத்து இடுப்பருகே ஒரு வெட்டுக் காணப்பட்டது. அநேகமாக அது உருக்குலைந்து தான் போயிருந்தது. இடுப்பளவு கீழே புதைந்த வண்ணம், ஊஞ்சல் மரத்தடியில் கன்னிமார் சாய்ந்திருக்கிற மாதிரி காட்சி அளித்துக்கொண்டிருந்தது அந்தச் சிலை.

 

வெகு ரேரம் அச்சிலையையே பார்த்துக்கொண்டு அக்கதி அடைவதற்குமுன் அது இருந்த கோலத்தையும், அதைச் செய்த சிற்பியைப்பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். பொதுவாகச் சிற்பம், சித்திரம் முதலிய கலைகளைப்பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண் டிருந்தாலே ரவிவர்மாவின் அழகிய படம் எப்போதும் என் மனத்திரையில் தோன்றாமல் இருக்காது. அந்தச் சிலையைப் பார்த்தபோதும் அந்தச் சித்திரம் ஞாபகத்திற்கு வந்தது.

அஜ மகாராஜா இந்துமதியோடு முன் இரவில் உல்லாசமாகப் பூஞ்சோலையில் மேடை மீது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறான். முன்னர் இந்துமதிக்கு ஏற்பட்ட சாபத்திற்கேற்பத் தேவலோகத்திலிருந்து பூமாலை ஒன்று மார்பின்மீது வந்து விழ, மாலையில் மடியும் ரோஜாவைப் போல் அப்போது அங்கு உயிர் துறக்கிறாள். பசுமரம் போன்று தன் அருகே இருந்த இந்துமதி திடீரென்று உயிர் நீத்ததை மன்னன் கண்டு பிரலாபிக்கிறான். அஜ மகாராஜா அந்த உயிரற்ற பிரேதத்தைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து வானத்தைப் பார்த்துக்கொண்டு கண்ணீர் வடிக்கிறான். இவ்வளவு விஷயங்களும் நேரில் நடப்பதுபோல் அப்படியே சித்திரித்திருக்கிறார் ரவிவர்மா.

 

"இம்மாதிரி ஏதாவது நல்ல காட்சியைக் கண்டுதான் ரவிவர்மாவுக்கு அதை எழுதத்தோன்றியிருக்குமோ? ஆம், அப்படித்தான் இருக்கும்'' என்று நான் வாய்விட்டுச் சொன்னேன்.

 

" அதில் சந்தேகமே இல்லை என்று சொல்லிக் கொண்டே என் அத்தை மகள் சித்ரா அங்கே வந்தாள்.

 

நான் தனியாகப் பேசிக்கொண்டிருந்தது கூட எனக்கு ஒரு மாதிரியாகப் படவில்லை; சித்ரா என்னைக் கேலி பண்ணுவதுதான் அவமானமாயிருந்தது.

 

"நீ வருவாய் என்று எனக்குத் தெரியுமே" என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

 

'அது இருக்கட்டும்; இது எத்தனை நாளாக?" என்றாள்.

 

"என்ன?"

 

பைத்தியந்தான்.''

 

"சரி, எனக்குத்தான் பைத்திய மாச்சே? ஒரு பித்துக்கொளியுடன் பேச்சென்ன வேண்டியிருக்கு? எழுந்துபோய் விடுகிறதுதானே?" என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன்.

 

"சரி, சரி, அந்தப் பக்கத்தில்தான்; அதோ போகிறாளே அந்தப் பெண்ணைத் தெரியுமா ?" என்று கேட்டாள். கொஞ்ச தூரத்தில் நிஜமாகவே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள். சித்ரா விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. தவிர, அந்தப் பெண்ணை நான் பல தடவைகள் மாலை வேளையில் கரைப் பக்கம் பார்த்திருக்கிறேன். சித்ராவைக் கேட்டு அவள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தேன். என் கோபம் கணத்தில் மறைந்தது.

 

"இதோ" என்று பக்கத்தில் இருந்த அந்தச் சிலையைக் காட்டி, "இதைச்சிருஷ்டித்த மஹானின் மகள் தான்" என்றாள்.

 

"என்ன, என்ன? இந்தச் சிலையைச் செய்தவன் மகளா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

 

மகள் தான்.

 

"ஆமாம். இந்த அற்புதச் சிலையைச் செய்தவனுடைய மகள் தான். அவள், தன் தந்தை விட்டுப்போன இந்த ஞாபகச் சின்னத்தைக் காணத் தினம் ஒரு முறையாவது இந்தப் பக்கம் வருவாள். ஆனால் யாராவது இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் பேசாமல் திரும்பிப் போய் விடுவாள். கல்யாணமாகாத வயது வந்த பெண் இப்படி உங்களைப் போன்றவர் எதிரில் வரலாமோ?" என்றாள்.

 

"நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதால், இப்பொழுதுகூட அவளுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். அட, பாவமே!" என்றேன்.

 

‘‘இதில் ஒன்றும் பாவம் இல்லை. இப்போது அவளும் தாயும் படுகிற கஷ்டத்தைப் பார்த்தால்தான் பரிதாபமாய் இருக்கிறது. என்ன பண்ணுகிறது? அன்று எழுதியவன் அழிச்சா எழுதப்போகிறான்?" என்று சொல்லிவிட்டுச் சித்ரா முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டாள்.

 

"ஏன், யாராவது சொந்தக்காரர் இல்லையா ?'' என்று மெதுவாகக் கேட்டேன்.




"சொந்தக்காரர் இருந்து நாசமாப் போச்சு! இப் பொழுது நம் சங்கதியை எடுத்துக்கொள்வோம். என்னவோ, ஆண்டவன் புண்ணியத்தில் எங்களுக்குச் சொத்து இருக்கத் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நீங்கள் சம்மதித்தீர்கள்? இல்லாவிட்டால் என் மீதுள்ள காதல் உங்கள் உள்ளத்திலே பொங்கிப் பிரவகித்ததனால்தான் மணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டீர்களோ?" என்றாள். சித்ராவின் குறும்புத்தனமெல்லாம் எனக்குத் தெரியுமாகையால் விவாதத்திற்கு இடம் கொடுக்காமல், "ஏதாவது கொஞ்ச நஞ்சம் கொடுத்து உதவக்கூட யாரும் இல்லையோ?'' என்றேன்.

 

"இல்லாமல் என்ன? அதுதான் சொன்னேனே. பழைய புராணத்தையே திருப்பித் திருப்பி ஒப்பிப்பதில் லாபம் என்ன? அவளுடைய தகப்பனைப்பற்றிக் கேட்டால் நீங்கள் கண்ணீர் வடிப்பீர்கள்" என்றாள்.

 

மகளைப்பற்றிக் கேட்டதே வருத்தமாக இருக்கிறது. இனி, கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்து ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

 

"சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன்" என்று சித்ரா தொடங்கினாள்.

 

000

 

"அவளுடைய தகப்பன் கை பட்டால் எதுவும் கண்ணாடிதான்; ரொம்ப ரொம்ப அபூர்வ வேலைப்பாடுடன் சிலைகள் செய்வதிலே பேரும் புகழும் பெற்றவன். இதோ, இங்கிருக்கும் சிலையைச் செய்துமுடித்துத் தந்தபின் ஏராளமான சம்மானம் பெற்றிருப்பான். ஆனால் அதற்குள்ளே வந்தது ஒரு தடங்கல்.

 

"இந்தச் சிலைவேலை ஏறக்குறையப் பூர்த்தியானதும், இதைச் செய்யச் சொல்லியிருந்த பிரபுவை ழைத்து வந்து காட்டிக்கொண்டிருந்தான். அதற்கு நாலு நாளைக்கு முந்தி இந்த ஊருக்கு வந்த ஓர் இளைஞனைப்பற்றி இரண்டு வார்த்தை சொல்லியாக வேண்டும். அவன் எங்கிருந்தோ வந்தான். அந்தத் 'தறிதலை' இங்கு வந்தவுடன் அரை க்ஷணம் கூடச் சும்மா இருக்கவில்லை. சிற்பத்தைப்பற்றித் தனக்கு அபாரமாகத் தெரியும் என்று எல்லோரிடமும் சென்று தமுக்குப் போட்டுக்கொண்டிருந்தான். அந்தா எல்லோரா முதலிய இடங்களுக்கு நேரில் சென்று, தான் எல்லாச் சிற்ப வேலைகளையும் கண்டுவந்ததாகச் சொன்னான். ஆனால் அவன் மஹாபலிபுரம் போயிருப்பானா என்பதுகூட எனக்குச் சந்தேகமாயிருந்தது. இந்த விஷயம் ஒரு புறம் இருக்கட்டும். கடைசியில் அவன் 'தலைக்குக் கல்' கொண்டு வந்ததை நினைத்தால்தான் ஒருவேளை அவன் சொல்லியதெல்லாம் உண்மையாக இருக்கலாமோ என்று நினைத்தேன்”

 

"எப்படி?" என்றேன்.

 

"இந்தச் சிலையைப் பார்த்ததும், 'யாரையா இதைச் செய்தது? உள்ளே தேரை இருக்கிறதே! இது தெரியவில்லையா?' என்றான் அவன்.'’

 

"அங்கே கூடியிருந்தவர்களுக்கு, அந்தப் பெண்ணின் தகப்பன் முதற்கொண்டு எல்லோருக்கும், அது விவரிக்க முடியாத ஆச்சரியமாயிருந்தது. கல்லினுள் தேரை இருக்குமென்று கேட்டிருந்தாலும் இந்தச் சிலைக்குள் தேரை புகுந்துகொண்டிருக்கிறது என்பதை யாரும் நம்பமுடியவில்லை. 'எங்கே காட்டு பார்ப்போம். அப்படி இல்லாது போனால் உன் மண்டையை உடைத்துப் பார்த்து விடுவோம்' என்று பலரும் ஆர்ப்பரித்தார்கள்.

 

"சிலையைச் செய்யச் சொல்லியிருந்த ரசிகருக்கு அபாரமான கோபம் வந்துவிட்டது. எல்லோரையும் சாந்தமாக இருக்கும்படி சிற்பி கேட்டுக்கொண்டான். அப்புறம் அந்த இளைஞனை,தம்பி, இப்படி வா' என்று கூப்பிட்டான்.

 

எல்லோரும் இனி என்ன நடக்குமோ என்று உற்றுப் பார்த்துக்கொண் டிருந்தார்கள். இளைஞன் கம்பீரமாக முன் வந்து நின்றான்.

'ஏனப்பா, இந்தச் சிலையில் தேரை இருக்கிறதெனச் சொல்லுகிறாயா? என்ன ஆதாரத்துடன் சொல்கிறாய்? உனக்கு எப்படித் தெரிந்தது?'

'இது என்ன கேள்வி? ஒரு நல்ல சிற்ப சாஸ்திர ஞானமுடைய சிற்பியின் கண்களுக்குக் கல்லினுள் தேரை இருப்பது தெரியாமலா போய்விடும்? அப்பொழுது அவன் கலைஞனல்ல' என்று வாலிபன் துடுக்காகப் பதில் சொன் னான்.

"அப்போதும் சிற்பிக்குக் கோபம் வரவில்லை. 'இதைச் செய்து முடிப்பதில் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறேன். உன் பேச்சைக் கேட்டு வீணாக இது வியர்த்தமாகிவிடுமோ என்றுதான் பார்க்கிறேன். சிறுபிள்ளைத்தனமாக நீ சொல்வதை எப்படி நம்புவது?' என்று கேட்டான்.

 

'நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். நான் பலவந்தம் செய்யவில்லை. காலம் அதைப் பகிரங்கமாக்கி விடும்' என்றான்.

 

'அப்படியானால் அதை இப்போதே சோதித்துவிட வேண்டும். நீ சொன்னது மட்டும் பொய்யாயிருந்தாலோ?' என்று படபடப்பாகச் சிற்பி கேட்டான்.

 

இக் கண்களைப் பிடுங்கிக் கொள்கிறேன்' என்று ரோஷத்துடன் இளைஞன் கூறிவிட்டு, 'நான் சொன்னபடியே தேரை உள்ளே இருந்தாலோ?' என்று கேள்வி போட்டான்.

 

'நான் இதைச் செய்த இந்தக் கைகளை வெட்டிக்கொள்கிறேன்' என்று சிற்பியும் சபதம் செய்தான்."

 

"கடைசியில் என்ன ஆச்சு?" என்று அவசரமாகக் கேட்டேன்.

 

"கடைசியாகச் சிலையின் இடதுபக்கம் செதுக்கிப் பார்த்தபோது அவன் சொல்லியபடியே சிலையிலிருந்து தேரை வெளியில் குதித்தது. நம் சிற்பிக்கு ஏற்பட்ட அவமானம் சொல்லிமுடியாது. அவன் தனது சபதத்தின்படியே கையை வெட்டிக்கொண்டான். அந்தச் சிலையுடன் தன்னையும் உருக்குலைத்துக் கொண்டான். அதோ அக்கரையில் தெரிகிறதே சுடுகாடு அதில் வெந்து சாம்பலும் ஆனான்."

 

"அட, பாவமே!'' என்றேன்.

 

"பாவம் என்றும், புண்ணியமென்றும் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? நம் ஊரிலே முற்போக்குக் காரியங்களிலே முனைந்திருக்கிறதாகச் சொல்கிறார்களே வாலிபர்கள், இவர்களில் ஒருத்தனாவது இவளைக் கல்யாணம் செய்துகொள்ள முற்படுகிறானா? சொல்லுங்கள், பார்க்கலாம்" என்றாள் சித்ரா.

 

நான் கிலேசத்துடன் தூரத்திலே விறகுச் சுமையை ஊணாங்கொடியால் இழுத்துக் கட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். என் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் உருண்டு சென்றன.

 

"பார்ப்பதற்கு அவள் லக்ஷ்மிபோல் இல்லையா? அவளைப் போன்ற அழகி நம் ஊருக்குள்ளேயே ஏது?” என்று சித்ரா வேகமாகப் பேசினாள்.

 

அந்த வேகத்தில் தன் அழகைப் பற்றிக்கூட மறந்து விட்டாள்போல் இருக்கிறது! வேறு யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தால், 'அவளை மணம் செய்துகொள்ள நான் தயார்" என்று தைரியமாகக் சொல்லியிருப்பேன். ஆனால் சித்ராவிடம் எப்படிச் சொல்வது?

 

சித்ரா மேலும் அதே வேகத்தில், "இப்பொழுது கூட நீங்கள் இஷ்டப்பட்டால் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வதில் எனக்கு ஆக்ஷேபணை இல்லை" என்று சொல்லி நிறுத்தினாள்.

 

ஒருவேளை என் கருத்தைத்தான் தெரிந்துகொண்டாளோ? நான் அவள் முகத்தையே பார்த்தேன்.

 

ஆனால், அவள் புருஷன் என்ன சொல்வானோ?" என்று சொல்லிச் சித்ரா சிரித்துவிட்டாள்.

நானும் சிரித்துக்கொண்டு, "என்னை ஏமாற்ற முடியுமா? இருந்தாலும் கதை நன்றாயிருந்தது'' என்றேன்.

 

"ஒஹோ கதையா? அப்படியானால் உங்கள் முகக் குறி ஏன் அப்படி மாறவேண்டும்? நெஞ்சு ஏன் அப்படி அடித்துக்கொள்ள வேண்டும்?'' என்றாள்.

 

நேருக்கு நேராக, அதுவும் ஒரு பெண்ணிடம் நான் அசட்டுப் பட்டம் வாங்கிக்கொள்வேனா என்ன?

 

"இந்த மாலை நேரத்திலே, தனியாக ஒரு பெண் ஆற்றங்கரையிலே இப்படிப் பேசிக்கொண்டிருக்கலாமோ?" என்று பேச்சை மாற்றினேன்.

 

"அப்படியானால் புறப்படுங்கள்; வீட்டுக்குப் போவோம்" என்று கையைப் பற்றினாள்.

000

 

 

 

 

 

 


No comments:

Post a Comment