Friday 14 July 2023

தொப்பூள்குழியுள் புதைந்திருந்த - வாஸ்தோ


 

தொப்பூள்குழியுள் புதைந்திருந்த விருட்சத்தைப் பற்றி அல்லது விருட்சத்தின் வேர் ஊடுறுவிய தொப்புள்குழியைப் பற்றி

-வாஸ்தோ


எங்கே சென்றான் அவன் என தேடி அலைகிறன். ஆனால் அவனோ என் கைக்குச் சிக்காமல் எங்கெங்கோ பறந்தபடிக்கு இருக்கிறான். ஒற்றை இரவில் ஒரு பெண்ணை, அவள் தன் சூழிவயிற்றை வெளிக்காட்ட வைத்த மாயாஜாலக்காரனான அவனின் முகம், சூழ்வயிற்றோடு நிற்கும் அப்பெண்ணிற்கேனும் தெரியுமா என்றால் இருளில் வந்தென்னைப் புணர்ந்து புலரும் காலையில் என்னைப் பிரிந்துச் சென்றவனின் முகத்தை நான் பார்க்கவில்லையென உதடு பிதுக்கி பதிலளிக்கிறாள். 


ஒற்றை இரவில் ஒரு பெண்ணைக் கர்பவதியாக்கலாம். ஆனால் நிறைசூழ் வயிற்றுப் பெண்ணாக மாற்ற முடியுமா..? புணர்ந்த மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே கருத்தரித்து பிள்ளைப் பெற வைத்துவிடுமளவிற்கு அவன் என்ன ஸ்பீஷியஸ் திரைப்படத்தில் வருவதைப் போன்ற வேற்றுக்கிரக இனத்தைச் சேர்ந்தவனா…! அந்தத் திரைப்படத்தைப் புனைவு என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் என் கண் முன்னே தன் வயிற்றைத் தள்ளிக் கொண்டும் பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டும் நிற்கும் இந்தப் பெண்ணை எப்படி புனைவு என்று என்னால் ஒதுக்கி வைக்க முடியும்..? இலக்கியங்களிலும், செவி வழிக்கதைகளிலும், கைக்கெட்டாத் தொலைவிலும், நிழல்படங்களிலும் ஏன் ஒருசில நீலப்படங்களிலும் தன் தொந்திச் சரிய நிற்கும் பெண்களைப் படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். அது என்னுள் ஒருவிதமான பரவசத்தையும், அவலத்தையும், கண்களில் கண்ணீரையும் தோன்ற வைத்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக என் கைக்கெட்டும் தொலைவில் ஒரு பெண். அதுவும் நேற்று மாலை வரையிலும் ஒட்டிய வயிற்றோடு என் முன் வலம் வந்தவள், இன்று பானைப் போன்று வீங்கியிருக்கும் தன் வயிற்றைத் தன்னுடலால் தாங்கமுடியாது, முதுகை முன்பக்கமாக வளைத்து, தன் இருகைகளாலும் தன் வயிற்றை ஏந்திப் பிடித்து நிற்கிறாள். அவள் முகத்திலோ இன்னும் சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் தன் பிறப்புறுப்பின் வழி குழவி வெளியேறிவிடுமோ என்கிற பதட்டத்தையும் பயத்தையும் பார்க்கமுடிகிறது.


நானும் அவளும் வாழும் இந்த நிலத்தின் தற்போதையச் சூழலில், ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது என்பதே பாவத்திற்குரியது. அந்தக் குழந்தைத் தலைகீழாக இந்த நிலத்தில் விழும் பொழுதே, அது என்ன மதம் என்ன ஜாதி ஏன் அது என்ன மொழி பேசவேண்டும் என்பதைக் கூடப் பதிவு செய்து அதன் முதுகில் முத்திரைக் குத்தி விடுகிறார்கள். அதாவது அந்தக் குழந்தைத் தலைகீழாக நிலத்திற்கு வந்து அது தன் கால்களை நிலத்தில் ஊன்றி வைக்கும் முன்னமே அதன் தலையெழுத்தானது இங்கே கிறுக்கப்பட்டுவிடுகிறது. விருப்பமற்ற ஒன்றை, தன் விருப்பத்திற்கு மாறாகத் தனக்குத் திணிக்கப்பட்ட ஒன்றை, விருப்பமே இல்லையென்றாலும் இறக்கும் வரையிலும், ஏன் இறந்தப்பின்னும் கூட முதுகு சுமையாய் சுமந்தலைய வேண்டிய கட்டாயச் சூழலிருக்கும் இந்தச் சூழலில், தன் முதலெழுத்து என்னவென்றே தெரியாமல் அது இந்நிலத்தில் வந்து வீழ்ந்தால்…! 


எனக்கு இப்பொழுதிருக்கும் முதன்மையான வேலையானது அந்த வேற்றுக்கிரகவாசி யாரெனக் கண்டடைய வேண்டும். அந்தப் பெண்ணின் உடல் தேவைக்காக அல்லது சுகத்திற்காக அல்லது புணர்ந்துச் சென்றவனின் காம இச்சைக்காக என்று ஏதோவொரு காரணத்திற்காக உருவான உயிருக்குக் குறைந்தபட்ச அங்கீகாரமேனும் பெற்றுத் தரவேண்டும். 


***

கதைச் சொல்லியான வாஸ்தோவின் அறிக்கை அவனை ஒரு நியாயவானாக உங்களிடம் காட்டிக் கொள்ள அவன் எடுத்துக் கொள்ளும் ஒரு மாயவேலை. வாய்ஜாலம். உண்மை என்னவென்றால் அவன் ஒரு பொய்யன். மேற்கூறியிருக்கும் அறிக்கையில் அவன் நேற்று தான் என்னைப் பார்த்ததாகவும் கவனித்ததாகவும் சொல்லி இருக்கிறான் அல்லவா…! அது மிகப்பெரிய பொய். அவன் அனுதினமும் என்னைப் பார்த்துக் கொண்டேதானிருக்கிறான். என்னுடலின் வளர்சிதை மாற்றங்கள் அனைத்தையும் அவன் அவதானித்தபடியும் தான் இருக்கிறான். அவன் என்னைப் பார்ப்பதை நானும் கவனித்தபடியே தானிருக்கிறேன். ஆனால் அவனோ அடுக்கடுக்காகப் பொய் பேசுவதைப் பற்றி சற்றும் நாக்கூசாமல், நேற்றுத் தான் என்னைக் கவனித்ததாகப் பொய்யுரைகிறான். ஆண்களின் மனமும் புத்தியும் பொய்யெனும் சகதியில் புரண்டு, பெண்கள் எப்படி தங்களின் முகத்தின் மீது அழகு சாதனத்தைப் பூசிக் கொள்வதாக இந்த ஆண்வர்க்கத்தினர் சொல்கிறார்களோ, அதைப்போலவே இந்த ஆண்கள் அவர்களின் உடலின் மேல் இந்தச் சகதியை அழகு சாதனப் பொருட்களைப் போன்று பூசிக் கொள்கிறார்கள். அதுவும் அழகாக. நேர்த்தியாக. அவர்கள் உடலைப் போர்த்தியிருப்பது தோலா அல்லது சகதியா என்பதைப் பல சமயங்களில் தீண்டிப் பார்த்துக்கூடக் கண்டுபிடிக்க முடியாதளவற்கு இறுகிப் போயிருக்கிறது. அதைச் சற்று நிமிண்டிப் பார்த்து சகதியை உரித்தெடுத்தால் மட்டுமே அவர்களின் நிஜ நிறம் கண்களுக்குப் புலப்படுகிறது. என்னை இதுவரையிலும் பார்த்ததில்லை என்கிற அவனுடைய முதல் பொய்யின் தோலை உரித்துவிட்டு, அவனது அடுத்த பொய்யான வேற்றுக்கிரகவாசி யார் என்கிற உண்மையைப் பகிர்கிறேன்.


வாஸ்தோ என்னை முதன்முதலாகச் சந்தித்ததாய் கூறிய நேற்றைய தினத்திலிருந்து சரியாக பன்னிரெண்டு வருடம் ஆறுமாதம் நான்கு நாட்களுக்கு முன்பாக என்னை அவன் பார்த்தான். அன்றைய தினம் ஒரு பெருமழைத் தினம். இன்னுமொரு மூன்று மணி நேரத்திற்கு வான்நீர் நிலம் வீழ்ந்தால், நீர்நிலையெது நிலமெது, கடலெது கரையெது என்கிற வேறுபாட்டினை அறியமுடியாது போய்விடுமோ என்றளவிற்கான மாமழை. அந்த மாமழைப் பெய்த தினத்தில் நான் வீட்டிலிருந்து வெளிக் கிளம்புகையில், இத்தனைப் பெரிய மாமழை நிகழ்வதற்கான எவ்வித அறிகுறியினையும் வானம் எனக்குக் காண்பித்திருக்கவில்லை. வீட்டிற்குத் திரும்புவது இனி ஆகாதெனும் தொலைவிற்கு நான் வந்தப் பிறகே மழைத் துவங்கியது. மழை மண் தொட்ட ஒற்றை விநாடியில் நான் தெப்பமாக நனைந்துவிட்டிருந்தேன். என் கையெட்டும் தூரத்தில் யாரேனும் நின்றிருந்தாலும் கூட தொட்டுணர்ந்து அறிந்துக் கொள்ளும் வகையில் மழை நீர் வானுக்கும் மண்ணுக்குமாய் சுவரெழுப்பியிருந்தது. அந்த நீர்ச்சுவற்றைக் கிழித்துக் கொண்டு மஞ்சள் நிற ஒளியொன்றுத் தெரிய, விளக்கின் ஒளி தேடி பறக்கும் விட்டிலென அதை நோக்கி ஓடினேன். விட்டில்கள் அவ்விளக்கின் ஒளியில் தன் இறக்கைகள் சோர்ந்து, உதிர்ந்துப் போகுமளவிற்குப் பறந்துப் பறந்தே தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும். அவ்விட்டில்களைப் போன்று ஒளி தேடிச் சென்ற நானும் என்னுயிரை மாய்த்துக் கொண்டேன். உடலளவில் அல்ல. உணர்வளவில்.


வாஸ்தோவை அங்கு தான் முதன்முதலாகப் பார்த்தேன். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம். நாற்பத்தியிரண்டு அங்குலத்திற்கு விரிந்தத் தோள்களுக்கு முப்பது அங்குலத்திற்கு குறுகிய இடுப்பு. அவனும் என்னைப் போலவே ஈரம் சொட்டச்சொட்ட நின்றிருந்தான். அவன் ஒரு முறை, ஒரேயொரு முறை தான் என்னைத் திரும்பிப் பார்த்தான். அவனது கருகமணி கண்ணின் பார்வை, மழையில் நனைந்துக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என் உடலுக்குள் உஷ்ணக் காற்றாய் ஊடுறுவியது. நான் என் தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். 


அன்றைய தினம் நாங்கள் இருவரும் ஒதுங்கியிருந்த அந்தக் கூடாரத்தில், நாங்கள் இருவரும் மட்டுமல்ல இன்னும் சில ஆண்களும் மழையில் நனைந்தும் நனையாமலும் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தார்கள். சில ஆண்கள் என்றதும் புரிந்துக் கொண்டிருப்பீர்கள். அங்கு மழைக்கு ஒதுங்கி நின்றதில் நான் மட்டுமே பெண். கவிழ்ந்தத் தலையோடு பார்வையை சுழலவிட்டேன். வாஸ்தோவைத் தவிர்த்து ஏனைய ஆண்கள் அனைவரும் என்னையே இல்லையில்லை என் உடலையே பார்ப்பதைப் போன்றிருந்தது. அங்கு நின்றிருந்த ஒவ்வொரு ஆணின் பார்வையும், ஈர உடை ஒட்டியிருந்த என் ஈர உடலின் ஒவ்வொரு மயிர்கால்களிலும் ஊசியாய் இறங்கியது. அந்தக் கூட்டத்தில் ஒருவனின் பார்வை கதகதப்பையும், ஏனையோரின் பார்வைச் சுட்டெரிக்கவும் வைத்தது. கதகதப்பைத் தேடிய மனது வாஸ்தோவைப் பார்த்தது.


அவன் தன் விரிந்த முதுகை எனக்குக் காண்பித்தப்படி நின்றிருந்தான். அந்நேரத்தில் மின்னலொன்று வெட்ட, அந்த ஒளியில் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்த அவனது ஈரத் தலைமுடியும் உடலும் பளபளவென மின்னியது. ஒரு கணம் அவனது உடல் கருநாகமொன்று படம் விரித்து நிற்பதைப் போன்று எனக்கொரு உளமயக்கத்தை உண்டாக்கியது. அந்தக் கணம் என்னைச் சுற்றியிருப்பவர்களின் பார்வை என் மனதிலிருந்து மறைந்தது. அவனையே ஊடுறுவிப் பார்க்க ஆரம்பித்தேன். மழைத்துளிகளிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள அவன் மேற்கொண்ட ஒவ்வொரு உடலசைவும், பெட்டிக்குள் அடைப்பட்ட கருநாகமொன்று தனக்குள்ளேயே தன்னை ஒடுக்கிக் கொள்ளும் அசைவாகவே எனக்குத் தெரிந்தது. 


பொதுவாகவே நாகங்கள் அழகானவை. அதிலும் கருநாகமென்பது பேரழகானது. ஒருவேளை அதை நெருங்கிச் செல்ல உள்ளுக்குள் உருவாகும் பயம் கூட அதைப் பேரழகானதாகச் சித்தரிக்கலாம் அல்லது இமைகளற்ற அதன் கருகமணிக் கண்களின் கூரானப் பார்வைக் கூட அதை அழகாய் தோன்றவைக்கலாம். என்னால் அவனைத் தொடராமல் இருக்க முடியவில்லை. அன்றிலிருந்து அவனைத் தொடர்ந்தபடியே தான் இருக்கிறேன்.


***

இத்தனை நேரமும் கதைச் சொல்லிக் கொண்டிருந்தவளின் பெயரை அவள் சொல்லவில்லை என்றாலும் அவள் பெயரென்ன என்பதை நான் சொல்கிறேன். அவள் பெயர் வாசுகி. இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்த வாஸ்தோவைப் பற்றியோ அல்லது அவன் கதையில் பாதியில் புகுந்து கதையைத் திசைமாற்றும் வாசுகியைப் பற்றியோ சொல்ல நான் இக்கதையின் நடுவில் ஊடுறுவில்லை. அவர்கள் இருவரில் யார் சரி யார் தவறு என்பது இந்தக் கதையை வாசிக்கும் உங்களுக்கு தெளிவுறுத்தவே நான் வந்தேன். அவர்கள் இருவரையும் பற்றிய என்னுடைய மூன்றாவது பார்வையைப் பகிரும் முன்பாக, உங்களிடம் ஒரு ரகசியம் கூறுகிறேன். அதை வாஸ்தோவிடம் சொல்லிவிடாதீர்கள். வாஸ்தோ தேடிக் கொண்டிருப்பது என்னைத் தான். ஆமாம் வாசுகியை கர்ப்பமுறச் செய்த காமுகன் நான் தான். அதாவது வாஸ்தோவின் மொழியிலேயே சொல்வதென்றால், அவன் தேடிக் கொண்டிருக்கும் அந்த வேற்றுக் கிரகவாசி வேறு யாருமல்ல. நான் தான்.


வாசுகி வாஸ்தோவை முதன்முதலாகச் சந்தித்ததாகக் கூறிய அன்று, நானும் அவர்கள் இருவரும் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் வாஸ்தோவின் கரிய நிழல் படிந்திருந்த இருட்டில் தான் சுருண்டுப் படுத்திருந்தேன். இருட்டில் நிற்பவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினர் மறைந்திருப்பவர்கள். பிறரின் பார்வைக்குத் தங்கள் உருவம் தெரிந்துவிடக் கூடாதென நினைப்பவர்கள். அவர்களை யாரேனும் பார்த்தால் மட்டுமே அவர்கள் பதற்றத்திற்கு உள்ளாவர்கள். இரண்டாம் வகையினர், வெளிச்சத்திற்காக ஏங்குபவர்கள். தங்களின் மேல் வெளிச்சம் விழ வேண்டி இருளிள் காத்திருப்பவர்கள். ஒளியில் நிற்பவர்கள் மட்டுமே பார்வைக்கு வருகிறார்கள். வெளிச்சப்புள்ளியில் நிற்பவர்களைக் காண்கிற கண்களுக்கு இருளில் மறைந்திருக்கும் எங்களைப் போன்றோர் தெரிவதில்லை. நாங்கள் இருளினுள் இருப்பதால், வெளிச்சத்தில் நிற்பவர்களை மட்டுமல்ல, இருளில் நிற்பவர்களையும் கூடத் தெளிவாகப் பார்க்கிறோம்.


அன்றைய தினம் இந்த வாசுகி, வெளிச்சத்தில் நின்ற வாஸ்தோவைப் பார்த்தாள். அவனது நிழலில் பதுங்கியிருந்த என்னை அவள் கவனிக்கவில்லை. அவளது உடலில் மயிர் கூச்செறிய வைத்தப் பார்வை என்னுடைய பார்வை தான். என்னுடைய பார்வை மட்டும் தான். ஆனால் அவளோ அங்கே குழுமியிருந்த ஏனைய ஆண்களின் பார்வை என்று தப்பர்த்தமாகப் புரிந்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.


வாஸ்தோவின் பார்வைத் தனக்கு கதகதப்பைக் கொடுத்ததாக அவள் கூறியிருக்கிறாள். அந்தக் கதகதப்பு உடலுக்கா அல்லது உள்ளத்திற்கா என்பதை அவள் சொல்லவில்லை. ஆனால் எனக்கோ அவளது ஈர உடலானது கிளர்ச்சியை உண்டாக்கியது. என்னை முதலில் கவர்ந்தது, குளிரில் தன்னிச்சையாய் நடுங்கிய அவளது இளஞ்சிவப்பு நிற ஈர உதடுகள். அதன்பிறகே என்னுடையப் பார்வைக் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்கியது. 


எங்கள் ஆடை எங்கள் உரிமையென கூக்குரலிடும் பெண்ணியவாதிகளான பெண்களுக்கும், அதற்கு ஒத்திசைந்து பாட்டுப் பாடும் ஆண்களுக்கும் என் நன்றிகள். துப்பட்டா அணியாத அவளது உடை, மழையின் ஈரத்தில் கனமேறி அவள் உடலோடு ஒட்டியிருக்க, அவளது அங்கங்கள் நன்றாகப் பழுந்த மஞ்சள் எழுமிச்சையின் மேல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேங்கி நிற்கும் பனித்துளிகள் அல்லது நன்றாகக் கழுவிய பின் வழுகியோடிய நீர் விட்டுச்சென்ற சுவடுகளாய் தேங்கி நிற்கும் நீர் துளிகளோடு இருக்கும் எலுமிச்சையைப் போல ஈரத்தில் தோய்ந்திருந்த அவளின் முலைகளிரண்டும் என் கண்களுக்குத் தெரிந்தன. அவள் அந்த முலைகளை அவளது ஈர ஆடையால் மறைத்திருந்த போதும்.


என் பார்வையின் ஊடுறுவலை ஏனையோரின் பார்வையாக உணர்ந்தவள், தன் இருகைகளையும் குளிருக்கு இதமாக இருப்பதன் பொருட்டு என்பதாய் காட்டிக் கொள்ளும் வகையில் மார்போடு இறுக்கமாய் கட்டிக் கொண்டாள், ஆனால் பாவம் அவளுடைய பின்புற அழகை - உருண்டுத் திரண்டிருந்த அந்தப் பிருஷ்டத்தின் பளபளப்பைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.


***

அங்கிருந்த அத்தனை ஆண்களும் என்னுடலை நோட்டமிட, எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்த வாஸ்தோவோ அந்தக் கனமழையையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அவனது அந்தக் கண்ணியம் எனக்குப் பிடித்திருந்தது. என் மனதிற்கு இதமளித்தவன் கிளம்பியதும், எனக்கும் அங்கே நிற்கப் பிடிக்காமல் நானும் கிளம்பிவிட்டேன், என்றாலும் என்றேனும் ஒருநாள் அவன் என்னைப் பார்ப்பான் என்கிற நம்பிக்கையில் அவனைத் தொடர ஆரம்பித்தேன். அவனது இன்னொரு நிழலாய்.


***

அத்தனை நேரமும் அவனது நிழலின் இருளில் நின்று அவள் அறியாது அவளை, அவளுடலை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருக்கையிலேயே வாஸ்தோ அவ்விடம் விட்டு நகர்ந்தது நான் சற்றும் எதிர்பாராதது. சட்டென என் மீது படிந்திருந்த அவனது கரிய நிழல் அகல, வெளிச்சம் என் மீது படர்ந்தது. அவள் என்னைப் பார்க்கும் முன்னம், வேறு எங்கேனும் போய் ஒளிந்துக் கொள்ளவேண்டி இருளைத் தேடினேன். ஆனால் நல்லவேளையாக வாஸ்தோ கிளம்பியதும் அவன் பின்னேயே அவளும் கிளம்பிவிட்டாள். என்றேனும் ஒருநாள் என் ஆசைத் தீர அவளுடலை என் நாவால் தீண்டி, என் உடலால் படர்ந்தேயாக வேண்டும் என்கிற கள்வெறியோடு அவளது நிழலாய் அவளை நானும் தொடரலானேன்.


வாசுகியின் கதையை வாசிக்கையில் அவள் காதலோடு அவனைப் பின் தொடர்ந்ததாக உங்களுக்குத் தோன்றியதா…? அல்லது தோன்றுகிறதா…? ஒருவேளை உங்களுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை என்றாலும் கூட பிரச்சனையில்லை. ஏனெனில் இது நான் சொல்லும் கதையாகையால், நான் பார்த்ததை, என் பார்வையைச் சொல்ல மட்டுமே எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 


அன்றைய தினம் மழையென்றும் பாராமல், அவன் பின்னேயே அவள் சென்றதும், எனக்கு அப்படி தான் தோன்றியது. ஒரு கணம் மற்றொருவனைக் காதலிக்கும் பெண்ணைப் பெண்டாள நினைப்பதாய் ஒரு சிறு குற்றவுணர்வுக் கூடத் தோன்றியது. பின் வெள்ளித்திரைத் தோன்றும் பெண் நடிகர்கள் வேறொருவரைக் காதலிக்கிறார் - கரம்பிடித்துவிட்டார் என்பதை அறிந்திருந்தும் அவரைக் கனவுக்கன்னியாக மாற்றி ஆரத்தழுவிக் கொள்வதில்லையா…! ஒருவேளை அதே நாயகி கைக்கிடைத்தால், நீ மாற்றான் காதலி; மனைவி என்று சொல்லி அவளை ஒதுக்கி வைக்கவா போகிறோம். ஒருவேளை இதை வாசிக்கும் வாசுகிகளான நீங்கள் அத்தனை நல்லவர்களாக இருக்கலாம். என்னளவில் அவளும் பெண் தான் இவளும் பெண் தான். 


வாசுகி வாஸ்தோவை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து சரியாக பதின்மூன்று மாதங்கள் பதினேழாவது நாளில் அவளுக்கு அவன் மேலிருந்தது காதலல்ல காமமென்பதை நான் கண்டுக்கொண்டேன்.


வாஸ்தோவும் அவன் காதலியும் அவனுடைய பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்கள். வாஸ்தோவின் நிழலாய் வாசுகி தொடர, வாசுகியின் நிழலாய் நான் அவர்கள் இருவரையும் தொடர்ந்தேன். பைக்கை ஓட்டியபடியிருந்த வாஸ்தோ அவன் பின்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு இதழ் முத்தம் கொடுத்தான். பைக்கில் சென்றபடியே இதழ் முத்தமென்றதும், அந்தப் பெண்ணின் இதழை அவன் இதழ் கொண்டு ஒற்றியெடுத்தானென நினைத்துக் கொள்ளாதீர்கள். அதுவொரு நீண்ட முத்தம். 


பைக்கை ஓட்டியபடியே நீண்ட முத்தமா என்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம். வெளிச்சத்தில் நிற்பவர்கள் தான் வேடதாரிகள். நான் இருண்ட உலகில் வாழ்பவன். அவன் அவளை முத்தமிட்ட கணத்தில் வாசுகியின் முகம் பார்த்தேன். அந்த முகத்தில் – அத்தனை நாளும் அழகு பொங்கி வழிந்த அந்த முகத்தில் – முதன்முறையாக அழுகல் வாடை வீசியதை நுகர்ந்தேன். 


***

வாஸ்தோ கண்ணியமானவனோ நாகரீகமானவனோ அல்ல என்பது எனக்குப் புரிய ஒரு வருடமாகியது. ஒருவருட காலமாக அவனை நான் பின் தொடர்வதைக் கூட கவனியாதவனாய் அவன் சென்றது எனக்கு அவன் மேல் மதிப்பை இன்னும் அதிகமாகவே ஏற்றி வைத்திருந்தது. அவன் தன்னுடைய பைக்கின் பின்னே ஒரு பெண்ணை அமர வைத்த பொழுது கூட அவனை நான் தவறாக நினைக்கவில்லை. சாலை என்று கூடப் பாராமல், பைக்கை ஓட்டியபடிக்கே அவளுக்கு அவன் இதழ் முத்தம் கொடுத்தான். மற்ற ஆண்களைப் போலவே தான் இவனும் என்கிற உண்மை எனக்கு உறைத்தது. என் வானம் இருண்டது.


என் இருண்ட வானிலிருந்து கீழிறங்கிய முகில் துளிகள் நீராய் அல்லாமல் அமிலமாய் என் முகத்தில் விழுந்தது. அமிலத்துளிகள் என் தோல் தாண்டி சதைத் தாண்டி எலும்பு வரையிலும் ஊடுறுவியது. இவன் எனக்கானவன். எனக்கு மட்டுமேயானவன். இவனை இன்னொருவளுக்கு விட்டுக் கொடுத்தல் என்பது என்னால் இயலாத காரியம். இதுவரையிலும் நான் பார்த்தறியாத கோரமுகமொன்றை என் நிலைக்கண்ணாடியில் கண்டேன்.


***

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று தமிழில் ஒரு சொலவடை அறிந்திருப்பீர்கள். அதே சொலவடையானது சீனாவில் ஓயாது சொட்டும் நீர் ஓட்டையாக்கிவிடும் பாறையை என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் பொருட்டு தமிழில் எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். வாசுகி கரைப்பாராக இல்லை. சீன தேசத்தின் மிகக் கொடூரமான சித்ரவதையான சொட்டு நீர் முறையை முதலில் கைக்கொண்டாள். தகுந்த இடைவெளியில் சொட்டுச் சொட்டாய் அவளைப் பற்றிய சிந்தனைகளை அவன் தலையில் சிந்தவிடுவதன் மூலமாக அவன் காதலித்தப் பெண் அவனோடு பேசுகையில், அவன் கவனத்தைச் சிதறடித்து அவன் மூளையைச் சிதைத்தாள். நாளடைவில் அவனுக்கும் அவளுக்குமிடையில் இது பூதகரமாக வெடித்து, அவள் அவனை விட்டுப் பிரிய, துளி நீரிலிருந்து எறும்பாக மாறி அவனது மூளையை அரிக்க ஆரம்பித்தாள். அதாவது வாஸ்தோவின் செயல் எப்படி அமிலமாக மாறி வாசுகியின் எலும்பு வரையிலும் ஊடுறுவியதோ அதற்குப் பிரதிபலனாக வாசுகி பொழிந்த இந்த அமிலமழையானது, அவனை எந்தவொரு இடத்திலும் நிம்மதியாக இருக்க விடமால் செய்தது. 


அவன் உறங்கச் செல்கையில் கனவாக, எழுந்து நடமாடுகையில் நினைவாக. ஒவ்வொரு நாளும் தன்னை யார் ஆட்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே அவன் வாசுகியின் பிடியில் சிக்கியிருந்தான்.


வாசுகியின் இந்த நடவடிக்கை யாருக்கும் தெரியாமல் அவள் நிகழ்த்தும் விளையாட்டாக அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவளது நிழலில் அவளைத் தொடர்ந்துச் செல்லும் என்னை அறியாமல் அவள் எதுவும் செய்யமுடியாது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. உடல் என்பது கூடலுக்கானது என்பதில் ஊறிப்போயிருந்த என் மனம், இனி அவளை எந்தவிதமான குற்றவுணர்முமின்றித் தீண்டலாம் என்று குதூகலமடைந்தது. 


***

அவன் அவசரமாய் எங்கேனும் செல்லும் போது, அதிலும் குறிப்பாக அவன் காதலித்தப் பெண்ணைப் பார்க்க செல்லும் போது, அவனது வேகத்தைத் தடைச்செய்யும் விதமாக, அவன் செல்லும் பாதையில் கற்களாய் சிதறிக் கிடந்தேன், குழிகளாய் மாறி அந்தப் பாதையை இன்னும் கடினமாக்கினேன். சாலையோரம் ஒரு நாயைக் கொன்று அவனது பார்வையில் படும்படி போட்டேன். அவனது அவசரம் அவனை ஆத்திரம் கொள்ள வைத்தது. நாயின் சடலம் அவனைப் பரிதாபப்பட வைத்தது. மொத்தத்தில் அவன் சாலையைச் சபிக்க ஆரம்பித்தான். அவன் காதலி அவனிடம் காதல் மொழி பேசுகையில், அவனோ கரடுமுரடான சாலையைப் பற்றி சிந்தித்தான்.


பால் பாத்திரம் அடுப்பில் இருக்கையில், சோப்பு சீப்பு வாங்குகிறீர்களா என்பதில் துவங்கி ஆண்மைக்குறைவுக்கு எங்களிடம் மருந்து இருக்கிறது என்பது வரையிலான கணினி அழைப்பின் வழியாக அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டேன். அவன் என் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கும் அந்த நேரத்தில் அடுப்பிலிருக்கும் பால் பொங்கி அடுப்பில் வழிந்துப் போக வைத்தேன். என்னிடம் கடிந்துக் கொள்ள முடியாமையையால் உண்டான ஆத்திரத்தை அவனது காதலியிடம் காட்ட வைத்தேன். 


காதலும் கானமும் காமமும் ஒருவனைக் கட்டிப் போடும் தன்மையைக் கொண்டது. அது அவன் மனத்தைச் சமநிலைப்படுத்தும். முதலில் காமத்திலிருந்த அவன் நினைவைக் குலைத்தேன். நீலப்படக் காட்சியில் வரும் பெண் நடிகரின் முகத்தில் அவன் காதலியின் முகம் தெரியும்படியாக வைத்தேன். ஆனால் கவனமாக அந்த ஆண் நடிகனின் முகத்தை மறைக்காமல் விட்டேன். காதலியின் மடியில் அவன் படுத்திருக்கையில் அந்த நீலப்பட நாயகியின் சாயலை அவள் முகத்தில் பார்க்க வைத்தேன். நீலப்படங்களைப் பார்ப்பதிலும், காதலியின் தீண்டலிலும் அவனை ஒன்றவிடாமல் செய்தேன். அவன் கேட்கும் கானங்களில் அவளுடைய நினைவுகளால் நிரப்பினேன். கானங்கள் காதலியை நினைவுறுத்தின – காதலி நீலப்பட நாயகியை நினைவுறுத்தினாள் – நீலப்படங்களோ அவளை வேறொருவருடன் அவள் உடலைப் பகிர்வதாய் தோன்றச் செய்தன.


சிங்கங்கள் வலிமை மிக்க மிருகம். அதை நேரடியாகத் தாக்கி வெற்றிக் கொள்ள முடியாத சிறிய உருவமான கழுதைப் புலிகளின் விளையாட்டை அவனோடு கைக்கொண்டேன். எனக்குக் கிடைத்த ஒவ்வொரு தருணத்திலும் அவனின் சமநிலையைக் குலைத்து அவனிடம் ஒரு இயலாமை எண்ணத்தை தோற்றுவித்தேன். விளைவு அந்த இயலாமை எண்ணம் அவனுள் கோபாமாக உருத்திரண்டது. அந்தக் கோபம் அவனைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து அவனைத் தனிமைப்படுத்தியது. அந்தத் தனிமை அவனை எனக்கானவனாக மாற்றியது. 


***

வாசுகிக்கு வாஸ்தோ தேவை. எனக்கோ வாசுகித் தேவை. ஆனால் வாசுகியைப் போன்று நீர்த்துளியாகவோ எறும்பாகவோ கல்லாகவோ குழியாகவோ கணினிக் குரலாகவோ மண்ணாகவோ நாயாகவோ பூனையாகவோ என்னால் ஒருபொழுதும் உருமாற்றமடைய முடியாது.  வாஸ்தோவின் நிழலாய் அவனை அவள் பின் தொடர்கையில் என்னால் அவளை நெருங்கவும் முடியாது. வாஸ்தோவின் நிழலிலிருந்து அவள் விலக வேண்டும். பாலைவன நாகங்கள் இரைத் தன்னைத் தேடி வரும் வரையிலும் பொறுமையாகக் காத்திருப்பதைப் போல வாசுகியின் நிழலில் நானும் காத்திருக்க வேண்டும். 


எனக்கான நாளிற்காக நானும் காத்திருந்தேன் அவள் நிழலின் நிழலாக. காத்திருப்புகள் எப்பொழுதுமே வீண் போய்விடுவதில்லை. ஒருவாரம் முன்பாக ஒருநாள் வாஸ்தோவின் நிழல் விஸ்தீரணமடைந்தது. அவனது நிழலில் நின்றிருந்த வாசுகியின் நிழலும் அவனின் நிழலில் கலந்தது. நான் எதிர்பார்த்துக் காத்திருந்த இருள் எங்கள் இருவரையும் முழுமையாக ஆக்கிரமித்தது. என் உருவை அவளிடம் வெளிக் காண்பித்தேன்.


***

வாஸ்தோ என் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டான் என்கிற ஆனந்தத்தில் நான் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். என்னைச் சுற்றி இருள் சூழ்ந்திருந்தது. வாஸ்தோ நின்றிருந்த இடத்தில் கரிய நிறத்தில் அரவமொன்று சுருண்டிருந்ததைப் பார்த்தேன். இமைகளற்ற அதன் கருகமணி விழிகள் என்னை உற்றுப் பார்த்தபடியிருந்தது அந்த இருளிலும் என்னால் மிகத்தெளிவாகப் பார்க்க முடிந்தது.


வாசுகி என்னைப் பார்த்துவிட்டது. நான் வாசுகியைத் தீண்ட வேண்டும். நான் வாசுகியைத் தீண்ட வேண்டுமென்றால், வாசுகி நான் தீண்டும் தூரத்திற்கு என்னை நெருங்கி வரவேண்டும். வாசுகியின் உடலில் அசைவில்லை. என் உடலோடு என் உடலை உரசுவதன் மூலம் ஒரு உராய்வு சப்தத்தை எழுப்பி, அவள் ஈர்க்க முடிவு செய்து என் உடலோடு என் உடலை உராய ஆரம்பித்தேன்.


அது அரவு தான் என்பது எனக்கு விளங்கிவிட்டது. அது தன் உடலை உள்ளொடுக்குவதன் மூலம் என்னைத் தாக்க தயாராகிவிட்டது என்பது புரிந்தது. அரவின் அசைவை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில் நானும் ஒரு அரவானால் மட்டுமே சாத்தியம். முதற்கட்டமாக நான் என் கண்களின் மேலிமைகளை அறுத்தெறிந்துவிட்டு அதன் உருவத்தை ஊடுறுவத் துவங்கினேன்.


வாசுகி என்னோடு மோத தயாராகிவிட்டது எனக்குப் புரிந்துப் போனது. உடலோடு ஓட்டி வைத்திருந்த தலையைத் தூக்கி நானும் எச்சரிக்கையோடு தயாரானேன்.


என் முன்னேத் தலைத் தூக்கி நிற்பது தன் துளி உமிழ்நீரால் நன்கு வளர்ந்த யானையையே சாய்த்துவிடும் வல்லபம் கொண்ட ராஜநாகம் என்பது தெரிந்தது. ஆறடி உயரத்திற்கு அது என் முன் எழுந்து நின்றது. அதன் பார்வை முதல்முறையாக வாஸ்தோவைக் கண்ட அந்த நாளில் என் உடல் கூசியதைப் போன்று கூச வைத்தது. எனில் அன்று என்னுடலைக் கூச வைத்தப் பார்வை வாஸ்தோவினுடையதா…!


வாசுகி என்னைப் பார்த்து எச்சரிக்கையடைந்துவிட்டது. கல்லாக மண்ணாக ஏன் கணினியின் குரலாகக் கூட உருமாறத் தெரிந்த வாசுகி இனி என்னைப் போல உருவமெடுக்கப் போகிறது. நல்லது. 


ராஜநாகங்கள் அபாயகரமானவை அல்ல. இன்றுவரையிலும் ராஜநாகம் தீண்டி மனித உயிரிகள் இறந்ததாய் எங்குமே தகவல்கள் இல்லை. என் காதுகளில் அசரீரியாய் ஒரு குரல் ஒலிக்கிறது. நான் என் முன்னே படமெடுத்து நிற்கும் ராஜநாகத்தை நெருங்குகிறேன்.


என் திட்டம் நிறைவேறுகிறது. வாசுகி என்னை நெருங்கி வருகிறது. ‘வா வந்து என்னைத் தீண்டு. வா’


ராஜநாகத்தின் தோல் பளபளப்பு என்னை ஈர்க்கிறது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் சாவிக் கொடுக்கப்பட்ட பொம்மையாய் அதை நெருங்குகிறேன். வாஸ்தோவின் சாவி என் கையிலென நினைத்திருந்தேன். இப்பொழுது என்னுடைய சாவி இந்த ராஜ நாகத்தின் கைகளிலா…!


“பயப்படாதே என் அருகில் வா” என் தலைக்குள் அதன் குரல் ஒலிக்கிறது. 


“எனக்கு உன்னோடு பயமில்லை” நானும் அதற்கு என் வாயைத் திறந்து பதிலளிக்கிறேன்.


“என் விடம் உன்னை ஒன்றும் செய்யாது” மீண்டும் அதன் குரல் என் தலைக்குள்.


“அது உன் உமிழ்நீர். உன் உமிழ்நீர் விஷமென்றால், என் உமிழ்நீரிலும் உன்னைக் கொல்லும் விஷமிருக்கிறது” நான் தன்னிச்சையாக அதனோடு பேச ஆரம்பித்துவிட்டேன்.


அந்த ராஜநாகம் என் இதழ் கவ்வியது. வாஸ்தோ அவன் காதலிக்குக் கொடுத்ததைப் போன்ற ஒரு நீண்ட முத்தமாக அது இருந்தது. என் இதழைக் கவ்வியபடியே அது என் உடலைச் சுற்றியது. அதன் வளைவு நெளிவுகளுக்கேற்ப என்னுடலும் வளைந்துக் கொடுத்தது. தரைத் தொட்டிருந்த எங்களின் பாதம் எங்கள் இருவரின் உடல்வலுவைத் தாங்கமுடியாது தவிக்க, நாங்கள் இருவரும் ஒருசேரத் தரை விழுந்தோம்.


வாஸ்தோ வேறு அவன் நிழல் வேறல்ல. அவன் நிழலுருவம் இது. வாஸ்தோவை மீண்டும் என் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென்றால், இந்த நிழலுருவத்தை என் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். என்னைப் பிணைத்திருந்த அந்த ராஜநாகத்தை என்னோடு நானும் மிக மூர்க்கமாக பிணைத்துக் கொண்டேன்.  யார் வலியவர் என்கிற போராட்டம் எங்களுள் துவங்கியது. இருவரும் தரையில் உருள ஆரம்பித்தோம். 

***

ஒரு வாரம் பத்து நாட்களாக அந்தச் சூழிப்பெண்ணின் முகம் என் தலைக்குள், எப்படி மண்புழுக்கள் மண்ணை இல்லையில்லை அது சரியாய் இல்லை. புழு உருவாகியிருக்கும் உடற்புண்ணில், அந்தப் புழுக்கள் எப்படி உள்ளும் புறமுமாய் சதைத் துளைத்து தன் உணவாய் உடற்சதையைத் திண்குமோ அப்படியான ஒரு வேதனையை எனக்குள் உண்டாக்கியிருந்தது. உண்ணும் உணவில் துவங்கி உறங்குகையில் கனவாகவும் அவள் முகம் என் நினைவுகளில் நிலைக் கொண்டுவிட்டது. 


ஒருசில சமயங்களில் யாரென்றே தெரியாத ஒருவளுக்காக இத்தனை மனவேதனையும் மன உளைச்சலையும் அனுபவிக்கத்தான் வேண்டுமா என்றுக் கூடத் தோன்றியது. அவள் முகத்தை ஒதுக்கிவிட முயற்சிக்கையில் அவள் வயிற்றிலிருக்கும் சிசு – அந்த முகமறியா சிசுவின் நினைப்பு வந்து என்னை ஆட்கொண்டு விடுகிறது.


நேற்று இரவு என் தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே படுத்திருந்தேன். சட்டென சுழலும் மின்விசிறியின் மத்தியில் அவளது முகம் கர்ப்பம் தரித்திருந்த மோனலிசாவின் விரக்திப் புன்னகை முகமாய் தெரிந்தது. அந்தப் பெண் என்னைப் பார்த்து தன் கையறு நிலையை நினைத்து விரக்தியாய் புன்னகைக்கிறாளா…! அல்லது அல்லது உன்னால் இதைக் கூடக் கண்டறியமுடியவில்லையே என்று என் இயலாமையைப் பார்த்து ஏளனமாய் புன்னகைக்கிறாளா…! அந்தப் பெண்ணின் பூடகப் புன்னகை என்னிடம் என்ன சொல்ல விளைகிறது…? உன்னால் முடியாது என்று என்னை மட்டம் தட்டும் புன்னகையா அது…? 


நான் ஏன் இப்படி ஒன்றிற்கும் உதவாதவனாக இருக்கிறேன் என்று எனக்கு என் மீதே ஆத்திரம் ஆத்திரமாக வர ஆரம்பித்தது. இயலாமையின் வெளிப்பாடு என்பது தானே கோபம். கோபம் என் கண்களை மறைக்க அருகிலிருந்த சுவற்றில் பலம் கொண்ட மட்டும் குத்தினேன். முஷ்டியின் வலியில் அவள் முகத்தை – அந்த முகத்திலிருந்த ஏளனத்தை மறக்க நினைத்தேன். முஷ்டியின் வலி அதிகரித்ததைப் போலவே என்னுள் உருவாகியிருந்தக் கோபமும் அந்தப் பெண்ணின் முகத்துள்ளியமும் அதிகரித்தது. அந்தப் பெண்ணின் முகத்தில் கரியைப் பூசுவதைப் போல என்னை யாரென்று அவளுக்கு நான் நிரூபித்தாகவேண்டும். மனதினுள் தீர்க்கமாக நினைத்துக் கொண்டேன்.


தூங்கி எழுந்தால் மனதிலிருக்கும் வேகம் சற்று மட்டுப்பட்டுவிடும் என்பதால் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தேன். நேரம் செல்லச் செல்ல பாதம் தீண்டிய அரவின் விஷம் தலைக்கு ஏறுவதைப் போல என்னுடைய ஆத்திரமும் கோபமும் நிதானமாகத் தலைக்கு ஏறி அங்கே குடியேறியது.


பொழுது விடிந்ததும் அவளைத் தேடி நான் செல்ல வேண்டிய அவசியமேயின்றி அவளே என்னைத் தேடி வந்து நின்றாள். நேற்றிரவு நான் பார்த்த அதே மோனலிசா புன்னகையோடு. கற்பனையில் பார்த்ததை விடவும் நேரில் பார்க்கையில் அந்தப் புன்னகை இன்னும் குரூரமாய் எனக்குத் தெரிந்தது. பசித்தலையும் மிருகத்தின் வேட்கையோடு அவளை நெருங்கினேன். ஆனால் அவளோ எந்தவொரு பாவமாற்றமுமின்றி என்னை அதே புன்னகையோடு வரவேற்றாள். 


முதலில் அவளது ஆடையைக் களைந்து அவளை அம்மணமாக்கினேன். தன் கனத்த தொந்தி சரிய என் முன்னே நின்றவள் முகத்தைப் பார்த்தேன். அவளது முகத்தில் அதேப் புன்னகை. இவ்வளவு தானா நீ…?!?!?!


“உன்னைப் புணர்ந்தவன் யாரென உனக்குத் தெரியாது. என்னை நீ ஏளனமாகப் பார்க்கிறாயா…?” என் நாசியிலிருந்து புஸ் புஸ்ஸென வெளியான உஷ்ணக்காற்று அவள் உடலைத் தீண்டியது.


“என்னை நீ புணர்ந்த அன்று இதே உஷ்ண மூச்சைத் தான் நான் உணர்ந்தேன்” புன்னகை மாறா உதட்டிலிருந்து வெளிவந்த அவளின் குரல் என் மூளையைத் தாக்கியது.


“என்ன நானா…?” நான் சற்றுத் தடுமாறினேன். என் கைவிரல்கள் நடுங்கியது கோபத்திலா அல்லது என் மீது விழுந்த வீண்பழிச் சொல்லின் ஆத்திரத்திலா என்பது புரியாமல் அதிர்ச்சியில் நின்றேன்.


“முகமறியா இருளில் ஒருவன் தன்னைப் புணர்ந்தாலும், அவனின் உடல் நாற்றமும், அவன் மூச்சுக்காற்றும், அவன் தீண்டலின் தண்மையையும் அந்தப் பெண் அறிவாள். உன் மூச்சுக்காற்றும் உடல் நாற்றமும் அதை ஊர்ஜிதப்படுத்தி விட்டது. இனி மிச்சமிருப்பது உன்னுடைய தீண்டல் மட்டுமே. வா வந்து என்னைத் தீண்டு”


என்னுடல் வியர்த்து ஒழுகியது. “இல்லை நான் இல்லை” நான் அவசர அவசரமாக இடவலமாய் தலையாட்டினேன்.


“அது நீயா இல்லையா என்பதை உன் தீண்டல் தான் இனி முடிவு செய்யும்” என்றபடியே என்னருகில் வந்தவளின் பானைவயிறு என் ஒட்டிய வயிற்றை அழுத்த, என் வலக்கையை பிடித்து அதை அவள் பிறப்புறுப்பிலும், இடக்கையால் அவள் கழுத்தைச் சுற்றி தோளிலும் போட்டுக் கொண்டு, என்னுடல் வியர்வையைத் தன் நாவால் சுவைத்தாள்.


“நீ உன் உத்தம வேடத்தைக் கலைக்கும் நேரம் வந்துவிட்டது வாஸ்தோ. என் வயிற்றில் வளரும் சிசுவின் தந்தை நீதான்” என்றாள் என் காதோடு. ராஜநாகத்தின் ஈரமூச்சில் கூட விஷம் கலந்திருப்பதைப் போல, அவளது மூச்சுக்காற்றிலிருந்த விடத்தின் நெடி என் மூளையைத் தாக்கியது. என்னுள் தடுமாறிக் கொண்டிருந்த வேட்டை மிருகம் மீண்டும் உயிர்க் கொண்டது.


“உன்னைப் புணர்ந்தது நானா அல்லது வேறு எவரேனும் ஒருத்தனா என்பதை, உன் வயிற்றிலிருக்கும் குழந்தை முடிவு செய்யட்டும்.” ஈரத்தின் பிசுபிசுப்போடிருந்த அவளது பிறப்புறுப்பின் உள்ளே என் கையை நுழைத்து, அங்கே வெளிவரக் காத்திருந்த குழவியின் உடல் பற்றி வெளியிழுத்தேன்.


நிணத்தின் ஈரத்தோடு என் கை வந்த அந்தக் குழவியின் உடல் ஒரு பிண்டமாய் இருந்தது. ஆமாம். அதன் தலை எங்கே கால் எங்கே கை எங்கே என்பதைத் தேடவேண்டிய பிண்டமாய் அல்லது அனைத்தையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டிய களிமண் உருண்டையாய் அது என் கையில் இருந்தது.


ஆணா பெண்ணா என்றுக் கூடக் கண்டறிய முடியாத அந்தப் பிரதியின் தொப்பூள் கொடி மட்டும் நீண்டுச் சென்றது. அந்தத் தொப்புள் கொடியை என் பார்வைத் தொடர அங்கே ஒர் விருட்சம் வீசுகின்ற காற்றிற்கேற்ப தன் தலையை நிதானமாக அசைத்தப்படி இருந்தது. மோனலிசாவின் சாயலில்.



000

நடுகல்-15

Thursday 6 July 2023

கரோனா என்னும் உரிப்பொருள் - அ.ராமசாமி

 



அ.ராமசாமி

---------------- 

கரோனா என்னும் உரிப்பொருள்

 

 

 

நம் காலத்தின் பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல் விளம்பரங்களாக, காட்சித்துணுக்குகளாக, தொடர்கதைகளின்  உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும் அலைத்துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது கோவிட் 19 என்னும் சொல் இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை. 

 

 

உலக அளவில் இரண்டு உலகப்போர்களைப் பற்றிய பதிவுகள் நடப்பியல் இலக்கியங்களாகவும் அபத்தங்களின் வெளிப்பாடுகளாகவும் அச்சத்தின்   மிகையுணர்வுகளாகவும், வன்முறையின் குரூரங்களாகவும் எழுதப்பட்டது போல   கரோனா காலத்துப் பதிவுகள் இப்போது எழுதப்படுகின்றன.  தாதுவருசத்துப் பஞ்சம் பற்றிய கதைத்தொன்மங்களைப் போல சில காலம் கழித்துக் கரோனா காலத்துக் கதைகளும் தொன்மங்களும் அடுத்த தலைமுறைக்கு வாசிக்கக் கிடைக்கக்கூடும்.   நம் காலத்து இலக்கிய வடிவங்களான நாடகங்கள், கதைகள், கவிதைகள் என்பன அதனதன் இயல்புக்கேற்ப கரோனாவைப் பேசுபொருளாக பாடுபொருளாக-  உரிப்பொருளாக ஆக்கித் தரக்கூடும். 

 

 

கவிதை, நாடகம், கதை என்ற இம்மூன்றிலும் கவிதை வடிவம் உடனடிக் கவனத்தை முன்னெடுக்கும் வடிவம்.   கதைகளும் நாடகங்களும் நிகழ்வுகளையும் முரண்களையும் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தைல் கவிதை உணர்வின் வெளிப்பாடாகப் பெரும் நிகழ்வுகளை எழுதிக்காட்டிவிடும். பேரழிவுகளும் பெருங்கொண்டாட்டங்களையும் உடனடி மனப்பதிவுகளாகவும் உணர்ச்சிகரமான முன்வைப்புகளாகவும்  ஆகக்கூடியன. இம்முன்வைப்புகள் தன் அனுபவமாக வெளிப்படும்போது அகக்கவிதையின் சாயல்களையும், சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிப்பேசும்போது புறக்கவிதையின் சாயலோடும் வெளிப்படும். இது பொதுவான உலகக் கவிதையின் இயல்புகள்தான். ஆனால் தமிழின் கவிதையியல் இதனையே அடிப்படை இலக்கியவியலாக எழுதி வைத்துக்கொண்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா என்னும் பெருநோயையும் அதன் நிமித்தங்களையும் தன் அனுபவ வெளிப்பாடுகளாகவும், புறநிலை நடப்பாகவும் எழுதிக்காட்டிய கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன.    

 

கரோனாவும் கரோனாவின் நிமித்தங்களும்

 

 

2020, மார்ச் தொடங்கி உலகத்தின் உரிப்பொருளாக மாறியிருக்கிறது கரோனா. போர்களைப் போலவே- பஞ்சங்களைப் போலவே- பேரலைச் சுழற்சிகளைப் போலவே இந்தப் பெருநோயும் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்து அடங்கியிருக்க வைத்திருக்கிறது. அச்சத்தின் விளைவுகளால் உண்டாவதைத் துன்பியலாகப் பேசுகிறது உலக இலக்கியவியலான அரிஸ்டாடிலின் கவிதையியல். தமிழின் கவிதையியல் துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் உரிப்பொருளைப் பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் என்கிறது. பிரிவு மட்டுமல்லாமல், இருத்தல், இரங்கல் போன்ற அக உரிப்பொருள்களும் கூடத் துன்பியலின் சாயல்கள்தான். 

 

கோவிட் 19 அல்லது கரோனா என்னும் சொல்லின் நேரடிப் பொருண்மை நோய்மை. நோய்மை எதுவாயினும் மருந்துகளால் தீர்த்துவிட முடியும் என இறுமாப்பு கொண்டிருந்த நவீன மருத்துவம் கையறுநிலையில் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ அறிவின் போதாமையால் அரசு நிர்வாகம்   தனித்திரு; அடங்கியிரு எனப் போதிக்கிறது மருத்துவ உலகமும். தனித்திருப்புகளையும் தாண்டித் தினசரி மரணங்களைப் புள்ளிவிவரங்களாக வாசிக்க நேர்ந்த உலக அரசுகளும் அதிகாரத்துவ அமைப்புகளும்  அதில் இயங்கும் பொதுமனிதர்களும், நோய்கண்ட தனிமனிதர்களும் வாழ்க்கையின்  நிலையாமை (காஞ்சி)யையும் அதன் நிமித்தங்களையும் கண்கூடாகக் கண்டு திணறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையைத் தமிழின் நிகழ்காலப் பெருங்கவி மனுஷ்யபுத்திரனும் [நிலவெளி /செப்டம்பர், 2020 / 27-31], புனைகதைகளில் தனக்கென ஒரு சொல்முறையைக் கொண்டிருக்கும் வா.மு.கோமுவும் [யாவரும்.காம், செப்டம்பர் 6 கவிதைகள்] கவிதைகளாக எழுதிக்காட்டியுள்ளனர்.   

 

மனுஷ்யபுத்திரனும் வா.மு.கோமுவும் எழுதியிருக்கும் உரிப்பொருள் ( Content) அல்லது கவிதைப் பொருண்மைகள் கரோனோ என்ற ஒன்றுதான். ஆனால் வெளிப்பட்டுள்ள விதமும் உண்டாக்கும் உணர்வுகளும் எதிரெதிராக இருக்கின்றன. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து திரும்பிய மனுஷ்யபுத்திரன் கரோனாவை தன்னுணர்வின் வெளிப்பாடாக -  அகக்கவிதைக்கான உரிப்பொருளோடும், அகப்புறமான கையறுநிலையின் நிமித்தங்களாகவும் மாற்றித்தந்துள்ளார். அந்த அனுபவம் நேரடி அனுபவமாகாத நிலையில் வா.மு.கோமு. புறக்கவிதையின் உணர்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார்.   நீண்ட அடுக்குகளையும் , கதையின் ஒரு நிகழ்வை விவரித்துக்க்காட்டிவிட்டு கவிதை எழுப்ப நினைத்த விவாதத்தை அல்லது கட த்த நினைத்த உணர்வுகளை முன்வைக்கும் தன்மை கொண்ட கவிதைகளை அதிகம் எழுதும்   மனுஷ்யபுத்திரனின் நீண்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.

 

அக்கவிதையின் தலைப்பு:  சிதைவு

 

எனது நண்பரான மருத்துவர் 

நேற்றிரவு லேசான 

மனச்சிதைவுக்கு ஆட்பட்டார்

 

கொரோனா வார்டில் 

நீண்ட பணியிலிருந்த அவர் 

பணி முடிந்து அறைக்கு சென்று 

தன் கவச ஆடையை கழற்ற முடியாமல் 

ஒரு மணிநேரம் போராடிய பிறகு 

இந்தச் சனியன் என் தோலோடு 

ஒட்டி கொண்டதுஎன்று கத்தினார் 

பிறகு அவருக்கு 

தூக்க மாத்திரைகள் அளித்து

தூங்க வைத்தனர்.   

 

 

ஹோம் கோரண்டன்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 

கொரோனா நோயாளி 

தன் வீடென

தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை

 

 

கையுறை அணிந்த கைகளால் 

தயங்கித் தயங்கி தொடுகிறான் 

கதவுகளையும் குழாய் திருகுகளையும் 

தனித்த கொடியில் காயும் 

தன் உடுப்புகளில் 

சொட்டும் ஈரத்தை 

உற்றுப் பார்க்கிறான்

தனது அறையின் இருக்கையைத் தவிர 

எந்த இருக்கையிலும் 

அவன் மறந்தும் அமர்வதில்லை 

யாருமில்லாத போது 

வீட்டின் வரவேற்பறையின்

எதையும் தொட்டுவிடாமல் நடந்து 

முகக்கவசத்தை சற்றே இறக்கிவிட்டு 

ஆழமாக மூச்சு விடுகிறான் 

நாளெல்லாம் ஒரு வார்த்தை 

பேசாமலிருந்து வலிக்கும் தாடைகளைத்

திறந்து மூடுகிறான்.

கருணையுடன் எப்போதாவது 

யாராவது பேச்சுக்கொடுக்கிறார்கள் 

அவனுக்குச் சொல்ல 

எந்த மறுமொழியும் இல்லை 

தொலைபேசி உரையாடலில் எதுவும் 

அரை நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை 

தன் அவலமான நிர்வாணத்தை 

பிறர் காண்பது 

அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது

பிரத்யேக இடங்களில் 

அவனது பிரத்யேக சாப்பாட்டுத் தட்டுகளும்

கரண்டிகளும்   அமைதியாகத் தூங்குகின்றன

பிறிதொரு அறையில் கேட்கும் 

சிரிப்பொலிகளை 

உற்றுக் கேட்கிறான்.

குழந்தைகளின் முகங்களை 

நினைத்துக் கொள்கிறான் 

தன்னை எதிர்கொள்ள நேர்பவர்கள்

தன்னிடமிருந்து அவசரமாக 

விலகுவதன் பதட்டத்தை 

அவனால் புரிந்து கொள்ள முடிகிறது 

அவர்களுக்காக  

உண்மையில் அவன் வருந்தவே செய்கிறான்

 

 

தனது கழிவறையை 

கிருமிநாசினிகளால்

திரும்பத் திரும்ப 

கழுவிக் கொண்டேயிருக்கிறான் 

பல நாட்கள் 

மாற்றப்படாத தன் படுக்கை விரிப்பின் 

சிதறிய உணவுத் துணுக்குகளைத் தட்டுகிறான்

விளக்கணைத்ததும்

அமைதியின் இருள் கவிகிறது

வாழ்க்கையில்

எப்போதோ இட்டகடைசி முத்தங்கள் 

மனதை கனக்கச் செய்கின்றன 

தலை வலிக்க தொடங்குகிறது

நெற்றிப் பொட்டை யாராவது

சற்று அழுத்துவிட்டால் நன்றாக இருக்குமென

ஒரு கணம் நினைக்கிறான்

கழிவிரக்கத்துடன்அந்த எண்ணத்தை 

விலக்குகிறான்

கொரானோ நோயாளி 

தன் வீட்டில் வேண்டாத விருந்தாளியாய்

தன்னை உணர்கிறான்

தான் ஒரு அபாயகரமான விலங்காக மாறிவிட்டது 

அவனை மனமுடையச் செய்கிறது 

மறுபடி தான் மனிதனாவதற்கு 

இன்னும் எத்தனை நாட்கள்

என எண்ணியபடி

உறங்கிப் போகிறான்

இதெல்லாம் முடிந்த பிறகு 

எல்லோரிடமும் 

மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென 

கண்கள் பனிக்க 

பாதித் தூக்கத்தில் நினைத்துக் கொள்கிறான் 

மேலும் தன் வீட்டைவிட்டு 

சீக்கிரமே

நீண்ட தொலைவு சென்றுவிட வேண்டுமெனவும்

 

 

கோவிட்19 உண்டாக்கியுள்ள இயலாமையும் பிரிவுணர்வுகளும் கொப்பளிக்கும் இந்தக் கவிதை நோயாளியின் இருப்பை மருத்துவருக்கும் மருத்துவரின் மனநிலையை நோய்மையின் மனநிலையாகவும் மாற்றிமாற்றிக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இதே போலவே அவரது மீதியுள்ள கவிதைகளும் இயலாமையையும் கையறுநிலையையும் விவரித்துவிட்டுத் தவிக்கும் ஒரு நோய்மைத்தன்னிலையை வாசிப்பவரின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. கொரோனா வார்டில் மருத்துவர்கள் என்ற கவிதையில் விவரிப்புக்குப் பின் எழும் இழந்து நிற்கும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியாகத் துளிர்க்கும் ஓர் ஆறுதலை – நம்பிக்கையை

 

இங்கு யாருக்கும் யாருமே இல்லை

உதவிக்கு தயங்காமல் கூப்பிடுங்கள்

தாமதமானாலும் நிச்சயம் வருவேன்

என் வாழ்நாள் முழுக்க

நான் நம்புவதும் காத்திருப்பதும்

இந்த இரண்டு வாக்கியங்களினூடேதான்.

 

என்று முத்தாய்ப்பாக வைக்கிறது.  இந்தக் கொள்ளை நோய்க்காலம் ஒருவிதப் பொய்யான நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்க நினைக்கும் மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகளில் ஆகக்கூடிய எரிச்சலும் ஆயாசமும் வெளிப்படுவதைப் பின்வரும் வரிகளில் வாசிக்கலாம்: 

 

ஒரு பிரமாண்டமான

ஓவியக் கண்காட்சி முன் நின்று

கொரோனா இன்றோடு ஒழிந்த து என

உலகத்திற்கு அறிவிக்கலாம்.   (கொள்ளைநோய்க்கால ஓவியங்கள்)

 

நான் மற்றவரிடம் எதிர்பார்ப்பது 

ஒரு புன்னகையை 

வேண்டுமானால் 

பாதி புன்னகையாக 

அதை குறைத்துக் கொள்கிறேன் (புதிய இயல்புக்காலம்) 

 

ஆட்டோகாரன் 

காலையில் முதல் சவாரிக்கு 

ஆட்டோவை கிளப்புவது போல 

சற்று பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது (மறுபடி துவங்குதல் )

வீட்டில்

ஒரு அறையிலிருந்து

இன்னொரு அறைக்குப்போக

இ-பாஸ் இல்லையேயென

தூக்கக் கலக்கத்தில் 

திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன் ( இ- பாஸ்)

 

 

பொய்மையான நம்பிக்கையின் சாயல்களை ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு மனிதரிட த்திலும் உருவாக்கியிருக்கும் இந்தக் காலத்தின் மீது ஆக வெறுப்புடன் கூடிய கேள்வியாக இந்த ஏழு கவிதைகளில் முதல் கவிதை எழுதப்பெற்றிருக்கிறதை வாசிக்கலாம்:   

யாருக்கும் சொல்ல எதுவும் இல்லை 

ஒன்று சாவைப்பற்றிப் பேசுகிறார்கள்

அல்லது எப்படி சாகாமல் இருப்பது 

என்பதைப்பற்றி பேசுகிறார்கள்

 

வாழ்வைப்பற்றி 

ஒரு சொல் கேட்டு 

எவ்வளவு காலமாகிவிட்டது (வாழ்வைப் பற்றிய சொல்)

 

 

தன்னிலையின் துயரமாகவும் நகர்வின்மையின் தவிப்பாகவும் இயங்காத உலகத்தின் சக்கரங்களாகவும் சுற்றி நிகழ்வனவற்றை விவரித்துக் காட்டும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கு மாறாக வா.மு.கோமுவின் கவிதை வரிகள் வாசிப்பவர்களைச் சூழலைக் கவனிக்கும்படி கோருகின்றன. நிகழ்வைக் கட்டமைக்கும் நபர்களையும் அமைவுகளையும் எள்ளலுடன் விசாரிக்கின்றன. செய்வது அபத்தம் என்ற போதிலும் மனிதர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்கின்றன. அத்தோடு இதுவரையிலும் நம்பிக்கையூட்டிய கடவுள்களும் அதிகாரமும் எச்சரிக்கைகளும் அர்த்தமற்றனவாக மாறிவிட்டன என்பதையும் அந்தக் கவிதைகளில் நாம் வாசிக்கலாம். 

தொடர்ச்சியாக வா.மு. கோமுவின் கதைகளை வாசித்தவர்களுக்கு அதன் பொது அமைப்பு ஒன்று பிடிபட்டிருக்கக்கூடும். விட்டேத்தியான விவரிப்பும் அடுக்குகளுமாக நகர்ந்து கதையின் முடிவில் வாழ்க்கையின்   விடை தெரியாத தெரிந்தாலும் சொல்லமுடியாத ஒன்றைக் காட்டிவிட்டு முடிந்துபோய்விடும். அதே தன்மையை இந்தக் கவிதைகளிலும் கூடக் காணமுடிகிறது.   முதலில் ஒரு நீண்ட கவிதை. தலைப்பு:

 

 

உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்

 

அந்தப் பெண்ணை சாலையில்

நான் பார்த்த போது மனதினுள்

எதுவோ அப்போது பூத்துவிட்டது!

இத்தனைக்கும் அந்தப்பெண்ணை

பின்புறமாகத்தான் நான் பார்த்தேன்.

உலகத்தின் அழகெல்லாம் ஒருசேர

அமையப்பெற்றவளாக இருக்கலாம்!

இருப்பது ஒரு வாழ்க்கை!

அதை இப்போது மகிழ்ச்சிப்படுத்த

அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தேன்.

நீலவர்ண சுடிதார் அவள் உடலுக்கு

ஏற்றதாக அமையப்பெற்றிருந்தது.

மிக உயர்ரக மிதியடி அணிந்திருந்தாள்.

அவளின் நடை ஒரு நாட்டியத்திற்கு

ஒப்பானதாக இருந்தது!

சாலையில் செல்வோர் அவரவர்

பாடுகளோடு சென்றார்கள்!

அவளின் எதிர்க்கே கோமாதா ஒன்று

சாலையில் வந்து கொண்டிருந்தது!

எனக்கோ சாலையில் வரும் அது

உலகத்தின் அழகையெல்லாம் ஒருசேர

பெற்றிருக்கும் அவளை முட்டி விட்டால்?

குடல் சரிந்து சாலை ஏக களேபாரமாகிடும்!

நான் நடையை விரைவு படுத்தினேன்.

நான் நல்ல மாடுபிடிக்காரனுமல்ல தான்.

கோமாதா அசைபோட்டபடி திடீரென நின்று

வாலை உயர்த்தி சிறுநீரை வெளியேற்றிற்று!

உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்

வேகமாய் மாட்டைக் கடந்து

மாஸ்க்கை இறக்கிவிட்டு தன் உள்ளங் கைகளால்

சிறுநீரைப் பிடித்துக் குடித்தாள்! தலைக்கும் தீர்த்தம்

போல போட்டுக் கொண்டாள்!

பிறகு எனக்கு யாரோ தண்ணீரை முகத்திலடித்து

எழுப்பினார்கள்! யாரெனப் பார்த்தேன்!

உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்!

 

 

கரோனா என்னும் உரிப்பொருளைக் கவிதையாக்காமல் அதன் நிமித்தங்களைத் தன்னிலைக்கு வெளியே வைத்து மற்றமைகளின் அனுபவமாகவோ, எண்ணங்களாகவோ எழுதுவதன் மூலம் இக்கவிதைகளுக்கு ஓர் புறநிலை நடப்பின் (Objective reality)சாயல்களை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக நகை என்னும் மெய்ப்பாட்டின் உட்கிளைகளான எள்ளல், பேதமைமடமை போன்ற உணர்வுகளை உருவாக்கும் விதமான காட்சிகளை முன்வைக்கின்றன அவரது கவிதைகள். விவரித்துப் பொருள் சொல்லத் தேவையில்லாத அவரது கவிதைகளை இடையீடின்றி  ஒவ்வொருவரும் வாசித்துப் பார்க்கலாம்.

 

அவரின் மரணம்

செய்திச் சேனலில் உங்களின்
மரணத்தைப் பற்றி தகவல் சொன்னார்கள்!
திடுக்கிட்டு அம்மாவை அழைத்து
அவர் போய்ச் சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.
அவர் யாரென அம்மாவுக்கு தெரியவில்லை.
எனக்கும் தெரியவில்லை!
திடுக்கிடலில் நான் எல்லாவற்றையும்
மறந்திருந்தேன்!

சரி நீங்கள் யாரோவாகவேனும் இருங்கள்!
மருத்துவமனையில் நீங்கள்
மிகவும் துன்பப்பட்டிருக்கலாம்.
மூச்சு வாங்க சிரமப்பட்டிருக்கலாம்.
மருத்துவர் உங்களுக்கு சுவாசக்கருவி
பொருத்தியிருந்திருக்கலாம்!

அவ்வப்போது கபசுர குடிநீர் அருந்தி
இரண்டு முட்டைகளும், கீரை சூப்பும்
குடித்திருக்கலாம்! சிலசமயம் இருமியிருக்கலாம்.
வயிற்றுப்போக்கும் இருந்திருக்கலாம்.
நீங்கள் மிகவும் பயந்து கடவுளரைப்
பார்ப்பது போன்று மருத்துவரை நோக்கி
மனதில் இறைஞ்சியிருக்கலாம்.

இந்தமுறை எப்படியேனும் பிழைத்து
வீடு சென்று விட்டால் உங்களது தீய
பழக்கவழக்கங்களை விட்டு விட்டு
புதுமனிதனாக வாழவேண்டுமென
சபதம் கூட எடுத்திருக்கலாம்.
படுக்கையில் மரண பயத்துடன்
படுத்திருக்கையில் தான் வாழ வேண்டுமென
ஆசையும் வருவதாய் எண்ணி அழுதிருக்கலாம்!

உங்களையறியாமல் நீங்கள் இறந்திருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்!


அதிசய விலங்கு

 

நெட் ஃப்ளிக்ஸில் புதிய திரைப்படங்கள்
வெளியாகத் துவங்கி விட்டன!

பேருந்துகளில் ஜன்னலோர சிறுமிகள்
கையசைத்துப் போகிறார்கள்!

கோவில்களிலிருந்து பக்தர்கள்
திருநீரு பூசிய நெற்றியுடன்
புன்னகைத்தபடி வெளிவருகிறார்கள்!

பெளர்ணமி பூஜையில் எல்லா
ராசிக்காரர்களுக்காகவும் யாகம்
நடத்துகிறார் பூசாரி!

கபசுரகுடிநீரென்று குடிவிரும்பிகள்
பாரில் அமர்ந்து குடித்து மகிழ்கிறார்கள்.

நான் மட்டும் புதிதாய் இப்போது தான்
வாங்கிய மாஸ்க், கையுறை, கண்ணாடி அணிந்து
ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றேன்.

அதிசய விலங்கு செல்வதாய் ஆச்சரியமாய்
எல்லோரும் பார்த்து கையசைக்கிறார்கள்!
கோமாளியை பார்த்தது போன்று
சில பெண்கள் சிரித்தும் சென்றார்கள்!




பாதாள உலகம்

 

பாதாள உலகத்தை பேருந்து ஓட்டம்
துவங்கியதால் ஒருமுறை
பார்த்து வர பிரயாணித்தேன்.
எல்லையிலேயே பேருந்தை நிறுத்தி
இறங்கிக் கொள்ளுங்கள்! உள்ளே
பேருந்து போகாது!என்றார் நடத்துனர்.
என்னோடு சேர்த்து பதினாறு பேரும்
இறங்கிக் கொண்டோம்!

பாதாளலோகம்
இருள் நிரம்பியது என்றென்றைக்குமே!
சுங்கச்சாவடி சோதனைக்குப் பிறகு
பாதாள லோகத்தினுள் சென்றோம் நாங்கள்.
முகப்பிலேயே நிலத்தினை குடைந்து
குழிகளாக்கி வைத்திருந்தார்கள்.
பாதாள உலகத்தினர்
சங்க காலத்தில் பாத்ரூம்
வசதியுடன் வாழ்ந்தார்கள் என்பதை
நிருபணம் செய்யும் ஆதாரங்களாம் குழிகள்!
பதினைந்து நபர்களும் பத்திரமாய்
பார்த்துக் கால்வைத்து இறங்க ஒருவன்
மட்டும் பழங்கால எலும்புக்கூடொன்றின்
மீது தவறி விழுந்தான்!
அவன் பிறகு எழவேயில்லை.

நான் என் தந்தையாரைத் தேடிப் பயணித்தேன்.
தந்தையாரை வீடியோ காலில் அழைத்தேன்.
அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சற்று தூரத்தே ஒரு எலும்பு மனிதன் தன்
கைப்பேசி வெளிச்சத்தில் தன் முகத்திற்கு
அவசரமாய் மாஸ்க் அணிந்து கொண்டு
எங்களை எதிர்கொள்ள தயாரானான்.

 

 

கடவுள்

 

என் கடவுளைப் பார்த்து வர
சூடம் ஊதுபத்தி தீப்பெட்டியோடு
சென்றிருந்தேன்!
யாரோ என் கடவுளுக்கு
முகக்கவசத்தை அணிவித்து
போயிருக்கிறார்கள்!

மூச்சு வாங்க சிரம்மாய் இருப்பதாய்
என் கடவுள் குரல் கேட்டது சுவரெங்கிலும்!
இதோவென முயற்சித்தேன்.
உருவாஞ் சுருக்கிட்டிருந்தால் எளிதாக
பணியை முடித்திருப்பேன்.
ஏகப்பட்ட முடிச்சுகளோடு இருந்ததால்
முடிச்சவிழ்க்க முடியாமல் திணறினேன்.

என் கையில் வீணே இருக்கும் கத்தியை
எடுத்தேனும் முயற்சியேன்அசரீரி தான்.
கடவுளின் கையிலிருந்த கத்தியை உருவி
மாஸ்க் முடிச்சை அவிழ்த்தேன்!
புஸ்ஸென்று புகை மண்டலமாயிற்று
அந்த இடம்!

எல்லாம் சரியாகி கண்திறந்த போது
கையில் கத்தி பிடித்தபடி நான்
அவர் மேடையில் அமர்ந்திருந்தேன்.
கடவுள் இடத்தை காலி செய்திருந்தார்.


வியாபாரி

 

நீ ஏன் நாட்டு நாய்க்குட்டிகளை
ராஜபாளையம் சென்று வாங்கி வந்து
வீணாய்க்கிடக்கும் உன்
கோழிப்பண்ணைக்குள் விட்டு
வளர்க்கக் கூடாது? மக்கள்
பண்ணைக்கு தேடி வந்து
வாங்கிச் செல்வார்கள்! நாய் ஒன்றுக்கு
நூறிலிருந்து இருநூறுவரை லாபம்
வைத்து விற்றால் உனக்கு சந்தோசம்
தானே! என்றான் நண்பன்.

அல்லது தஞ்சாவூர் சென்று
ஒரு லோடு பொம்மைகளை
ஏற்றி வந்து உன் கோழிப்பண்ணைக்குள்
இருப்பு வைத்து ஊர் ஊராய்
ஆட்டோவில் போட்டுச் சென்று
பதிவு செய்யப்பட்ட சின்னக் கொடை
ரேடியோவில் விளம்பரம் செய்து
வியாபாரியாக ஏன் மாறக்கூடாது?

அண்ணே வாங்க! அக்கா வாங்க!
உங்க கொழந்தைகள் இந்த கொரனா
காலத்தில் மகிழ்ச்சியாக வீட்டில்
விளையாட தஞ்சை பொம்மைகள்!
கொறஞ்ச வெலையில விற்பனை செய்யுறோம்!
வாங்க! வாங்கக்கா!நாலு பொம்மைகள்
வெறும் நூறே ரூவா தான்!

ஈபாஸ் எடுத்தாவது
பெங்களூர் கூட்டிச் சென்று
உன் ஒரு விரையை விற்று
காசாக்கி வந்து தொழிலை துவங்கி
விடுகிறேன்என்றேன்.

கொரனா காலமோ
வேறு என்ன காலமாகவோ
இருந்தாலும் அறிவுரைகளுக்கு
பஞ்சமே இருக்காது தான் போல!


சமகாலப் பொருளியல் வாழ்க்கையும் உளவியல் சிக்கல்களும் உருவாக்கும் நெருக்கடிகள் வெவ்வேறு விதமான வாழ்க்கைச் சூழலில் வெவ்வேறு விதமான தவிப்புகளை உருவாக்கக் கூடியன. குடும்ப அமைப்பு தொடங்கி, வாழிடம், பணியிட நெருக்கடிகள்  போன்றன  உச்சரிக்கப்படும் சொற்களை எழுதப்படும் பனுவல்களை ஒவ்வொருவிதமாக அர்த்தப்படுத்தத் தூண்டுவன. ஆனால் கரோனா என்னும் உலகு தழுவிய சொல் ஒவ்வொரு மொழியிலும் ஒரே அர்த்தப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கிறது. உண்மையில் கரோனா என்னும் இந்தச் சொல் உலகமயத்தின் கண்டெடுப்பு. அதனை உரிப்பொருளாக்கி எழுதப்படும் பனுவல்கள் எந்த மொழியில் இருந்தாலும் எழுதப்பட்டாலும் அவை உலக இலக்கியத்தின் பகுதியாக மாறிக்கொள்ளும் தகுதியை எளிதாக ஆக்கியிருக்கிறது. கரோனாவும் கரோனாவின் நிமித்தங்களும் உலக இலக்கியத்தின் பகுதியாக மாறும் வாய்ப்பில் இந்தக் கவிதைகளும் வா.மு.கோமுவும் மனுஷ்யபுத்திரனும் உலகக் கவிதையின் பகுதியாக மாறிக்கொள்கிறார்கள்

 

-நடுகல் -இதழ் எண் : 9.