அ.ராமசாமி
----------------
கரோனா என்னும்
உரிப்பொருள்
நம் காலத்தின்
பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில்
பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல்
விளம்பரங்களாக,
காட்சித்துணுக்குகளாக, தொடர்கதைகளின் உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும்
அலைத்துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின்
பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது
கோவிட் 19
என்னும் சொல்
இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை.
உலக அளவில்
இரண்டு உலகப்போர்களைப் பற்றிய பதிவுகள் நடப்பியல் இலக்கியங்களாகவும் அபத்தங்களின்
வெளிப்பாடுகளாகவும் அச்சத்தின் மிகையுணர்வுகளாகவும், வன்முறையின் குரூரங்களாகவும் எழுதப்பட்டது
போல
கரோனா காலத்துப்
பதிவுகள் இப்போது எழுதப்படுகின்றன. தாதுவருசத்துப் பஞ்சம் பற்றிய
கதைத்தொன்மங்களைப் போல சில காலம் கழித்துக் கரோனா காலத்துக் கதைகளும் தொன்மங்களும்
அடுத்த தலைமுறைக்கு வாசிக்கக் கிடைக்கக்கூடும். நம் காலத்து இலக்கிய வடிவங்களான நாடகங்கள், கதைகள், கவிதைகள் என்பன அதனதன் இயல்புக்கேற்ப
கரோனாவைப் பேசுபொருளாக – பாடுபொருளாக- உரிப்பொருளாக ஆக்கித் தரக்கூடும்.
கவிதை, நாடகம், கதை என்ற இம்மூன்றிலும் கவிதை வடிவம் உடனடிக்
கவனத்தை முன்னெடுக்கும் வடிவம். கதைகளும் நாடகங்களும் நிகழ்வுகளையும்
முரண்களையும் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தைல் கவிதை உணர்வின் வெளிப்பாடாகப் பெரும்
நிகழ்வுகளை எழுதிக்காட்டிவிடும். பேரழிவுகளும் பெருங்கொண்டாட்டங்களையும் உடனடி
மனப்பதிவுகளாகவும் உணர்ச்சிகரமான முன்வைப்புகளாகவும் ஆகக்கூடியன. இம்முன்வைப்புகள் தன் அனுபவமாக
வெளிப்படும்போது அகக்கவிதையின் சாயல்களையும், சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்களைப்
பற்றிப்பேசும்போது புறக்கவிதையின் சாயலோடும் வெளிப்படும். இது பொதுவான உலகக்
கவிதையின் இயல்புகள்தான். ஆனால் தமிழின் கவிதையியல் இதனையே அடிப்படை இலக்கியவியலாக
எழுதி வைத்துக்கொண்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா என்னும்
பெருநோயையும் அதன் நிமித்தங்களையும் தன் அனுபவ வெளிப்பாடுகளாகவும், புறநிலை நடப்பாகவும் எழுதிக்காட்டிய கவிதைகள்
தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன.
கரோனாவும்
கரோனாவின் நிமித்தங்களும்
2020, மார்ச் தொடங்கி உலகத்தின் உரிப்பொருளாக
மாறியிருக்கிறது கரோனா. போர்களைப் போலவே- பஞ்சங்களைப் போலவே- பேரலைச் சுழற்சிகளைப்
போலவே இந்தப் பெருநோயும் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்து அடங்கியிருக்க
வைத்திருக்கிறது. அச்சத்தின் விளைவுகளால் உண்டாவதைத் துன்பியலாகப் பேசுகிறது உலக
இலக்கியவியலான அரிஸ்டாடிலின் கவிதையியல். தமிழின் கவிதையியல் துயரங்களைக்
கொண்டுவந்து சேர்க்கும் உரிப்பொருளைப் பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் என்கிறது.
பிரிவு மட்டுமல்லாமல், இருத்தல்,
இரங்கல் போன்ற
அக உரிப்பொருள்களும் கூடத் துன்பியலின் சாயல்கள்தான்.
கோவிட் 19 அல்லது கரோனா என்னும் சொல்லின் நேரடிப் பொருண்மை நோய்மை. நோய்மை எதுவாயினும் மருந்துகளால் தீர்த்துவிட
முடியும் என இறுமாப்பு கொண்டிருந்த நவீன மருத்துவம் கையறுநிலையில் கைகளைப்
பிசைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ அறிவின் போதாமையால் அரசு நிர்வாகம் தனித்திரு; அடங்கியிரு எனப் போதிக்கிறது மருத்துவ
உலகமும். தனித்திருப்புகளையும் தாண்டித் தினசரி மரணங்களைப் புள்ளிவிவரங்களாக
வாசிக்க நேர்ந்த உலக அரசுகளும் அதிகாரத்துவ அமைப்புகளும் அதில் இயங்கும் பொதுமனிதர்களும், நோய்கண்ட தனிமனிதர்களும் வாழ்க்கையின் நிலையாமை (காஞ்சி)யையும் அதன்
நிமித்தங்களையும் கண்கூடாகக் கண்டு திணறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையைத்
தமிழின் நிகழ்காலப் பெருங்கவி மனுஷ்யபுத்திரனும் [நிலவெளி /செப்டம்பர், 2020 / 27-31], புனைகதைகளில் தனக்கென ஒரு சொல்முறையைக்
கொண்டிருக்கும் வா.மு.கோமுவும் [யாவரும்.காம், செப்டம்பர் 6 கவிதைகள்] கவிதைகளாக எழுதிக்காட்டியுள்ளனர்.
மனுஷ்யபுத்திரனும்
வா.மு.கோமுவும் எழுதியிருக்கும் உரிப்பொருள் ( Content) அல்லது கவிதைப் பொருண்மைகள் கரோனோ என்ற
ஒன்றுதான். ஆனால் வெளிப்பட்டுள்ள விதமும் உண்டாக்கும் உணர்வுகளும் எதிரெதிராக
இருக்கின்றன. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து
திரும்பிய மனுஷ்யபுத்திரன் கரோனாவை தன்னுணர்வின் வெளிப்பாடாக - அகக்கவிதைக்கான உரிப்பொருளோடும், அகப்புறமான கையறுநிலையின் நிமித்தங்களாகவும்
மாற்றித்தந்துள்ளார். அந்த அனுபவம் நேரடி அனுபவமாகாத நிலையில் வா.மு.கோமு.
புறக்கவிதையின் உணர்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட அடுக்குகளையும் , கதையின் ஒரு நிகழ்வை
விவரித்துக்க்காட்டிவிட்டு கவிதை எழுப்ப நினைத்த விவாதத்தை அல்லது கட த்த நினைத்த
உணர்வுகளை முன்வைக்கும் தன்மை கொண்ட கவிதைகளை அதிகம் எழுதும் மனுஷ்யபுத்திரனின் நீண்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.
அக்கவிதையின்
தலைப்பு:
சிதைவு
எனது நண்பரான மருத்துவர்
நேற்றிரவு லேசான
மனச்சிதைவுக்கு ஆட்பட்டார்
கொரோனா வார்டில்
நீண்ட பணியிலிருந்த அவர்
பணி முடிந்து அறைக்கு சென்று
தன் கவச ஆடையை கழற்ற முடியாமல்
ஒரு மணிநேரம் போராடிய பிறகு
“இந்தச் சனியன் என் தோலோடு
ஒட்டி கொண்டது” என்று கத்தினார்
பிறகு அவருக்கு
தூக்க மாத்திரைகள் அளித்து
தூங்க வைத்தனர்.
ஹோம் கோரண்டன்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட
கொரோனா நோயாளி
தன் வீடென
தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை
கையுறை அணிந்த கைகளால்
தயங்கித் தயங்கி தொடுகிறான்
கதவுகளையும் குழாய் திருகுகளையும்
தனித்த கொடியில் காயும்
தன் உடுப்புகளில்
சொட்டும் ஈரத்தை
உற்றுப் பார்க்கிறான்
தனது அறையின் இருக்கையைத் தவிர
எந்த இருக்கையிலும்
அவன் மறந்தும் அமர்வதில்லை
யாருமில்லாத போது
வீட்டின் வரவேற்பறையின்
எதையும் தொட்டுவிடாமல் நடந்து
முகக்கவசத்தை சற்றே இறக்கிவிட்டு
ஆழமாக மூச்சு விடுகிறான்
நாளெல்லாம் ஒரு வார்த்தை
பேசாமலிருந்து வலிக்கும் தாடைகளைத்
திறந்து மூடுகிறான்.
கருணையுடன் எப்போதாவது
யாராவது பேச்சுக்கொடுக்கிறார்கள்
அவனுக்குச் சொல்ல
எந்த மறுமொழியும் இல்லை
தொலைபேசி உரையாடலில் எதுவும்
அரை நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை
தன் அவலமான நிர்வாணத்தை
பிறர் காண்பது
அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது
பிரத்யேக இடங்களில்
அவனது பிரத்யேக சாப்பாட்டுத் தட்டுகளும்
கரண்டிகளும் அமைதியாகத் தூங்குகின்றன
பிறிதொரு அறையில் கேட்கும்
சிரிப்பொலிகளை
உற்றுக் கேட்கிறான்.
குழந்தைகளின் முகங்களை
நினைத்துக் கொள்கிறான்
தன்னை எதிர்கொள்ள நேர்பவர்கள்
தன்னிடமிருந்து அவசரமாக
விலகுவதன் பதட்டத்தை
அவனால் புரிந்து கொள்ள முடிகிறது
அவர்களுக்காக
உண்மையில் அவன் வருந்தவே செய்கிறான்
தனது கழிவறையை
கிருமிநாசினிகளால்
திரும்பத் திரும்ப
கழுவிக் கொண்டேயிருக்கிறான்
பல நாட்கள்
மாற்றப்படாத தன் படுக்கை விரிப்பின்
சிதறிய உணவுத் துணுக்குகளைத் தட்டுகிறான்
விளக்கணைத்ததும்
அமைதியின் இருள் கவிகிறது
வாழ்க்கையில்
எப்போதோ இட்டகடைசி முத்தங்கள்
மனதை கனக்கச் செய்கின்றன
தலை வலிக்க தொடங்குகிறது
நெற்றிப் பொட்டை யாராவது
சற்று அழுத்துவிட்டால் நன்றாக இருக்குமென
ஒரு கணம் நினைக்கிறான்
கழிவிரக்கத்துடன்அந்த எண்ணத்தை
விலக்குகிறான்
கொரானோ நோயாளி
தன் வீட்டில் வேண்டாத விருந்தாளியாய்
தன்னை உணர்கிறான்
தான் ஒரு அபாயகரமான விலங்காக மாறிவிட்டது
அவனை மனமுடையச் செய்கிறது
மறுபடி தான் மனிதனாவதற்கு
இன்னும் எத்தனை நாட்கள்
என எண்ணியபடி
உறங்கிப் போகிறான்
இதெல்லாம் முடிந்த பிறகு
எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென
கண்கள் பனிக்க
பாதித் தூக்கத்தில் நினைத்துக் கொள்கிறான்
மேலும் தன் வீட்டைவிட்டு
சீக்கிரமே
நீண்ட தொலைவு சென்றுவிட வேண்டுமெனவும்
கோவிட்19 உண்டாக்கியுள்ள இயலாமையும் பிரிவுணர்வுகளும்
கொப்பளிக்கும் இந்தக் கவிதை நோயாளியின் இருப்பை மருத்துவருக்கும் மருத்துவரின்
மனநிலையை நோய்மையின் மனநிலையாகவும் மாற்றிமாற்றிக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இதே
போலவே அவரது மீதியுள்ள கவிதைகளும் இயலாமையையும் கையறுநிலையையும் விவரித்துவிட்டுத்
தவிக்கும் ஒரு நோய்மைத்தன்னிலையை வாசிப்பவரின் முன்னால் கொண்டு வந்து
நிறுத்துகின்றன. கொரோனா வார்டில் மருத்துவர்கள் என்ற கவிதையில் விவரிப்புக்குப் பின் எழும்
இழந்து நிற்கும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியாகத் துளிர்க்கும் ஓர் ஆறுதலை –
நம்பிக்கையை
“ இங்கு யாருக்கும் யாருமே இல்லை
உதவிக்கு தயங்காமல் கூப்பிடுங்கள்
தாமதமானாலும் நிச்சயம் வருவேன்”
என் வாழ்நாள் முழுக்க
நான் நம்புவதும் காத்திருப்பதும்
இந்த இரண்டு வாக்கியங்களினூடேதான்.
என்று
முத்தாய்ப்பாக வைக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க்காலம் ஒருவிதப் பொய்யான
நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்க நினைக்கும்
மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகளில் ஆகக்கூடிய எரிச்சலும் ஆயாசமும் வெளிப்படுவதைப்
பின்வரும் வரிகளில் வாசிக்கலாம்:
ஒரு பிரமாண்டமான
ஓவியக் கண்காட்சி முன் நின்று
கொரோனா இன்றோடு ஒழிந்த து என
உலகத்திற்கு அறிவிக்கலாம். (கொள்ளைநோய்க்கால ஓவியங்கள்)
நான் மற்றவரிடம்
எதிர்பார்ப்பது
ஒரு புன்னகையை
வேண்டுமானால்
பாதி புன்னகையாக
அதை குறைத்துக்
கொள்கிறேன் (புதிய இயல்புக்காலம்)
ஆட்டோகாரன்
காலையில் முதல்
சவாரிக்கு
ஆட்டோவை
கிளப்புவது போல
சற்று
பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது (மறுபடி துவங்குதல் )
வீட்டில்
ஒரு அறையிலிருந்து
இன்னொரு
அறைக்குப்போக
இ-பாஸ் இல்லையேயென
தூக்கக்
கலக்கத்தில்
திடுக்கிட்டு
விழித்துக் கொண்டேன் ( இ- பாஸ்)
பொய்மையான
நம்பிக்கையின் சாயல்களை ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு மனிதரிட த்திலும்
உருவாக்கியிருக்கும் இந்தக் காலத்தின் மீது ஆக வெறுப்புடன் கூடிய கேள்வியாக இந்த
ஏழு கவிதைகளில் முதல் கவிதை எழுதப்பெற்றிருக்கிறதை வாசிக்கலாம்:
யாருக்கும் சொல்ல எதுவும் இல்லை
ஒன்று சாவைப்பற்றிப் பேசுகிறார்கள்
அல்லது எப்படி சாகாமல் இருப்பது
என்பதைப்பற்றி பேசுகிறார்கள்
வாழ்வைப்பற்றி
ஒரு சொல் கேட்டு
எவ்வளவு காலமாகிவிட்டது (வாழ்வைப் பற்றிய
சொல்)
தன்னிலையின் துயரமாகவும்
நகர்வின்மையின் தவிப்பாகவும் இயங்காத உலகத்தின் சக்கரங்களாகவும் சுற்றி
நிகழ்வனவற்றை விவரித்துக் காட்டும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கு மாறாக
வா.மு.கோமுவின் கவிதை வரிகள் வாசிப்பவர்களைச் சூழலைக் கவனிக்கும்படி கோருகின்றன.
நிகழ்வைக் கட்டமைக்கும் நபர்களையும் அமைவுகளையும் எள்ளலுடன் விசாரிக்கின்றன.
செய்வது அபத்தம் என்ற போதிலும் மனிதர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதைத் தவிர
வேறு வழியில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்கின்றன. அத்தோடு இதுவரையிலும்
நம்பிக்கையூட்டிய கடவுள்களும் அதிகாரமும் எச்சரிக்கைகளும் அர்த்தமற்றனவாக
மாறிவிட்டன என்பதையும் அந்தக் கவிதைகளில் நாம் வாசிக்கலாம்.
தொடர்ச்சியாக
வா.மு. கோமுவின் கதைகளை வாசித்தவர்களுக்கு அதன் பொது அமைப்பு ஒன்று பிடிபட்டிருக்கக்கூடும்.
விட்டேத்தியான விவரிப்பும் அடுக்குகளுமாக நகர்ந்து கதையின் முடிவில் வாழ்க்கையின் விடை தெரியாத – தெரிந்தாலும் சொல்லமுடியாத ஒன்றைக்
காட்டிவிட்டு முடிந்துபோய்விடும். அதே தன்மையை இந்தக் கவிதைகளிலும் கூடக்
காணமுடிகிறது.
முதலில் ஒரு
நீண்ட கவிதை. தலைப்பு:
உலகத்தின்
அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
அந்தப் பெண்ணை
சாலையில்
நான் பார்த்த
போது மனதினுள்
எதுவோ அப்போது
பூத்துவிட்டது!
இத்தனைக்கும்
அந்தப்பெண்ணை
பின்புறமாகத்தான்
நான் பார்த்தேன்.
உலகத்தின்
அழகெல்லாம் ஒருசேர
அமையப்பெற்றவளாக
இருக்கலாம்!
இருப்பது ஒரு
வாழ்க்கை!
அதை இப்போது
மகிழ்ச்சிப்படுத்த
அந்தப் பெண்ணைப்
பின் தொடர்ந்தேன்.
நீலவர்ண
சுடிதார் அவள் உடலுக்கு
ஏற்றதாக
அமையப்பெற்றிருந்தது.
மிக உயர்ரக
மிதியடி அணிந்திருந்தாள்.
அவளின் நடை ஒரு
நாட்டியத்திற்கு
ஒப்பானதாக
இருந்தது!
சாலையில்
செல்வோர் அவரவர்
பாடுகளோடு
சென்றார்கள்!
அவளின்
எதிர்க்கே கோமாதா ஒன்று
சாலையில் வந்து
கொண்டிருந்தது!
எனக்கோ சாலையில்
வரும் அது
உலகத்தின்
அழகையெல்லாம் ஒருசேர
பெற்றிருக்கும்
அவளை முட்டி விட்டால்?
குடல் சரிந்து
சாலை ஏக களேபாரமாகிடும்!
நான் நடையை
விரைவு படுத்தினேன்.
நான் நல்ல
மாடுபிடிக்காரனுமல்ல தான்.
கோமாதா
அசைபோட்டபடி திடீரென நின்று
வாலை உயர்த்தி
சிறுநீரை வெளியேற்றிற்று!
உலகத்தின்
அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
வேகமாய்
மாட்டைக் கடந்து
மாஸ்க்கை
இறக்கிவிட்டு தன் உள்ளங் கைகளால்
சிறுநீரைப்
பிடித்துக் குடித்தாள்! தலைக்கும் தீர்த்தம்
போல போட்டுக்
கொண்டாள்!
பிறகு எனக்கு
யாரோ தண்ணீரை முகத்திலடித்து
எழுப்பினார்கள்!
யாரெனப் பார்த்தேன்!
உலகத்தின்
அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்!
கரோனா என்னும்
உரிப்பொருளைக் கவிதையாக்காமல் அதன் நிமித்தங்களைத் தன்னிலைக்கு வெளியே வைத்து
மற்றமைகளின் அனுபவமாகவோ, எண்ணங்களாகவோ எழுதுவதன் மூலம் இக்கவிதைகளுக்கு ஓர் புறநிலை நடப்பின் (Objective reality)சாயல்களை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக
நகை என்னும் மெய்ப்பாட்டின் உட்கிளைகளான எள்ளல், பேதமை, மடமை போன்ற உணர்வுகளை உருவாக்கும் விதமான
காட்சிகளை முன்வைக்கின்றன அவரது கவிதைகள். விவரித்துப் பொருள் சொல்லத் தேவையில்லாத
அவரது கவிதைகளை இடையீடின்றி ஒவ்வொருவரும் வாசித்துப் பார்க்கலாம்.
அவரின் மரணம்
செய்திச் சேனலில் உங்களின்
மரணத்தைப் பற்றி
தகவல் சொன்னார்கள்!
திடுக்கிட்டு
அம்மாவை அழைத்து
அவர் போய்ச்
சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.
அவர் யாரென
அம்மாவுக்கு தெரியவில்லை.
எனக்கும்
தெரியவில்லை!
திடுக்கிடலில்
நான் எல்லாவற்றையும்
மறந்திருந்தேன்!
சரி நீங்கள் யாரோவாகவேனும் இருங்கள்!
மருத்துவமனையில்
நீங்கள்
மிகவும்
துன்பப்பட்டிருக்கலாம்.
மூச்சு வாங்க
சிரமப்பட்டிருக்கலாம்.
மருத்துவர்
உங்களுக்கு சுவாசக்கருவி
பொருத்தியிருந்திருக்கலாம்!
அவ்வப்போது கபசுர குடிநீர் அருந்தி
இரண்டு
முட்டைகளும்,
கீரை சூப்பும்
குடித்திருக்கலாம்!
சிலசமயம் இருமியிருக்கலாம்.
வயிற்றுப்போக்கும்
இருந்திருக்கலாம்.
நீங்கள் மிகவும்
பயந்து கடவுளரைப்
பார்ப்பது
போன்று மருத்துவரை நோக்கி
மனதில்
இறைஞ்சியிருக்கலாம்.
இந்தமுறை எப்படியேனும் பிழைத்து
வீடு சென்று
விட்டால் உங்களது தீய
பழக்கவழக்கங்களை
விட்டு விட்டு
புதுமனிதனாக
வாழவேண்டுமென
சபதம் கூட
எடுத்திருக்கலாம்.
படுக்கையில் மரண
பயத்துடன்
படுத்திருக்கையில்
தான் வாழ வேண்டுமென
ஆசையும்
வருவதாய் எண்ணி அழுதிருக்கலாம்!
உங்களையறியாமல் நீங்கள் இறந்திருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்!
அதிசய விலங்கு
நெட் ஃப்ளிக்ஸில் புதிய திரைப்படங்கள்
வெளியாகத்
துவங்கி விட்டன!
பேருந்துகளில் ஜன்னலோர சிறுமிகள்
கையசைத்துப்
போகிறார்கள்!
கோவில்களிலிருந்து பக்தர்கள்
திருநீரு பூசிய
நெற்றியுடன்
புன்னகைத்தபடி
வெளிவருகிறார்கள்!
பெளர்ணமி பூஜையில் எல்லா
ராசிக்காரர்களுக்காகவும்
யாகம்
நடத்துகிறார்
பூசாரி!
கபசுரகுடிநீரென்று குடிவிரும்பிகள்
பாரில் அமர்ந்து
குடித்து மகிழ்கிறார்கள்.
நான் மட்டும் புதிதாய் இப்போது தான்
வாங்கிய மாஸ்க், கையுறை, கண்ணாடி அணிந்து
ஸ்கூட்டரில்
கிளம்பிச் சென்றேன்.
அதிசய விலங்கு செல்வதாய் ஆச்சரியமாய்
எல்லோரும்
பார்த்து கையசைக்கிறார்கள்!
கோமாளியை
பார்த்தது போன்று
சில பெண்கள்
சிரித்தும் சென்றார்கள்!
பாதாள உலகம்
பாதாள உலகத்தை பேருந்து ஓட்டம்
துவங்கியதால்
ஒருமுறை
பார்த்து வர
பிரயாணித்தேன்.
எல்லையிலேயே
பேருந்தை நிறுத்தி
’இறங்கிக் கொள்ளுங்கள்!
உள்ளே
பேருந்து
போகாது!’
என்றார்
நடத்துனர்.
என்னோடு
சேர்த்து பதினாறு பேரும்
இறங்கிக்
கொண்டோம்!
பாதாளலோகம்
இருள்
நிரம்பியது என்றென்றைக்குமே!
சுங்கச்சாவடி
சோதனைக்குப் பிறகு
பாதாள
லோகத்தினுள் சென்றோம் நாங்கள்.
முகப்பிலேயே
நிலத்தினை குடைந்து
குழிகளாக்கி
வைத்திருந்தார்கள்.
பாதாள
உலகத்தினர்
சங்க காலத்தில்
பாத்ரூம்
வசதியுடன்
வாழ்ந்தார்கள் என்பதை
நிருபணம்
செய்யும் ஆதாரங்களாம் குழிகள்!
பதினைந்து
நபர்களும் பத்திரமாய்
பார்த்துக்
கால்வைத்து இறங்க ஒருவன்
மட்டும் பழங்கால
எலும்புக்கூடொன்றின்
மீது தவறி
விழுந்தான்!
அவன் பிறகு
எழவேயில்லை.
நான் என் தந்தையாரைத் தேடிப் பயணித்தேன்.
தந்தையாரை
வீடியோ காலில் அழைத்தேன்.
அது அணைத்து
வைக்கப்பட்டிருந்தது.
சற்று தூரத்தே ஒரு எலும்பு மனிதன் தன்
கைப்பேசி
வெளிச்சத்தில் தன் முகத்திற்கு
அவசரமாய் மாஸ்க்
அணிந்து கொண்டு
எங்களை எதிர்கொள்ள
தயாரானான்.
கடவுள்
என் கடவுளைப் பார்த்து வர
சூடம் ஊதுபத்தி
தீப்பெட்டியோடு
சென்றிருந்தேன்!
யாரோ என்
கடவுளுக்கு
முகக்கவசத்தை
அணிவித்து
போயிருக்கிறார்கள்!
மூச்சு வாங்க சிரம்மாய் இருப்பதாய்
என் கடவுள்
குரல் கேட்டது சுவரெங்கிலும்!
’இதோ’ வென முயற்சித்தேன்.
உருவாஞ்
சுருக்கிட்டிருந்தால் எளிதாக
பணியை
முடித்திருப்பேன்.
ஏகப்பட்ட
முடிச்சுகளோடு இருந்ததால்
முடிச்சவிழ்க்க
முடியாமல் திணறினேன்.
‘என் கையில் வீணே இருக்கும் கத்தியை
எடுத்தேனும்
முயற்சியேன்’
அசரீரி தான்.
கடவுளின்
கையிலிருந்த கத்தியை உருவி
மாஸ்க் முடிச்சை
அவிழ்த்தேன்!
புஸ்ஸென்று புகை
மண்டலமாயிற்று
அந்த இடம்!
எல்லாம் சரியாகி கண்திறந்த போது
கையில் கத்தி
பிடித்தபடி நான்
அவர் மேடையில்
அமர்ந்திருந்தேன்.
கடவுள் இடத்தை
காலி செய்திருந்தார்.
வியாபாரி
நீ ஏன் நாட்டு நாய்க்குட்டிகளை
ராஜபாளையம்
சென்று வாங்கி வந்து
வீணாய்க்கிடக்கும்
உன்
கோழிப்பண்ணைக்குள்
விட்டு
வளர்க்கக்
கூடாது?
மக்கள்
பண்ணைக்கு தேடி
வந்து
வாங்கிச்
செல்வார்கள்! நாய் ஒன்றுக்கு
நூறிலிருந்து
இருநூறுவரை லாபம்
வைத்து விற்றால்
உனக்கு சந்தோசம்
தானே! என்றான்
நண்பன்.
அல்லது தஞ்சாவூர் சென்று
ஒரு லோடு
பொம்மைகளை
ஏற்றி வந்து உன்
கோழிப்பண்ணைக்குள்
இருப்பு வைத்து
ஊர் ஊராய்
ஆட்டோவில்
போட்டுச் சென்று
பதிவு
செய்யப்பட்ட சின்னக் கொடை
ரேடியோவில்
விளம்பரம் செய்து
வியாபாரியாக ஏன்
மாறக்கூடாது?
‘அண்ணே வாங்க! அக்கா வாங்க!
உங்க கொழந்தைகள்
இந்த கொரனா
காலத்தில்
மகிழ்ச்சியாக வீட்டில்
விளையாட தஞ்சை
பொம்மைகள்!
கொறஞ்ச வெலையில
விற்பனை செய்யுறோம்!
வாங்க!
வாங்கக்கா!’
நாலு பொம்மைகள்
வெறும் நூறே
ரூவா தான்!’
‘ஈபாஸ் எடுத்தாவது
பெங்களூர்
கூட்டிச் சென்று
உன் ஒரு விரையை
விற்று
காசாக்கி வந்து
தொழிலை துவங்கி
விடுகிறேன்’ என்றேன்.
கொரனா காலமோ
வேறு என்ன
காலமாகவோ
இருந்தாலும்
அறிவுரைகளுக்கு
பஞ்சமே
இருக்காது தான் போல!
சமகாலப்
பொருளியல் வாழ்க்கையும் உளவியல் சிக்கல்களும் உருவாக்கும் நெருக்கடிகள் வெவ்வேறு
விதமான வாழ்க்கைச் சூழலில் வெவ்வேறு விதமான தவிப்புகளை உருவாக்கக் கூடியன. குடும்ப
அமைப்பு தொடங்கி, வாழிடம்,
பணியிட
நெருக்கடிகள்
போன்றன உச்சரிக்கப்படும் சொற்களை – எழுதப்படும் பனுவல்களை ஒவ்வொருவிதமாக
அர்த்தப்படுத்தத் தூண்டுவன. ஆனால் கரோனா என்னும் உலகு தழுவிய சொல் ஒவ்வொரு மொழியிலும் ஒரே
அர்த்தப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கிறது. உண்மையில் கரோனா என்னும் இந்தச் சொல்
உலகமயத்தின் கண்டெடுப்பு. அதனை உரிப்பொருளாக்கி எழுதப்படும் பனுவல்கள் எந்த
மொழியில் இருந்தாலும் எழுதப்பட்டாலும் அவை உலக இலக்கியத்தின் பகுதியாக
மாறிக்கொள்ளும் தகுதியை எளிதாக ஆக்கியிருக்கிறது. கரோனாவும் கரோனாவின்
நிமித்தங்களும் உலக இலக்கியத்தின் பகுதியாக மாறும் வாய்ப்பில் இந்தக் கவிதைகளும் – வா.மு.கோமுவும் மனுஷ்யபுத்திரனும் – உலகக் கவிதையின் பகுதியாக மாறிக்கொள்கிறார்கள்
-நடுகல் -இதழ் எண் : 9.
No comments:
Post a Comment