Saturday, 31 July 2021

கணக்குகள் - சத்தியப்பெருமாள் பாலுசாமி

 

கணக்குகள்

சத்தியப்பெருமாள் பாலுசாமி

 

“வப்பனோளி தொண்டுத் தேவ்டியா அப்பிடி என்னளே ஒனக்குக் கூதி மோளமெடுத்தூட்டு அடிக்கிது” கறுவிக்கொண்டே அலைபேசியை மின்னேற்றியில் போட்டுவிட்டு அவசர அவசரமாகப் படுக்கையின் மீது கிடந்த மடிக்கணினியை உயிர்ப்பித்தான் ஆகாஷ். கடவுச் சொல்லைத் தட்டிவிட்டுக் கட்டழகுடன் அந்த வாரிசு நடிகர் தோன்றும் வரை திரையையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தவன் பேஸ்புக்கில் நுழைந்தான். நிறைந்து வழிந்துகொண்டிருந்த காலக்கோட்டைச் சட்டைசெய்யாமல் “கௌதம் ராமச்சந்திரன்” என்ற முகவரியைத் தட்டித் தேடப் பணித்தான். “ம்க்கூம்… ஒலகத்துல இருக்கற அத்தனை பேரையுங் காட்டீருவயே” சலித்துக்கொண்டே பரிந்துரைக்கப்பட்ட ஐந்தாறு கௌதம்களில் முதலாவதைத் தட்டினான்.

 

“தேஞ்சாமீ வந்ததும் வராததுமாப் பேண்டக் கோடக் களுட்டாத ரேப்டாப்புல அப்டி என்னத்தப் பாத்தூட்டிருக்கற?

 

குப்புறப் படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். “நீ எப்பம்மா உள்ளாற வந்த? ஒருசத்தமுமில்லாத… பூனையாட்டொ?

 

“அது கெடக்கட்டும். இதாரு சாமி இந்தப்பயெ? உன்ற ஸ்நேகிதகாரனா? டீவி நாடகத்துல வாற பசங்களாட்டவே இருக்கறான்!” மடிக்கணினியை எட்டிப் பார்த்தவாறே மாதுளஞ்சாறை நீட்டினாள்.

 

மதியம் இரயிலில் வரும் பொழுது மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் சதீஸூம் இதைப் போலவே தான் வாயைப் பிளந்தான்.

 

“தேங்கண்ணு நேத்த ரவைக்கி நல்ல சைசாச் சினிமா ஸ்டாராட்டொ ஒருத்தனப் புடிச்சுப் போட்டயா!”

 

“அளக்கொடுமயே! வயிசாயிப் போவங்காட்டி நரசக்காளுக்குப் பாக்கற தண்டுவனெல்லாஞ் சினிமா ஸ்டாராட்டத் தெரீரானாட்டளெ ஆயா”

 

“அளச்சண்டாளி… இவளப்பாத்தயாயா...  நாலு மசுரு நரச்சதீம் நாங் கெளவியாயிட்டனாமா… இவ குஞ்சுக்கொமுரியாமா? இருங்களே…. அந்த நாலு மசுத்துக்கும் டிக்கேசனு ஏத்தீட்டு நானு  உங்குளுக்குச் சக்களத்தியா வாரன்….”

 

“உங்குளுக்கென்னங்க்கா கொறச்சலு… இன்னிக்கீமு நீங்கொ க்ளாமராத்தான் இருக்கறீங்கொ” - இது அருணா என்கிற அருண்.  கெக் கெக் என்று சிரித்த சதீஷ் தொடர்ந்தான்.

 

  “தேனருணா? நீயே சொல்லு. ஆளு அப்புடியே மிருகம் படத்துல வார ஆதியாட்டொ இருந்தான்லொ?

 

“நீங்க வேற தேனுங் நரசக்கா எம்படவாயப் புடுங்கறீங்கொ? நானே நேத்து நைட்லுருந்து நம்புளுக்கு எவுனும் இப்புடி அமைய மாண்டீங்கறானேன்னு மருவீட்டிருக்கறென்”

 

“நல்லாச் சொன்ன போ… ம்கூம்… இவுளும் நல்லா வாட்ட சாட்டமா ரச்சணமா இருக்கறாளா… அந்த மெப்புல பேசறா… என்னொ? அவெ இவளவட நல்ல கலரு”

 

இடது கண்ணைச் சற்றே சுருக்கி வலது புருவத்தை நன்றாக உயர்த்தி இடது இதழ்க்கடையோரம் குறுநகையைத் தேக்கியவாறு ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம். மேலுதட்டை முக்கால்பங்கு மூடியிருந்த மீசைக் கறுகறுப்பைச் சமன் செய்துகொண்டிருந்தது ஒருவாரத் தாடி. அந்த நட்சத்திர விடுதியின் மஞ்சள் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன கன்னங்கள்.

 

“எப்பிடித்தான் இப்பிடி அளகாப்  போட்டாப் புடிச்சுக்கறானுகளோ” ஆகாஷ் பெருமூச்செறிந்தான்.

 

ஏதோவொரு பேரங்காடியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த புல்லட்டைப் பிடித்தவாறு கறுப்புக் கண்ணாடியணிந்துகொண்டு டீ சட்டையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் கௌதம். அவனது இடுப்புக்குக் கீழே தெரிந்த காக்கி நிறக் கார்கோ பேண்டின் புடைப்பையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன்

 

 “கூதரமுண்ட… இப்பிடியே பன்னி பீயக் கண்டாப்ல நாக்கத் தொங்கப் போட்டுட்டே தீரீளே கண்டாரோளி” காறிக் காற்றைத் துப்பினான்.

 

தங்க நிறத்தில் கொடிகளும் ஆங்காங்கே கறுஞ்சிவப்பு நிறத்தில் இலைகளும் பூக்களும் தைக்கப்பட்ட பாதாம் நிற ஷேர்வாணியில் வலது புறம் லேசாகத் தலையைச் சாய்த்தவாறு அரையங்குலத் தாடிமீசையுடன் தரையில் எதையோ சோகமாகப் பார்க்கும் கௌதமின் மார்பளவுப் புகைப்படம் விரிந்தது. கழுத்துப்பட்டியின் அதே கறுஞ்சிவப்பில் காதுகளைச் சேர்த்துக்கட்டப்பட்ட தலைப்பாகையில் கழுத்துப்பட்டியைப் போல நெருக்கமாக இல்லாமல்  இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில பொன்னிறக் கொடிகள் ஓடிக்கிடந்தன. புகைப்படத்தின் கரிய பின்புலத்திற்கு ஏற்றவாறு அவனது முகத்திற்கு மெல்லிய செம்மண் நிறம் ஊட்டப்பட்பட்டிருந்தது.

 

சற்றுநேரம் அவனது உதடுகளையே உற்றுப்பாராத்துக்கொண்டிருந்தவன் அதையும் தள்ளினான்.

 

உடற்பயிற்சிக் கூடத்தில் தனது தோளழகைக் காட்டியபடி

தானியங்கிப் படிக்கட்டில் கையசைத்தபடி

நண்பர்களுடன் ஊட்டியின் எழிற் சூழலில்

ஏதோவொரு பெருங்கோவிலின் பிரகாரத்தில் சிற்பங்களுடன் எனத்

தள்ளத் தள்ள  வந்துகொண்டேயிருந்தன கௌதமின் விதவிதமான புகைப்படங்கள்.

வெறுப்புடன் அவற்றைப் புறந்தள்ளிக்கொண்டேயிருந்தான். அடுத்தடுத்த படங்கள் வந்து விழுந்துகொண்டேயிருந்தன.

 

பலமாதங்களாகவே சதீஷ் கூப்பிட்டுக் கொண்டுதான் இருந்தான். இவன் தான் சாக்குப் போக்குச் சொல்லித் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தான்.

 

“நாம் புனேல பாக்காததாங்க்கா? ஷாருக் சல்மானெல்லா பிச்ச வாங்கோணும். அங்கயே நான் ஆடிக்கொருக்கா அம்மாவாசைக் கொருக்காத்தாம் போவெ. அங்கில்லாத அதிசியொ இங்கென்னத்தப் புதுசா ஆடீறப்போவுது? அல்லாம் பலபட்றீக தா வரும். அவுனுகளப் பாக்க நம்பு பஸ்டேண்டுப் பாத்ரூம்புக்குப் போனாப் போதாதா”

 


“அப்புடி ரேசா நெனச்சராதீம்மா… பஸ்ட்டு போவீல நானும் உன்னைய மாதிரிதான் நெனச்சூட்டுப் போனெ. ஆனா அங்கச் சும்மா அளவளவா அல்வாத்துண்டாட்டக் கேரளாப் பசங்கொ! அவனுக தாடியீம் மீசையீங் கண்ணூம் மூக்கும்…. இப்பவே கஞ்சி வந்துருமாட்டொ ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா”

 

“நீங்க வேற தேனுங்க்கா காமடி பண்டீட்டு. புனேல எங்கோடக் கேரளாக்காரனுகொ ஆந்தராக்காறனுகொ யுபிக்காரனுகொன்னு எல்லா ஸ்டேட்காரனுகளுந்தாம் படிச்சானுகொ…“

 

“அளெ ஆயா… பாரதவெலாஸூ… நீ ஆயரத்தெட்டப் பாத்திருப்ப. இல்லீங்குல. கண்டவனுக கைல கால்ல உளுந்து கஸ்டப்பட்டுப் பர்மிசன் வாங்கி நம்புளுக்குன்னு பக்கத்துலயே ஒன்னத் தொறந்திருக்கறானுகொ. எவனெவனோ எங்கெங்கிருந்தோ வாரான். நீயீம்மந்தா உன்னையச் சாக்காட்டீட்டு நானூ மின்னொருக்காப் மோலான்னுதாங் கூப்டெ”

 

இவன் அதற்குமேல் மறுத்துப் பேசவில்லை. சதீஷைக் கோபப்படுத்தினால் சத்தமின்றிக் கழட்டிவிட்டுவிடுவான். போதாக்குறைக்கு உள்ளூரில் இருக்கும் தன்னைப் போல ஒருவனான ஒரே தோழமையும் கூட.

 

சனிக்கிழமையாதலால் முன்பதிவற்ற பெட்டிகளில் தங்களைத் தாங்களே கிடைத்த இடைவெளிகளில் திணித்துக்கொண்டிருந்தார்கள் பயணிகள். நல்லவேளையாக சதீஷ் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தான். அருண் ஷாஜி என்ற இருவரையும் வேறு அழைத்துவந்திருந்தான். “இவுளுகளும் வந்ததில்ல. நல்ல ரீசன்டானவுளுகொ.  வாரவாரமுன்னு ஒரே அடொ. செரி வாங்களேன்னு கூட்டியாந்துட்டெ” சதீஷ் இவனது காதோடு கிசுகிசுத்தான். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் நான்கு பேரும் அமர்ந்துகொண்டார்கள். அந்தப் பெட்டியிலிருந்த முக்கால்வாசிப்பேர் நல்ல தூக்கத்திலிருந்தார்கள். மணி இரண்டேகால் தான் ஆகியிருந்தது என்றாலும் வெயில் மிகவும் தணிந்திருந்தது. மேகங்கள் திரளத் தொடங்கியிருந்தன. அருணும் ஷாஜியும் அவ்வளவு உரிமையுடன் இவனோடு கலகலப்பாகப் பேசிக்கொண்டே வந்தார்கள்.

 

மணி எட்டரையைக் கடந்த பொழுதுதான் கூட்டம் களைகட்டத் தொடங்கியது. சின்ன இடமாக இருந்தாலும் நல்ல கூட்டம். சதீஷ் சொன்னதைப் போலவே நிறைய மலையாள முகங்கள் தென்பட்டன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் நிறையப்பேர் வந்திருந்தார்கள். டீஜே தமிழ் இந்தி மலையாளம் ஆங்கிலம் படுகா என்று கலந்துகட்டிக் குத்துப்பாடல்களை வழங்கிக்கொண்டிருந்தான். கிடைத்த சின்னச்சின்ன இடத்தில் கூட ஆடிக்கொண்டிருந்தார்கள். பல கண்களும் தன்னையே மொய்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். “ளேய் உனக்குத் தான்ளே இன்னிக்கி மார்க்கட்டு… எவனக் கூப்டீன்னாலும் வந்துருவான்” அத்தனை இரைச்சலுக்கும் நடுவே சத்தமாகச் சொன்னான் சதீஷ். புதுவரவுகளுக்கான வரவேற்பு அப்படித்தானே இருக்கும்? ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி அமைந்துவிடுவதில்லையே. படிக்கும் காலத்தில்  புனே மும்பாய் பெங்களூரு போன்ற நகரங்களிலிருக்கும் கேளிக்கை விடுதி களுக்கு இவன் சிலமுறை சென்றிருக்கிறான். அவை இதை விடவும் பரப்பில் பெரியவை. பெரும்பாலும் வடநாட்டவர்களாகவே வருவார்கள். ஒருவருக்கொருவர் இந்தியிலேயே பேசிக்கொள்வார்கள். மறந்தும் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். எவ்வளவு சரளமாக இந்தியில் இவன் பேசினாலும் இவனது மாநிறத் தோல் இவனிடமிருந்து அவர்களை எட்டியே நிற்கவைத்தது. இவனது வடிவான பருத்த தோள்களையும் பரந்து விரிந்து பருத்து ஒன்றை ஒன்று நெருக்கிக்கொள்ளும் மார்ப்புகளையும் தடவிக்கொண்டே ஆடும் எவனும் அவ்வளவு எளிதில் இவனது அறையில் தங்கிக்கொண்டதுமில்லை.  தனது அறையில் தங்கிக்கொள்ள இவனை அழைத்ததுமில்லை. அப்படியே எவனாவது அமைந்தாலும் அடுத்தநாளின் மொத்தச் செலவையும் இவன் தலையிலேயே கட்டிவிடுவான். ஆனால் வெளிநாட்டவர்கள் பலர் இவனை அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள்.  கூட்டிப்போன யாரும் இவனது உடற்பயிற்சி முறைகளைப் பற்றியும் உணவுமுறைகளைப் பற்றியும் கேட்காமலிருந்ததில்லை.

 

 அருணும் ஷாஜியும் ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்தார்கள்.  இரண்டு பியர்களை அடித்துமுடித்த இவனும் ஆடத்தொடங்கினான். ஆடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே யார்யாரோ இவனுடன் ஆட வந்தார்கள். இவனுக்கோ எவன் மீதும் பார்வை ஓடவேயில்லை. உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே சதீஷிடம் கேட்டுவிட்டான். “தென்னங்க்கா இது. எல்லா  பலவட்டறையாட்டொ இருக்குது? நானெதுர்பாக்கறாப்பல ஒன்னக்கோடக் காணொ?

 

மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அதிசயம் நிழ்ந்தது. இவனைப் போலவே நல்ல உயரமாகவும் கட்டுடலுடனும் அவன் நுழைந்தான். அவனைக் கவர்வதற்குப் போட்டிபோடுவதுபோல் ஆளாளுக்கு அவனை நெருங்கி ஆட ஆரம்பித்தார்கள். என்ன மாயம் நிகழ்ந்ததோ பத்தே நிமிடத்தில் அவன் இவனுடன் வந்து ஆடத்தொடங்கிவிட்டான். இவனுக்கோ பறப்பதுபோலிருந்தது… கேளிக்கை முடியும் முன்னரே தன்னுடைய அறைக்கு அவனை அழைத்தும் வந்துவிட்டான்.

 

அறைக்கு வந்த பின் தான் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். “ஏம் ஆகாஷ் ………………” தனது சாதிப்பெயரையும் தனது பெயரொடு சேர்த்துச் சொன்னான்.

 

“ஸ்வீட் நேம். ஏம் கௌதம்” என்று சொல்லிக்கொண்டே நீட்டப்பட்ட இவனது கையைப் பற்றிக் குலுக்கியவன் அப்படியே இழுத்து இறுக அணைத்துக்கொண்டு கழுத்தின் இடப்பக்கத்தில் முகம்புதைத்தான். அவனது இடது கை இவனது வலது பக்க மார்பைப் பிசைந்துகொண்டிருந்தது. கைகள் அவனது தோள்களிலும் முதுகிலும் அளைந்து  கொண்டிருந்தாலும் இவனது மனதிலோ அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் குமிழியிட்டுக்கொண்டேயிருந்தன. அவனோ வேகத்தை அதிகரித்துக்கொண்டு இருக்கும் தனது வெப்ப மூச்சுக்காற்றால் அரும்பும் அக்குமிழிகள் ஒவ்வொன்றையும் உடைத்தபடியே இருந்தான். அவனது உதடுகள் இவனதைக் கவ்வ ஏக்கத்துடன் வந்தன. இவனோ உடனடியாகத் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனோ அதைத் தனக்கு விடப்பட்ட சவாலாக எண்ணி மீண்டும் முயற்சித்தான். இவனோ மீண்டும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். இவனைப் படுக்கையில் தள்ளி மேலே ஏறிப் படுத்துக்கொண்டவன் இவனது கைகளிரண்டையும் தனது கைகளால் இறுகப்பற்றிப் படுக்கையோடு சேர்த்து அமுக்கிக்கொண்டு இவனது உதடுகளைக் கவ்வுவதிலேயே குறியாக இருந்தான். இவனோ அதிலிருந்து தப்பிப்பதிலேயே கவனமாக இருந்தான். போராட்டம் சற்று நேரம் தொடர்ந்தபடி இருந்தது. பற்றியிருந்த இவனது கைகளைச் சடக்கென விட்டவன் இவனது பிடறிக்குள் தனது இடக்கையை நுழைத்து இவனது தலையை ஏந்திக் கொண்டு

 


“என்ன ஆச்சு ஆகாஷ்? லிப் லாக் புடிக்காதா?” என்றான்.

அவனது மூச்சுக்காற்று இறைந்து கொண்டிருக்கும் இவனது மூச்சுக்காற்றோடு மோதிக்கொண்டிருந்தது.

“ச்சேச்சே அப்டியில்ல. புடிக்கும். பட் எல்லாரோடவும் செய்யமாட்டெ”

“எல்லாரோடவும்னா?

“வித் அதர் பீப்புள்”

“ஐ டோன் கெட் யூ”

“வித் பீப்புள் ஆப் அதர் காஸ்ட்”

ஒரு விநாடி இவனை உற்றுப் பார்த்தவன் புன்னகைத்துக்கொண்டே

“நானும் உங்க காஸ்ட் தாம் பாஸ்” என்றான்.

“நெசம்மாலுமா?” இவனது விழிகள் அகல விரிந்தன. எழுந்து உட்கார எத்தனித்தான். அவனோ இவனை அதற்கு அனுமதிக்காமல் தனது இடது கையால் இவனது வலது கையைப் பற்றிக்கொண்டு இவனது மார்பின் மீது தனது மார்பை வைத்து அழுத்தினான்.

“ஏன் நம்பமாட்டீங்களாக்கு?

“நம்பக் கோடாதுன்னில்ல…  அப்பூம் ஆளப் பாத்ததீமே மனசு சொல்லுச்சு நம்பாளாத்தா இருக்கோனுமுன்னு”

“அப்பறமென்ன தயங்கீட்டு?” என்றவாறே இன்னும் இவனை நெருங்கினான்.

“உண்மையாத்தான சொல்றீங்க?

“ஐய்ய்ய்யோ சொன்னா நம்புங்க ….......... அவுருகோட எனக்கு மாமம்மொறை” அந்தச் சாதித் தலைவரின் பெயரைச் சொன்னான்.

“ரியலி?!அப்புடீன்னா நீங்க எனக்குப் பங்காளி மொறை”

கலகலவென்று சிரித்த கௌதம்

“அப்ப எனக்கு உங்கு பாட்டஞ் சொத்துல பங்கு குடுக்கப்போறீங்ளாக்கு?” என்றான். இவனோ மறுபேச்சின்றி எட்டி அவனது உதடுகளைக் கவ்விக்கொண்டான்.

 

“தேங்கண்ணு அவனூ நம்பளாட்டத்தானா?

ஒரு நொடி அவனை ஏறிட்டுப் பார்த்தவன் “பக்கா ஸ்ரெய்ட்டுங்கோவ்” என்றான்.

“அவரு ஸ்ட்ரெய்ட்டாத்தா இருப்பாருன்னு நானும் நெனச்சனுங்க்கா…. ஆனா எனக்கு மாட்றதெல்லா மட்டூ என்னீவட நளினக்கொமாருகளாத்தெ இருக்குது” இது அருண்.

 

“ஸ்ரெய்ட்டு ஸ்ட்ரெய்ட்டுங்கறீங்களே அப்ப இரும்படிக்கற எடத்துல இய்யிக்கென்னளெ வேலை?” கேட்டுவிட்டுக் கெக்கெக்கனச் சிரித்த சதீஷ் அத்துடன் நிறுத்தவில்லை.

 

“ஆனா நா வேற மாதிரீல்லோ கேள்விப்பட்டெ. அவுனூ நம்பளாட்டாத்தான்னு”

 

“அதென்ன கருமாந்தரமோ. நாங்கண்ட வரக்கீ கௌதம் ஸ்ரெய்டுதான். என்னைய நம்பப் புடுச்சிருந்தங்காட்டி ம்யூச்சுவலாப் பண்டுனான்”

 

“ஹஹஹஹஹா…. “ குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சதீஷ் “என்னத்தவேணாலுஞ் சொல்லு சாமி மொந்தம்பளமாட்டொப்  பாக்கறவரக்கீ இங்க எல்லா மயரானுகளுமே ஸ்ட்ரயிட்டுதா டாப்பு தா”  என்றபடி கையைக் கொட்டிச் சிரிசிரியெனச் சிரித்தான். அருணும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தான்.

 

பயணிகள் சிலர் விழித்துப் பார்த்துவிட்டுப் புரண்டு படுத்தனர். அருணின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த ஷாஜி அனிச்சையாகத் தனது முகத்தின் மீது போட்டிருந்த கைக்குட்டையை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டான். ரயில் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

 

சன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான் ஆகாஷ்.

 

“ச்சேரிச் ச்சேரி…. போச்சாது உடு” என்றவாரே ஆகாஷின் முகத்தைத் திருப்பினான் சதீஷ். மீண்டும் தனது முகத்தைச் சன்னல் பக்கமாகவே திருப்பிக்கொணாடான் ஆகாஷ்.

 

ஷாஜியின் தலையை இருக்கையில் சரித்துவிட்டுக் கழிவறைக்கு எழுந்துபோனான் அருண்.

“கோவச்சுக்காத புள்ள. நீ வேற பூனாவுல இருந்து வந்ததுல இருந்து வெரதம் புடுச்சீட்டிருக்கறயா அதுனாலதாங் கேட்டெ” குரலில் தான் அக்கறையிருந்ததேயொழியக்  கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.

 

“அதுக்கென்ன இப்பொ? அதெல்லா அவுனூ நம்பாளுதே”

 

“அதெப்பிடி உனக்குத் தெரியி?

 

“அதல்லாந் தெரியி. அப்புடியொன்னும் புளுலப் பாத்ததீம் பொச்ச விரிச்சூட்டுப் போறவ நானில்ல”

 

“என்னமோளெ ஆயா. ஓட்டல்ல நீ கைகலுவப் போனீல்லோ? அப்ப அவுனுக்கொரு போனு வரொ நம்பு பொடுசாகூட்டம் பேசற பேச்சாட்டத்தாம் பேசீட்டே எந்துருச்சு அக்கட்டால போனா”

 

“தென்னங்க்கா சொல்றீங்கொ? நெசமாலுந்தாஞ் சொல்றீங்களா?

 

“இதுல பொய்யச் சொல்லி எனக்கென்னத்தளெ ஆவப்போவுது? சத்தீமேலு அவெ பொடுசாளுக  பேச்சாட்டத்தாம் பேசீட்டே போனான். எம்பட காதாரக் கேட்டே”

 

 

அதற்குமேல் ஆகாஷூக்கு இருப்புக்கொள்ளவில்லை. எப்படியாவதும் கௌதமின் உண்மையான சாதியை உடனடியாகக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் ஓடவில்லை. கௌதமின் செல்பேசி எண்ணையும் பேஸ்புக் முகவரியையும் மட்டும் வைத்துக்கொண்டு என்னத்தைக் கண்டுபிடித்துவிடமுடியும்? ரயிலைவிட்டு இறங்கியது மற்ற மூவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டது தனது இருசக்கரவாகனத்தைக் காப்பகத்திலிருந்து எடுத்தது என்று அனைத்தையுமே இயந்திரகதியில் செய்தான். வீட்டுக்கு வரும்வழியில் தான் கௌதம் தனது பேஸ்புக் பக்கத்தில் எக்கச்சக்கப் புகைப்படங்களைப் பதிவேற்றியிருப்பதாகக் காலையில் கூறியது  பொறிதட்டியது. காலையிலேயே செல்பேசி சக்தியின்றிக் கண்ணைமூடிக்கொண்டுவிட்டதால் வண்டியின் விசையை மேலும் முறுக்கினான்.

 

 

“புண்டவாயம்பயெ…. எத்தனை போட்டாவ ஏத்தி வெச்சிருக்கறாம் பாரு… தொளாவி மாளுல”

 

 திரௌபதி சேலையைப் போலப் புகைப்படங்கள் இழுக்க இழுக்க வந்துகொண்டே இருந்தன. ஆனால் ஒன்றுகூட இவனுக்கு உதவுவதாகத் தெரியவில்லை. அனிச்சையாக இழுத்துவிட்ட புகைப்படத்தில் ஏதோ இருப்பதாகத் தோன்ற அதை மீண்டும் இழுத்தான். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தனது உறவுக்காரப் பையன்களுடன் தனது கிராமத்து வீதியில் கௌதம் ஒயிலாக நின்று கொண்டிருக்கும் பதின்மவயதுப் புகைப்படம் அது. இவனுக்குள் புதிய தெம்பு பிறந்தது. அந்தப்படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தான். ஒவ்வொரு முகமாக நுணுகி ஆராய்ந்தான். எல்லோருமே தனது சாதிக்காரர்களைப் போலவே இருப்பதாக தோன்றியது. வெறுப்பில் அந்தப் புகைப்படத்தைத் தள்ளிவிட்டு அடுத்ததை இழுத்தான். பழையபடி விதவிதமான ஆடைகளில் விதவிதமான இடங்களில் கௌதம் அழகுகாட்டும் படங்களாகவே வந்துகொண்டிருந்தன. இவனுக்கு அப்படியே மடிக்கணினியைத்தூக்கிச் சுவரிலடித்துவிடலாமா என்று வந்தது. அப்போது தான் “வித் மை ஸ்வீட் மம்” என்ற குறிப்புடனிருந்த அந்தப் புகைப்படம் வந்து விழுந்தது.  கணக்கற்ற கணக்குகளின் சூத்திரங்கள் நொடிப்பொழுதில் மனதில் அலையாடின. அவசர அவசரமாக அந்தப் புகைப்படத்தைப் பெருக்கிக் கௌதமுடைய அம்மாவின் முகத்தைப் பார்த்தான். கழுத்தை ஆராய்ந்தான். அதையே உற்று உற்றுப் பார்த்த்தான். ஏதோ தட்டுப்பட்டது. புகைப்படத்தைச் சுருக்கியும் பெருக்கியும் பார்த்துக்கொண்டேயிருந்தான். எப்படிப்பார்த்தாலும் அது அதுவாகவேதான் இருந்தது. சற்றுநேரம் அதையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

 

கைப்பேசியை உயிர்ப்பித்தவன் சதீஷூக்கு அழைப்புவிடுத்தான்.

“சொல்லு கண்ணு”

 

திரையில் தெரிந்த கருகமணிகளைப் பார்த்தவாறு அடக்கமுடியாத விம்மல்களுடன் அழ ஆரம்பித்தான் ஆகாஷ்.

 

000

 

 

No comments:

Post a Comment