Friday 30 July 2021

இழவு வீடு


 

இழவு வீடு

சத்தியப்பெருமாள் பாலுசாமி

 

“இன்னைக் கெந்தக் கூச்சமோ தூணோ தெரீலியே” என அங்கலாய்த்துக் கொண்டது கூட அதிகம் தான். பந்தக்காலைக் கட்டித் தாவிப் பிடித்துக்கொண்டு நிற்கத் தான் வாய்த்தது. எத்தனை வெள்ளையாய்க் கட்டினாலும் அவர்களுடைய வேட்டியைப் போல மடமடப்பில்லை. எத்தனை தேய்த்துப் போட்டுக்கொண்டாலும் முழங்கைச் சுருக்கத்திலும் தென்படும் சட்டையின் முறுக்கு தனக்கு வாய்க்கவில்லை. “ஐயோ! எஞ்சாமீ… எந்தெய்வமே” எனத் தலை தலையாய்ப் போட்டுக் கொண்டு ஓடிய கோமதியைப், பெண்களின் ஒப்பாரி வட்டம் நொடிப்பொழுதில் உள்வாங்கிக் கொண்டது. அவளது துக்கம் கரையத் தொடங்கிய நொடியிலிருந்து இவனது துக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டையை நெரிக்கத் தொடங்கியது.

 

***

 

“நல்லாக் கேட்டுக்கங்க தங்கங்களா! சொல்லவே அருகருப்பாத்தே இருக்குது. இருந்தாலுஞ் சீவையச் சாணீல தொவட்டி அடிச்சாத்தான செல செம்மங்களுக்கு ஏறுது? நல்லாக் கெராப்பு வெட்டித், தலக்கி எண்ண கிண்ண வெச்சுச் சீவி, மூஞ்சிக்கிப் பவடரூமடிச்சுச் சாந்துப்பொட்ட நெத்தீல கீறிட்டு ஊருக்குள்ற வந்து, மினிப்பஸ்ஸூக் கண்டக்டருக சீக்கி அடுச்சானுகன்னா ‘அட! அந்தச்சீக்கி நம்புளுக்குத்தானாட்ட இருக்குது’ ன்னு நெனச்சுட்டுச் சனொ எனம்னு பாக்காத, அவுனுகொ எந்த ஈனச் சாதியோ! எரந்து குடிக்கற செம்மமோ! பொறத்திக்காலயே ஓடிப்போயர்றாளுக நம்பு புள்ளீகொ! அளெ அளுஞ்ச கொமுரிகளா! நெனச்சுப் பாருங்களே... நாம்ப ஆரு? காராள வமுசொ! பாராண்ட வமுசொ!... கூட்டிட்டுப் போனவங் காரிய முடிஞ்சதீ நடுத்தெருவுல களுட்டியுட்டுப் போயிருவான். வேசம் போட்டு நாசம் பண்றவனுகள நம்பி நீங்க சீரழிஞ்சு சின்னப்படறதூமில்லாத… நம்பு சாதிப் பேரயீஞ் சீரழுச்சுப் பேரழுச்சுப் போடாதீங்களே…” ஊர்ச்சாவடியில் குமரிகளோடு குமரியாகக் ‘கொப்பிங்கா’ தட்டிவிட்டு மணியாரர் வீட்டில் வைத்து அவர்களுக்கு இரகசியமாகப் புத்திமதி வகுப்பெடுத்த பேச்சாளரைப் போலவே நடித்துக்காட்டிக் கொண்டிருந்தாள் கோமதி. இடையிடையே அவரைப் போலவே மாராப்பை அவள் இழுத்துவிட்டுக் கொண்ட போதெல்லாம் இவனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். இருந்தாலும் கொஞ்சம் சுருக்கென்று தான் இருந்தது. “இப்பென்ன சொல்ல வர்ற?” என்றான் குரலில் கடுமையுடன்.

 

“சொரக்காய்க்கு உப்பில்லீங்கறேன்” -  கோபித்துக்கொண்டவள் அவளாகவே தொடர்ந்தாள்.

 

 “மொதல்ல என்னய உங்கோடக் கூட்டீட்டுப் போற வளியப் பாரு. எங்கப்பனெல்லாம் பெருசா எடுத்துக்காது. எங்காயா தாஞ் சாதி சரவடைன்னு குதிப்பா. இப்பென்னொ சொத்தா சேத்தி வச்சிருக்கறா? உனக்குச் சோறு போடற திருப்பூரு  எனக்கும் போடும்”.

 

 


அவள் கணித்தது மாதிரி தான் காரியங்கள் நடந்தன. சாதிச் சங்கத்தின் மூலமாகத் தேடோ தேடென்று தேடிக், கிடைத்ததும் காவல் நிலையத்தில் வைத்துப் பிரளயத்தையே நிகழ்த்திக்காட்டியது கோமதியின் அம்மா. இன்ஸ்பெக்டர் அனில்குமார் மூலமாகச் சட்டம் இவனுக்குத் துணைக்கு நின்றது. ஆனால் இவன் கணித்ததைப் போல இல்லை இவன் வீடு. காவல்நிலையத்தில் நண்பனைப் போல நின்ற அப்பன், வீட்டில் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு ஆடியது.

 

“இப்பென்னங்கற? நானென்னொ பொளங்காத சாதீலயா பொண்ணெடுத்திருக்கறன்? ஊருலயே பெரீ சாதீல தானொ கட்டியிருக்கறென்?

 

“அடக் கண்டாரோளி பயனே… அப்புடி எடுத்திருந்தீன்னாக் கோட மயரே போச்சுன்னு உட்ருப்பன்டா. பொண்ணெடுத்த ஊட்ல மதிப்பு மருகாதியாச்சு உனக்கு மிஞ்சியிருக்குமே”

 

அப்பனுக்குக் கிறுக்குப்பிடித்துவிட்டதா என்று தான் அன்றைக்கு இவன் நினைத்தான். ஆனால் மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முன்னால் கசக்கும் பின்னால் இனிக்கும் என்பதைப் போலக் காரியங்கள் நடக்க ஆரம்பித்த போது தான் அப்பனை மனதாரக் கட்டி அணைத்துக்கொண்டான். ஆனால் அன்றைக்கு விலக்கிப் போன அவரோ இதுவரை சேர்த்துக் கொள்ளவே இல்லை.

 

***

 

கல்யாணம் காட்சிகள் கூடப் பரவாயில்லை. நாலோடு நடுவாக மேடை ஏறிப் புகைப்படக்காரனுக்குப் பல்லை இளித்துக்காட்டிவிட்டு மணமக்கள் கையில் மொய்ப்பணத்தையும் திணித்துவிட்டுப் பந்தியில் ஒரு ஓரமாய் அமர்ந்து கைநனைத்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் இந்த இழவுகாரியங்கள்! இவை தான் பாடாய்ப் படுத்திவிடுகின்றன. கோமதியின் வழியில் இழவு செய்தி என்றாலே தலை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது.

 

சம்பிரதாயமாக உரியவர்களிடம் கை நீட்டிய பின் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. கிடக்கும் இருக்கைகள் ஏதாவதொன்றில் உட்கார்ந்து கொள்ளலாமா எனத் தோன்றும் பொழுதெல்லாம் மனது அனிச்சையாக “என்ன நினைத்துக் கொள்வார்களோ?” எனப் படபடக்க ஆரம்பித்து விடுகிறது. காலைத் தேய்த்துக்கொண்டு கைகளைக் கட்டியபடி நிற்பவனை அவர்களாக “அட! ஏ நிக்கற? ஒக்கோரு” எனச் சொல்லும் பொழுதோ சுயம்  காயப்பட்டுவிடுகிறது. அவர்களது வாயில் மறந்தும் கூட “வாங்க” “போங்க” என்ற மரியாதை விளிகள் வருவதில்லை. “வாங் பங்காளி” “இப்பத்தா வர்றீங்ளா மச்சி?” “போர் எறக்குனீங்ளே எத்தனடீல தண்ணி வந்துச்சுங் மாப்ள?” என்று உரிமை பாராட்டித் தங்களுக்குள் முறைவைத்து அவர்கள் பேசிக்கொள்ளும் பொழுது இவன் மட்டும் நாதியற்றவனைப் போல மௌனமாகப் பார்வையை இலக்கற்று எங்கோ தூரத்தில் வைத்துக் கொள்ளும்படி ஆகிவிடுகிறது. அறிமுகமான நாவிதர் முகமோ வண்ணார் முகமோ தென்படுகையில் வலிய இவனாகச் சென்று பேச்சுக் கொடுக்கும் பொழுது பார்த்துத் தான் கோமதியின் சொந்தக்காரன் எவனாவதும் “பேசீட்டிருக்காத படப்படன்னு வேலையப் பாரு சக்கரக்கத்தீ” என்றோ “வந்த வேலயப் பாரு ஏகாளி” என்றோ அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுகிறான். அவமானத்தில் உயிர் ஒடுங்கிப் போய்விடுகிறது இவனுக்கு. இவற்றையெல்லாம் கூட எப்படியாவது தாங்கிக்கொள்கிறான். ஆனால் நெஞ்சிலும் கைகளிலும் கால்களிலும் காய்ப்பேறிய தனது சொந்தச் சனம் காலைத் தேய்த்துக்கொண்டு அந்த வாசல்களில் வந்து நிற்கும் பொழுது தான் நகாரடிப்பதைப் போல மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதிலும் அவை அறிமுகமான முகங்கள் என்றால் படபடப்பு இன்னும் கூடிப்போய்விடுகிறது. அவர்களுடன் வேறுவழியின்றிப் பேச முற்படும் பொழுது தான் எவனாவதும் சத்தமாகச்சொல்கிறான் “ஏஞ் சின்னா! நாளவாரொ வந்து எம்பட காட்டுல நிக்கற பனமரத்துக்கெல்லாஞ் செரையெடுத்து உட்றே”

 

***

“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாப்பள. எந்த நாயி மதிக்காட்டி என்னொ? எனக்கு நீங்க தா மாப்பள மாப்பள! எம்பிள்ளக்கி நாம் பாத்திருந்தன்னாக்கோட உங்களாட்ட இப்பேர்பட்ட மவராசனப் புடிச்சிருக்க முடியாது” கண்கலங்கச் சொல்லிவிட்டு நாலாவது சுற்றை மடக்கென வாயில் ஊற்றிக்கொண்ட மாமனாரையே பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கோவன். தனது புலம்பல்களைக் கோமதி சொல்லியிருக்க வேண்டும். வறுத்த கோழித் துண்டம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டவர் சொன்னார் “பெரிய அந்தரசாதி! த்தூக் கருமத்த. அவுனுக கெடக்கறானுக மாப்பள. உங்குளுக்குப் புடிக்கிலீன்னா அவுனுக வாசலுக்கெல்லாம் போவாதீங்க. நாந் தப்பால்லா எடுத்துக்க மாண்டெ. கோமதிகிட்டயீஞ் சொல்லீர்றெ”

 

மடக் மடக்கெனத் தனது நாலாவது சுற்றை இவன் நிறைவு செய்தான்.

 

“நீங்க எனக்கு மருமகனில்லீங் மாப்ள. மகன். என்ற மகனாட்டத்தா உங்கள நாம் பாக்கறெ” அவரது கண்களிலிருந்து தாரைதாரையாய் நீர் வடிந்தது. விசும்பலுடன் ஊறுகாயைத் தொட்டு நக்கிக்கொண்டவர் தோளில் கிடந்த துண்டை இழுத்து மூக்கைச் சிந்திக்கொண்டார்.

 

***

எப்போதும் போலத் தான் இன்றைக்கும் நடந்தது. மாலையைப் போட்டுவிட்டு நிமிர்ந்த இவனது சகலையின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுத ஒருத்தியும் இவனைப் பார்த்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை. வரிசையில் நின்ற பங்காளிகளிடம் கைநீட்டிவிட்டு இவனது சகலையிடமும் துக்கம் விசாரித்த யாரும் இவன்பக்கமாக முகத்தைக்கூடத் திருப்பவில்லை. உள்ளூர் என்பதால் இவன் வருவதற்கும் முன்பாகவே வாசலில் குழுமியிருந்த இவனது சொந்த பந்தங்கள் தலையைக் கண்டதும் தயக்கத்துடனும் குழப்பத்துடனும் சம்பிரதாயமான துக்கவிசாரிப்புகளை முடித்துவிட்டு ஓர ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டன. இவனது சகலையைக் கலந்தே எல்லாக் காரியங்களையும் செய்தார்கள். ஒவ்வொரு பந்தக்காலாகச் சிற்சில நிமிடங்கள் சாய்ந்து நின்றிருந்தவன் கடைசியில் தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அருகில் நின்று கொண்டான். கீழே விரிக்கப்பட்ட துண்டில் பத்தையும் இருபதையும் போட்டுக் குலப்பெருமையை வாங்கிக் கொண்டிருந்தார்கள். தப்பட்டையின் துள்ளலுக்குள் ஊடுருவிக் குழைந்து நெளிந்து இதயத்தின் உட்சுவர்களில் ஒழுகியது முகவீணையின் நாதம். சற்றுத் தள்ளித் தப்பட்டை காய்ச்சப் போடப்பட்ட நெருப்பின் கானலைக் கடந்ததும் தெளிவாகத் தெரிந்தது அந்த முகம். தான் முன்னகர்வதா வேண்டாமா என இவன் குழம்பித் தெளியும்  முன்னரே இவனது இருப்பின் நிலையறிந்தவரைப் போலத் தனது தோளிலிருந்த வெள்ளைத் துண்டைக் கைகளில் பற்றியபடி முன் வந்து நின்றார் அப்பா. அவரது கண்கள் நீர் கோர்த்திருந்தன. ஒரு முறை அனிச்சையாக வீட்டைத் திரும்பிப் பார்த்துக் கொண்டவன் அப்பாவை ஆரத் தழுவினான். அவரது தோளில் தலை சாய்த்துக் கொண்டு பெருங்குரலில் விசும்ப ஆரம்பித்தான்  “ஐயோ! மாமா… எஞ்சாமீ…  என்ன இப்பிடி அநாதையாட்ட உட்டுட்டுப் போயிட்டீங்களே….”

 

வாசலில் இவனது தலையைக் கண்டபோதெல்லாம் “தொளசீ… தண்ணி கொண்டா… நம்பு பெரீ மருமகெ வந்திருக்கறாரு” எனப் பரபரக்கும் மாமனார் நடுவீட்டில் நீண்டு கிடந்தார்.

 

000

நடுகல் - 5. 

No comments:

Post a Comment