பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
சுஜித் லெனின் ப
பாகம்-1
பித்தனார்
தான் கதைகளென
விரித்து எழுத வைத்திருந்த
குறிப்புகளைத் திருடிய அவரின் நண்பர்
அதனை தன் வீட்டு
பரணில் எறிந்துவிட்டு தனக்குள் அவ்வப்போது இரகசியமாய் சிரித்துக் கொண்டார்…ஏறக்குறைய
அறுபது ஆண்டுகளின் பின்னர் பரணில் ஏறிய பாம்பின்கண் நண்பரவரின் பேரனான பூங்குன்றன்
விளாதிமிரின் கைகளில் கிடைத்தது இந்தக் குறிப்புகள். அதனை வரிசைப்படி எண்களிட்டு முதல் ஏழு பக்கங்களில் உள்ளனவற்றை
மட்டும் தன் பெயரில் வெளியிடுகிறான்.
நுண் கதை: 1
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
சுமார் நூற்றெழுபது வயதுடைய கூனலற்ற முதுகினை உடைய முதியவனொருவன் கல்லெரிய, கனிக்குப் பதிலாக
அவன் இதுவரை கண்டிராத குஞ்சுப்பறவை விழ, பதறிய இதயத்தோடு காப்பாற்றத் துவங்கினான். கண்களை மட்டுமே உணவாக உண்ணும்
இயல்பு படைத்த
அப்பறவை அதற்கென அலகு முளைத்ததும் பெரும் கருணையோடு அவனது ஒரு கண்ணை மட்டும் கொத்தித் தின்று பின் தனது கூட்டை
அந்தக்கண் இருந்த இடத்தில் உருவாக்கி வாழத்துவங்கியது.
நுண்கதை: 2
அதுவொரு மழைக்காலம். அருவி போல் பொங்கிப்பொங்கி மேகத்திலிருந்து நீர் வழிந்து
கொண்டிருந்தது. தவறுதலாக ஒரு குட்டிமேகம், மின்னலுடன் மழையை அனுப்பிவிட்டது. அதனைப் பொற்கொடியென
எண்ணிய ஆடுகள் சில பசியில்
கடித்துவிட்டன.
அதுவரை மென்மையாக வளர்க்கப்பட்ட மின்னல் தன்மேல் பற்கள் பட்டதால் நாணத்தில் மேலும் ஒளிர, அத்தனை ஆடுகளும் கருகின. பிறகு செய்யாத தவறுக்காக உயிர் இழந்த ஆடுகளுக்கு தானே காரணம் என எண்ணிய மேகம் வான்
திரும்ப மறுத்து நீரோடு தரை புகுந்து உயிர்விட்டது. அதன் நினைவாகத்தான் இன்றளவும் பூமிக்கு வரும் மின்னல்கள் வான் திரும்புவதில்லை.
நுண் கதை: 3
சாலையில் அழகாய் வரக்கூடிய பெண்களை அவனால் இரசிக்காமல் கடக்கவே முடியாது. பிப்ரவரி 14/2040
ஆம் ஆண்டு
பின்மாலைப் பொழுது. கண் மட்டும் தெரிவது போல ஹெல்மேட் அணிந்து
டாமினார் 600
சிசி பைக்கில்
வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க, வந்தவள் மில்லிமீட்டர் இடைவெளி விட்டு அவன் முன்னால் ப்ரேக்கிட்டு நிறுத்த, ஆடிப்போய்விட்டான். லேசாக கண்களை சிமிட்டியவள் கலகலவென்று நகைத்தவாறு
சென்றுவிட்டாள். அதன் பிறகு தன் 86 ஆவது
வயதில் அதாவது ஜனவரி23/2066 இல் தான் இறந்து போகும் வரை, அந்தப் பெண்ணை அதே இடத்தில் தேடியவாறே இருந்தான் அவன்.
நுண்கதை: 4
‘படகு புயலில் சுழன்று சுழன்று அலைகள் மீது தவித்தது. அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது இனி
இப்படகு தாங்காது என்று. அவர்களை இது நாள் வரை காப்பாற்றி
வயிற்றுப்பாட்டுக்கு உதவிய கடல் அன்னைக்கு நன்றி செலுத்தினர். பிறகு அனைவரும்
ஒரே நேரத்தில்
தங்கள் குரல்வளையை அரிந்துகொண்டு ஆர்பரிப்பின்றி கடலில் விழ, தங்களின் இரையென அவர்களின் உடலினை ஆட்கொண்டன
மீன்கள். இதை வாசித்து முடித்ததும் மொழி என்னும் பெயர்
கொண்ட மாணவி ‘மானுடர்கள் ஒருபோதும் அப்படி இறக்கத் துணிய மாட்டார்கள்’என்றாள். நான் புன்னகைத்தேன்.
நுண்கதை: 5
“காம்புகளற்ற முலைகளை உடைய’, என்ற வரிகளை வாசித்துக் கொண்டிருந்தபோதே அவளது
முகம், அந்த எழுத்தின் மீது ஏற்பட்ட ஒவ்வாமையில் கன்றிச் சிவந்தது. மானசீகமாக அவ்வரிகளை பெற்றவனை வைது தீர்த்தாள். பின், ஒரு வித தயக்கத்துடன், கதவினைத் தாழிட்டு.. தன்னை நிர்வாணப்படுத்திக் காம்புகளைச்
சோதித்துக்கொண்டு, ஆசுவாசமாய்ப் பெருமூச்சுவிட்டு அப்படியே
கட்டிலில் சாய்ந்து கண்களை மூடினாள்.
நுண்கதை: 6
அந்த
மலையடிவார கிராமத்தின் கிழக்குக் கோடியிலுள்ள வனப்பு மிக்க பழங்களை உதிர்க்கும் கொடுக்காப்புளி மரத்தின் நுனிக்கிளையில் உள்ள
பறவைக் கூட்டின் முட்டைகளை
நாடி பாம்பு ஊர்ந்திருக்க, அணிற்பிள்ளையைத்
துரத்தியவாறு பூனை மரத்திலேறியது. பூனையின்
கொழுகொழுப்பு
கண்டு மரத்தடியைச் சுற்றி வளைத்தது இரண்டு நரிகள். கடைசியாக வேட்டைத் துப்பாக்கியுடன் அவன்
வந்தான்.
நுண்கதை: 7
வீட்டில் அனைவருடனும் அமர்ந்து எட்டரை மணிக்கு இரண்டு இட்டலிகளுக்கு மேல் உண்ண
முடிவதில்லை அவரால். அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும் இரவு பதினொன்று
நாற்பது சுமாருக்கு வழக்கமாகவே பசி ஏற்படுகிறது. அதை வீட்டில் சொல்ல ஏதோ ஒன்று அவரைத் தடுக்கிறது. மனிதர்,
சில நேரங்களில்
பசியில் வலிக்கும் வயிற்றினை அழுந்தப் பிடித்தும், முழங்காலால்
அழுத்தி குறுகிப்
படுத்தும், நீர் அருந்தியும், சில சொட்டுக் கண்ணீருடனும் உறங்கித்தான்
போகிறார். அவர் இப்போதெல்லாம் அவரின் பெற்றோரை அதிகம்
நினைத்துக்கொள்கிறார்.
நுண்கதை: 8
நகர்
உலா சென்ற மன்னர்
அந்தப் பிச்சைக்காரனின் ஏழ்மை கண்டு தன் மோதிரத்தை பாத்திரத்தில் இட்டு
வந்தார். மறுநாள் நள்ளிரவு
அனைத்துக் காவலர்களிடமும் மோதிரத்தை அடையாளமாகக் காட்டி
மன்னரின் அந்தரங்க அறைக்குள் நுழைந்த அவன், உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மன்னனின் கழுத்தை அறுத்து, உதிரத்தால் அபிசேகம் செய்யப்பட்ட கிரீடத்துடன்
அரியணையில் அமர்ந்தான்.
நுண்கதை: 9
“பெர்முடா
ட்ரை ஆங்கிளில் கி.பி.2020 இல் காணாமல்
போன மிஸ்ட்-1899 கப்பல் படிமங்கள் வியாழன் கிரகத்தில் கி.பி.4572இல் கண்டறியப்பட்டது. அது முதல் விண் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடு
நிறுத்தப்பட்டு தொலை தொடர்பு சாதனங்களுக்கென அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாகவே இன்று அனைத்து
கிரகங்களுக்கும் பெர்முடா ட்ரை ஆங்கிளின் வழியாக பயணங்கள் சாத்தியமாகி உள்ளன” என்ற கரையான்களால் அரிக்கப்பட்ட 4000 ஆண்டுகள் பழைமைமிகு செய்தித்தாளின் ஸ்கேன் காப்பியைக் கணிணி தான் சுயமாக உலகம் முழுக்கத் தேடித்தேடி எரேஸ் செய்துகொண்டிருந்தது…
நுண்கதை: 10
திரு.பரத்துக்கும் திருமதி.பரத்துக்கும் குழந்தை பிறந்தது. அதற்கு பால் பத்தாமல் போக ஆவின் பாலில் பால்
வாங்கி பால் டப்பா மூலம் புகட்டினார்கள். பிறகு 1-12
வரை, பிறகு கல்லூரி என வளர்ந்த குழந்தை திருமணம்
செய்து குழந்தை பெற்றது. பிறகு வீடு கட்டியது. பிறகு குழந்தை பெற்று வளர்க்கத் துவங்கியது. இப்படியாக தனது பேரக் குழந்தைகளுடன் திரு.பரத் வாழ்வை ஊஞ்சலில் அமர்ந்து கழிந்தார் மன்னிக்கவும் கழித்தார். சுபம். (இப்புடி புரியறது போல கதைய எழுதியாவது லைக்ஸ்ச
அள்ளுவோம்)
நுண்கதை: 11
பெண்களுக்கு ஆணாகவும், ஆண்களுக்குப் பெண்ணாகவும் தெரியுமாறு ஓர் அழகிய
உருவத்துடனும்,
கிழசல்
ஆடைகளுடனும் தெரு ஓரத்தில் உலவினார் கடவுள். ஆச்சர்யமாய்
ஒருவர் கூட
ஏறிட்டும் பார்க்கவில்லை. உண்மையில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேலும் தன் ஆடைகளைக் கிழித்துவிட்டுக்
கொண்டார். அப்பொழுதும் யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. வெறுப்பான கடவுள் நிர்வாணமாக உலவத்துவங்க, ஒரே ஒரு பெருச்சாளி மட்டும் அசட்டையாக அவரைக் கவனித்துவிட்டு தன்போக்கில்
மேயத்துவங்கியதைக் கண்டு தற்கொலை செய்துகொண்டார். (மானுட இனம் திருந்தியபின் தன் இருப்பு அவசியமில்லை என்றே அவர் அந்த முடிவை
எய்தினார்)
நுண்கதை: 12
உன்னை யானை என்று அழைப்பதா அல்லது
முட்செடி என்று
எண்ணுவதா என்று எனக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. வாழ்க்கை ஒவ்வொரு யானையிலும் ஒரு முட்செடியையும் ஒவ்வொரு
முட்செடியிலும் ஒரு யானையையும் ஒளித்து வைத்துள்ளதைக் காண முடிகிறது. ஆகவே உன்னை யானை என்றோ முட்செடி என்றோ தனித்து
அழைக்கப்போவதில்லை. உள்ளதை உள்ளவாறே ஏற்கிறேன். முத்தங்கள்!
நுண்கதை: 13
தினகரன் ‘ஆழம் தெரியாம காலை விடக்கூடாது’ எனச் சொல்ல, தன் நண்பனுக்கு இவ்வாறாகப் பதில் சொன்னான்
பூங்குன்றன் ‘காலை விட்டால்தான ஆழம் தெரியும்’ இந்த நிகழ்வு பற்றி பின்னாட்களில் ‘தண் நிழல்’ பத்திரிக்கையின் நேர்காணலில் நினைவு கூர்ந்த பூங்குன்றன் ‘அப்படி தன் நண்பர்களிடம் விவாதிக்க அல்லது விதண்டாவாதம்
புரிய சாண்டில்யனின் எழுத்துக்களே காரணம் என்றும், அவரை வாசித்திராவிட்டால் வாழ்நாள் முழுக்கத் தானொரு நாவற்றவனாகவே வாழ்ந்திருப்பேன் என்றும்
குறிப்பிட்டு, தன் கல்லூரி கால மற்றும் முதற்கட்ட வாசிப்பின்
ஆசான் என்றும் அவரைக் குறிப்பிட்டிருந்தார்.
நுண்கதை: 13
நிலவற்ற இருளின் ஒளியில் அந்தத் தவளைக் குஞ்சு தன் தாயின் மீது ஏறியும்
இறங்கியும் புரண்டும் வரப்பென நீண்டிருக்கும் தென்னை மரங்களின் அருகேயுள்ள
கழனியில் விளையாடித் திரிய, சட்டென முதிர் நெற்று ஒன்று உதிர்ந்து தவளைக்
குஞ்சின் தலை நேர் வர, தன் இயக்கத்தை ஓர் கணம் நிறுத்திக்கொண்டது பூமி. மிகச் சரியாக தன் முகம் முன் விழுந்த உருண்டையான ஏதோவொன்றின் மீது புரண்டு
ஏறியது குஞ்சுத் தவளை. அதே கணம் மங்கள்யான் 2 தன் சுற்றுவட்டப்பாதையை தவறவிட்டு வெடித்துச்
சிதறியது!
நுண்கதை: 14
புத்தன் என்பீல்ட் கிளாசிக் பைக்கில் இருந்து இறங்கியதும் கூலிங்கிளாசில்
படிந்திருந்த தட்டான் பூச்சிகளின் வெண்ணிற உதிரத்தை தன் சட்டையின் இடது கீழ் புற
நுனியால் துடைத்தான். பின்னர், மறுநாள் முதல் ஹெல்மட் அணிந்து, அதற்குள் கூலிங்கிளாஸை அணியத் துவங்கினான்…
நுண்கதை: 15
கறுப்புடன்
சற்றே காப்பிப்
பொடியின் நிறம் கொண்ட, உமிழ் நீர்ச் சுரந்து வழியும் நாவுடைய அந்தச்
செவலைப் பசு.. முதுகெலும்பு அற்ற, பசிய நிறம் கொண்ட, முட்டைகளுடன் புழு ஒட்டியிருந்த இலையை உடைய
செடியை.. அப்படியே கடித்து விழுங்கியது…
ஐயம்- 1
ஓர் அறிவு உயிரி எனச் சொல்லப்படும் அந்தப்புழு
எமன் என நீண்டு
வரும் அந்த நாவு கண்டு உயிர்த் தப்பாமல் தம் முட்டைகள் மேல் மேலும் தன்னை
இறுக்கிக் கொண்டது எதனால்?
ஐயம்- 2
புழுவை உண்டதால் பசு சைவமா? அசைவமா?
நுண்கதை: 16
வரலாற்று ஆய்வாளரும் தொல்லியல் துறை சான்றோருமான கார்க்கி நலன் தனது ஆய்வு
கட்டுரையான ‘இந்திய மரபும் சிற்பங்களும்’என்பதில்,‘முதன் முதலில் மனிதர்கள் அதிலும் குறிப்பாக லெமூரிய ஆதிகுடியின் வழி வந்தோர் ஏன் தெய்வங்களை கற்களின் வடிவில் ஏற்றி
வழிபடுகின்றனர் என்பதற்கு விடையாக ‘கற்கள் என்பது முதலில் வேட்டையாடவும் பின்னர் நெருப்பினை உண்டாக்கவும்
கண்டறியப்பட்ட
கருவி. எனவே உயிர்க்காத்தலுக்கும் மானுட இனம் அடுத்த
நிலையை எட்டவும் கற்கவும் காரணமாக இருந்தமையால்
மறவாத நன்றியுடன்
கடவுளை அதில் ஏற்றி வழிபடுகின்றனர்’ என்கிறார்.
நுண்கதை: 17
அந்தத் தாழ்வாரத்தில் அவர்கள் நெருக்கியடித்து நின்ற வண்ணம் இருந்தனர். மழை ஓய்ந்தபாடில்லை.
இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்குமோ என ஒவ்வொருவரும் யோசிக்கத் துவங்கிய கணத்தில்
மழைத் துளிகளோடு தங்கமும் சொட்டத் துவங்கியது. ஆளாளுக்கு வேண்டிய மட்டும் அள்ளிக்
குவித்தும்கூட தங்கம் கொட்டிய வண்ணமே இருந்தது. ஒவ்வொரு
வீட்டிலும் தங்கமே குவித்து வைக்கப்பட்டது. மறுநாள் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் தங்க மழை பெய்த செய்தி அனைவருக்கும்
தெரிய வர, மதிப்பு ஏதும் அற்ற பொருளானதுடன், ஒருகிலோ தங்கத்தை ஒரு ரூபாய் கூட கொடுத்து
வாங்க எவரும் முன் வரவில்லை. அடுத்தடுத்த நாட்களில் மழையில் நீருக்குப் பதிலாக தங்கமே சொட்டியது. உலகின் கடைசி மனிதன் வறண்ட நாவுடன் இறந்தான்.
நுண்கதை: 18
உச்சிக்
கிளையில்
சிட்டுக்குருவி ஒன்று கூட்டினைக் கட்டி முட்டையிட்டு இருக்க அந்த மரம்
வளர்ந்துகொண்டே இருந்தது. மேகம் தாண்டி ஆகாயம் தாண்டி மேலே மேலே மேலேயென, தாயின்றி அதிலிருந்து பிறந்த குஞ்சுகள் தங்களுடன் விளையாட நட்சத்திதரங்களைத்
தேர்வு செய்தன. ஒருமுறை அவ்வாறு விளையாண்டபோது சிட்டுக்குருவியின் சிறகினைக் கடனாகக் கேட்டது
குட்டி நட்சத்திரமொன்று. பிறகென்ன மனிதர்கள் வாழும் பூமியை அடைந்த நட்சத்திரம்
அவர்களிடமிருந்து துரோகத்தை கற்றுக்கொண்டு சிட்டுக்கு அதன் சிறகினை
திருப்பித்தரவேயில்லை. அது முதல் சிட்டுவின் இனம் பூமியில் அழியத்துவங்க நட்சத்திர இனங்கள் வானில்
பறந்து திரியத் துவங்கின!
நுண்கதை: 19
பிதாவே, முட்டையில் இருந்து வெளிப்படும் கோழிக்குஞ்சு
தன் தாயின் பாதம் அடைவதாய் நானும் உன் பாதம் அடைகிறேன். பரிசுத்த ஆவியால் என்னை சுத்தம் செய். உன் உதிரத்தை என் பாவங்களுக்காய்ச் செலவிடு! உன் சிவந்த மெல்லிய அதரங்களால் என் நெற்றியில் மட்டும் முத்தமிடு. (அவ்வாறு செய்வதே
என் காதலிகள் ((ஆம்ம்‘கள்)) சாபத்திலிருந்து உமை காக்கும்) அப்படியே உன் நீண்ட கூந்தல் மயிரிலிருந்து
ஒன்றை பிடுங்கி என் சொட்டை மண்டையில் நட்டு விடு! ஒன்றுமற்ற அந்த வெற்று மண்டையில் காடென மயிராவது வளர்ந்து தொலைக்கட்டும். உன்சித்தப்படி எழுதப்பட்ட இந்தப் பிரார்த்தனையை
முடிக்கிறேன் ஆண்டவரே! போற்றி! போற்றி!
நுண்கதை: 20
“மகளே யசோதரை, இந்த உலகில் களைகள் என்பவை கண்டறியப்படாத
மூலிகைகள் அல்லவா? நீர்ப் பாய்ச்சப்படாத நெல்லினும் களைகள்
வளமையாக உள்ளதே எவ்வாறு அன்பே? மலர்கள் களை எனத் தெரியாமல் அதில் பிறக்கின்றதா? இந்த உலகில் களை என்பது கற்பின்றி வாழ்தல். கற்பென்பது மனம் போல் வாழ்தல்”என்னும் வரிகளை அவள் வாசித்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் யோசித்தாள். மிக மிக மெல்லிய பட்டாடை அணிந்து கண்ணாடியில் தன்னை இரசித்தவள் இருப்பத்தேழு
தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு உறங்கத்துவங்கினாள்.
நுண்கதை: 21
அண்ட சராசரங்களை ஆளும் கடவுளைப் பார்த்து அழுக்கு மூட்டைப்பூச்சி, ‘போயும் போயும் அற்ப மானுடப் பதர்களிடம் பிச்சை
எடுத்துக்கொண்டு அவர்கள் செய்யும் மிக நல்ல காரியங்களைச் சகித்துக்கொள்வதற்குப்
பதில் நீ பால்டாயில் குடித்துச் சாகலாம்’ என்றது. தன் நாவை தரை வரை தொங்கவிட்டு பல்லிளித்த கடவுள் “இதெல்லாம் பக்தியில சகஜமப்பா” என்றார். பிறகு, இயற்கை அந்த நிகழ்வைக் கணக்கில்
வைத்துக்கொண்டது. பாவம் கடவுளும் பக்தனும் சந்தித்தப் புள்ளியில்
பூமி பிளந்து, செத்து ஒழிந்தனர்.
பி.கு- இந்த நுண் கதையை வாசித்த கடவுள் குற்ற உணர்வின் மிகுதியில் வரும்
காலங்களில் தன் கடமையை செவ்வனே செய்யவதாகப் பூங்குன்றனுக்குச் சத்தியம் செய்து
கொடுத்தார். ஆகவே, சூதானமாகத் திரியவும்.
நுண்கதை: 22
அத்தக் கோபுரத்தின் உச்சியில் நிர்வாணமாய் இருந்த கன்னி சிலையை அதன்
எதிர்புறம் இருந்த ஆண் சிலை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தது. ஏனோ அந்தக் கன்னிக்கு அவன் மீது சற்றும்
காதலில்லை. எனவே அவள் அன்பாகவும் உக்கிரமாகவும் பல்வேறு
வழிகளிலும் எவ்வளவோ சொல்லியும் அவள் மீதான பார்வையை அவன் அகற்றவேயில்லை. தன்நிலை எண்ணி அழுதிருந்த கன்னி தன்மீது கவிந்திருந்த புளியமர நிழலிடம் அதை
சொல்ல, நிழல் மரத்திடம் சொல்ல, மரம் புறாவிடம் சொல்ல, புறா அந்தச் சிலையின் கண் மீது எச்சமிட்டது. சற்று நாளில் அதில் வேர்விடத் துவங்கிய அரசமரம் அந்த ஆண்சிலையை உடைத்தெறிந்து
அவள் வேதனை போக்கியது. அன்று முதல் புறாக்கள் கோவிலின் விருந்தினர்
ஆயினர்.
நுண்கதை: 23
கிணற்று நீரில் இருந்து தவறுதலாக (குடத்துள்) வந்த தவளை குஞ்சு; மற்றொரு முறை குட்டி மீன்; மேலும் ஒரு முறை பாம்புக்குட்டி என, ஒவ்வொரு முறையும், ஒவ்வொன்றும் கொண்டாட்டங்களின் மத்தியில்
மானுடர்களால் கொல்லப்பட்டன. ஒரு நாள் மனிதன் ஒருவன் படிகள் அற்ற பழைய
அழுக்குகள் மிகுந்த கிணற்றில் தவறி விழுந்தான். அதில், வளர்ந்த தவளைகள்/மீன்கள்/பாம்புகள் எனச்
சுற்றித்திரிந்தன. இரவுகள் இரண்டின் பின்னர் கண்டறியப்பட்டாலும் அவன் உயிருடன் இருந்தான்.
நீதி: “புலிக்கு பசித்தாலும் பீயைத் தின்னாது”
நுண்கதை: 24
வணிகன் பாய்மரப் படகில் பயணித்தான். கடற்கொள்ளையர்கள் அந்தப் படகினைச் சூழ்ந்தனர். அவனிடமுள்ள அனைத்தையும் எடுத்துக்கொண்டவர்கள் அவனைப் படகோடு விட்டுச்
சென்றனர். வெற்றுக் கையுடன் எப்படி ஊர் திரும்ப இயலும்
என்று யோசித்த அவன் கடலில் விழுந்து இறந்தான். பாய்மரப்படகு அலையில் ஓயாது ஓடியது. ஆளற்று வரும் படகினை கண்ட கட்டுமரவாசி அதில் ஏறி தூண்டிலிட்டு மீன் பிடித்து
விற்கத் துவங்கினான். செல்வம் சேர்ந்தது. வணிகன் ஆனான். பிறகு, பொருள் தேட
அயல் தேசம் சென்று திரும்பியபோது.. (இப்போது கதையை மீண்டும் முதலில் இருந்து
துவங்கவும்)
நுண்கதை: 25
அவள் உதடுகளில் முத்தம் இட்டுக் கொண்டிருந்த போது சுரீர் எனக் கடித்தது எறும்பு. வலியினும் முத்தம் பெரிதல்லவா! அவன் மீண்டும் முனைய வெவ்வேறு இடங்களில் சுரீர்
சுரீர் எனத் துவங்கிய வலி
உடல் முழுக்க
ஊடுறுவியது. வாய்விட்டு அலரியவனை வியப்பாக பார்க்காமல்
சிரிக்கத் துவங்கினாள் அவள். அவன் வலி பெருக பெருக அவள் சிரிப்பும் பெருகியது. உரத்து எதிரொலித்தது. வலிப்பு வந்தவன் போல உடலினை உதறத் துவங்கினான்… கட்டிலில் இருந்து
உருண்டு கீழே விழுந்தவன் கனவென உணர்ந்தான். வியர்வையில் உடல் நசநசத்தது. மீண்டும் கட்டிலில் படுத்து அருகிருந்தவள் மீது
கை வைக்க, தூக்கத்திலேயே விலக்கியவள் போர்வையை
இறுக்கியவாறு உறங்கினாள். அவன் தலையின் நரை மயிரில் இருந்து அந்தச்
சுள்ளெறும்பு இறங்கத் துவங்கியது. சாளர ஓரத்தில் மூலை கிழித்துவைக்கப்பட்டிருந்த
எறும்புப் பொடியின் கவர்
இருளின் ஒளியில்
பளபளத்தது.
நுண்கதை: 26
முதன் முதலாக வாகையும் பூவரசும் இந்தக் கொடூர மானுட இனங்களின் நன்றி கெட்டத்தனங்களைப் பொறுக்கமாட்டாமல் தங்கள் நிழல்களைத் தங்களுக்குள் ஒளித்துப்
புரட்சி செய்தன. செய்தி மானுடரின் வதந்தியைப் போல உலகின் பல்வேறு நிலங்களிலும் காற்றின் வழி
மிக மிக வேகமாகப் பரவியது. வெட்டப்படுதலுக்கும் எரிக்கப்படுதலுக்கும்
குறைந்தபட்சம்
மனதளவில் கூட மன்னிப்புக்
கோராத பிண சென்மங்களை எதிர்ப்போம் கூடுவோம்
வெல்வோம் என புரட்சி முழக்கமிட்ட மரங்கள் ஒவ்வொரு
பகுதியிலும் தங்கள் நிழல்களைத் தங்களுக்குள் ஒளித்துக்கொள்ளத் துவங்கின. முதலில் கவனிக்கப்படாவிட்டாலும் போகப் போக
உலகெங்கும் இவ்விசித்திரப்போக்கை உணரத் துவங்கினர். விஞ்ஞானம் இதற்கு பல்வேறு வியாக்கியானம் தர, அதனைக் கேள்வியுற்ற பறவைகள் மானுட புத்தியை
எண்ணித் தலையில் அடித்துக்கொண்டன. என்ன நினைத்ததோ இப்பிரபஞ்சம் , இப்போதெல்லாம் பூமியில் இரண்டு சூரியன்களை
உதிக்கவைக்கிறது.
நுண்கதை: 27
மகனே அரிக்கும்போது சொரிவதற்கு யாரேனும் ஒருவரை ஏற்பாடு செய்ய இயலுமா? ஏன் பிதாவே தாங்களே சொரிந்துகொள்ள மாட்டீரா! என்றவன் பதிலில்
கேள்வியை வைத்தமையால் சிலுவையில் அறையப்பட்டதுடன் பரலோக சாம்ராஜ்ஜியத்தையும் இழந்தான்.
மகனே அரிக்கும்போது சொரிவதற்கு யாரேனும் ஒருவரை ஏற்பாடு செய்ய இயலுமா? நான் உள்ளபோது மற்றவர் எதற்கு பிதாவே! என்றவன்
பதினாறும் பெற்றதுடன் பரலோக சாம்ராஜ்ஜியமும் அடைந்தான். (இது கிறுத்துவம் சார்ந்தது என்ற சோகம்
யாவருக்கும் வேண்டாம். அவரவர் சமயக்கடவுளருக்கு ஏற்ற வார்த்தையைத் தேவையான
இடங்களில் இட்டு நிரப்பிக்கொள்ளவும்.)
நுண்கதை: 28
மகனே பூங்குன்றா! உன் திருமணத்தன்று மஞ்சள் பையில் சாத்துக்குடிக்கு பதிலாக ஆப்பிள் வழங்கலாம்
என்றாள் அம்மா. அதெல்லாம் இயலாது தாயே, வேண்டுமானால் ‘ஆப்பிளுக்குப் பதிலாகத் தக்காளி வழங்கலாம்
என்றேன். அம்மா மறுக்கவே, ‘வெளியூர்த் தக்காளிக்கு ஆப்பிள் என்றும் உள்ளூர் ஆப்பிளுக்குத் தக்காளி
என்றும் பெயரென்றேன். பிறகென்ன, வழக்கமாக இப்படியான நுண்கதைகளை நாம் எப்படி இடக்கையால் ஒதுக்கி மிக எளிதாகக்
கடக்கின்றோமோ அதே வழியில் தாயாரும் தக்காளியைக் கடந்தார்.
நுண்கதை: 29
“வண்டுகள் தங்களின் உமிழ்நீரை மகரந்தங்களில் நனைத்து நொதிக்கச் செய்து பின்னர்
நிலவின் ஒளியில் காயவைக்கும் போது தேன் உருவாகிறது” என்பது பூங்குழலி கி.பி.2560 இல் துவங்கி 6 ஆண்டுகளின் பின் கண்டறிந்த ஆய்வின் முடிவாகும். மறுநாள் தன் கட்டுரையை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என யோசித்தவள் மல்லிகையைச் சூடினாள். பிறகு, இரவு உணவை உண்டவள் தன் மூன்றாவது காதலனுடன்
பேசிவிட்டு கண் அயர்ந்தாள். வைகறையின் துவக்கத்தில் நிலவொளி மேகத்துள் மறைந்த
நேரம்
தலையில் இருந்த
மல்லிகை மலர்கள் அவள் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. இரண்டு நாட்களின் பின்னர் அவள்
பிணம் காய்ந்த மல்லிகைகளின் மத்தியில் அழுகிக்கிடந்தது.
நுண்கதை: 30
தனது முப்பதாவது நுண்கதையை எழுதி முடித்த நலன் “ரெனால்ட்ஸ் பேனாவின் ஊதா நிறத் தலையைக் கழற்றிவிட்டு ரீபிலை எடுத்து அதன்
அடிப்புறத்தால் (இடக்கன்னத்தைச் சுருக்கியும் அரைக் கண்கள் மட்டும்
திறந்திருக்கும்படியும் வாயையும் சிறிது
பிளந்தவாறு) காதை குடைந்தபடி யோசிக்கையில் ‘இனி பார்வைக்கு வைக்கப்படும் நுண்கதை குறித்து விமர்சனம் கருத்துக்கள் பகிரும்
ஒவ்வொருவருக்கும் 10/-
(ரூபாய் பத்து
மட்டும்) அன்பளிப்பாக வழங்கப்படும்’ என்று அறிவிக்கலாம” என்ற முடிவினை எடுத்தான். அறிவித்தான். பிறகு
தனது நுண்கதையை இணையத்தில் பதிவேற்றிவிட்டு வழக்கம்போல காத்திருக்கத் துவங்கினான்.
( நுண்கதை 13 இருமுறை உள்ளதே பூங்குன்றனின் வல்லாண்மைக்கு
சான்று என்பதுடன் பாகம் 1 முற்றிற்று )
❤️❤️❤️❤️❤️
ReplyDelete💚💚💚
ReplyDelete👌🏻👌🏻👌🏻
👏🏻👏🏻👏🏻