Friday 30 July 2021

என் பெயர் ரோஸி


 

என் பெயர் ரோஸி

வாஸ்தோ


என் பெயர் ரோஸி. சற்று முன்பு நான் விழுங்கிய ரொட்டி என் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டதால், இன்னும் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி நான் சாக போகிறேன். ரோஸி என்கிற பெயரோடு இருப்பதால் யாரும் என்னை பெண் என்று நினைத்துவிடாதீர்கள். நான் ஆண் தான். பின் எப்படி எனக்கு ஒரு பெண்ணின் பெயர் வந்தது என்று தானே கேட்கிறீர்கள். பெண் பெயருக்கான காரணத்தை சொல்லிவிட்டு என் கதையை சொல்கிறேன். மன்னிக்கவும், என்னுடைய சுயசரிதை எனும் போது, நான் பிறந்ததிலிருந்து இந்த கணம் அதாவது நான் மரணித்துக் கொண்டிருக்கும் இந்த கணம் வரையில் சொல்லவேண்டியது தானே என்னுடைய கடமை. மரணத்தின் இறுதி நொடிகள் என்பதால் உளறுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் முடிந்தளவிற்கு உளறாமல் என் கதையை சொல்கிறேன்.

 

அப்பா யாரென்றே தெரியாமல் பிறந்திருந்தாலும், நான் என்னுடைய அப்பாவின் ஜாடை. அது எப்படி இத்தனை உறுதியாக சொல்கிறேன் என்றால், என்னோடு பிறந்தவர்கள் அனைவருமே செவலை நிறத்திலிருக்கையில் நான் மட்டும் செவலை நிறமாக இல்லாமல் பிறந்திருந்தேன். அதுவும் போக ஏனையோர் அனைவருக்கும் மூக்கு கருப்பாய் இருக்கையில் எனக்கு மட்டும் மூக்கு ரோஸ் நிறத்தில் இருந்தது. அதைப் பார்த்து தான் ஒரு குட்டி பெண்  எனக்கு ரோஸி என்று பெயர் வைத்தாள். அவள் மட்டுமே என்னை ரோஸி என்றழைப்பாள்.

 

நான் குட்டியாக இருக்கையில் ஒருமுறை எனக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் ரோஸ் மில்க்  ஊற்றித் தந்தாள். நானும் சலக்புலக்கென சப்தமிட்டபடியே குடித்தேன். நான் குடிப்பதைப் பார்த்ததும் அவளுக்கு அவ்வளவு ஆனந்தம். “ரோஸி ரோஸ் மில்க் குடிக்குதுஎன்று கத்தி ஆர்ப்பரித்தாள். எங்கிருந்தோ கனமாய் ஒரு பொருள் என்னருகில் தொம்மென்று விழுந்தது. அந்த பொருள் விழுந்த சத்தத்தில், அந்த சப்தம் கொடுத்த பயத்தில், இனிப்பாய் சுவையாயிருந்த அந்த ரோஸ்மில்கை பாதி குடித்திருந்த நிலையிலேயே விட்டு சென்றுவிட்டேன். மீண்டும் அடுத்த நாள் அந்த வீட்டின் வாசலில் சென்று நின்று பார்த்தேன். அந்த குட்டிப்பெண் வெளியே வரவேயில்லை.

 

விடாய் கண்டிருந்த வேளையில் தெருவே வீடாய் சுற்றிக் கொண்டிருந்த என் அம்மாவை, ஏதோவொரு பணக்கார வீட்டைச் சேர்ந்த ஒருவன் வந்து வேலை பார்த்திருக்கிறான். அவன் மூலமாக தான் நான் பிறந்தது. அம்மாவின் ஜாடையை விடவும் எனக்கு அவனின் ஜாடையே வாய்க்கப்பட்டிருக்கிறது. அவர் இவர் என்று மரியாதையாக சொல்ல ஆசை தான். ஆனால் என்ன செய்வது.? தன் சுகத்தை மட்டுமே பெரிதாக நினைத்து என்னைப் பெத்து போட்டுவிட்டு சென்றவனை எப்படி மரியாதையாக விளிப்பது. என்னைப் பெற்றவள் அவனுக்கும் ஒரு படி மேலே. நானும் அவளது கர்ப்ப பாத்திரத்திலிருந்து வெளியே வந்தவன் தானே. என்னை முத்தே மணியே என்று கொஞ்ச வேண்டாம், குறைந்தபட்சம் நான் உணவு எடுத்துக்கொண்டேனா என்று கூடவா பார்க்காமல் இருப்பாள்?

 

அவளது மடிக்காம்பில் என் உடன்பிறந்தவர்கள் அத்தனை பேரும் பால் குடித்து முடித்த பின்னர் தான் என்னை அனுமதிப்பர். அவர்கள் மிச்சம் வைத்துவிட்டு சென்றதைக் குடிக்கும் பொழுது தான் இவளுக்கு வேலை வந்துவிடும் எழுந்து சென்று விடுவாள். நானும் அவளை தனியே விடாமல் அவள் பின்னேயே செல்வேன். எப்பொழுதாவது அவளுக்காக தோன்றினால் மட்டுமே அவளது மடிக்காம்பை எனக்கு கொடுப்பாள். அரை வயிறும் கால் வயிறுமாக குடித்தே என் தேகத்தை வளர்த்தேன்.

 

நான் ஏற்கனவே சொன்னது தான் எனக்கு என் அப்பாவின் ஜாடை, அப்பாவின் உடல்வாகு. என் அப்பா ஏதோவொரு பணக்கார வீட்டைச் சேர்ந்தவர். பாலும் சோறுமாகவோ அல்லது கறியும் மீனுமாகவோ தின்று வளர்ந்தவராக இருந்திருப்பார். நான் பத்து நாட்கள் பசியோடு கிடந்தாலும் என் உடலில் அது பிரதிபலிக்காது. பார்ப்பவர்களுக்கு மூன்று வேளையும் மூக்கு முட்ட தின்று கொழுத்து போய் இருப்பதாகவே தான் தோன்றும். அதனால் என்னோடிருக்கும் மற்ற நோஞ்சான் குட்டிகளோடு சண்டையிட்டு நான் உணவை உட்கொள்ள முயலுகையில், “நல்லா தின்னு கொழுத்து போய் இருந்துட்டு, கூட இருக்கிறதுகளுக்க சாப்பாடையும் சாப்பிட வருது பாருஎன்று திட்டியபடியே என்னை நாய்கள் மீது இரக்கம் கொண்ட சில நல்லவர்கள் விரட்டி விடுவார்கள். மரத்தை வைத்தவன் தண்ணி ஊத்துவான் என்று நினைத்தபடியே அங்கிருந்து விலகி சென்று மற்ற நாய்கள் உண்ணுவதை ஏக்கத்தோடு வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.

 

திடீரென்று ஒருநாள் தெருவில் சாலையில் எல்லாம் மக்களின் நடமாட்டம் குறைந்து குறைந்து வந்து மக்கள் நடமாட்டமே இல்லாமல் போய்விட்டது. அத்தனை நாளும் சாலையில் வேகமாய் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பயந்து, சாலையைப் பயந்து பயந்து கடந்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் வந்தது. இங்கும் அங்கும் ஓடினேன். எவ்வித பயமும் இல்லாமல் என்னை விட சிறிய உயிரினங்களை அதாவது இந்த பூனை, எலி போன்ற உயிரினங்களை விரட்டி விளையாடினேன்.

 

குப்பைகளில் விசிறி எறியப்பட்ட மீந்த உணவுகளை உடனிருந்த நாய்களோடு சண்டையிட்டு உண்டேன். என்னை யாருமே விரட்டி விட வரவில்லை. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதுவும் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே. பின்னர் உணவு கிடைக்க சிரமமாகத் துவங்கியதும், எங்கேயேனும் ஒரு கைப்பிடி அளவேனும் உணவு கிடைத்திடாதா என்று தேடியலைய துவங்கினேன். பசியோடு இருக்கையில் உற்சாகம் எங்கிருந்து வரும். சோர்ந்து போய் ஒரு வீட்டின் வாசலில் படுத்துவிட்டேன்.

 

அந்த வீட்டு வாசலில் அரை மயக்கத்தில் கிடந்த எனக்கு, எங்கிருந்தோ வந்த உணவு பதார்த்ததின் மணம் என் நாசியை துளைத்தது. கண்களைத் திறந்து சோர்வாக பார்த்தேன். என் முன்னே ஒரு தட்டு நிறைய உணவு. மீந்து போன உணவாக தெரியவில்லை. ஒருவேளை அது மீந்து போன உணவாக கூட இருக்கட்டுமே. பசித்திருக்கும் வயிறுக்கு உணவு கிடைத்தால் போதாதா.! எழுந்து வேகமாக செல்ல எத்தனித்தேன். மனதின் வேகம் உடலுக்கு இல்லை. தளர்ந்த நடையோடே சென்று உணவில் வாய் வைத்து இரண்டு கவளம் தின்றேன். இருந்த பசிக்கு அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது. கண் முன்னே ஒரு மனிதன் நிற்பதற்கான அடையாளமாய் இரண்டு கால்கள் தெரியவும், நிமிர்ந்து பார்த்தேன். வயதான ஒரு அம்மா நின்றுக் கொண்டிருந்தார். அவர் கண்களில் அத்தனைக் கருணைத் தெரிந்தது. அவர்களைப் பார்த்துவவ்என்று குரைத்து என் நன்றியைச் சொல்லிவிட்டு, மீண்டும் எனக்கான சாப்பாட்டில் கவனத்தைச் செலுத்தினேன்.

 

பாவங்க எத்தனை நாள் பசியோடு இருந்ததோஅந்த அம்மா யாரிடமோ சொல்வது கேட்டது.

 

நாளையிலருந்து தினமும் இங்க வந்து நிக்க போகுது பாருஎன்று உள்ளிருந்து வயதான ஒரு ஆணின் குரல் கேட்டது.

 

ஓரு பிடி சோறு அதிகமா பொங்குறதுல என்ன குறைஞ்சிட போகுதுஅந்த பெண்ணின் குரல். அதற்கு உள்ளேயிருந்து பதில் வராது போகவும், “இந்த ஊரடங்கு காலத்துல இதுங்க சாப்பாட்டுக்கு எங்க போகும் சொல்லுங்கஎன்றார். நான் என் மனதினுள்நீ நல்லா இருக்கனும் தாயிஎன்று நினைத்துக் கொண்டேன்.

 

அன்றிலிருந்து அந்த வீட்டைச் சுற்றியே வர ஆரம்பித்தேன். ஒரு வேளை தான் என்றாலும் சரியான வேளைக்கு உணவு வைத்துவிடுவார் அந்த வயதான அம்மா. உண்ட உணவுக்கு உதவியாய் இருக்க வேண்டி அந்த வீட்டைச் சுற்றி வருவதை நிறுத்திவிட்டு, அந்த வீட்டின் வாசலிலேயே இருக்க ஆரம்பித்தேன். அந்த வயதான இருவரின் உடல் மணமும் எனக்கு பழக்கப்பட்டு விட்டது. அந்த இருவரையும் தவிர்த்து அந்த வீட்டினுள் யாரேனும் நுழைய முற்பட்டால், முதலில் உறுமுவேன், பின்னர் குரைப்பேன்.

 

அந்த இருவரையும் பார்க்க ஒரு இளைஞன் அவ்வப்பொழுது வருவான். கொஞ்ச நேரம் அந்த வீட்டினுள் இருப்பான். பின்னர் சென்றுவிடுவான். அவ்வப்பொழுது வருவதால் இவன் அந்த வீட்டின் விரோதியல்ல என்பது எனக்கு புரிந்தது. அதனால் அவன் வருகையிலும் போகையிலும் நான் அவனிடம் பகைமை பாராட்டுவதில்லை. ஒருநாள் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தவன், என்னைப் பற்றி ஏதோ சொல்ல துவங்கியதும் என்னுடைய காதைத் தீட்டிக்கொண்டேன்.

 


வீட்டு காவலுக்கு ஒரு நல்ல ஆளை தான் போட்டுருக்கீங்கஎன்று சிரித்தான்

 

வீட்டுக்குள்ள எந்தவொரு புது ஆளையும் வரவிடாதீங்கன்னு, அவன் அமெரிக்கால இருந்து தினமும் சொல்லிட்டு இருக்கான். எதுனாலும் வாசல்லயே வச்சு பேசி அனுப்பிடுங்க. கிட்டக்க கூட வர விடாதீங்க அப்படீங்கிறான். இங்க நாம அப்படி இருக்க முடியுமா சொல்லு.” என்கிறார்

 

வேற வழியில்லயேம்மாஎன்கிறான் இவன்.

 

புரியுது. ஆனா வாசல்ல வந்து நிக்கிறவங்களை அப்படியே வாசல்ல நிக்க வச்சு பேசி அனுப்பி பழக்கமில்லையேடா

 

ஹ்ம்ம்ம், உங்க நிலைமையும் புரியுது

 

இப்ப இந்த நாய் வாசல்லயே கிடக்கிறதால இத தாண்டி யாருமே உள்ள வர யோசிக்கிறாங்களா. அதனால அப்படியே வாசல்ல நிக்க வச்சு என்னன்னு சொல்லிட்டு அப்படியே போயிடுறாங்க. ஒருவகையில மனச்சங்கடம் இல்லாம போயிடுதுஎன்றார்

 

என்னால் ஒருவருக்கு உதவியாய் இருக்க முடிகிறது என்று நினைத்த பொழுது நிஜமாகவே எனக்கு பெருமையாக இருந்தது. வாசலில் நின்றுப் பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்தான். நான் எனது வாலை ஆட்டினேன். “இது நாட்டு நாய் போல இல்லமா. ஏதோவொரு நல்ல ஜாதி நாயோட க்ராஸ் போல தோணுதுஎன் பிறப்பைக் கண்டுபிடித்துவிட்டான் என்று அறிந்ததும் இன்னும் உற்சாகமாய் என் வாலை ஆட்டி அவன் காலருகில் சென்று நின்றுக்கொண்டேன். விரட்டி விடுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என் தலையில் முன்நெற்றியில் வாஞ்சையோடு தடவிக்கொடுத்தான்.

 

நாம பேசுறதெல்லாம் அதுக்கு புரியுது. ஒருநாள் அப்பா என்னை திட்டிட்டு இருந்தாரா.. இது அவரைப் பார்த்து குரைக்குது. அப்பாக்கும் எனக்கும் சண்டை நடக்கிறப்ப உன் ஃப்ரண்ட் கூட அப்பாகிட்ட சத்தம் போட்டதில்லஎன்றார். அவர் தன்னுடைய பையனை விடவும் ஒரு படி மேலாகவே என்னை நினைத்து வைத்திருக்கிறார் என்று நினைத்ததும், என் மனம் அப்படியே இறக்கையை விரித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்துவிட்டது.

 

நாட்கள் நகர்ந்தது. ஒருநாள் இரவு கருப்பு நிறத்தில் ஒரு உருவம் அந்த தெருவில் உலாவுவது தெரிந்தது. அந்த உருவத்தை விரட்டினேன். சட்டென்று அது காணாமல் போய்விட்டது. ஆனால் அது என் பின்னேயே நின்று என்னைப் பார்த்து சிரிப்பதைப் போன்றிருந்தது. மீண்டும் அதை விரட்டினேன். மீண்டுமது காணாமல் போய்விட்டது. அந்த உருவத்தை சுற்றி வளைக்க என் ஒருவனால் முடியாது என்பது புரிந்ததும் துணைக்கு ஆள் அழைக்க வேண்டி ஊளையிட்டேன்.

 

ஊளையிடுதல் ஆபத்தின் அறிகுறி என்பதை உணர்ந்த ஏனைய தோழர்களும் அவர்கள் பங்கிற்கு ஊளையிட்டு அந்த கருப்பு உருவத்திடம் நாங்கள் ஒரு பெரிய கூட்டமாய் இருக்கிறோம். இந்த பக்கம் வராதே என்று எச்சரித்தோம். அந்த உருவம் எங்கோ சென்று மறைந்துவிட்டது. நானும் அமைதியாக வந்து என் எஜமானனின் வீட்டின் முன் வந்து படுத்துக் கொண்டேன்.

 

சற்று நேரத்தில் அந்த வீட்டிலிருந்து அந்த கறுப்பு உருவம் வெளியேறியது. அந்த உருவத்தின் பின்னேயே அந்த அம்மாவின் உருவமும் வெளியேறியது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அந்த அம்மா என்னைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார். அவர் என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு போவதைப் பார்த்ததும், எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஓவென்று அழ ஆரம்பித்தேன். நான் அழும் சப்தம் கேட்டு அந்த தெருவிலிருந்த மொத்த நாய்களின் கூட்டமும் அழ ஆரம்பித்தது.

 

அடுத்த நாள் காலையில் அந்த வீட்டிற்கு புதுப்புது மனிதர்கள் வந்தார்கள். சென்றார்கள். ஆனால் எனக்கு ஏனோ அவர்களை எல்லாம் பார்த்து உறுமவோ குரைக்கவோ தோன்றவேயில்லை. எப்பொழுதும் போலவே எனக்கான இடத்தில் தரையோடு தலை வைத்து அமைதியாக படுத்திருந்தேன். வந்து போனவர்களுக்கு மத்தியில் அந்த இளைஞன் மட்டும் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான்.

மதியமே அந்த அம்மாவின் உடலை மூங்கில் படுக்கையில் கட்டி வண்டியிலேற்றி எடுத்து சென்றார்கள். சென்றவர்களில் அந்த இளைஞனும் இன்னுமொரு இரண்டு பேர் மட்டும் அந்த பெரியவரோடு திரும்பி வந்தார்கள். அந்த பெரியவர் வீட்டினுள் செல்லும் முன்பாக என்னை ஒருமுறை பார்த்தார். படுத்து கிடந்த நான் என் தலையை சோர்வாகத் தூக்கிப் பார்த்தேன். வாயைப் பொத்திக் கொண்டு அழுதபடியே வீட்டினுள் போய்விட்டார். இரவு வெகு நேரத்திற்கு பிறகே அந்த இளைஞன் அந்த வீட்டிலிருந்து வெளியேறினான்.

 

மறுநாள் காலை மதியம் இரவு என மூன்று நேரமும் கையில் உணவு கொண்டு வந்தான். அவனும் ஒரு நாலைந்து நாட்களே வந்திருப்பான். கடைசியாக அவன் வந்த தினம் கையிலிருந்த கைக்குட்டையை வாயில் வைத்து பொத்தியபடி இறுமிக் கொண்டே வந்தான். அவன் வந்துக் கொண்டிருந்த வரையில் எனக்கும் ஏதேனும் உணவிடுவான். அவன் வருவது நின்ற பிறகாக எனக்கு உணவு கிடைப்பதும் நின்று விட்டது. என்னை விடுங்கள் எனக்கு பசியொன்றும் புதியதில்லை. ஆனால் அந்த பெரியவர் உணவுக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. முதல் முறையாக திறந்திருந்த வீட்டினுள் நுழைந்தேன். நான் உள்ளே வந்ததைக் கூட கவனிக்காமல், அவர் அவரது சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தபடி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை தொந்திரவு செய்யவேண்டாமென்று வெளியே வந்துவிட்டேன்.

 

அந்த இளைஞன் வருவது நின்ற பிறகாக ஒரு மத்திம வயது பெண் அந்த வீட்டிற்கு தினமும் வரத் துவங்கினாள். சமையல் செய்யும் மணம் என் எஜமானியின் வீட்டினுள் இருந்து எழும். உணவுக்காக காத்திருப்பேன். அந்த பெண் மட்டுமே வெளியே வருவாள். உணவு மட்டும் வீட்டினுள்ளேயே தங்கிவிடும். மீண்டும் தெருக்களில் என் உணவு வேட்டையைத் துவங்கினேன். இப்பொழுது மனிதர்கள் ஓரளவுக்கு சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தார்கள். மனிதர்களை மீண்டும் பார்த்ததில் சந்தோஷமாக இருந்தது. ஆனால் சந்தோஷங்கள் நிலையானது இல்லையே.

 

ஒருமுறை ஒருவன் எறிந்த கல்லொன்று என் முன்னங்காலில் வந்து விழுந்தது. அன்றிலிருந்து நான் முடவனாகவும் மாறிவிட்டேன். உணவுக்காக வெகுதூரம் என்னால் செல்லமுடியவில்லை, ஒரு வேளை உணவுக்காக சண்டையிட முடியவில்லை. பசி பசி பசி. மழையில்லாததால் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் போது தான் ஒரு ரொட்டித் துண்டைப் பார்த்தேன். வேறு எவரும் வந்து அந்த துண்டு ரொட்டிக்காக என்னிடம் சண்டைக்கு வந்துவிட கூடாதென்பதற்காக எத்தனை வேகமாய் அதை தின்ன முடியுமோ அத்தனை வேகமாய் தின்ன ஆரம்பித்தேன்.

 

வரண்டிருந்த தொண்டையில் ஒரு துகள் சிக்கியதைக் கூட கவனிக்காமல் அடுத்தடுத்த துண்டுகளை முழுங்க முயற்சித்ததில் மிருதுவாயிருந்த ரொட்டித் துண்டு என் மூச்சுக் குழாயில் வந்து சிக்கிக் கொண்டு விட்டது. மூச்சு விட முடியவில்லை. துளி நீர் கிடைத்தாலும் போதும் பிழைத்துக் கொள்வேன். தூசி பறக்கும் சாலையில் நீரிற்கு எங்கே செல்வேன். கொஞ்சம் கொஞ்சமாய் என் இதயதுடிப்பு அடங்குவது தெரிகிறது. என் உயிர் போகும் முன்பாக என் கதையை உங்களிடம் சொல்லிவிட்ட திருப்தியில் கண்ணை மூடிக் கொள்கிறேன்.

 

000


நடுகல் - 8 ஜூலை, 2020.

No comments:

Post a Comment