Wednesday, 3 July 2019

நடுகல் 2








எல்லோருக்கும் முதல் வணக்கம்!

இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம்நல்லாயிருந்துது!’ என்ற பாராட்டைப் பெற்றிருந்தது. இதழில் எழுதிய படைப்பாளிகள் எல்லோருமே புதிய எழுத்தாளர்கள். படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் எனக்கிருந்தது. இந்தமுறையும் முகநூலில் நடுகல் அடுத்த இதழ் வெளிவருவதாக ஒரு அறிவிப்பை கொடுக்கையில் பதினைந்து நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது. மூன்றாம் இதழ் ஆகஸ்டு ஈரோடு கண்காட்சியையொட்டி வெளிவரும்.

முந்தைய இதழில் படைப்புகள் வழங்கிய பலர் இந்த இதழிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக ரூபியா ரிஷியின் சிறுகதை. சு.வெங்குட்டுவன் எப்போதாவது எழுதுபவர். அவரின் இரண்டு சிறுகதைகள் இந்த இதழில் இடம்பெற நானே காரணம். அவரை எழுதத் தூண்டி படைப்பை வாங்கியவன் அவரது இரண்டு படைப்புகளையும் வெளியிட்டு மேலும் எழுதத் தூண்டுகிறேன். நல்லபடைப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு படைப்பாளியின் மூன்று சிறுகதைகள் கூட நடுகல்லில் வெளிவர வாய்ப்பிருக்கிறது. அவர் என் நண்பராக இருக்க வேண்டிய அவசியமேதுமில்லை.

.அரவிந்தன் சிறுகதை வடிவத்தில் சோதனைகளையும், சொல்லல் முறையில் கவிதைத்தன்மையும் கொண்ட படைப்பாளி. நடுகல் இரண்டு இதழ்களிலும் கவிதை பகுதியில் மட்டுமே கலந்திருக்கிறார். அவரிடம் அடுத்த இதழுக்கு கதை தாருங்கள் என்று கேட்பதே மகிழ்வாய் இருந்தது. இதழ் நடத்துபவனின் படைப்பு இருந்தே ஆக வேண்டுமா? என்றொரு கேள்வி என்னிடம் இருந்தது. இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் என் கதை  எழுத்தில் சுதந்திரமாக படைப்பாளிகளை நடுகல்லில் எழுதத் தூண்டும் பணியைச் செய்யும். அது பாலியல் சார்ந்து என்பதில் மட்டுமல்ல. வரும் இதழ்களில் படைப்பாளர்களிடம் சுதந்திரமான எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்

மறுக்கப்பட்ட படைப்புகளுக்கான களம் என்று தஞ்சை ப்ரகாஷ் முன்பு குயுக்தம் என்றொரு இதழ் கொண்டு வந்தார். எதற்காக அப்படி சொன்னார் என்பதை இலக்கிய அபிமானிகள் உணர்வர். நடுகல் நாலு கவிதை, நாலு கதை என்று போட்டு வழக்கமான இதழாக மேற்கொண்டு வரும் இதழ்கள் இல்லாமல் காத்திரமாய் இருக்க ஆசை கொள்கிறேன். அப்படியான படைப்பாளர்களை தேடும் பணியில்...

                                                     அன்போடே என்றும்
                 வா.மு.கோமு, வாய்ப்பாடி (அஞ்) விஜயமங்கலம் (வழி) pin : 638056
                                          vaamukomu@gmail.com  cell : 9865442435

No comments:

Post a Comment