Wednesday 3 July 2019

நடுகல் 2 கவிதைகள்வினையன் கவிதைகள்

000


பரிசுத்த ஆவியின் பேராலே:உங்களை அறையப்பட்ட 
சிலுவையை –எமக்குத் 
தாருங்கள் ஆண்டவரே 
தட்டினால் திறக்க கதவில்லை.
 ஊதல்:


ஒற்றைத் துளை புல்லாங்குழல்
வாசிக்கிறாள் இரவுக்காரி.
காடழிந்த அயர்ச்சியில் 
உறங்கி விட்டா னவன்.
 


நயன்தூக்கின் நன்மை கடலினும் பெரிது:அன்னந்தண்ணிதான் ஆகாரம்
ரேகத்துக்கு
பெத்ததுக்கெல்லாம் ஆக்கிப் போட்டு
பயனேதுமில்லை
சோறொன்னுதான் கொற மசுறென்கிறான் மூத்தவன்
எத்தன நாளக்கி இழுத்துட்டு கெடப்ப - இது
நல்லவளின் அரவணைப்பு
மாட்டுக்கு கழிசலாப் போவுது
எங்கடா மேச்ச பறக்கூதி மொவனேங்கும்
ஆண்டயாச்சும் அவ்வப்போது
கறி ஆக்கித் தருவான்.
செத்த நாக்கு சென கெண்ட தேடுது. பன்னி குட்டி:


மங்கை நல்லாளுக்கு வயிசு 16...
ஆம்பள மாப்பிள்ளைக்கு
நெஞ்சு முடி வெள்ளிக்கம்பி
தலை மசுறோ தப்புச்செடி
எம்பெருமான் சந்நிதியில்
நிச்சய தாம்பூலம்
மகா மண்டப அம்பரிஷி(பட்சிராசன்)
துணை...!
உங்கள் ஆதிக்க புத்தியில்
வராஹ அவதாரம் மூத்திரம் விட வேண்டிக்கொண்டேன்.
நமோ நாராயணாய.... 


000வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்

1.

 இதுவரை
"நீ  ஒரு முழு ஆப்பிளென"
 பலமுறை  வர்ணித்துவிட்டான்.
 ஒப்புக்கொண்டதற்கிணங்க
ஒவ்வொரு முறையும்
ஆப்பிளைப் போலவே
அதிகம் சிவந்தாள்.

ஒருநாள்
மூச்சிரைக்க ஓடோடி வந்தவள் ,
ஆப்பிள் புட்டத்தின் நடுவே
பொதிந்திருந்த
விதைப்பையைச்  சுட்டியபடி
"நீதான் ஆப்பிளென"
படு கவர்ச்சியாய் விமர்சித்தாள்.
மறுத்தவாறு
தன்னெதிரே குலுங்கிய ஆப்பிள்களை
சட்டெனக்  கவ்வினான்
நவீன நியூட்டன்.2.
மொட்டைமாடியில் நின்றபடி
பக்கத்து தெருவின்
இரண்டாம் தளத்தில்
துணி உலர்த்தியபடியிருந்த
அம்முதியாளை "ஆயா ஆயா" வென, பாப்பா எவ்வளவு  கூப்பிட்டும் 
ஆயா திரும்பவே இல்லை.
தெருவில் போவோர் வருவோரெல்லாம்
அண்ணாந்து
இவளைக் கவனித்துக் கடந்தனர்.
அவ்வழியே சைக்கிளோட்டிப் போன
பூக்காரர் மட்டும்
சிறு "மைக்" வடிவிலான
வாடாமல்லிப் பூக்களை
அவள் கைநிறைய கொடுத்துப்போனார்.
உற்றுக்கொண்டிருந்தவள்
ஒரு பூவை மட்டும் கையிலெடுத்து
வாய்க்கு மிக அருகில் வைத்து
"ஆயா....." வென மீண்டும் ஆரம்பித்தாள்
பாப்பா.
3.
தொட்டதற்கெல்லாம் "தீட்டு" என
வெற்றிலை குதப்பிய வாயால்
ஓயாது வசைமொழிவாள்
கிழவி.
அவ் வீச்சிலிருந்து
விடுபடத்  திராணியற்ற
குடும்ப நாவிதனொருவன்
 கிழவனுக்கு முகம் மழிக்க
மாதந்தோறும் வீட்டிற்கு வருவான்.
புறப்பட்டுப் போனபிறகு
அந்த அதி தூய்மையான வீட்டின் வெளிவாசலானது
பரவலாக மொழுகப்படும்.
உலரும் முன்பே ,
ஈரம் சொட்ட சொட்ட நடந்துவரும்
 கிழவனைப் பார்த்து
"தீட்டு கழிந்ததென" திருப்தியுடன் புன்னகைப்பாள் கிழவி.
நோட்டமிட்டுக் கொண்டிருந்த
அவ்வீட்டுப் பொடுசொன்று ,
கிழவியின் சுருங்கிய முகத்தை
ஏறிட்டுப் பார்த்தவாறே,
தன் வாயொட்டிய விரலிடுக்கில்
"பொளிச்"செனக் "காவி"யுமிழ்ந்தபோது
அம் மொத்த வீடும்
தீட்டில் முழுகியிருந்தது.

 000

 பிரார்த்தனைப் பினாத்தல்கள்


மகிவனி


வெட்கம் துரத்தும் இந்த வெக்கை காலத்தில் 
வழியும் வியர்வைக்குள்ளிருந்தே 
துவங்கிவிடுகிறது
மற்றவர்களுக்கான எனது பிரார்த்தனைகள். 
அதிகாலையில்
நடைமறந்த பாதங்களுக்கு யாசகம் கற்றுக்கொடுத்தபடி
தேவாலயத்தின் முன் நின்ற  சாயுபுக்கானது
என் மதச்  சார்பற்ற முதல்   பிரார்த்தனை.
ஒயர்கூடை வழியே கண்ணீர் வழியச் சொட்டும்
பழங்கஞ்சிக்காகவேண்டியேனும்
கூலிமுக்கில் நிற்பவர்களுக்கு வேலை கிடைக்கட்டும் 
என்பதில் துவங்கி,
உன் கையால இன்னைக்கு  போணி பண்ணப்பா
உன் ராசி பார்க்கலாம் எனும்
கீரைக்கார அம்மாவுக்கு சிவப்பு நிற  பற்கள்.
வானத்தையே பொத்தல் நிறைந்த
போர்வையாய்ப் போர்த்திக்கிடந்த
நடைபாதைச் சிறுவனிடம்
சில்லறை கேட்ட காவல்துறை நண்பனுக்கு
குடிபோதை வாகன ஓட்டி ஒருவன் பரிசாகக்  கிடைத்திருக்கட்டும்.
நூற்றிஎட்டோ நூற்றியொன்பதோ எதிரில் கடக்கையில் வேண்டுவோரிடத்து  யாரும் நாத்திகம்  பேசாதிருக்கட்டும்.
டாஸ்மாக்கில் வந்துசெல்வோரிடத்து
நித்தமும் ஐந்து ரூபாய்  கேட்டு
நச்சரிக்கும் அவனுக்கு நாளை பொதுவிடுமுறையென
யாரேனும் சொல்லிவிடுங்களேன்.
தேநீர் இரவல் கேட்டு நிற்கும் மனம் பிறழ்ந்தவனுக்கு
அவனோடு எனக்கும் சேர்த்து ஒன் பை டூ சொல்லுகையில்
நேற்றைய பாக்கிக்கு மாஸ்டர் முறைக்காதிருக்கட்டும்
என்பதுவரை 
ஒரு நாளை
இத்தனை வன்மங்களோடு
கடத்தும் எனக்கு எறும்பின் புஜங்கள்தான்.
என்ன ஒன்று
மற்றவர்களுக்காக எனது பிரார்த்தனைகள்
பிரார்த்தனைகளாகவே இருக்கும்போது
எனக்கான பிரார்த்தனைகள் மட்டும்
பினாத்தல்களாக முடிவதில் வியப்பில்லைதான்.
...................................................

.... பிரயோசனமற்றவனின் இரவுக்கும் இரவென்றுதான் பெயர் ....


. துரை


0

சரியாக மணி 11:20 இருக்கும்
நகரின் கூர்க்காக்கள் எல்லோரும் ஒன்று
கூடி இசைக்கிறார்கள்
நகரின் நாய்கள் எல்லாம் 
கைத்தட்ட தொடங்கின
வழி தெரியாத மூதாட்டி ஒருத்தி
அவ்வீதிக்குள் எங்கிருந்தோ குதிக்கிறாள்
எங்கிருந்தோ குதிக்கிறாள் எனும் போதே
உங்கள் கற்பனை 
பெரிதாக விரியத்தொடங்கலாம்
அப்படியெல்லாம் விரிய வேண்டாம்
இந்நேரத்தில் மீந்த சொற்களை கொண்டு
அவ்விரவின் மூதாட்டி பற்றி விவரிக்க
என்னிடம் ஏதுமில்லை
ஆனால் அந்த நாய்களை பற்றி சொல்ல
வார்த்தைகள் இருக்கிறது

ஆமாம்
அவைகள் மியாவ் மியாவ்வென்று
கைத்தட்டுகின்றன 
நீங்கள் மியாவ் மியாவ்வென
கைத்தட்டுகிற நாய்களை
பார்த்திருக்கிறீர்களா 
பார்த்ததில்லையெனில் வாருங்கள்
ஆனால் இரவு 12மணிக்கு மேல்
வந்துவிடாதீர்கள் அவ்வீதியின் சைரன்
வைத்த பெரிய பெரிய
காண்டாமிருகங்கள் பாறைகளை
மென்றபடியே ஸ்கார்ட் குடிக்கும் நேரமது 
மீறி வந்தால் நீங்கள் 
பணியாளனாக வேண்டி வரும்

"என்னது இன்னொரு டம்ளரா 
இந்தா காண்டாமிருகமே இதுவொரு எளிய ஏமாளியின் ரத்தம் குடி குடி"..

00

வெகு சன்னமான குரலில்
பாடிக்கொண்டிருந்தார்கள்
விரிந்த வகுளம் பூவினை மாதிரி
உடையணிந்த சிறுமியொருத்தி
"மடையா" என்று யாரையோ 
உரக்க கத்துகிறாள் 
திடுக்கிற்ற வெகு சன்னமான குரல்கள்
கொஞ்சம் சப்தம் ஏற்றுகின்றன
மடையர்கள்தான் ஒருவேளை
பாடுகிறார்களா என்கிற கேள்வி
எனக்குள் எழுகிறது
வெகு வெகு சன்னமான குரலினாலே
இன்னும் நிறைய கேட்டுக்கொள்கிறேன்
மடையர்கள்தான் இசைக்கிறார்களோ
மடையர்கள்தான் எழுதுவார்களோ
மடையர்கள்தான் ஆள்கிறார்களோ
பின்னிருக்கையில் இருந்த ஒருவர் 
தவறுதலாக கால் பட்டதற்கு மன்னிப்பு கேட்டார்
மடையர்கள்தான் மன்னிப்பு கேட்பார்களோ
மடையர்களின் மேல்தான் கால் படுமோ.

000நகரின் வெகு நிசப்தமான சப்வே ஒன்றை
கடக்கையில்தான் அது நடந்தது
உங்களுக்கு இது மாதிரி நடப்பதில் அத்தனை பெரிய ஆச்சரியமொன்றும்
இல்லையென்றார்கள்

ஆமாம் 
அப்போதுதான் நான் எனது 
இடதுகால் கட்டை விரலால் 
எனது இடதுகாலின் கட்டைவிரலை தொட்டேன்.000


 பழையசோறு
இந்தமுறை இது போதும்
அடுத்தமுறை அடுக்குமாடி
அதுவரை இந்த வீடு
இல்லை!
அந்தக்கூடு தொங்கணும்!

உனக்குள் இருக்கும்
ஒளிவட்டம் போடும்
எனக்கும் தெரிந்த
அந்த
குருவி எங்கே திருமதி!

மேகங்கள் கருக்கொள்ளும் தாது
உன்னிடம் உள்ளது.
வெறுமனே குதிரை ஏறினால்
தவளை முட்டைகள்
தண்ணீரில் மிதக்கும்!

அதெல்லாம் உனக்கெதற்கு
யாருக்கு என்ன தெரியாது?
மாமிசம் சாப்பிட்டு நாளாச்சு
மழை நின்ற தூரலில்
செம்பூத்தை துரத்து!

கனத்தை யார் கண்டது
கமிசார்கள் கட்டளை
சுமந்தோம்!
கழுத்து இறுகியதும் தெரிந்தது
கழுதைக்கு கால் முளைத்தது!

வேகத்தை இறகுகளில் சேமித்து
காத்திரு - எதிர்ப்படும் முகங்கள்
பாய்ந்து விடலாம்
தப்பினால்
பறந்து விடலாம்!

-முத்துப் பொருநன்

000

ஒரு மாத இடைவெளிக்குப் பின்
மறுபடியும் இங்கு!
அந்த திருப்பத்தில் அடிக்கடி
நிலைக்கும் என் பார்வை!
சுடிதார் மாட்டிய லிப்ஸ்டிக்காரி
கண்ணாடிக்காரனுடன் உராய்ந்து போவாள்!
கார்டு ஷாப்பிலிருந்து இரண்டு மகளிர்
கல்லூரிச் சிரிப்பை ஒலிபரப்பி வருவர்.
வரலியாடா? எங்கூர் சுப்பு
பதில் தேவையின்றிப் போவான்.
டி.எண். 339681 அசுர வேகத்தில் கடந்து போகும்!
குணா போஸ்டரில் கமல் கேனையாய் சிரிப்பார்!
இண்டிமேட்டை விநியோகித்துப் போவாள்
முக்காடு போட்ட முஸ்லீம் பெண்.
திருப்பத்தில் திரும்பியவளும்
நிற்காமல் போனாள் 32-ல் வேறொரு
நெட்டைப் பையனோடு! - எனக்கான
பஸ் வந்ததும் இடத்தை காலி செய்யணும்!

-ஈங்கூர் ரகு

000

தண்ணி போட்டாவணும்

ஈங்கூர் ரகு

ச்சே! தண்ணி போட்டாகணுமய்யா! வேற வழியே தெரியல, இவ இப்படி செய்வான்னு நா நெனைக்கவே இல்ல. நல்லா பேசீட்டிருந்த இவளுக்கு திடீருன்னு என்ன நோக்காடு வந்திடுச்சு? சுத்தக் கிறுக்கியா இருப்பாளாட்ட இருக்குது. சிவனேன்னு கெடந்த மனசு இப்ப தாம்தூம்னுல்ல குதிக்குது! தண்ணி போட்டாகணுமய்யா!

பாக்கெட்டை துளாவிப் பார்த்தான். பதினைந்து பைசாவும் நாலு பீடிகளும் தட்டுப்பட்டது. தேறாதே! சித்தப்பாவோட வெப்பாட்டி கிட்ட கேட்டுப்பாக்க வேண்டிது தான்

குடுக்காட்டி வெளிய பரப்பி உட்டுருவேன்னு மெரட்ட வேண்டீது தான்.
அட நா இவகிட்ட ஒரு தப்பும் செய்யலியே! ஆனா இவ இப்படி செஞ்சிட்டா! தண்ணி அடிக்கலைன்னா இன்னிக்கி தூக்கமே வராதுய்யா!

பெட்டிக்கடை காடா விளக்கில் பீடி ஒன்றை பற்ற வைத்தபடி நடந்தான். எதிரே வந்த வழிப்போக்கனுக்கு தீ கொடுத்தான். அவனும் புகைத்துப் போனான்.

இவள ரெண்டு அறை வுட்டிருக்கணும். ஏமாந்து போச்சு. தண்ணி போட்டதீம் நேராப் போயி மொத்தீர வேண்டீது தான். என்னெப்பத்தி இவுளுக்கு முழுசாத் தெரியாது. இன்னிக்கி காட்டீரோணும். நா யாருகிட்டயும் இவ்ளோ ஒழுக்கமா பழகினதே கெடையாது. இவ என்னடான்னா எனக்கே டேக்கா குடுக்கப் பாக்றா. எல்லாம் தண்ணிக்கி ஏற்பாடு பண்ணீட்டு அப்புறம் வெச்சிக்கலாம். ச்சே! பீடியுஞ் செரியில்லெ. பூராங் கொழலு. மயிராட்ட இருக்குது. எல்லாம் இவளால தான். இன்னிக்கி நேரமே செரியில்ல.
சித்தப்பா வெப்பாட்டி வீடு வந்து விட்டது. கதவு சாத்தி இருக்கவே இவன் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டான். உள்ளே இருந்து கலைஞர் பேச்சு டேப்ரிக்கார்டரிலிருந்து கேட்டது. எதேச்சையாக வெளிவந்த கண்ணம்மா திண்ணையில் உட்கார்ந்திருக்கும் இவனைப் பார்த்தாள்.

த்தேஏ வெளிய ஒக்காந்து கெடக்கே? உள்ளார வாரது!

சித்தப்பன் செருப்பை இவன் எதேச்சையாய் வாசல்படிக்கருகில் பார்த்தான்.

இல்ல நா அப்புறமா வாரன்லுங்கியை மடித்துக் கட்டியபடி சாலையில் நடக்க ஆரம்பித்தான்.

000

தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள்

சுமாவுக்கு தொந்தி ரொம்ப அழகு
பெண்ணுக்கே தொந்தி இல்லேன்னாலும் அழகில்லே!
லேசா சரிஞ்சு மெது மெதுன்னு அடி வயிறு
இல்லாத பொண்ணு பேரழகியானாகூட
எனக்கு லாயக்கில்ல! - தொந்திமேல
தாச்சுக்கிட்டா ஒலகமே மறஞ்சு இருட்டாகீரும்.
ஹா... பெண் தொந்தி!

00

கணக்கு பார்ப்பேன்
உன்னையும் அவளையும் ஏன் எவளையும்
கணக்கு பார்ப்பேண்டி பொண்ணே! - எல்லாரும்
கணக்குத்தான் பண்றா.
நானோ கணக்கு தானே பண்றேன்.
இதுல என்ன இருக்காம்? ஆனா இதுக்குள்ள
கணக்கு இருக்கு.

000

நடுகல் ஐப்பசி, மாசி 91, 92 களின் பிரதிகளிலிருந்து.நெகிழன் கவிதைகள்  நான்கு
1.
எப்போதெல்லாம் நீ அசந்து துயில்கிறாயோ
அப்போதெல்லாம்
உனக்கொரு சொப்பனம் வருகிறது.
அதில் நீ,
மஹாராஜா ரெடிமேட்ஸில்  தள்ளுபடி விலையில் வாங்கிய
மஹா ராணி உடை தரித்து வலம் வருகிறாய்.
அதில் நானும் ஒரு நாயாக  வருகிறேன். எனினும்
உன்னைப் போலல்லாது நிர்வாணமாய்.
(பின்னே இது மிகுந்த வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.
எந்த ஊரிலாவது நாய்க்கு ஆடை அணிவித்து
அழகு பார்ப்பார்களா என்ன. அதிலும் ஒரு மஹாராணியார்).
ஒருநாள் நீ சொப்பனத்திலும் துயிலப் பழகிக்கொண்டாய்.
பிறிதொரு நாளில்
உன் புருவங்கள் உனக்கே தெரியாமல் மெல்ல ஊர்ந்து
சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தன.
சுவற்றிலிருந்து இரண்டு மரவட்டைகள் கீழிறங்கி
உன் கண்களுக்கு மேல் அமைந்துகொண்டன.
நான் அவற்றைப் பார்த்ததும் பதறிப்போய், குரைத்தேன்
லொள் லொள்என சத்தமாக.
மூடிய கண்களை ரொவ கூட பிளக்காமல்
கைக்கு அகப்பட்ட
ஒரு பிரம்பை எடுத்து என் பொச்சியில் விளாசினாய்.
நான் வலி பொறுக்காமல் விழுந்தடித்து ஓடினேன்.
கொஞ்ச தூரத்துக்கு அப்பால் நின்று குரைத்தேன்.
ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக
நானொரு நாயென்பதையும் மறந்துவிட்டு
அடபோடீ பீத்தக் கண்டாரஓழி" என்று குரைத்தேன்.
ஆஹா எவ்வளவு....நிம்ம்ம்ம்...மதி


2.

உதட்டை பற்களால் கடித்தபடி சின்னதாக அழுத்தம் கொடுத்து
வேப்பம் பழத்தை பிதுக்கினாள்.
சூழ்ந்திருந்த
எல்லா பசங்களும் வாயை திறந்துகொண்டு வெறித்தனர்.
கொட்டை
மெல்ல..மெல்ல வெளிவர ஆரம்பித்தது.
ஒரு பையன்
மற்ற பையன்களை பார்த்தபடி சொன்னான்
"எல்லாம் நிம்மதியா போங்க. சுகப் பிரசவம்தான்."


3.
சட்டைப் பட்டையில்
பொத்தானை நுழைக்கும் பொருட்டு
அமைக்கப்பட்டிருக்கின்றன
ஒன்றன்கீழொன்றாக
நூலிழைகளால் நெய்யப்பட்ட தூய யோனிகள்.
அவை
சுருங்குவதுமில்லை
விரிவதுமில்லை
வெறுமனே விரிந்து கிடக்கின்றன, அவ்வளவே.


4.
தொந்தியுடைய ஒரு பருமனான மனிதர்
வயிறு முட்ட சாப்பிட்டதின் விளைவாக
சட்டைப் பித்தானொன்று பிய்த்துக்கொண்டு
தரையில் உருண்டோடிய சம்பவம் பற்றி கேள்வியுற்றபோது
எனையொரு பெரும் துக்கம் பீடித்தது.
அச்சமயம் என்னவெலாம் நிகழ்ந்திருக்கும்
என்று நினைத்துப்பார்த்ததுதான்
இதற்கு முக்கியக் காரணம்.
நான் நினைத்தேன், விரைந்துகொண்டிருந்த
ஒரு கனரக வாகனத்தின் சக்கரம் கழன்று
மனிதர்களை நோக்கிப் பாய்ந்தோடுவதுபோல
தரையில் மேய்ந்துகொண்டிருந்த எறும்புகளை
அது  குறிவைத்துத் தாக்கியிருக்கலாம்
மேலும்
எறும்புகள் யாவும் ஒருசேர அலறிக்கொண்டே
நசுங்கி..நசுங்கி.. செத்திருக்கலாம்.
எறும்பின் கொடூர மரணத்தை
யார்தான் சட்டை செய்வார்கள்.
அப்படி சட்டை செய்ய அங்கொரு கவிஞன்
நிச்சயம் இருக்கவேண்டும் என்பது விதி.

000வாஸ்தோ
குதிரை வாலிக்கொண்டைப் பெண்
சிரிக்க மறந்துப் போயிருந்த கிருஸ்து
சிரித்தே மயக்கிய மாயக் கண்ணன்
மூச்சிறைக்க மலையேறிய எர்னஸ்டோ
விட்டெரிந்த ஹவானா சுருட்டின் எச்சம்
ஐரோப்பிய வீதிகளில் படுத்துறங்கிய மேற்கின் காந்தி
சட்டையின்றி வீதி நடந்து
விதிமாற்றிய வட்டக் கண்ணாடிக் கிழவன்
குங்குமப்பொட்டும் முறுக்கு மீசையுமாய் களம் கண்ட இளைஞன்
சுருட்டின் காரநெடி யோனி உணர
உள் தொடையில் சுருட்டை உருட்டும் கன்னிப்பெண்
எழுத மறுத்து உதறிய பேனாவின் நுனியில் தெறித்த மசி
காச கபத்தின் மீது தன் ரசாயன மாற்றத்தை நிகழ்த்த
தோட்டாக்களுக்கு இலக்காகும் பேனா முனைகள்
ஆழத்தோண்டிய குழிக்குள் ஆயிரம் பேனா முனைகள்
ஒன்றிரண்டு முளைக்கும் உக்கிரமாய்
லட்ச அணுக்களில் ஒன்றே இலக்கை அடையும்
மற்றனைத்தும் உயிர் நீக்கும் என்பது
பௌதீக விதி
ஏகாதிபத்யம் அமெரிக்கா
கூபா புரட்சி
சீன ரஷ்யாக்கள் பொதுவுடைமை
ஜப்பான் ஜெர்மனிகள் தொழில் கட்டுமானம்
என் தாய்நாட்டில்
காற்று வாங்கத் தடையாய்
கடற்கரையெங்கும் காக்கைகளின் கூட்டம்
உயிர்கூடதிர உரக்க பேசி முடித்த வெள்ளுடைக்கு
கல்லெறிய காக்கைகள் பறக்குமென
குளிர்பதன அறையில் இத்தாலிய சாம்பல் கிண்ணத்தில்
அணைக்கப் பட்ட சுருட்டின் நெடிந்துயர்ந்த நெடி
நாற்றமிகுந்த வியர்வையும்
நாற்றம் விரட்டும் திரவியமும்
உடலில் பூசி ஒன்றினைந்தக் கூட்டத்தின் நடுவில்
உள்தொடையில் புகையிலை நாற்றமெடுக்க
துப்பாக்கி வாங்கலியோ துப்பாக்கியென
கூவியபடியே சென்றாள்
குதிரைவாலிக் கொண்டைப் பெண்.


000
த.அரவிந்தன்  கவிதைகள்

கும்பகோணம் டிகிரி காபி


கும்பகோணம் டிகிரி காபி
அன்புடன் அழைக்காத
சாலைவழி பயணங்கள் இல்லை
தூக்கம், களைப்புப் போக்க
சிறுநீர் கழிக்க
புது மண்ணில் கால்கள் பரவசம் கொள்ள
திருநீறு பூசி குங்குமமிட்ட
பித்தளை பாய்லர் ஈர்க்க என்று
காரை நிறுத்து
ஐம்பது கிலோ மீட்டருக்கு
ஒரு முறை கடைக்குள் நுழைகிறேன்
கடைக்காரர்களும் காபி போட
நீட் நுழைவுத் தேர்வு எழுதி
ஐந்து ஆண்டுகள் 
கல்லூரியில் படித்தவர்கள்போல்தான்
ஆற்றிக் கொடுக்கிறார்கள்
குடித்தால்
கும்பகோணத்தையும் காணும்
டிகிரியையும் காணும்
ஒரு கடைக்காரனிடம் கேட்டால்,
"தண்ணீர் தளும்புவதுபோல
கும்பகோணத்திலிருந்து வரும் வழியில்
எல்லாம் கொஞ்சம் சிந்தியிருக்கும் ஸார்'' என்றான்
காரை நேராக கும்பகோணத்துக்கே விட்டு
காபி போடுவதில் 
மேல்படிப்பு படித்தவனாகத்
தேடிக் குடித்தால் அங்கும் காணும்
"உள்ளூரில் மதிப்பு இல்லாததால்
கும்பகோணமும் டிகிரியும்
கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து
அங்கங்கே போய்விட்டதாக''
வருத்தப்பட்டது மேல்படிப்பு
அசல் கும்பகோணம் டிகிரி காபியை ருசிக்காமல்
நாக்கைச் சாகடிக்க மாட்டேன்
அம்மாவிடம் கேட்டால்
சென்னை டிகிரி காபி  வேண்டுமானால்
போட்டுத் தருவதாகச் சொல்கிறாள்
வரலாற்று ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டேன்
"இந்தியாவைவிட்டு
ஆங்கிலேயர்கள் போகும்போது
கும்பகோணம் டிகிரி காபி போடுவதில்
தேர்ந்தவர்களை எல்லாம் கூடவே
கப்பலில் ஏற்றி சென்றுவிட்டதாகச்'' சொல்கிறார்
அடுத்த வாரம் லண்டன் போக வேண்டும். 
கடவுள் காத்திருக்கிறார்


இப்போதும் கோயில் கட்டி முடிக்கப்படவில்லை
திருக் குடிபுக வந்தவருக்கு ஏமாற்றம், கோபம்
நல்ல நாளுக்காகச் சில காலம்
சிலைக்குத் தோதான கரும்பாறை தேடச் சில காலம்
மனை வழக்கால் சில காலம்
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததால் சில காலம்
வெள்ளத்தால் சில காலம்
இப்போது 
திருக்கொத்தனார் டெங்கு காய்ச்சலில் சுருண்டதால் தாமதம்
பொசுக்கும் கோபத்தைத் திருமேஸ்திரி மீது ஏற்றிவிட்டு
வந்தவர் வெடுக்கென ஏறி
மேகத்து நடைபாதையில் படுத்து
கீழ்லோகத்தை வெறிக்கிறார்
திருக் குடிபுக வேறு அழைப்பும் வரலாம்.000

ஞா.தியாகராஜன் கவிதைகள்

1.

மனைவியாய் தானே ஆவாய்
இந்திய சராசரி இளைஞனை வேறெப்படி சிறப்பாய் வதைக்க முடியும்
இதெல்லாம் எனக்கும் உவப்பாயில்லை
இரவில் நானும் தூங்க வேண்டும் உன்னைவிட இனிமையான கனவுகள் கண்டபடி
இனிமையானதென நான் நம்புவதை கண்டபடி

கையருகிலிருந்தும் தவறிய மூன்றாவது முலைகள் உன்னுடையவை
ஏதோ ஒரு புணர்வில் அவனை அவனாவே நேசிப்பாய்தானே
என் நினைவொழிந்து

நண்பனும் காதலிப்பவளாய் இருந்ததற்கு
எதன்மீது ஆத்திரங்கொள்வது
எனக்குச் சொல்லப்பட்டவை இவ்வாறில்லை
நிற்குமிடத்திலிருந்து உன்னையடையலாம்
கடக்க முடியாத தூரங்களுடன்

ஒரு வரி தத்துவங்கள் எல்லா சமயமும் உதவாது

அனுபவித்தவன் என்ற அடிப்படையில்
இந்த உண்மைக்கு கட்டிங்கூறுகிறேன்
புனைவைவிட மோசமாயுள்ளது
உன்னை காதலிப்பதென்பது.

2.

உங்களுக்கில்லை
அதற்கு நானென்ன செய்வது
வாழ்வென சொல்லப்படுவதின் காலை
நீங்களுமொரு நாள் நக்கதானே
போகிறீர்
புறத்திலும் நாட்டமின்றி
உள்ளேயும் காலியாய்
விதியென கழியுமிந்த நாளில்
நீங்கள் சொல்வதைபோல
சப்புகொட்டி சுவைக்க ஒன்னுமில்லை
செயலற்றிருத்தல் செம்மையாயுள்ளது
உங்கள் அளவீட்டின்படி மாபாதக
செயலை செய்துகொண்டுள்ளேன்
தெரிந்தபின் ஏன் கூவ வேண்டும் ஏதோ ஒரு உதவிக்காக
சாகடிக்கப்படவும் மாட்டோம்
தன் போக்கில் செல்லவும் அனுமதியில்லை
இருந்தால்தானே சொல்ல உண்மையென எதையாவது


3.

ரொம்ப தாமதமாகதான்
உங்களுக்கே அது தெரியும்படி செய்வேன்
உங்களால் எதுவும் செய்யமுடியாத நிலையில் நிறுத்தி சொல்லப்படும்
நான் இப்போது உயிரோடில்லையென்பது

கழுத்தை அறுப்பவருக்கு
என்றும் நன்றியுடையவனாவேன்
முன் துருத்தி தெரியும் சங்கில்
ஒரே ஒரு கோடு
கத்தி,பிளேடு உங்கள் இசைவுக்கேற்றபடி

இனியிந்த கழிவிரக்க
தலைச்சுமை வேண்டாம்
நம்மை வாழச்சொல்லிவிட்டு
அவர்கள் காது மந்தம் போலிருப்பார்

000


சூ.சிவராமன் கவிதைகள்

இருள் சூழ் வாழ்வு

நாயுருவி குச்சிகளால் துலக்குபவரின் பற்கள்
பகலைப்போல பிரகாசிக்கின்றன
விடிகாலை மிதிவண்டியில் அமர்ந்திருக்கும் மூடைகள்
பெல்லாரி வெங்காயமும் மரவல்லிக் கிழங்குகளுமாய் வியாபாரத்திற்கு  போகும்
தகரமும் ஞெகிழிகளும் நிரம்பிய மூடைகளோடு திரும்புமவர்
தரம்பிரித்து மறுசுழற்சிக்கனுப்பும்பொருட்டான மெனக்கெடல்களில் மூழ்குகிறார்
சுழன்றுகொண்டிருக்கிறது சின்னஞ்சிறு வாழ்வு
உள்சுழலும் சின்னஞ்சிறு பூமிப்பந்தென
ஆடிக்காற்றில் எதிர்நீந்தும் மிதிவண்டியின் வாழ்க்கையது
கொல்லைப்புறத்தே நெல்லிக்கட்டைகள் புதைபட்ட கிணற்றிலிருந்து
குடும்பத்திற்கான தாகத்தின் கோப்பைகளை நிரப்புகிறார்
பளிங்கென ஊற்று இருள்பரவி தன்கண்களை மூடித் திறந்து இறுதிப்போராட்டத்தை எட்டுகிறது சமீபமாய்
குடிசையின் கீழோடும் கெயில்குழாய்கள்
சூழ்ந்திருக்கும் அனல்மின் நிலையங்கள்
நிம்மதியின் சமதளத்தில் விரிசல்கள்
உறக்கத்தின் மணித்துளிகள் சரிவுகண்டுள்ளன
இரவுதோறும் கொச்சைவார்த்தைகளால் சினத்தை வடியவிடுகிறார்
பிறந்தமண் கைவிட்டுப்போவதைப்பற்றிய அவநம்பிக்கை அரும்பத்துவங்கிய நாட்களவை
போய்த்திரும்பி போய்த்திரும்பி வந்த பாதை
நிலக்கரித்துகள்களை குடியேற்றி வைத்திருக்கிறது நுரையீரலில்
மூதாதைகள் கையளித்த கிணற்றுநீர்வழியே
பருகுவதோ சிறுநீரகத்தை குடிக்கும் வேதிக்கரைசல்

அப்பா கிடத்தப்பட்டிருக்கிறார் நிலக்கரித் துண்டென
அணிவகுக்கின்றன முன்னும் பின்னுமாய் நிலக்கரி லாரிகள்
புன்னகை மறைந்துவிட்டது
கண்கள் மூடிக்கொண்டுவிட்டன இருள்அப்பிக்கிடக்கும் ஊரில்..
கெட்டகாலம் பொறக்குதென அறிவிக்க
ஒரு குடுகுடுப்பைக்காரனும் இல்லை என்பதே
இந்நிலத்தின் மேல் கவியும் பெருந்துயரம்.
                         முன் தயாரிப்புகள்கொசுக்களால் தூக்கமிழந்த கொடும்இரவுகளை
கடந்து வந்திருக்கிற குடிமகன் நான்.
டினோசர்கள் அழிந்துவிட்ட வரலாற்றைப் படித்துக்கொண்டிருக்கையில் தொடையைக் கிள்ளி நகையாடுகிறது.
கோடுகள் சுமந்த கொசு.
கடித்த இடத்தை கண்ணுற்று உறங்காது புரள்வதொரு துயரம்.
பச்சிளங்குழந்தையை நசுக்கிய கொசுவோ இது?
கொசுவலைக்குள் குடும்பம் நடத்தவா நம் கண்டுபிடிப்புக்கள்?
தேம்பிக் குமைகிறாள்.
மருத்துவம் பயில
மனப்பால் குடிக்கும் குடிசைவாசி ஒருத்தி.
தேங்காய்ச் சிரட்டைகள் வறிய மண்ணின் திருவோடுகள்
அல்லது
வேளாண்மக்கள் ஒண்டி நிற்கும் நீரற்ற நிலம்.
ஞெகிழிக் குவளைகளும்,பைகளும் நிரம்பி வழிகின்ற குளங்கள்.
தலைப்பிரட்டைகளறியாத தலைமுறையின் மேல்
பெய்த மழையெங்கும் நெளிகின்றன கொசுப் புழுக்கள்.
அனிதாக்கள் இறக்காமலிருந்தால் இதற்கொரு மருந்து கிடைக்கலாம்.
அல்லது
அனிதாக்களை கொல்ல
நாம் இணைந்தொரு மருந்தை தயாரிக்கலாம்.000


 கார்த்திகேயன் மாகா கவிதைநனவின் குவிமையத்தில் அமிழ்ந்து கிடந்த உன் பெயர்
ஒரு ஓடையாய் வற்றிப்போயிருந்தது 
ஆடுகள் சூட்டை ஊதி ஊதிச் சருகுகளை
இம் மத்தியானத்தில் மேய்ந்து கொண்டிருந்தது

காய்ந்த தும்பைகள் வண்ணத்துப்பூச்சியின்
உணர்கொம்புகளை ஸ்பரிசித்துக் கொண்டிருந்த
கனவை எட்டிப் பார்த்த என் திருட்டுத்தனத்தில்
மேல் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருந்தன ஓணான்கள்

வேப்பம் பூக்கள் ஆசிர்வதிக்கின்ற முதுவேனில்
பொழுதில் பாடல்களை வயலின் நரம்புகளை
அதிர அதிர பாடிக் கொண்டிருப்பாய்

உறுமியின் பொருமலில் குளிர் காய்ந்த எனது
இரவை ஒழுகவிட்டுக் கொண்டிருந்தது உன் மீட்டல்

மது நெடி வீசும் தந்தையின் ப்ரியத்தை
மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலுக்கு நிகரானது என்ற போது
மறுநாள் செத்துப் போகச் செய்யும் தைரியத்தை வழங்கும் உன் விசுவாசம்

தேவன் சொல்லாமல் இருந்தாலும் கூட நீ கல்வீசத் தெரியாதவன் என்று சொல்லிவிட்டு யார் கண்ணிற்கும் படாமல் இருக்கிறாய்

இரத்தத் திட்டுகளுடன் காலடியில் கிடக்கும் கற்களை
எத்தனை நாளுக்குத்தான் பத்திரப்படுத்துவேன் என் மரியே .


000

நந்தாகுமாரன் கவிதைகள்
கவிதையின் தந்திரம்


மேலும்
நீர் மேல் நடக்கும் வித்தை
இந்தக் கவிதைக்குத் தெரியும்
எனவே
மொழியின் அசாதாரணத்திலிருந்து
ரத்தத்தின் கிளை நதிகள்
சக்கரத்தின் காலமாக
எல்லா திசைகளிலும் ஓடுகின்றன
நினைவுகளை இப்பொழுது யாரும்
மூளையில் சேமிப்பதில்லை
எனச் சொன்னதும்
இன்னுமா வாழ்கிறது சொல்
எனக் கேட்கிறது
நில்என்றாலும் நகரும் ஆறு
தள்ளி வைத்த தாகத்தின் குரலோ
மக்கிப் போன மஹாவாழ்வினை
ஒரு ஒளிப்படத்திற்குள் ஒளித்து வைக்கிறது
இது
கவிதை செத்து கனவும் செத்து
காகிதம் எரியும் காலம்
அன்றோ
இதுவும் கூட
பழுத்து ப் பாழாய்ப் போச்சு
தானே

000
காமம் நழுவிக் காதலில் விழுந்ததைப் போல

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய குறி
உடலுக்கு அந்நியமாச்சு
இது புணர்பரவசம்
வெறுமை தலை கவிழும் அதில்
கையிருப்பைத் தொலைத்தேன்
வழியும் காமத்தில்
எது என்னுடையது
எது உன்னுடையது

(கவிஞர் சுகுமாரனின் 'கையில் அள்ளிய நீர்' எனும் கவிதையின் வடிவ நினைவிற்கு)

இன்று உனக்கு நான் தான் எனச் சிணுங்கும் இக்கவிதை

இன்று உனக்கு
மழையில் நனைய வேண்டும்
என எழுதியிருக்கிறது
இக்கவிதையில்
இன்று உனக்கு
போதை தரும் இம்மழையைச்
சாக்கடையில் கவிழ்க்க வேண்டும்
என எழுதியிருக்கிறது
இக்கவிதையில்
இன்று உனக்கு
மழை எனத் தோற்றம் தரும் நீர்
வெள்ளெமெனச் சாய்க்கிறது
இக்கவிதையை
என் உடல் ஏறும்
உன் குளிர்க் குழந்தை
தட்டி விட்ட தாலாட்டாய்
சிணுங்குகிறது
இக்கவிதையில்

வெறுப்பின் சாக்கடையில் அன்பின் சகதி

கருப்பு எனும் நிறத்தின் மேலே
வெறுப்பு கொண்டு கலகம் செய்யும்
மனிதர் வாழ்கிறார்
நந்தலாலா

காணாத மரங்களெல்லாம்
கட்டிடங்களின் தொட்டிகளிலே
காப்பாற்றப்படுவது தெரியுமா
நந்தலாலா

திணிக்கப்படும் மொழிகளெல்லாம்
தின்னக் கேட்பது
தீந்தமிழ் மட்டுமா
நந்தலாலா

தீக்குள் உடலை வைத்து
எம்மைத் தழுவும் துன்பம்
தோன்றவில்லையோ உமக்கு இன்னும்
நந்தலாலா


அகதி

சட்டென்று கார் கண்ணாடி திறந்து
வெளியேற்றிய கொசு ஒன்று
திகைத்துத் திணறி
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறது
நெடுஞ்சாலையின் நெரிசலில்


 000

குமார் கந்தசாமி

ஆயிரம் ஆண்டு
தாயவள் நான்.

உங்களின் எழுபது ஆண்டு
அதிகாரத்தில்  தொலைந்த என்  
ஆன்மா.
என் தலைக்கு மட்டுமே பாயும் இரத்தம்.
உடலை நிர்வாணமாக்கி விட்டீர்கள்.

உடலில் ஆலைகளின் நச்சுக் கலக்கின்றன.

புண்களை மீறி வீச்சம் எடுக்கும்  தோல்.
என் கருப்பையை சுரண்டிய உங்களை
கண்ணீர் சிந்தி்  வேண்டினேன்.

மகவுகளுக்கு தகுதியற்றது என் உடல்.
கரங்களைத் துண்டாக்கி
செயற்கை குழாய்களை பொருத்தின உமது அதிகாரம்.

பசுமை இழந்த என் உடலில்
வெட்டுண்ட வடுக்கள்.

இறுதியாக என் கால்களில்
தீயை மூட்டி இருக்கிறீர்கள்.
உடல் தகித்து இருக்கிறது.
எச்சிலையும் உறுஞ்சும்
யந்திர பிடிப்பில்
நா வறண்ட சொற்கள் அற்று
மௌனமாக.
தலை மட்டும் குளிர்மையில்.
என் சீரற்ற உடலில் நோய் கண்டு
தகிக்கிறேன்.
வறண்ட என் கண்களை பாருங்கள்.
உணவிட்ட எனது கரங்களில் ஒளித்து வைத்து இருக்கிறேன்.
அனைவருக்குமான வாய்க்கரிசியை.
ஒருபோதும் வர இயலா மரணத்தை நோக்கி .


000

I love you

பைக்கை அங்கேயிங்கே முறுக்கிக் கொண்டு சுற்றாதே, எனக்கு பயமாக இருக்கிறது ஏன்னா
i love you
அந்த நடிகனின் முகபாவனையில் நீ தெரிகிறாய், உன்னைப் பார்க்க முடியாது போகும் தனிமையில் அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் தடை சொல்லாதே ப்ளீஸ்.. ஏன்னா
i love you
அந்த நடிகையை மட்டுமல்ல உன்னைக் கடந்து செல்லும் எந்தவொரு பெண்ணையும் ரசிக்காதே. எனக்கு பிடிக்கவில்லை ஏன்னா
i love you
உன்னோடு சுற்றும் அந்த பையனின் முகம் எனக்கு பிடிக்கவில்லை. அவனோடு இனி சுற்றாதே.. ஏன்னா
i love you
உன்னோடு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். தயவுசெய்து சிகரெட் பிடிக்காதே.. ஏன்னா
i love you
குடியால் பல குடும்பங்கள் அழிந்த கதை உண்டு. அதே குடியால் நம் குடும்பமும் அழிந்திட கூடாது அதனால் குடியை விட்டுவிடு.. ஏன்னா
i love you
ஜீன்ஸும் டீ ஷர்ட்டுமாக வலம் வராதே, பார்ப்பவர்கள் மதிப்பது போல ஃபார்மலில் சுற்று. ஏன்னா
i love you
என்ன தாடியும் முடியும் வளர்க்க போகிறாயா..? ந்ந்ந்நோ.. என் சுற்றமும் நட்பும் உன்னைப் பற்றி என்ன நினைக்கும். அந்த ஆசையை துறந்திடு. ஏன்னா
i love you
என் தோழிகளோடு உனக்கென்ன பேச்சு..? இனி அவர்களே அழைத்தாலும் அவர்களோடு பேசாதே.. ஏன்னா
i love you
இரவில் விழித்திருந்து ஏன் வேலை பார்க்கிறாய்? வேலையை ராஜினாமா செய்.. ஏன்னா
i love you
என் அழைப்பிற்கு செவிமடுக்க ஏன் இத்தனை தாமதம்..? பைக் ஓட்டிக் கொண்டிருந்தாயா..! அதை அலைபேசியை எடுத்து ஒரு வார்த்தை சொல்லவேண்டியது தானே..?!?!? பயந்தே போய்விட்டேன்.. ஏன்னா
i love you
...
i love you
...
i love you
...
i love you
ஒரு நற்காலைப் பொழுதினில் கிழக்கும் முகமாய் அவளை நிற்க சொன்னேன்
நின்றாள்
ஐம்புலனும் மண் தொட சாஷ்டாங்கமாய் அவள் கால் தொழுதேன்
இரண்டடி பின் சென்று தோள் தொட்டு தூக்கினாள்
"உன் சரிபாதியாய் வாழவே விரும்பினேன். உனக்கு அடிமையாய் சேவகம் புரிய அல்ல..
ஏன்னா i love you"
திரும்பி நடந்தேன்
திரும்பி பார்க்கமலேயே நடந்தேன்
ஏன்னா i love her
-வாஸ்தோ
000


No comments:

Post a Comment