Wednesday 3 July 2019

நடுகல் 2 நெகிழன் கதை























விளையாட்டு
நெகிழன்

இப்போதெல்லாம் ஹொம்மெ, அவனது அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறான். வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச்சென்றாலும், எதையோ சிந்தித்தபடி, மௌனத்திலேயே ஆழ்ந்திருக்கிறான். தன் மகனின் இச்செய்கை   ஜார்ஜை பெருமளவு பாதித்தது.

ஹொம்மெவுக்கு வயது பதிமூன்று. அவ்வப்போது ஏதோவொரு காரணத்தைக் கூறி விடுப்பெடுத்தான். வகுப்பில் சக மாணவர்கள் அவனை கேலி செய்யும் விதமாக, “கனவுதேவாஎன்றழைத்தனர். , அதனால் மனச்சிதைவுற்ற ஹொம்மெ, சில மாதங்களாகவே பள்ளிக்குச் செல்வதை முழுமையாக நிறுத்திக்கொண்டான்.

யாராவது, ஏதாவது சொன்னால், செவிடன் போல எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். எவரும் அழைக்காதபோது தானாகவே முன்வந்துஎதற்கு அழைத்தீர்கள்என்கிறான்.
சமீபமாக, அவனுக்கான ஒரு உலகத்தை நிறுவிக்கொண்டதன் விளைவாகவே எல்லோருக்கும் அவன் வேறு மாதிரி தெரிகிறான். சேர்க்கை கைகூடாமல் தனியனாகவே இருந்தவன் ஒருகட்டத்தில் தனிமைபோக்கி என்று நம்பும்படியான ஒரு வினோத விளையாட்டை கனவு கண்டான். அக்கனவில் அவன் மட்டுமே இருந்தான் எனினும் கூட விளையாட்டு சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. சொல்லப்போனால் நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதைக் காட்டிலும் இவ்விளையாட்டு பன்மடங்கு சுவாரசியமாக இருப்பதாக உணர்ந்தான்..

ஹொம்மெவின் இந்நடவடிக்கைகள்  மனிதர்களிடமிருந்து அவன் முற்றிலும் அந்நியமாகிப்போவதை அப்பட்டமாக உணர்த்துவதாய் இருந்தன. இவற்றை சுதாரித்த ஜார்ஜ் புகழ்பெற்ற மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை செய்தார். எல்லோரும் சொல்லிவைத்தாற்போல ஒருசேர கைவிரித்த நிலையில், அதுவரை இறை நம்பிக்கையற்றிருந்த ஜார்ஜ், தேவாலயங்களை நாடினார். பெரியப் பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அவற்றுடன் சேர்ந்து, ஜார்ஜும் முழந்தாழிட்டு ஜீவனுருக முறையிட்டார். ஒருபக்கம் மெழுகு நீரும், மறுபுறம் ஜார்ஜின் கண்ணீரும் தேவனின் கவனத்தைக் கோரின.
தேவனோ, வழமைபோல குனிந்த தலை நிமிராது, நாணமுற்ற ஒரு பருவமங்கைபோல மௌனித்திருந்தார்.

அன்று, பொழுது புலர்ந்ததும், போர்த்தியிருந்த வெண் நிற போர்வையை விலக்கிவிட்டு, ஹொம்மெ மணி பார்த்தான். சுவர்கடிகாரம் மணி ஏழரை என்று காட்டியது. நம்பாதவன் போல தன் டிஜிட்டல் கைகடிகாரத்தை பார்த்தான். அச்சு பிசகாமல் அதுவும் அதே நேரத்தையே காட்டியது.மேலும் உறுதிசெய்ய செல்போனை அணுகினான். அதிலும் அதுவே. சுவரில் ஒட்டப்பட்டிருந்த கேலிச்சித்திரங்கள் அவனை நோக்கி ஒருசேர கேலிச் சிரிப்பு சிரித்தன. செவிகளை பொத்திக்கொண்டு கத்தினான். சத்தத்தின் அதிர்வில் மேசையின் விளிம்பில் தன் அரைப்புட்டத்தை மட்டுமே இருத்தியிருந்த ஒரு சில்வர் டம்ளர் கீழே விழுந்தது. கீழே விழுந்ததின் கிறுகிறுப்பினால் அது நான்கு நொடிகள் “C” வடிவில் அல்லாடிக்கொண்டிருந்தது.

எவரோ அல்லது எதுவோ தன்னை முட்டாளாக்குவதாக சவால் விட்டதுபோல ஒரு பிரம்மை தோன்றியதற்கு பின் தான் தான் இப்படியெல்லாம் நடந்துகொள்வதாக அவனுக்குப் பட்டது. எனினும் அவனால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் நினைத்தான் எல்லாம் கைமீறிப் போய்விட்டதாக.

வீட்டில் யாருமற்ற போழ்து வெறுமையை ஒரு கோப்பை நிறைய ஊற்றி அருந்துவதுபோன்ற  உணர்வொன்று எழவே, கனவு தனக்கு அறிமுகப்படுத்திய அந்த வினோத விளையாட்டை முயல அவன் தீர்மானித்தான்.

கண்களை மூடினான். அதுவரை அவன் முன் பரந்துபட்டிருந்த இவ்வுலகு ஒளிந்துகொண்டது. மீண்டும் கண்கள் திறக்கையில் வசமாக மாட்டிக்கொண்டது. அக்கணம், முழங்காலிட்டு கைகளை தலைக்குமேல் உயர்த்தி தன்னிடம் அது சரணடைந்ததுபோல் எண்ணினான். மேலும், எங்கும் ஒளிந்துகொள்ள ஒத்துழைக்காத அதன் உருவைக் கண்டு, பரிகசித்தான். அதன்பின்னர் நாள் பாராது, நேரம் பாராது, அல்லும் பகலும் விளையாடினான். வெறிப்பிடித்தவன்போல, இன்னும், இன்னும் என உரக்கக் கத்தியபடி விளையாடிக்கொண்டே இருந்தான். வாழ்வை விளையாடித் தீர்த்தான். அந்த நூதன கண்ணா மூச்சியினுள் அவனுடையதான காலம், தன்னுடல் புள்ளியளவும் தெரியாதபடிக்கு மிகக் கச்சிதமாக, முழுமையாக தன்னை ஒளித்துகொண்டது. அப்படியொருவன் இருந்ததற்கான சுவடே அற்றதுபோல.

000

No comments:

Post a Comment