லொடக்லெஸ்
கதை
ராசமைந்தன்
என் பெயர் பழனிச்சாமி. நான் கொங்கு மண்ணில் பிறந்ததினால் எனக்கு இப்படி ஒரு பெயரிட்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன என்று பார்த்தால் பழனியில் வீற்றிருக்கும் சாமி! பெயரை வைத்து விட்டு சாமியைத் திட்டி அழைக்கிறோம் என்பதையே மறந்து தான் என் பெற்றோர்கள், ‘வாடா எருமை மேய்க்கி! எங்க தொண்டு சுத்தீட்டு வர்றே?’ என்றே பேசுவார்கள். அவர்களிடம் இப்படியெல்லாம் திட்டக்கூடாது சாமியை, என்று என்னால் அப்போது விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அப்போது நான் அவர்கள் என்னை திட்டும்விதமாக பல குறும்புத்தனங்களை சேகரித்து வைத்திருந்தேன்.
என்
தந்தையார் என்னை ஒருவிசயத்திற்காக என்றுமே சாட்டைக்குச்சியால் போட்டுத் தாக்கியதில்லை. சேகரமாகும் தவறுகளை சேர்த்து வைத்து நான்கு என்கிற எல்லையை கடக்கையில் சாட்டையை எடுத்து விடுவார். ஒவ்வொன்றையும் சொல்லி ஒவ்வொன்றுக்கும் மூன்று அடிகள் வீதமாக வெளுத்துக் கட்டுவார். இப்படியெல்லாம் உலகமயாக்கலுக்குப் பிறகு மகன்களை தந்தையார்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார்களா? என்று தகவல் இல்லை. இப்போது டிஜிட்டல் வாழ்க்கைக்குள் வந்து விட்டோம்.
நான்
என் மகனுக்காக எந்த சாட்டைக்குச்சிகளையும் வாங்கி வைத்திருக்கவில்லை. என் தந்தையார், தனக்கு சொல்பேச்சு கேட்காத மகன் பிறந்து விட்டான் என்று நினைத்து கவலையுற்று சீக்கிரமே கிளம்பி விட்டார் அதே கவலையோடு. எனக்கும் அவரது எண்ணமே தான். சொல்பேச்சு கேட்காத தந்தையாரை தந்தையாகப் பாவிப்பது. ஒரு திருடனைப் போல சொந்த வீட்டுக்குள் நுழையும் துன்பத்தை அவர் காலத்தில் எனக்கு கொடுத்திருந்தார். இந்த உலகம் முச்சூடுமே தந்தையாரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருப்பதாய் அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்
பெயர் பழனிச்சாமி. நான் என் தந்தையாரைப் பழி வாங்குவதற்காக எழுத்துலகில் நுழைந்தவன். நான் ரஷ்யாவில் ஸ்தெபி புல்வெளியில் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருப்பவனாக பிறந்திருக்கலாமென ஒரு காலத்தில் ஆசை கொண்டேன். இல்லை ஏதேனுமொரு புரட்சிப் படையில் இணைந்து கையில் துவக்கோடு பதுங்கிப் பதுங்கி எதிரியின் கூடாரத்தை நெருங்குபவனாக இருந்திருக்க வேண்டும்.
எல்லாமும்
போய் என்னை உள்ளூர் அரசு அலுவலங்களுக்கும் முன்னால் கூட்டமாக நிற்கும் ஆட்களிடையே வரிசையில் நிற்கவும், பேங்க் வாசலில் நோட்டு மாற்றவும், ஆதார் அட்டையில் இன்சியல் மாறிவிட்டதற்காகவும் என்று வரிசையில் வரிசையில் வரிசையில் என்றுமே நிற்க வைத்து விட்டார்கள். என் முழு உடலையும் ஸ்கேனிங் செய்து ஏதோவொரு அட்டையில் சேர்த்து கையில் தருவார்கள் எனில் மக்களோடு மக்களாய் வரிசையில் உடம்பில் பொட்டுத்துணியில்லாமலும் நிற்கவும் என்னை நான் வடிவமைத்துக் கொண்டேன்.
என்
எழுத்துகளில் கட்டு திட்டங்கள் என்று எதுவும் இருந்ததில்லை, இருப்பதுமில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். நான் வியாதியில் எப்போதும் அல்லல் படுபவன். ஒரு வியாதியிலிருந்தும் எனக்கு இன்று வரை நிரந்திர தீர்வு கிட்டவில்லை. வியாதிகளோடு போராடுவது எனக்கு சலிப்பையும், கோபத்தையும் ஒருசேர தந்து கொண்டே இருக்கிறது. ஆகவே என் எழுத்துகள் அப்படித்தான் இருக்குமென நானே முடிவுக்கு வந்து விட்டேன்.
கொங்குமண்ணில்
அழிந்து கொண்டிருக்கும் சில வார்த்தைகளை என் கதைகளில் சிலர் கண்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் நல்லவிசயமா? என்றுகூட எனக்கு புரிபடுவதில்லை. இது ஒரு இடைநிலை இதழ். இந்த இதழின் ஆசிரியன் பல சுவாரஸ்யங்களுக்கு வித்திட்டவன். கையறு நிலையில் இருக்கும் அவன் எப்போதாவது கையில் பைசா தேர்ந்தால் மட்டுமே புத்தகத்தை கொண்டு வருவது என்று முடிவெடுப்பான்.. எனக்கு பழைய வாசகர்களும் உண்டு. அவர்கள் என்னைப்பற்றி புட்டுப் புட்டு வைப்பார்கள் தெருவெங்கிலும். நான் பாலியல் கதைகளை சுவாரஸ்யமாக எழுதுபவன்
என்று. எனக்கு இந்த உலகம் எந்தக் காலத்திலும் மாறவே மாறாது என்றே தோன்றுகிறது. பாலியல் கல்வியின் அவசியத்தை எங்கேனும் யாரேனும் பதிவு செய்து விட்டு செத்துப் போய் விடுகிறார்கள். கிடப்பிலேயே கிடக்கும் விசயமது. முகநூலில் எனக்கு உடல்நிலை சரியில்லை என புகைப்படமெடுத்து ஒருவர் பதிவிடுகிறார். மறுநாள் அவர் இறந்து விட்டதாக மற்றொருவர் பதிவிடுகிறார்.
ஆனால் நான் பிறந்தது
எதற்காக என்றால் எல்லா எழுத்துக்களையும் எழுதுவதற்காக! எனக்கு ஒரே ஒரு மனைவிதான் எல்லோரையும் போல உண்டு. அவளின் தலைமுடியில் நான்கைந்து வெள்ளை நிற முடிக்கற்றைகளைக்
கண்டு அதிர்ச்சியாகி ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்தேன். என் அம்மாவின் முடிக்கற்றைகள் என் திருமணத்திற்கும் முன்பாக
நரைக்கத் துவங்கிய போது நான்கு நாட்கள் என் அறையில் செத்துக் கிடந்தேன். ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கையில் என்னவென்ன நடக்க வேண்டுமோ அவையனைத்தும் நிச்சயமாக நடந்தேறி விடும். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது தான்.
நேற்று
மாலையில் ஒரு சம்பவம் எனக்கு நடந்தது. உள்ளூர் மளிகைக் கடைக்கு பொருள் வாங்க சென்றிருந்தேன். பெஞ்சில் அரசாங்கப்பணியிலிருந்து ஓய்வு பெற்று காவி வேட்டி அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார் அலைபேசியில் பேசிக்கொண்டு. சமீபமாக வீடு ஒன்றை கட்டி மீதமிருக்கும் வாழ்வை ஓட்டிக் கொண்டிருப்பவர். அவர் அலைபேசியில் ’ரெண்டு ரூபா குடுத்தீங்கன்னா போதும், ஒன்னாந்தேதி திருப்பி குடுத்துடுவேன்!’ என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது என் மனதில் உள்ளூரில் இருக்கும் ஒருத்திக்கு அவசரமாய் பணத்தை கொடுக்க கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றே மனதில் தவறாக நினைத்தேன். அப்படியான காரியங்களை முன்பு செய்திருக்கிறார். இப்படித்தான் அடுத்தவரை உடனடியாக தரக்குறைவாக நாம் மதிப்பிட்டு விடுகிறோம். நாம் நினைத்ததே சரி என்ற முடிவில் சென்று கொண்டேயிருக்கிறோம்.
பேசி
முடித்தவரிடம் வழமையான சில விசயத்தை ஆரம்பித்தேன். அவர் என் காதுக்கு அருகாமையில் ‘பையன் ஏக்ஸிடெண்ட் ஆயிட்டாப்டி! ரெண்டு நாளாச்சி! கையில ஆப்ரேசன் பண்ணியிருக்காங்க’ என்றார். அவர் மகனுக்கு இது இரண்டாவது விபத்து. நேரமே சரியில்ல! என்றார். கேரளா போய் பகவதியம்மனையெல்லாம் பார்த்துட்டு வந்தாச்சு முன்னயே! என்றார். எனக்கு சங்கடமாய் இருந்தது. ஏதாவது அவருக்கு ஆறுதலாய் சொல்ல தவித்தேன். ‘இந்த வேட்டியை சீக்கிரம் மாத்திருங்க!’ என்றேன். ‘அதுக்கு காசிக்கு போயிட்டு வரணுமே! அங்க தான் தோண்டி எலும்புக்கூடுங்களை எடுத்துட்டு இருக்காங்களே! அதுக்குத்தான் இருபத்தஞ்சாயிரம் வச்சிருந்தேன்.. இப்ப வரைக்கும் நாற்பது ஆயிருக்கு.. இன்னும் பில்லு குடுப்பாங்க! பேசாம அந்த வீட்டை விட்டுட்டு ஊருக்குள்ள முன்ன இருந்த பழைய வீட்டுக்கே வாடகைக்கு வந்துடலாம்னு யோசனை. வீட்டுல அவ இனி நகருவாளா?’ என்றார்.
எனக்கு
என்ன தெரியுமென்று அவரிடம் வேட்டியை மாற்றச் சொன்னேனென்று தெரியவில்லை. இந்த வாழ்க்கை பல சிரமங்களோடு தான் எல்லோருக்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரச்சனைகள் தான் வெவ்வேறாக இருக்கிறது. ஒரு கதையை எழுதுகையில் எழுத்தாளன் ‘இந்த உலகத்தை அசிங்கப்படுத்தி விடவேண்டுமென நினைத்து எழுதுவதில்லை! இங்கே இப்படியெலாம் நடக்கிறதே என்கிற ஆதங்கத்தில தான். இதைத்தான் தினத்தந்தி பேப்பரிலேயே நாங்கள் பார்க்கிறோமே.. என்று சொல்பவரும் ஏதோவொரு தவறை செய்துகொண்டே தானிருக்கிறார். அவர் தினத்தந்தி செய்திப் பகுதியில் வர இப்போதெல்லாம் அதிக நாள் ஆவதில்லை.
சிறுவயதில்
பழமொழி ஒன்று கேட்டிருக்கிறேன். அதைச் சொன்னாலும் அசிங்கம் என்பதால் மாற்றிச் சொல்கிறேன். ‘மொதல்ல உன்னோட கையை சுத்தம் பண்ணீட்டு அடுத்தவன் கையிலிருக்கும் அழுக்கைப் பற்றிப் பேசு!” என்ன இருந்தாலும் இப்படி மாற்றியது அந்த பழமொழிக்கே அசிங்கம். எழுத்தை வைத்து ஒருவனை எடை போடும் வழக்கம் இருந்து கொண்டே தானிருக்கும். அது இருந்துவிட்டுப் போகட்டும். எடை போடுபவர்கள் உலகில் உன்னதமானவர்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமிருக்கும்.
இந்த
உலகம் ஒரு கடினமான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த எழுத்தினால் நான் எதையுமே சமபாதிக்காமலேயே அந்த அழிவில் கலந்து கொள்ளப் போகிறேன் என்பதில் அளவு கடந்த சந்தோசம். இந்த இலக்கியத்தை எழுதி என் மனையாளுக்கு மகிழ்வாய் ஒருசேலை வாங்கித்தர இயலாது என்பதை அறிந்து எழுதுகையில், அறிந்தவர் வாசிக்கையில் என் எழுத்து அப்படித்தானிருக்கும் என்று சொல்வதில் வெட்கம் வந்தால் தான் வெட்கக்கேடு.
“என்னுங்கோ.. போனு அடிக்குது!” மனையாளின் குரல் கேட்டு நடப்பு உலகிற்கு வந்தவன் என் அலைபேசி இருக்குமிடம் சென்று எடுத்துக் காதில் வைத்தேன். என் காதில் இறப்புச் செய்தி ஒன்றைச் சொல்கிறார் என் சகளை.
”அட
அந்தப் பாட்டிங்களா? நல்லாத்தான இருந்துச்சு போனவாட்டி நான் வந்தப்ப.”
“எங்கீங்க, நாலஞ்சு நாளாவே சோறு தண்ணி எதுவுமில்ல, அப்புறம் வயசும் ஆயிப் போச்சுங்கள்ல தொன்னூறு. எப்பிடியும் மத்தியானம் தான் எடுப்பாங்க, அதுக்குள்ள வந்துடுங்களே!” போனை வைத்து விட்டார். என் மனையாள் குட்டை வேலைக்குச் செல்பவர். ‘ஒரு நாள் கூலி போச்சா!’ என்று யூகித்து சொன்னார். வண்டியில் போய்வர பெட்ரோல் இருக்கிறது. போய்ச் சேர்ந்தால் போதும். சகளை மேற்படி சரக்கு சமாச்சாரங்களை சிறப்பாக பார்த்துக் கொள்வார்.
செத்துப்போன
ஆயாவை சமீப காலங்களில் தான் கவனித்திருக்கிறேன். மகனோடு பத்துவருடம் பேசாமல் தனித்தே அந்த ஊரில் குடிசையில் வாழ்ந்து வந்ததாம். கடைசியாக சென்ற போது சகளை வீட்டின் வாசலில் அவர் மகன் ஆயாவின் மடியில் படுத்துக் கிடந்தார். “எனக்கு டீத்தண்ணி வெச்சுக்குடுக்க கூட ஆளில்ல” என்று அந்த ஆயா பேச்சுவாக்கில் சொல்ல, மடியிலிருந்தவர் எழுந்து போய் தன் வீட்டில் டீ வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். என் கொழுந்தியா வேறு இதைப்பற்றி கருத்து சொன்னார். ‘திடீருன்னு ஆயாளும் மவனும் சேர்ந்துட்டாங்க மச்சான், ஒரே பாசமழெ ஊருக்குள்ள பொழியுது!’ என்று.
நானும்
மனையாளும் சகளையின் ஊருக்குள் நுழைந்த போது முகப்பிலேயே கூட்டமாக இருந்தது. நல்லவிசயத்துக்கு ஒன்று கூடுகிறார்களோ ஒன்னோ இம்மாதிரியான இழவு விசயங்களுக்கு சனம் எங்கிருந்தாலும் வந்து சேர்ந்து விடுகிறது. ஒப்பாரிப் பாட்டுச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நேராக சகளையின் வீடு சென்றவன் கிலுவை மரத்தடியில் வண்டியை போட்டு விட்டு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டேன். சகளை பாடை கட்டுமிடத்தில் படு பிசியாக இருந்தார். என் மச்சினன்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளோடு முன்பாகவே வந்து விட்டார்கள் போலிருந்தது. சின்ன மச்சினன் கண்கள் சிவந்திருந்தது பனிரெண்டு மணிக்கும் முன்பாகவே!
நன்
இழவு வீட்டின் முன் சென்ற போது சேரில் அமர்ந்திருந்த ஆயாவின் குடும்பம் சார்ந்த பங்காளிகள் எழுந்து கை நீட்டினார்கள். ஆயாவுக்கு இரண்டு மகன்கள். முதலாம் மகன் வெளியூரில் இருந்ததால் இப்போது தான் முதலாக அவரை பார்த்தேன். கிட்டத்தட்ட ஆயாவை சுடுகாடு தூக்கிப் போகும் நேரத்தில் வந்திருக்கிறேன். ஆயாவை தூக்குவதற்கும் முன்பாக ஒரு செம்புளிக்குட்டியை அறுத்தார்கள். பின்பாக பெண்களின் அழுகை அதிகப்பட்ட நேரத்தில் நான்கு பேர் ஆயாவை தூக்கி வந்து பாடையில் கிடத்தினார்கள். ஆயாவை நன்றாகப் பார்த்தேன். நிம்மதியான வாழ்வு வாழ்ந்து நிம்மதியாக கிளம்பிய முகம். பற்கள் ஒன்று கூட இல்லாத ஆயாவின் முகம் கன்னம் உள்ளிறங்கி இருக்க ஒரு கடவுளைப் போன்றே தெரிந்தது.
சுடுகாடு
பிரயாணப்பட்ட வாழ்ந்து இறந்த உடலின் பின்னால் மெளனமாக நடையிட்டேன் மற்றவர்களோடு. மச்சினன் என் கையில் ஒரு பெப்சி பாட்டிலை கொடுத்து விட்டு முன்பாகச் சென்றான். நான் ஓரம் கட்டி அதை குடித்தேன். கடிப்பதற்கு எதாவதொன்றை அவன் கொடுத்துப் போயிருக்கலாம். கீழே துளசிச் செடி இருந்தது. அதில் நான்கைந்து இலைகளைப் பறித்து மென்று கொண்டே பாட்டிலை தூர வீசினேன். கொங்கு மண்ணில் ஒரு சகளையோடும், இரண்டு மச்சினன்களோடும் வாழ்வதற்கு ஏகப்பட்ட கொடுப்பினைகள் செய்திருக்க வேண்டும். அப்படி வாழ்பவர்களுக்குத்தான் அதன் அர்த்தங்கள் பல தெரியும். நல்ல வெயில் நேரத்தில் கிர்ரென போதை ஏறிக் கொண்டது. கடவுளின் முகத்தை குழியில் மூடும் முன்பாக பார்க்கவே கூடாது. என் பெயர் பழனிச்சாமி.
அவர்கள்
கடவுளை புதைத்து முடித்து விட்டு திரும்பும் வரை நான் என் இன்னொரு மச்சினனுடன் தூரமாய் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு பேசியபடி இருந்தேன்.
“பொழுதோட
மட்டன் எடுத்து சாப்டுட்டு காத்தால போயிக்கலாம்னு சின்ன மச்சான் சொல்லிட்டே இருக்காரு! என்ன பண்றதுன்னு தான் தெரியில! கம்பெனில லேட்டா போனா சத்தம் போடுவாங்க! இப்பவே முக்கியமான எழவுய்யா!ன்னும் போன
சுடிக்கி வந்துடறேன்னும் சொல்லிட்டு வந்தேன்! பெரியவளுக்கு வேற லைட்டா ஒடம்பு சூடு அடிச்சுட்டு இருக்குது” என்றான்.
திரும்பவும்
கூட்டத்தில் கலந்து கொண்டு ஆயாவின் வீடு வரை வந்தோம். வீட்டினுள் விளக்கு ஒன்று பற்ற வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் பைப்பில் தண்ணீரை தலைக்கு போட்டுக் கொண்டு விளக்கைப் பார்த்து ஒரு கும்பிடு வைத்து விட்டு ஓரம் கட்டி நின்றேன். இத்தனை நாட்கள் அங்கீம் இங்கீம் நடமாடிக் கொண்டிருந்த ஆயாவை எடுத்துப் போய் புதைத்து வந்தாகிவிட்டது. “ஞாயித்துக்கிழமெ அன்னிக்கி மத்தியானம் கருப்புங்கோ!” சத்தம் கூட்டத்தினுள்ளிருந்து வந்தது. நான் சகளை வீடு வந்து முகப்பில் கிடந்த சேரில் அமர்ந்தேன். சகளை பையன் மச்சினன் பையன்கள் தொட்டு விளையாட்டோ வேறு ஒன்றோ சப்தமிட்டுக் கொண்டே ஓடினார்கள் வீட்டை சுற்றிலும்.
பெரிய
மச்சினனின் பெரிய பெண் இப்போது எல் கே ஜி செல்லுமென நினைக்கிறேன். புறங்கை கட்டிக் கொண்டு என்னைப் பார்த்தபடி அருகில் வந்து “இந்தக் கத்து கத்திட்டு ஓடுதுங்களே இதுகெல்லாம் வெளங்கவா போகுதுக நாளைக்கி?” என்றது. ‘ஆமாஞ்சாமி, நீ ஏன் அவிங்களோட வெளையாடப் போவுல?’ என்றேன். ‘வெளையாடுனா சோத்துக்கு வருமா? எவனாச்சிம் பாருங்க கீழ வுழுந்து முட்டியப் பேத்துட்டு ஊஊஊன்னு ஊளையுட்டுட்டு வந்து உக்காருவான்.’ சொல்லிக் கொண்டே புறங்கையை எடுக்காமல் எழவு வீடு நோக்கிச் சென்றது.
பெரிய
மச்சினனுக்கு இப்போது தான் இரண்டாவது பாப்பா பிறந்து ஒரு வருடமாகிறது. பெரியவளை மட்டும் கூட்டிக் கொண்டு டிவிஎஸ்சில் பெரிய மச்சினன் வந்துவிட்டான் போலிருக்கிறது. சின்ன மச்சினன் குடும்பம் சகிதமாகவே வந்து விட்டானாட்டம். சின்னமச்சினன் ஒரு போக்கு என்றால் பெரியவன் ஒரு போக்கு. பாப்பா எழவு வீட்டை ஒரு சுற்று பார்த்து விட்டு என் மனையாளிடம் ஒட்டிக் கொண்டது. பாப்பாவின் பெயர் வர்ஷினி. அதைப்பற்றி கதை கதையாக பாப்பாவின் அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார்.
“ண்ணோவ்! பயங்கரமான புள்ளைண்ணா வர்ஷினி. கடைப்பக்கம் கீது கூட்டிட்டு போயிட்டமுன்னு வச்சிக்கங்க.. தீந்துது பண்ணயம். இந்த டிவில வேற முட்டாயிகளை காட்டுறாங்களா.. நாம தேன் முட்டாயி எடுத்துக்க சாமீன்னா போதும் புடிச்சுக்குவா!”
“அழுவாச்சியா?”
“இல்லீண்ணா, எங்கம்மாக்கு என்னோட சேத்தி மூனு புள்ளையா.. ‘ஏளே, உங்கோயாவாட்டம் மூனா பெத்து
வளத்துறே? ஒன்னத்தான பெத்திருக்கே? வாங்கிக் குடுளே ஃபைவ் ஸ்டாரும்பாண்ணா! அதென்னமோ கோழி முட்டையாட்டம் முட்டாயி இருக்குதே! அதாண்ணா பிச்சம்னா உள்ளார ரப்பர் பொம்மை கூட இருக்கும். அது முப்பத்தஞ்சு ரூவாண்ணா? காசென்ன கொட்டியா கெடக்குது இங்கெ! என்ன பண்றது? மானங்கெட பேசுறாளேன்னு வாங்கிக் குடுக்குறது தான்.”
இப்படி
சில குழந்தைகள் சிறுவயதிலேயே அறிவோடு வளர காரணங்களை கண்டு பிடிக்க முடியாது தான். வர்ஷினி பாப்பா அதோட துணிகளோடு சேர்த்தி அம்மாவுடையதையும் துவைத்துவிடும் பழக்கத்தையெல்லாம் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
பக்கத்து
சேரில் தினத்தந்தி கிடந்தது. ஒரு பொறட்டு பொறட்டலாமென எடுத்தேன். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு. பெருந்துறை மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி போல் நுழைந்து பணம் திருடிய பெண் பட்டதாரி கைது. பேப்பரை அதே சேரில் போட்டு விட்டு குளித்து விடலாமென நினைத்தேன். மனையாளும் கொழுந்தியாவும் வந்தார்கள்.
“இங்கியே
குளிச்சிடறேன்” என்று சொல்லி பாத்ரூமில் நுழைந்து குளியலை முடித்துக் கொண்டேன். சகளையின் லுங்கியையும் ஒரு வெள்ளைச் சட்டையையும் அணிந்து பாத்ரூமிலிருந்து வெளிவருகையில் போதை தெளிவடைந்திருந்தது. அப்போது ‘குளிச்சிட்டீங்களா! நானும் ஒரு சொப்பு ஊத்திட்டு வந்துடறேன்!’ என்று சகளையும் வீடு வந்து சேர்ந்தார்.
சகளையின்
பையன் ஓடி வந்து சேரில் அமர்ந்திருந்த என்னிடம் கால்களுக்கிடையில் நுழைந்து நின்றான்.
“பெரீப்பா
எனக்கு திங்கறதுக்கு என்ன வாங்கிட்டு வந்தே நீயி? ஊட்டுக்குள்ள ஒரு பையும் இல்லியே! சும்மாநாச்சிக்கிம் வந்தியா? கெழவி செத்துப் போனாள்னு வந்தியா?” என்றான். ’இதா இப்ப கடைக்கி போவன்ல வர்றப்ப உனக்கு முட்டாயி வாங்கிட்டு வந்துடறேன்!’ என்றதும், ‘சீரகமுட்டாயி டப்பாவோட வாங்கிட்டு வா!’ என்றான். கொழுந்தியா
எனக்கு டம்ளரில் டீ கொண்டு வந்து கொடுத்தார்.
”இதென்ன
மச்சான் டீய வாங்கிக்கிட்டாரா! என்னுமோ சரக்கடிச்சிருப்பாப்லன்னு சொன்னியே அக்கா!’ என்று மனையாளைப் பார்த்து சொன்னார்.
“பெரீப்பா, ஆயாவோட பையன் இருக்குதுல்லோ, அது இந்த நம்மூட்டு தென்ன மரத்துல ஏறி எழனி போட்டு டம்ளர்ல கொண்டி ஆயாளுக்கு ஊத்தி கொன்னு போடுச்சு!’ என்று பையன் சொல்ல, ஓடி வந்து கொழுந்தியா அவன் வாயைப் பொத்தினார்.
”இவனோட
காத்தால இருந்து இதே தும்பம் மச்சான்! எல்லாரும் பாலு, தண்ணீன்னு குடுத்துப் பார்த்துட்டு இருந்தாங்க. அவரு வந்து எழனித் தண்ணி குடுத்த பொறவு போயிடுச்சு! பேசீட்டு இருந்திருப்பாங்களாட்ட இருக்குது, இவன் அதை கணுப்பா கேட்டுட்டு வாரவீக போறவீக கிட்டெல்லாம் சொல்லி மானத்தை வாங்குறான் மச்சான். அப்பிடியெல்லாம் ஆருகிட்டயும் சொல்லப்புடாது சாமீ!” என்றார்.
பேச்சை
மாற்றுவதற்காக நான் முயற்சித்தேன். ‘இந்த அண்ணமார் கோயல் நோம்பியப்ப பெரீம்மா உனக்கு செல்போனு வாங்கிக் குடுத்துச்சுல்லோ! சார்ஜே போட வேண்டியதில்லீன்னு அம்பது ரூவாய்க்கி! அது இன்னும் இருக்குதா?’
“அது
லொடக்லெஸ் போனாயிடுச்சு பெரீப்பா! அதுக்கும் பொறவு தையத் தையா போனெல்லாம் வாங்கி குப்ப மேட்டுக்கு போயிடுச்சு! இப்ப நான் காரு வாங்கி வச்சிருக்கேன். இவனுங்கெல்லாம் புடுங்கி ஒடச்சிப் போடுவானுங்கன்னு பீரோக்குள்ள ஒளிச்சி வச்சிருக்கேன் பெரீப்பா! நீ கடை வீதிக்கி போனா மறக்காம முட்டாயி வாங்கிட்டு வா! எங்கப்பன் மறந்துரும்!” என்றான். ‘சேரி சாமி!’ என்றேன்.
என்
பெயர் பழனிச்சாமி. நான் இலக்கிய சிற்றேடுகளிலெல்லாம் கதை எழுதுபவன். எனக்கு கதைகள் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து எந்த நேரமும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நான் சொல்வதெல்லாம் இந்த மண்ணினுடைய மக்களின் கதைகள்.
000
No comments:
Post a Comment