Wednesday 3 July 2019

நடுகல் 2 - நரபலி சிறுகதை

நரபலி
-     .வீரபாண்டியன்

தெருக்கூத்து வழக்கம் போல களைகட்டியிருந்தது. காலங்காலமாய் கண்டு களித்து வரும் கதைப்பாடல் உணர்ச்சிப் பெருக்கோடு நடித்து காட்டப்பட்டதில் நூற்றாண்டு காலத்திற்கு முந்தைய நினைவுகள் வேடிக்கை பார்த்தோரின் மனத்திரையில் ஒவ்வொரு விதமாய் காட்சியாய் மலர்ந்து ஓடியது. நடிகர்களின் உடல் அலட்டலிலும், குரலின் உச்சத்திலும் மக்கள் ஒன்றித் திளைத்திருந்தனர். இதே கதையை வில்லுப்பாட்டில் கேட்டவர்கள் அடுத்த கட்டம் என்னவென்று முன்கூட்டியே சொல்லிதனக்கு இந்த கதை அத்துப்படிஎனும் தோரணையில் அடுத்தவரைக்  கவர்ந்திழுக்கும் முயற்சியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது.

குடிமன்னர் முக்கோடி
யானை ஒருகோடி
அணித்தேர் இருகோடி
தவமாய் தவமிருந்து
தான் பெற்ற ரத்தினமே
வல்ல முடி தரித்து
மனு செங்கோல் பிடித்து
பூதலம் ஆளும் காசிப் பூபாலன்
துளசி மகாராஜனின் குலக்கொழுந்தே!”

வீரன் பாட்டு காற்றில் பாய்ந்து ஆடி வீதிகளிலும், சித்திரை, ஆவணி, மாசி வீதிகளிலும் சுற்றிச் சுற்றி வந்தது. காற்றில் மிஞ்சியிருந்த ஈரத்தில் ஒட்டிக் கிடந்த நஞ்சுச் சொற்கள் துளித்துளியாய் சொட்டிக் கொண்டிருந்தன. மீனாட்சி சொக்கநாதன் சன்னிதியின் எல்லாத் திசைக் கோபுரங்களின் உச்சிக் கலசங்களிலும் மோதி மோதி கிழக்கு ராஜகோபுரத்தின் அடிவாரத்தில் பாடியவனின் குரல் சிதறித் துண்டம் துண்டமாய் விழுகிறது. நூற்றாண்டுகள் கடந்தும் பாட்டின் எச்சம் நிறம் மாறி உருமாறிக் கிடந்தன. பொய்யுரைகள் தன் கண்முன்னே அரங்கேறும் குற்றம். சாட்சியாய் தான் நிற்கும் போதே உண்மையின் கழுத்துத் திருகப்பட்டுக் கொல்லப்படும் அவலம். உயிர் போன நாளிலிருந்து கேட்டுக் கேட்டுச் சலித்த லட்சத்திற்கும் மேலான இரவுகளின் பொய்ப்பாட்டில் திரண்டு வந்த ஆவேசத்தில் மதுரைவீரனின் சிலை நொறுங்கி உடைந்தது. வீரனின் உடலில் ஆறாத வெட்டுக்காயங்களிலிருந்து ரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது. நானூறாண்டு கால ரத்தத்தின் வீச்சம் வீரனை சினங்கொள்ளச் செய்தது. மீசை தானே முறுக்கிக் கொள்ள வெகுண்டெழுந்த வீரன்மதுரையின் தளபதி நா...ன்..என்ற கொக்கரிப்போடு சிலையின் சிதிலங்களிலிருந்து மண்ணை உதறிக்கொண்டு வெளியேறி வந்ததில் மதுரை மாநகரை தூசுப்படலம் முக்காடிட்டு மூடியது. புயலடித்ததில் சாலைகளில் திரிந்தோரின் திறந்த கண்களில் தூசு உறுத்தியது.

அம்மன் சன்னதி நுழைவாயிலில் நீலவானுக்கு சாமரம் வீசுவதற்கு மயில் தன் தோகையை குவித்து மேல்தூக்கி நிறுத்தியிருந்தது. அதன் பிரதிபலிப்பாய் நீலமும், பச்சையும், மஞ்சளும், சிகப்பு வண்ணமும் குழைந்து கம்பீரமாக நின்றிருந்த கிழக்கு ராஜகோபுரம் மெல்லிய கோடு கிழித்ததைப் போல சின்னதாக விரிசல் கண்டது. கோயிலுக்கு வெளியே கோபுரத்துக்குக் கீழே சின்னக் குடிலில் ஆங்காரமாய் வாளேந்தி கல்லாய் உறைந்து நின்றிருந்த மதுரைவீரனின் கைமணிக்கட்டு கல்லிலிருந்து அசையத் தொடங்கியது. சிறு அசைவுக்கு எண்திசைகளிலும் சுழன்ற வாளின் துருப்பிடித்த கூர்முனை காற்றைக் குதறிக் கிழித்துப் போட்டது. மதுரைவீரன் கழுத்தின் திருகலில், தோள்களின் குலுக்கலில், கால்களின் மடிப்பில், நெட்டி முறித்ததில் சுற்றுப்புறமெல்லாம் பூகம்ப அதிர்வில் குலுங்கியது. மீண்டும் கோயிலுக்குள் புக முடியா வண்ணம் நெடுங்கதவு மாட்டிக் கொண்டு மறைத்து நின்ற ராஜகோபுரத்தில் முதல் தாக்கம் விழுந்தது. மெல்லிய கோடாய் இருந்த விரிசல் பாளம் பாளமாகப் பிளந்தது.

நட்டமாய் குவிந்திருந்த கிழக்கு ராஜகோபுரம் உலுக்கி சிலிர்த்ததில் கோபுரக்கலசங்கள் கணகணவென்ற இசையெழுப்பி உருண்டோடின. சாக்கடையின் அகன்ற அகழிக்குள் மெல்லிய நீரோடையாய் முனகலோடு வழிந்தோடிய வைகையின் புனித நீர் ஊற்றிப் பொருந்த வைக்கப்பட்ட கலசங்கள் மினுமினுப்பு குன்றி ஒளிமங்கி வீசியதற்கான காரணம் தெளிந்தது. பல நூறாண்டுகளாய் ஒரு கல்லில் சமைந்து நின்ற சிற்பங்கள் கோபுரத்தினின்று விடுபட்டு ஒவ்வொன்றும் உயிர்பெற்று சுதந்திரமாய் காற்றில் படபடவென அடித்த சிறகசைப்பில் உதிர்ந்த காலங்களை நிலத்தில் தெளித்தவாறு பறந்தன. காலங்கள் விழுந்த இடமெங்கும் பண்டைய நகரங்கள் நவீனம் சூடி முளைத்தன. வானின் விரிந்த பரப்பில் அலைந்த பறவைகளுக்கு ரத்தம் சிந்தி கோபுரம் எழுப்பிய களைத்துச் சோர்ந்த உயிர்க்களையற்ற முகங்களை மேகச்சுவரில் சித்திரங்களாய் தீட்டிக் காட்டின. வானமெங்கும் மழை பெய்தும் அழிந்து கரையாத நீலச்சித்திரங்கள் நிலைத்து மிதந்தன. சொக்கநாத நாயக்கன் ஆட்சியில் வரிச்சுமையால் கோயில் நிலங்களில் வெள்ளாமை செய்து வந்த விவசாயிகளிலொருவன் கோபுரத்தில் ஏறிக் குதித்து உயிரை விட்ட நாளில் ஒலித்த கடைசி அலறல் கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலும் குடியிருந்து இன்னும் பிசிறடிக்காமல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கற்சிலையாக வடித்து வைத்த இடம் விட்டு எங்கும் நகராது நிலைத்து நின்ற வீரனின் உடுக்கை ஒலியொத்த ஆவேசக்குரலை செவியைக் கிழிக்கப் போகும் அலறல் இதுதானென்று பட்சிகள் கூவிச் சென்றன. ஆகாயப்பட்சிகளின் கூவலிலிருந்து அலைப்பரப்பில் விழுந்த அலறலை ஏந்திக் கொண்ட சமுத்திரங்கள் தாங்காத பேரிரைச்சலை வெண்சங்கில் பூட்டி வைத்தது.

கடம்ப வனத்தின் ஒருமரமும் மிச்சமிருக்கவில்லை. விஷக்காய்கள் காய்த்துக் குலுங்கிய அரளிச் செடிகள் நறுமணத்துடன் சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் பூத்துக் கிடந்தன. புலிகளும், நரிகளும் கனவிலும் திரியவில்லை. கோவில் பிரகாரச்சுவற்றிலிருந்து ஒழுகிய பசுநெய்யின் வாசத்தைக் கண்டு பெருமலையின் அடியில் மடுவாய் அமைந்திருந்த கோயிலில் மதுரைவீரனின் மூளை மடிப்புகளில் முன்பொரு நாள் தனக்குப் படைத்திருந்த மாட்டுக்கறித் துண்டுகளில் உருக மறுத்த கெட்டிக்கொழுப்பு மணந்தது. பக்திக் கிறக்கத்தில் படையலிடப்பட்ட மதுவின் வாசனை வழிந்தோடி அம்மன் சன்னதித் தெருவிலும், கீழச்சித்திரை வீதியிலும் பரவி காற்றில் நாற்றம் மிகுந்தது. ஊறல்களிலிருந்து சூடு பறக்க எழும் நாட்டுச்சாராய நெடியும், நொதி எந்திரங்களிலிருந்து பீறிடும் பிராந்தி வாடையும் அந்த வீதி முழுக்க நிறைந்து வீசியது. காலங்காலமாய் மக்கள் அறுசுவையின் நறுமணமும் மணக்க படையலிட்ட பல வகையான மதுவின் கலவை மணத்தில்இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம்என்று முகத்தின் மலர்ச்சியோடு போதையேறிய சிலர் நாக்கைத் தொங்க விட்டுத் தள்ளாடித் தள்ளாடித் திரிந்தனர். மதுவின் வாசனை அறவே ஒத்துக்கொள்ளாத பித்த உடம்புக்காரர்கள் போதை தலைக்கேறி மூளை திருகி நாளங்கள் வெடித்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வெளியேற மரணத்தைத் தழுவிபொத் பொத்தென்று கீழே விழுந்தனர். அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதிலிருந்து கவனம் சிதறாமல் சாராய வாடையைக் குடித்த மயக்கத்தில் விழுந்த கிடந்த பிணங்களின் மீதே புரண்டு புரண்டு உருண்டு சென்றனர்.

வீரனின் பெயரெடுத்துப் பாடும் பாட்டுச்சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பி நின்றது பஞ்சகல்யாணிக் குதிரை. வில்லில் பூட்டிய நாண் அதிர்வும், சலங்கை முத்துக்களின் ஜல் ஜல் குதியாட்டமும் இசைக்கோர்வையாய் வாய்ப்பாடலில் கலந்து வரும் பக்கம் திரும்பிய வீரன் வில்லிலிருந்து நாணை உருவி சுருட்டி சாட்டையாக வீசினான். பாடி முடித்து தெண்டனிட்டு வணங்கிய கூட்டத்தின் பரந்த முதுகுகள் விளாசலில் கதறின.

வீரனே!
திக்கெல்லாம் ஆள ஒரு
செல்வனார்தாம் பிறந்தார்.
மிக்க வடிவுடைய
வேந்தனார்தாம் பிறந்தார்என்னும் நின் வீரச் சரித்திரத்தைப் பாடுவது தவறா? ஏன் உனக்கு எங்கள் மீது சினம்?” நாண் கொண்டு சாட்டையாய் விளாசியதில் ரத்தம் வழிந்த சதைக் கிழிசலோடு நெளிந்து கொண்டே கேட்டனர்.

எது வரலாறு? துளசி மகாராஜனா? காசி அரசனா? எப்போது வாழ்ந்தான்? எந்த வரலாற்றில் சொல்லியிருக்கிறது? சின்னானுக்கும், செல்லிக்கும் பிறந்த என்னை எவனோ யார் யாருக்கோ பிள்ளையாக்கினான் என்பதைக் கணக்கெடுத்து ஆராயாமல் பாடும் உங்களை விளாசாமல் மேனியில் சந்தனமும், புனுகும் பூசி, சுகிப்பான போசனம் வழங்கி முத்துப் பதித்த செம்பொன்னால் ஆபரணம் அணியச் செய்திடணுமோ?” வல்லாண்மை திரண்ட மத்தகஜத்தையொத்த பனைத்தோள் சிலுப்பினான் ஆர்ந்த வீரன்.

அலங்காரமும், ஆபரணம் எதுவுமின்றி சாமியாகி நின்ற மாசில்லா வீரன் கேட்ட கேள்விக்கு உடுக்கையடித்து, உறுமி முழங்க கூடியிருந்தோருக்கு ஆர்ப்பரிப்பு தாளவில்லை. “பொய்யைத் திரட்டி கதைப்பாடல் பாடி, வில்லும் இசைத்து, தெருக்கூத்தில் நடித்து என்னுடைய கதையென்று நீங்கள் சொன்னதெல்லாம் பொய்யும், புரட்டும் அன்றோ! நடுநீதி அற்றுப் போன நாக்குகள் சுழற்றிப் பாடும் பாடல்கள்புரவி முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து இடதும் வலதும் தரையில் குதித்து சிலிர்க்க வீரன் சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஜனத்திரளைக் கண்டு உச்சக்குரலில் மேலும் இரைந்தான், “நரபலி சாவை எதிர்த்த வீரனின் சேதி அட்டதிக்கிலும் வாழும் ஞாலத்து மானிடர்க்கு விளங்கட்டும். என் சனங்களுக்குத்தான் எத்தனை இடக்குகள்! முன்பு கண்ணகி! பின்பு வீரன்! மன்னனை எதிர்த்துக் குரலை உயர்த்திய என்னைக் கொலை செய்த சரித்திரத்தைக் கவனமாய் எழுதட்டும். சொல்வதற்கு நானே வந்தேன். நடந்ததை பூச்சக்கரம் என் குரலிலேயே அறியட்டும்வெறியேறிய மதுரைவீரனின் சினங்கொண்ட உறுதியான உரைக்குச் சாட்டையும், வாளும் சுழன்றது. கொண்டை முடிக்கப்படாத ரத்தப் பிசுபிசுப்புடைய மயிர் காற்றில் அலைந்தது. சிவந்த கண்கள் உருட்டி உருட்டிப் பிதுங்கி சீறுகின்றன.

வீரன் நானூறாண்டு கல்சிறையிலிருந்து மீண்டு எழுந்தருளியதில் மாண்டு மடிந்த கள்ள ஆவிகளுக்கும் அதிர்ச்சி. நவீனம் பூசி திரிந்தனர். எந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் சர் சர்ரென விரைந்தோடும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் மிடுக்கு பன்மடங்கு பெருகியிருந்தது. அதிகாரத்தின் பீடங்களில் அழுத்தமாய் அமர்ந்திருந்து திட்டங்கள் வரைந்து புதுவிதமான கொள்ளைகளை அரங்கேற்றுவதில் மும்முரமாக இருந்தனர். “என்னோட வெள்ளைக்குதிரை எங்க?” யாரைக் கேட்கிறாரென்று எல்லோரும் திரும்பிப் பார்த்து கேள்விகளாய் முகத்தை வைக்கஎல்லோரையுந்தான் கேக்குறேன்வீரனின் கனீர் குரல் உடலுக்குள் பாய்ந்து தசை நடுங்கியது, எலும்பு வீங்கியது. “கள்ளர்கள் தலை கொய்த வீரவாளைத் தீட்டி கூர்மையாக்க வேணும். கொல்லன் பட்டறை எங்க இருக்கு?” மிரண்ட விழிகளுடன் வீரன் விடுத்த கேள்வியின் கணத்தைத் தாங்க முடியாமல் கிழக்கு நோக்கி பட்டறைக்காரத் தெருவைக் கைகாட்டினர். பாதையெதுவென்று பழைய நினைவுகளைக் கிளறி கடைகள், சாமான்கள் சிதறிக் கிடந்த ஜன நெரிசலுக்குள்ளிருந்த புதுமண்டபத்தின் உள்ளே நுழைந்து நடந்தால் பாண்டியகுலஸ்தாபனாச்சாரியாவிஸ்வ நாத நாயக்கரும், கிருஷ்ணப்ப நாயக்கரும், வீரப்ப நாயக்கரும் வரிசையாக இருகைகளையும் கூப்பி வீரனை நோக்கி கும்பிட்டு நின்றனர். ரத்தக்குளமாய் விழிக்கோளம் விரிந்தகன்ற வீரனின் கண் நரம்புகள் புடைத்தன. ‘நான் செல்ல வேண்டிய திசை கிழக்கில்லை. போக வேண்டிய இடம் பட்டறையுமில்லை என்ற பெரும் முழக்கத்தோடு ஆகாயத்தின் நட்சத்திரங்களின் முனைகளில் தீட்டிய திட்டலில் போதாத கூர்மையை எரிகற்களின் உரசல் ஈடு செய்தன. வாளின் இருபக்கக் கூர்மையிலும் சூரியனின் வெளிச்சம் குவிந்து தகித்தது. கால் நகங்களில் காட்டு மண் நிரம்பிய படைநாய் போருக்குத் தயாரனது. தன் தலைவன் வீரனின் ஏவல் மந்திரம் விறைத்த காதுகளில் பட்டவுடன் முன்னங்காலும், பின்னங்காலும் மடங்கி மடங்கி அவன் கண் குறித்த திசையில் பாய்ந்தன. படைநாயை முன்னே ஓட விட்டு வெள்ளைக்குதிரையில் விருட்டென்று ஏறியமர்ந்து கையிலிருந்த தோல்வாரைச் சொடுக்கியதில் தென் திசையில் நாயக்கர் மகாலை நோக்கித் தன் பாய்ச்சலை கிளப்பியது வெள்ளைக்குதிரை.

வேடிக்கைப் பார்த்து அரண்டிருந்த பரிசனங்களின் விழிகளில் என்ன நடக்குமோ என்ற அச்சமும், எதுவும் நடக்கலாமென்ற வியப்பும். பெண் கூட்டத்திலிருந்து குலவைச்சத்தம் எழும்பியது. சின்னம் ஊதப்பட்டதில் பலரும் ஆவேசம் வந்து ஆடினர். கள்ளர்களைச் சூறையாடிய மதுரைவீரனின் ஆவேசம் பிசகின்றி பன்மடங்கு பெருகி தென்திசை நாயக்கர் அரண்மனை நோக்கி குதிரை கடுக ஓட்டமெடுத்தது. நிலத்தின் மண் தெரியாவண்ணம் மையூற்றி கெட்டிப்பட்டிருந்த நீளமான கருப்புமைச்சாலையில் விரைந்தது. விஸ்வநாத நாயக்கர் கட்டிய கோட்டைச்சுவர்கள் இல்லை. அழகுணர்ச்சியற்ற கான்கிரீட்டு கட்டிடங்கள் காற்றுப்புக முடியாமல் ஒன்றையொன்று நெருக்கியடித்து மூச்சுத் திணறின. அகழியும் இங்குதான் இருந்ததென்ற தடம் அறியாமல் கருப்புமைச்சாலைக்கு அடியில் எங்கேயென்ற தடயமில்லாமல் புதைந்து கிடந்தது. ஊற்றிய எண்ணெய்யில் கொழுந்து விட்டெரியும் தீப்பந்தங்களின் கருமஞ்சள் வெளிச்சம் ஒழிந்து கொத்தவால் சாவடிகள் நிமிர்ந்து நின்ற இடங்களில் இரும்புத் தூண்கள். எந்திர விளக்குகள் ஒளியைப்பாய்ச்சி இரவும், இருளும் இல்லாமல் செய்திருந்தது. வெண்மதியின் நிழல் நகரை இருட்டிலிருந்து முற்றிலும் விலக்க முடியவில்லை. மேகங்கள் நடுங்கி கலைய வீரனின் குதிரைப்பாய்ச்சலும், வாளேந்திய தோற்றமும் செல்லும் திசையில் வழிநெடுக திரண்டவர்களின் பார்வை மறையாது நிலைத்துப் பார்த்தன.

வீரர்களின் கடிவாசல் கோட்டை போர்க்கதவு நொறுங்கி தூள் தூளாகிக் கிடந்தது. கோட்டைக்குள் நுழையவே பல நாட்களாகுமென்ற மனக்கணக்குக்கு எதிராக எதிர்ப்பார் யாருமின்றி திறந்து கிடந்ததில் வீரனின் விழிகளில் ஆச்சரியக் கோடுகள். அரண்மனைக்குள் நுழையும் முன் களம் கண்டு ஆண்டுகள் பல கடந்து யுத்தப்பசியில் கட்டுமீறி திமிறும் குதிரையின் தோள்மயிரை மெல்லத் தடவிக் கொடுத்து உள்ளே புகுந்ததுயுகங்களைக் கடந்த பெருங்கனவோடு வந்த வீரனின் பாரம் சிறிதளவு குறைந்தது. இடிந்து நொறுங்கிய கட்டிட சிதிலங்களின் மீது ஏறிச் சென்ற குதிரை அரண்மனைக்குள் நுழைந்ததும் கண்ட காட்சி வீரனுக்கு யுத்த வெறியூட்டியது. மேனியெங்கும் தீக்காயங்களுடன் அங்கங்கு வெந்து தோலுரிந்து தொங்கிய, பொம்மியும், வெள்ளையம்மாளும் கையில் வேலுடன் பெருமுழக்கத்தின் எதிரொலி,எங்களைத் தீயில் தள்ளிக்கொன்ற அதிகாரம் சரியட்டும், சரியட்டும், சரியட்டும், சரியட்டும், சரியட்டும்’. ஏந்திழைகளின் ஜோடிக் கோஷ்டத்தில்டும் டும்மென்று கிடுகிடுத்த சத்தம் வீரனின் வெட்டுப்பட்ட உடலைக் கிடத்தி சுலோகங்கள் மொழிந்தவாறு சடங்குகள் முடித்து தீப்பாய தூக்கிகொண்டு போனவர்களின் இதய அறைகளில் பலமாய் மோதி மோதி எதிரொலித்ததுஇத்தாலி நாட்டுக்காரனின் கிழிந்த வரைபடம் படபடவென எரியும் தணலில் அலையும் கரும்புகை கோட்டைக் கட்டுமானத்தில் அப்பாவி மக்களை நரபலி கொடுத்தவர்களின் இறந்த சுவாசக்குழல்களில் உட்புகுந்து மூச்சுத் திணற வைத்தது. வீரன் மீது கொண்டிருந்த காதல் சாதிச்சதுரங்களுக்குள் சிக்காமல் கசிந்துருகி வழிந்ததனால் வைக்கப்பட்ட நெருப்பில் ஒரு துளியைத் துப்பி எரித்ததில் மாளிகையெங்கும் தணலில் வெந்து மடிந்தது. நெருப்பில் கருகி வெந்த வெம்மையின் எரிச்சலை ஒன்று கூட்டி ஆளுக்கொரு பக்கம் எதிரெதிர் திசையில் நின்று இருவரும் ஒருசேர நொடி பிசகாமல் அடித்த அடியில் நாயக்கர் அரண்மனையின் பருத்த தூண்கள் துகள்துகளாய் சிதைந்தது. சுண்ணாம்புக் கலவையும், வெல்லப்பாகும் கலந்து கட்டிய கருங்கற்களின் இடுக்குகளிலிருந்து பொடிப்பொடியாய் சிதறி விழுந்த மனித எலும்புகளுக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் தங்கள் தீக்காயங்களிலிருந்து தீமூட்டி வெப்பமேற்றி உயிரூட்டினர். நாயும், குதிரையும் தம் நாக்கின் சொரசொரப்பை எலும்பில் தேய்த்ததும் செத்தப் பிண்டங்கள் உயிர் வந்து நிமிர்ந்தன. பழிக்குப் பழியல்ல! பலிக்குப் பழி!

தூண்களில் வாளும், வேலும் மோதும் சத்தம் யுத்த பேரிகையையொத்த ஒலியெழுப்பியதில் வீரனின் உடம்பு தினவெடுத்து சிலும்பியது. ‘கொத்துக் கொத்தாய் காவு கொடுக்கப்பட்ட மதுரைச் சக்கிலிகளின் உயிர் திறக்க வருகிறேன்வீரனின் துள்ளும் கூச்சலில் அரண்மனையின் மேற்கூரை இடிந்து சரிந்து வீழ்ந்து மண்ணுக்குள் புதைந்தது. காக்கும் குலதெய்வம் முனிசாமியின் வழிபாட்டுரிமைப் போராட்டத்தில் சிறைபிடிக்கப்பட்டு கைவிலங்குகளின் இரும்புக்கண்ணி உண்டாக்கிய காயம் எலும்பிலும் அச்சுப் பதிந்திருந்தது. ‘வீரன் வந்து விட்டான்....” கம்பீரம் ஒலிக்கும்       பேரோசை! எவர் சொன்னாலும் நம்ப மறுக்கும் மிரண்ட விழிகளின் கருப்புப் பாவைக்குள் கேள்விகள் பல ஒளிந்திருந்தன. ‘வீரன் வருகைக்காக எத்தனை ஊழியாய் காத்திருப்பது? கையில் காய்த்த காப்புகளின் வலி மறையும் முன்னேவீரா.. வீரா..’ எனும் பேரிரைச்சல். அன்று சூழ்ந்திருந்த எளியோரின் கதறலுக்கு வீரனிடமிருந்து மறுமொழியெதுவும் வராமல் பலிபீடத்திற்குள் நுழைக்கப்பட்ட கால அமைதியில் தலை நொடியில் துண்டானது. பலி கொடுக்கப்பட்டது! பீய்ச்சியடித்த ரத்தம் மண் குண்டங்களில் பிடிக்கப்பட்டு சுண்ணாம்புக்கலவையில் ஊற்றிச் சேர்த்து கற்களின் இடுக்குகளில் இட்டு நிரம்பி திடப்பட்டது. கோட்டை ஆர்ப்பரிப்போடு எழுப்பப்பட்டது. மதுரைக் கோட்டையைக் காவல் செய்த ரத்தக்கறை படிந்த தன் வீரவாளால் நாயக்கரின் சிவப்பு பட்டு போர்த்தப்பட்ட சிம்மாசனம் வீற்றிருக்கும் தரையை ஓங்கி அடித்த அடியில் பவளமும், ரத்தினமும், முத்தும், மரகதமும் தெறித்து ஓடிச் சிதற அஸ்திவாரம் ஆட்டம் கண்டு நிலம் வாய் பிளந்தது. வீரனின் தடித்த மாட்டுத்தோல் பாதரட்சைகள் பட்ட இடமெங்கும் பெரும்பள்ளம் உண்டானது. வீரனின் மாறுகால் மாறுகை வாங்கியவனின் கையெலும்புகள் மன்னனின் ஆனைக்கிணங்க சவக்குழிக்குள் பாதுகாப்பாய் இருந்தது. வீரனின் காலடித்தடம் அரண்மனை வாயிலில் பட்டதும் மிரண்டு விழித்த தன் தலையைப் பொருத்திக் கொண்டு எழுந்து வந்த உருவத்தை கால் நகங்களுக்குல் பற்றிக் கொண்டு கழுத்தைக் குடித்த நாயின் மஞ்சள் பற்கலின் நுனி பவழ நிறத்தில் வழிந்தது. ஒரு கையில் மாறுகை மாறுகால் வாங்கிய வீரனின் ரத்தம் வடியும் வாளையும் இன்னொரு கையில் கழுத்தறுத்துக் கொன்ற சூரியையும் இறுக்கிப் பிடித்து வீரன் சிதிலங்களை மிதித்து தாவி ஓடினான்.

அரண்மனையின் ஸ்திரத்தன்மைக்கு நரபலி கொடுக்கப்பட்டு காலத்தால் உருகிப் போன ஆயிரமாயிரம் மனித எலும்புகளில் நரம்புகள் கிளைத்து ரத்தம் ஊறிப் பாயத் தொடங்கியது. புது ரத்தத்தின் உஷ்ணப் பாய்ச்சலில் உடல் துள்ள குதித்து எழுந்துபழி சொல்லி வெட்டிச் சிதைத்துச் சிரச்சேதம் செய்து புதைத்தாலும் மீண்டு எழுவோம். காலச்சுழிப்பில் உள்ளிழுத்து அழித்து விட முடியாத வீரனின் பெயரில் மீண்டும் எழுவோம்எக்காளமிட்ட சத்தம் மதுரையின் நானூறு ஆண்டுகளுக்குப் பின்னுக்குப் போய் மதுரையின் கோட்டைச்சுவருக்குள் உலவிக்கொண்டிருந்த நான்கு வீதிகளிலும் பட்டு அரண்மனையின் எல்லா அறைகளிலும் எதிரொலித்தது சொர்க்க விலாசத்திலிருந்து திருமலை நாயக்கர் எழுந்து வந்து பார்த்த பொழுது மதுரை வீரனின் வாள் தர்பார் மண்டபத்தின் கடைசித் தூணை சரித்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment