முடிவிலக்கணம்
-சி.ராமலிங்கம்.
தம்பி கர்ப்பம் தரித்த ஐந்தாவது மாதத்தில் அப்பா
தைலந்தோப்பும் இழந்தை மரங்களும் நிரம்பிய தெற்காட்டு ஓடை புதரில் துண்டு துண்டாய் சிதைக்கப்பட்டு
கிடந்தார். ரத்தம் இறுகி காய்ந்துபோன கறித் துண்டங்களை சர்க்கார் அள்ளிச்சென்று பிரேதமாய்
கோர்த்து பொட்டலம் கட்டி தந்தது. அப்பா இறப்பிற்கு பின் இரண்டு மாதம் கழித்து ஒருநாள்
நள்ளிரவு அம்மா அந்த புதரில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்ததாக காட்டுக்கொட்டகையில் குடியிருக்கும்
ஒருவர் அப்பத்தாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் நள்ளிரவில் அடிக்கடி அம்மா சுய
நினைவிழந்து பெருத்த சினமூச்சு விட்டு சீறிக்கொண்டு அந்த புதருக்கு போய் ஒப்பாரி வைத்து
வருவதை வழக்கமாக்கி கொண்டாள். அம்மாவை அந்த நேரத்தில் எங்களால் அடக்க முடியாது, ஆங்காரமாய் கண்களை உருட்டி நாக்கை கடித்து ஒரு அகோரியை போல எங்களிருவரையும்
விரட்டியடிப்பாள். ஒரு எத்தில் நாங்களிருவரும் உருண்டு ஓடுவோம். அம்மாவை நெருங்கவே
பயமாயிருந்தது.
அன்று புரட்டாசி இடி மழை பேய்த்தனமாக சுழற்றியடித்துக்
கொண்டிருந்தது. முன்னிரவு ஓய்ந்து போகும் தருவாயில் சிறுநீர் கழிக்க எழுந்த அப்பத்தா
அலறியடித்துக் கொண்டு என்னை உசுப்பி எழுப்பியது. ‘சண்டாள
சிறுக்கி புருசனை தேடி போயிட்டாய்யா... பத்தாம் மாசம் இன்னிக்கோ நாளைக்கோ இடுப்பு வலி
வரும்.. அவ செத்து எக்கேடா போனாலும் பரவால்ல அந்த பச்சை பாலகன் என்ன பாவம் செஞ்சுச்சு..
எழுயா சாமி... அந்த குடையை எடு வா வா.. வீட்ட இழுத்து மூடு..’ எனக்கு பிரம்மை பிடித்தாற்போல் இருந்ததது.
அப்பத்தாவின் பேச்சைத் தட்டாமல் அவள் சொல்லும்படி செய்தேன். தெற்காடு நோக்கி யார் கண்ணிலும்
படாமல் ஒளிந்து ஒளிந்து நடந்தோம். மின்னல்கள் கண்ணை வெடுக் வெடுக்கென பிடுங்குவது போல
மின்னி மறைந்தது. பெரும்பெரும் இடிகள் குலை நடுங்க செய்தது. ‘கரண்ட் அடிக்கும்யா இரும்பை பிடிக்காத’, குடையின் ரப்பர்
பிடியை மட்டுமே பிடித்து நடக்கச் சொல்லி அப்பத்தா ஆணையிட்டாள். தன் கைத்தடியை டப் டப்பென
கற்தரையில் ஊன்றி தட்டி விறு விறுவென நடந்த அப்பத்தாவின் நடைக்கு ஈடுகொடுக்க முடியில்லை.
‘அக்கம்பக்கம் பாக்காம நேரா நிமர்ந்து பார்த்து நடய்யா’ என அப்பத்தா சொன்ன கணத்தில் அக்கம்பக்கம் பார்க்கத்தோன்றியது. சீறும் காற்றில்
தூரத்து மழைவானம் உடலை உலுக்கி ஒரு சிலிர்ப்பை தந்தது. அது பேய்க்கணம்.
அவ்வப்போது மின்னல் வெளிச்சத்தை லாவகமாக்கி பாதையை
விடாமல் பிடித்து நடந்துபோனோம். தைலந்தோப்பருகே சிறு புற்று ஒன்று மழையில் கரைந்ததால்
உள்ளிருந்து வெளியேறிய இரண்டு பெரும் நாகங்கள் கோரமாய் சண்டையிட்டு கொண்டிருந்தது.
அதை பார்த்ததிலிருந்து அப்பத்தா ஏதோ மந்திரம் ஓதிக்கொண்டே நடந்தாள். அப்பத்தோ ஒரு இலக்கிய
வாசகி அதுவும் லா.சா.ரா-வின் தீவிர ரசிகை. அப்பா இருந்த காலத்தில் அம்மாவை வர்ணித்து
கவிதை எழுதி தருமளவு அப்பத்தா இலக்கியம் கற்றிருந்தாள். அப்பத்தாவின் மொழிநயத்தில் தேன்வடிகிறதென்பாள் அம்மா.
அம்மாவின் பிறழ்வுமனங்கண்டு ஒருநாள் தன் குறிப்பேட்டில்
இப்படி ஒரு கவிதையை அப்பத்தா எழுதினாள்,
"செழித்த வனப்புள்ள
பூக்காடொன்று
தன் தலைகளை
கொய்து கொண்டிருக்கிறது
இது பூமியின் சாபம்"
அம்மாவின் வனப்பு அத்தனை பிரசித்தி பெற்றது. அப்பத்தா அம்மாவை தன் முந்தானையிலேயே முடிந்து வைத்திருப்பாள்.
அடிக்கடி திருஷ்டி கழித்து போடுவாள். லா.சா.ரா-வின் வர்ணிப்புகளனைத்தும் உன் ஆத்தா
காலுக்கு சமானம்யா, என எத்தனையோ முறை அப்பத்தா சொல்லக்
கேட்டிருக்கிறேன். நான் என் அம்மாவை அச்சடித்தாற்போல இருப்பேன். அதனாலேயே அப்பத்தாவுக்கு
என்மேல் தனிப்பாசம். அப்பத்தாளுக்கு என் அப்பாவை அறவே பிடிக்காது. அப்பாவின் முரட்டுத்தனத்துக்கு
அம்மா ரசிகை, காதலி... அப்பத்தா அதை வெறுத்தாள். தம்பி அப்பாவை
அச்சடித்தாற் போல் இருப்பான். அப்பாவின் முரட்டு சுபாவமும்.....
அம்மாவினுள் கனன்று கொண்டிருந்த நெஞ்சுத்தீயை முலைப்பாலாய்
ஊட்டி தம்பியை வளர்த்தாள். தம்பி உடல் மெத் மெத்தென அகன்று திரண்டு வந்தது. தம்பி எங்கள்
ஊரின் சண்டியணானான். பாடசாலைகள் ஏதும் செல்லாமல் அம்மாவாள் எழுத்தறிவு படிப்பறிவு எல்லாமும்
கற்றான். எனக்கு இணையாக ஆங்கிலம் பேசுவான்.
தம்பிக்கான முத்தம், அணைப்பு, அன்பு என எல்லாமுமே மூர்க்கமாகத்தான் அம்மாவாள்
வழங்கப்பட்டது. நான் அம்மாவிடமிருந்து அம்மாவால் விலக்கப்பட்டு அந்நியமாகிக்கொண்டிருந்தேன்.
நாளடைவில் அவள் அம்மாவா அப்பாவா என்கிற குழப்பம்கூட வந்தாயிற்று. பயமும் கூடிற்று.
தம்பியை பார்த்து நிறைய பொறாமைப்பட்டிருக்கிறேன். பாட்டி அதை தவறென்று விளக்கி அகிம்சையை
போதிக்கும். நானும் பாட்டியும் எட்டு ஆண்டுகள் பெருநகரமொன்றில் தாங்கிவிட்டோம். அங்கேயே
படித்து முடித்து வேலையும் பார்த்தேன்.
தம்பி வளர வளர அம்மா தன் பழைய வனப்பை மீட்டு மெருகேற்றினாள்.
அக்காள் தம்பியென ஊர்மெச்சுகிற வாகாக இருவரும் ஊரை ஆண்டார்கள். வயல் பரப்பும் பண்ணையமும்
பெருகி வந்தது. அசுரத்தனமான உழைப்பை போட்டார்கள். இரண்டடுக்கு மாடிவீடு கட்டப்பட்டது.
தம்பியின் இருபதாவது பிறந்தநாள் பரிசாக ஜிப்ஸி கார் வாங்கப்பட்டது. அதன்பின் டிராக்டர்.
இப்போதும் சுற்று வட்டாரத்தில் நாங்கள் செல்வந்த குடும்பம்தான்.
அம்மாவின் உடல் மட்டுமே பெண்ணுடலாய் அலைந்தது.
முழுக்க முழுக்க வன்மமுள்ள ஆணாகத்தான் கோபப்படுவாள். வருடம் ஒரு பஞ்சாயத்தை தாயும்
மகனும் அழைத்து வருவார்கள். யார் எதிர்த்தாலும் இருவரும் சேர்ந்தே புரட்டியெடுப்பார்கள்.
அம்மாவை நிறைய முறை உற்றுக்கவனித்திருக்கிறேன்
ஒரு முரட்டு சுபாவத்தை தன் கண்களில் தேக்கியிருப்பாள்.
"சாண்டாளியும் இந்த களையனும் இம்புட்டு வஞ்சத்தோட
திரியுறாங்கய்யா.... "இது என்றைக்கு தாண்டவமாடப்போவுதோ" என்று அப்பத்தா அப்போதே
கணித்தது போல்தான் அவர்களின் முடிவும் நடந்தேறியிருக்கிறது.
000
அந்த புதரை நெருங்கி கொண்டிருந்தோம். அம்மா மல்லாக்க
படுத்து வயிற்றை அழுத்தி கீழிறக்குவது ஒரு மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. அப்பத்தா
அருகே வந்து அம்மாவை உச்ச கோபத்தில் எட்டி உதைத்தாள். சுரணையற்றாற்போல் அம்மா ராவணா
ராவணா என்று அப்பாவின் பெயரை மூச்சைப்பிடித்து உச்சரித்துக் கொண்டிருந்தாள். வலியை
சமன் செய்ய அம்மா போராடுவது முகத்தில் தெரிந்தது.
சரி தூக்கு என்று கைகளை பிடிக்க சொல்லிவிட்டு கால்களை
அப்பத்தா பிடித்தது, எங்களால் தூக்க முடியவில்லை. அப்பத்தா
சாமியை வேண்டி அழ ஆரம்பித்தாள், இடையிடையே அம்மாவையும் வசைபாடினாள்.
எனக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி
ஓடினேன்.
அப்பத்தா தன் கொப்புத்தோட்டை விற்று நடைபழகும்
புது தள்ளுவண்டி ஒன்று தம்பிக்கு வாங்கி வந்திருந்தாள். எனக்கு வாங்கிய வண்டியின் சக்கரங்களை
கழட்டி நான் ஒரு இழுவண்டி செய்திருந்தேன். அதாவது ஒரு ஐந்தடி மரக்கம்பை மையத்தில் கொடுத்து, அடிப்பகுதியில் இரண்டடி அகலம் இருக்குமாறு சிறு சிறு மரக்கம்புகளை இணைத்து
ஆணியடித்து சக்கரம் பூட்டப்பட்டது. அந்த வண்டியில்தான் மாட்டுச்சாணம் அள்ளி கூடையை
வரிந்து கட்டி தள்ளிக்கொண்டு போய் வயலில் உள்ள குப்பையில் கொட்டி வருவேன்.
கூடையோடு இழுத்து வந்தேன். அம்மா வலியின் உச்சத்தில்
தவித்தாள். தலை வந்துவிட்டதென அப்பத்தா சொன்னாள். அம்மாவை தடவிக்கொடுத்து முக்கச்சொன்னாள்.
ராவணா ராவணா என்ற உச்சரிப்பை நிறுத்தவே இல்லை. என்னை அம்மாவின் கால்களை அசையாமல் பிடிக்க
சொன்னாள். அப்பத்தா பிரசவம் பார்த்து முடித்தாள். குழந்தை பிறந்த வலியில் ராவணா என்று
உரக்க கத்தினாள் அம்மா.
கொஞ்சம் மயங்கி, பிறகு
தெளிந்ததும் குழந்தையை அம்மாவிடம் கொடுத்து மடியில் வைக்கச்சொல்லி, அம்மாவை அந்த கூடையில் சுருண்டு அமரச்செய்தோம். பாட்டி இழுக்க நான் அம்மாவின்
முதுகை பிடித்து தள்ளிகொண்டு வந்தேன்.கரைந்த புற்றருகே இரண்டு பாம்புகளும் ரத்தக்காயத்தில்
இறந்து கிடந்தன.
வீடு வந்தடைந்ததும் செய்யவேண்டியதை பாட்டி செய்தாள்.
விசயம் கசியவும் ஊரார் கூடினார்கள்.
தம்பிக்கு பாட்டி வைத்த பெயர் "மழைவாணன்"
.
பெயரை சொல்லி சர்க்கரைத்தொட்டு வாயில் வைக்க சொன்னார்கள்.
ஆனால் அம்மா வேறு ஒரு பெயரை சொல்லி வைத்தாள்.
"வீரப்பறையா" .......
அம்மா வன்னியர் குடும்பத்து பெண், அப்பா தலீத். காதல் திருமணம். அம்மாவின் குடும்பம் வஞ்சம் கொண்டு அப்பாவை தீர்த்தது.
அப்பாவை கொன்றவர்கள் அம்மாவின் அம்மாவும், அம்மாவின் அண்ணனும்தான்.
மாமாவின் பெயருக்கு முன்னால் "வீரவன்னியன்" என்ற முன்னொட்டு உண்டு. அம்மாவின்
குடும்பம் அந்த பகுதியில் ராஜ மரியாதையுள்ள பணக்கார குடும்பம் என்பதால் அப்பாவின் கொலையை
எளிதில் கடந்தார்கள்.
தம்பியின் ஒவ்வொரு வருட வளர்விலும் அப்பாவின் தோற்றம்
ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு முளைத்து கொண்டிருந்தது.
தம்பியின் இருபத்தைந்தாவது வயதில். அம்மா தன் வஞ்சத்தை
தீர்த்துக்கொண்டாள். அதே தெற்காடு ஓடைப் புதரில் மாமாவின் தலையை தம்பியும் பாட்டியின்
தலையை அம்மாவும் ரத்தமொழுக பிடித்துக்கொண்டு நின்றார்கள். ஊர் சூழ்ந்து அந்த கோரத்தை
வேடிக்கை பார்த்தது. என் மனைவி அந்த காட்சியை பார்த்ததும் மயங்கினாள். அவளடைந்த அதிர்ச்சியால்
நான்கு மாத கர்ப்பம் கலைந்தது. ஓடிப்போய் அம்மாவை கட்டியணைத்துக்கொண்டு கதறினேன்.
"ஏன்மா இப்டி பன்னின?" என கதறிக்கேட்டேன். தாயும்
மகனும் கைகோர்த்து சிலையாய் நின்றார்கள்.
போலிஸ் வந்ததும். அம்மா கண்களில் நீர் கசிந்தது.
கதறி அழுதாள். என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு
அம்மாவின் அணைப்பும் முத்தமும்.
போலிஸ் ஜீப்பில் ஏறியமர்ந்து என்னை முத்தமிட்டபடி
அம்மா சொன்ன கடைசி வாசகம்.,
"உனக்குதான்யா எல்லாமே, வாழு ராஜா மாதிரி வாழு, எவனுக்கும் சளைச்சவன் இல்ல நீ.....
திமிரா வாழனும்யா.......நம்ம குடும்பமும் இப்ப
ராஜ குடும்பம்....."
000
முதலில் தூக்கு தண்டனை கிடைத்தது. பிறகு கருணை
மனு அனுப்பி ஆயுள் தண்டனையாக குறைத்தேன். அம்மாவும் தம்பியும் சிரித்த முகத்தோடு துளியும்
கவலையில்லாமல் சிறையில் வாழ்ந்தார்கள். என் மனைவி, பிள்ளைகளோடு
அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவேன். அப்பத்தா இறப்பிறகு போலிஸ் காவலுடன் இருவரும்
வந்து சென்றார்கள். அத்தனை வயதாகியும் அம்மாவின் தலை நரைக்கவே இல்லை.
ஆயுள் தண்டனை முடிந்து அழைத்து வருகையில் சிறைச்சாலைக்கு
மிக அருகிலேயே அம்மாவும் தம்பியும் துப்பாக்கியால் கொல்லப்பட்டார்கள்.
கொன்றது அம்மாவின் அண்ணன் மகன்.
000
No comments:
Post a Comment