Wednesday, 3 July 2019

நடுகல் 2 - மொழியாக்கம்


























வல்லூறு - ப்ரன்ஸ் காஃப்கா
 தமிழில்: வே.நி.சூர்யா


வல்லூறு ஒன்று என் பாதங்களை கொத்திக்கொண்டிருந்தது. அது ஏற்கனவே என் பூட்ஸை கிழித்து காலுறைகளை கந்தலாக்கிவிட்டது. இப்போது என் பாதங்களை கொத்திக் கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் என் பாதங்களை அது கொத்தியது. ஓய்வின்றி அப்பறவை என்னை பலமுறை வட்டமிட்டது. பின்னர் திரும்பவும் அதனுடைய வேலையை தொடர்ந்தது. அவ்விடத்தை கடந்துசென்றுகொண்டிருந்த ஒருவர் இதை நின்று கவனித்தார். பின்னர், இந்த வல்லூறால் ஏன் துன்பப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.

"எனக்கு உதவிசெய்ய யாருமில்லை" என்றேன். "என்னை அது தாக்கத் தொடங்கியபோது, அதை விரட்ட முயற்சி செய்தேன் , குரல்வளையை நெரிக்கக்கூட முயன்றேன் ஆனால் இம்மிருகங்கள் மிக வலிமையானவை. இது என் முகத்தையே கொத்தப் பார்த்தது. யோசித்துப்பார்த்தேன், என் பாதங்களை தியாகம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். இப்போது ஏறக்குறைய அவற்றை துண்டுத்துண்டாக கிழித்துவிட்டது."

"உங்களை நீங்களே இப்படி சித்ரவதை செய்ய அனுமதிப்பது விந்தையாக இருக்கிறது" என்றார். "ஒரு தோட்டா போதும் வல்லூறின் கதை முடிந்துவிடுமே"

"உண்மையாகவா?" என்றேன். "மேலும் உங்களால் அதை செய்ய முடியுமா?"

"மகிழ்ச்சியாக" என்றார். "வீட்டிற்கு சென்று என்னுடைய துப்பாக்கியை எடுத்துவர வேண்டியது மட்டும்தான். உங்களால் ஒர் அரைமணிநேரம் பொறுத்திருக்க முடியுமா?"

"எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்றேன். பின்னர் வலியை அடக்கிக்கொண்டு "தயவுசெய்து எப்படியாவது முயற்சித்துப் பாருங்கள்" என்று சொன்னேன்

"நிச்சயமாக" என்றார். "எவ்வளவு சீக்கிரத்தில் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடுகிறேன்"

இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கையில் எல்லாவற்றையும் வல்லூறு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடைய பார்வையை எனக்கும் அவருக்கும் இடையே அலையவிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அது அனைத்தையும் புரிந்துகொண்டது என்று நான் தெரிந்துகொண்டேன். அது சிறகடித்து எழுந்து வட்டமடித்தது, பின்னர் ஈட்டி எறியும் விளையாட்டு வீரனைப்போல பெரிய விசையோடு என் வாயில் அதனுடைய அலகை ஆழமாக உட்செலுத்தியது. கீழே சரிந்து கொண்டிருந்தபோது என் ரத்தத்தில் ஈடுசெய்யமுடியாத அளவுக்கு அது அமிழ்ந்திருப்பதை உணர்ந்தேன். என் ரத்தம் எல்லா பள்ளங்களையும் நிறைத்து எல்லா கரைகளையும் கடந்து பெருக்கெடுத்து விரைகிறது.

•••


No comments:

Post a Comment