Wednesday 3 July 2019

நடுகல் 2 - ராசுவின் பத்திகள் 2

ராசுவின் பத்திகள் இரண்டு
ஓணான் காதல்

ஓணான் குல ஓணான்களுக்கு காதல் வருமா? அவைகள் காதலிக்குமா? கர்ப்பமான காதலி ஓணானை காதலன் ஓணான் கழட்டி விட்டு வேறு ஓணானைப் பார்த்து கண்ணடித்து பல்லை காட்டுமா?
இரண்டு நாட்களாக இந்த கேள்விக்கு விடை கிடைக்காமல் மண்டை வெடித்து விடும் போல் உள்ளது அல்லது நானும் ஓணான் ஆகி கல்லடிபட்டு சாகவேண்டி நேரலாம் .
சண்முகனால் வந்த வினை இது. அவனுக்கும் கோயம்புத்தூர் கல்லூரியில் படிக்கும் வசுமதிக்கும் காதல் பூத்துவிட்டதாக சண்முகனே சொன்னான். பொய்யாக இருக்குமென்று ஒதுக்கவும் முடியாது. அப்போது அவன் என்னைவிட ஒரு கோட்டர் அதிகம் அருந்தியிருந்தான். குடிகாரன் உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டான் என்று தமிழ்நாட்டில் குடிவாசிகள் எல்லோருக்கும் தெரியும் .
வசுமதி நல்ல அழகி. அதை அவளே என்னிடம் பலமுறை சொல்லி என் காதலை நிராகரித்து இருக்கிறாள். சண்முகனுக்கு வேறு ஒரு பெயர் உள்ளது. அது 'ஒடக்காய்' ! அவன் ஆகிருதியை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். 'பெயர் சொன்னால் போதும் அழகு எளிதில் விளங்கும்.' ... அப்படியான ஒடக்காய்கள் எல்லா ஊரிலும் இருப்பர்.” உருவத்தை வைத்து கேலி செய்யக்கூடாது என்பது உங்களை போலவே எனக்கும் ஒரு கொள்கை தான்.
சண்முகன் விசயத்தில் அந்தக் கொள்கை காற்றில் பறக்க சண்முகனே தான் முழுக்காரணம். அந்தக் கால அப்பாஸ் தொடங்கி இன்றைய சிம்பு வரை அவனோடு ஒப்பிட்டு அவர்களை கிழித்து தொங்க விடுவான். அதற்கு அவனே சிரித்துக் கொள்ளுவான்.
வெள்ளிக்கிழமையானால் அவன் அம்மாவை வற்புறுத்தி தனக்கு சுத்திப்போடச் சொல்லுவான். எல்லாத்தையும் விட போன வாரம் மப்பில் இருக்கும் போது மாப்ள! நீயெல்லாம் பொண்ணு பாக்க போகும் போது ஜாக்கிரதயா இருக்கணும்தா ... சொல்லிட்டேன் அப்பறம் உன்ற இஷ்ட்டம்"
"ஏன்ன மாப்ள இப்டி சொல்ற...? "
"பின்ன ...! பொண்ணு உன்னைய பாத்தறக் கூடாதல்லோ.... ஹஹ்ஹஹ்ஹஹா
அந்த சண்முகனுக்கு வசுமதியா?  நெவர் ...
நல்ல காரியம் செய்ய நேரங்காலம் பாக்கக்கூடாது இல்லீங்ளா ... அதான் உடனே காய்ன் பாக்சிலிருந்து வசுமதியின் அண்ணனுக்கு போன் அடித்து குரலை மாற்றி போட்டுக் கொடுத்தேன் .
"உங்க தங்கச்சிய கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. இப்டி இப்டியெல்லாம் நடக்குதுஎன்று எக்ஸ்ட்ராவாக நாலைந்து பிட்டுகளை சேர்த்து போட்டு விட்டு சண்முகனுக்கு சங்கூதிவிட்ட சந்தோஷத்தில் போனை வைத்தேன் .
வழக்கத்துக்கு மாறாக அன்று இரவு சண்முகனே சரக்கு வாங்கி கொடுத்து அதிர்ச்சியளித்தான். அடுத்த அதிரச்சியை முதல் ரவுண்டின் முடிவில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் அளித்தான் .
"மாப்ள வசுமதி அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாரு. ஒரு நல்ல நாள் பாத்து பொண்ணு பாக்க வரசொன்னாரு. எங்க வீட்ல எல்லாரும் செம்ம குஷியாயிட்டாங்க ! அடுத்த வாரம் வரோம்னு சொல்லி அனுப்புனோம் . அவ அண்ணன்ட்ட ஒரு கார் வாங்கி தர சொல்லலாம்னு இருக்கேன் . டேய் டேய் என்ன மாப்ள ஒரு ரவுண்டுக்கே மட்டையாயிட்ட? "
ஓணான்களுக்கு காதல் வரும். அது போக அவைகளுக்கு சாமுத்திரிகா லட்சணத்தில் சொல்லப்படாத காதல் மச்சம் கச்சிதமாக அமைந்தும் இருக்கும். சரியான இடத்தில் .

000

சிரிச்சி சிரிச்சு வந்தான் சீனா தானா டோய்

இரவு ஒரு மணிக்கு புல் மப்பில் ஒத்தையடிப்பாதையில் வந்து கொண்டிருந்த முருகேசனுக்கு பறக்கும் தட்டில் வந்து இறங்கி ஒன்னுக்கு அடித்துக் கொண்டிருந்த ஆண்டெனா பொருத்திய கூமாச்சி மண்டையன்களை அடையாளம் தெரியவில்லை.
டாடா ஏ.சி.- ல் மாட்டுச்சந்தையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து வீடு வரைக்கும் லிப்ட் கேட்டான்.
தங்கள் கிரகத்தில் குட்டி ஆண்டெனா மண்டைகளுக்கு விளையாட ஒரு விநோத ஜந்து கிடைத்த மகிழ்ச்சியில் முருகேசனை தூக்கி உள்ளே போட்டு கதவை மூடினார்கள். உள்ளே டிவியெல்லாம் இருப்பதை பார்த்த முருகேசனுக்கு அவர்கள் மேல் பிரியம் பொத்துக்கொண்டு வர இடுப்பில் செருகியிருந்த ஹாப் பாட்டிலையும் மடித்து வைத்திருந்த ஊறுகாய் பாக்கெட்டையும் எடுத்து நீட்டியபடியே மட்டையாகிவிட்டான்.
காலையில் ஊரே திரண்டுவிட்டது அங்கு. யாரும் மூச்சு கூட விடவில்லை. தொலைவில் இருந்தே எட்டிப் பார்த்தபடி பீதியோடு நின்றிருந்தனர்.
முருகேசனின் பங்காளி சண்முகனுக்கு தகவல் சொல்லப்பட்டது. நேற்று நடந்த வரப்புச்சண்டையில் சண்முகனிடம் இரண்டு கன்னத்திலும் கந்திப்போகும் அளவுக்கு பிரசாதம் வாங்கியிருந்தான் முருகேசன். எதிர்வினையாற்ற எடுபடாமல் செமத்தியாக வாங்கிக் கொண்ட பிறகு ஆள் வைத்து சண்முகனை தூக்குவதாக முருகேசன் சவால் விட்டிருந்தான்.
சண்முகனுக்கு தகவல் சொல்ல போனவன் அவனை தலைமறைவாக இருக்கும் படி சொல்லி கிழக்கே போகும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது பறக்கும் தட்டுக்குள் லேசாக நெளிந்தான் முருகேசன். அப்படி நெளிந்தபோது அருகில் மட்டையாகிக்கிடந்த கூமாச்சி மண்டையனின் ஆண்டெனா முருகசனின் கன்னத்தில் உரசியது .
தூக்கக் கலக்கத்தில் இருந்தவனுக்கு நேற்று சண்முகன் அந்த கன்னத்தில் விட்ட அறை கனவில் வரவும் ....
பறக்கும் தட்டுக்குள் உறக்கத்தில் உச்சா போனான் முருகேசன்!

000
No comments:

Post a Comment