Wednesday 3 July 2019

நடுகல் 2 - தமயந்தி கட்டுரை



                                     ராசாவே உன்ன நம்பி...

                      -குரல் சிறகில் மகரந்தம் சிந்தும் ராணிகள்

                                          - தமயந்தி

ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு திடீர் ஞானோதயம் வந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்து விட்டேன். மரமேறி குரங்கு விளையாடி அலைந்தவள் புத்தகமும் கையுமாக இருப்பதைப் பார்த்து யாராலும் நம்பவே முடியவில்லை. அந்த சயின்ஸ் பரீட்சையில் நான் 98 மதிப்பெண் எடுத்து விட்டதை அப்பாவால் முதலில் நம்ப முடியவில்லை. பின்னரே அவரால் சந்தோஷப்பட முடிந்தது. அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாய் எனக்கு ஒரு பிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் பரிசாய் வாங்கிக் கொடுத்தார். அத்தனை உயிரான பரிசு அது. இன்றைக்கும் தொழில்நுட்பத்தில் சிறப்பான ஒலி வடிவங்களை வாங்க இயன்ற போதும் வெளிர் வெள்ளையும் வெள்ளியும் கலந்த நிறத்தில் கறுப்பு பொத்தாங்களைக் கொண்ட அந்த ரேடியோவிற்கு இணையோ ஈடோ ஏதும் கிடையாது.

திருநெல்வேலி பெருமாள்புரம் ரவுண்டானா பக்கமிருந்த எங்கள் வீட்டுக்கு என் காதுக்குப்பக்கம் உலகத்தைக் கொண்டு வந்தது அந்த ரேடியோ தான். உலகமென்றால் இசை உலகம். ஏழு நிறங்களிலான உணர்வுகளாலான உலகம். என் பால்ய பருவத்து மகாராணிகள் என்னை வந்து அடைந்தது அதன் வழியே தான். பி.சுசீலா, ஜிக்கி என் ஆதர்சம். மன்னவனே அழலாமா என்று சுசீலாம்மா ஆரம்பித்தால் ஒரு மேகம் என் வீட்டின் மேல் படர்ந்து முதல் துளியை என் உச்சியில் தூறிப் போகும். வெறும் இசையால் நிறைந்த உலகம் இருக்கும் காலம் அது.


பால் போலவே வான் மீதிலே  என்று சுசீலாம்மா பாட ஆரம்பிக்கும் போது திரளும் வெண்ணைக்கட்டி ஆகாயத்தில் வெண்ணிலவின் மீது வருடி இளகி நிற்கும். மனதில் விசிறித் தகிக்கும் காயங்களுக்கு மயிலிறகால் தடவி விட்டாற் போல அந்த மாயக் குரலின் சிறகுகள் என்னை அந்த பால்யப் பொழுதுகளில் மீட்டெடுத்திருக்கிறது.

பால்யம் என்பது வாழ்வின் அடித்தளம். பால்யத்தின் நினைவுகளை காலம் தன் அழிரப்பரால் அழிக்க முடிவதில்லை. காலத்தின் தோல்வியை எழுதிச் செல்லும் பெருவெள்ளம் பால்யத்தின் இசை. பால்யத்தின் சுவடுகளை என்னில் பதித்தவர் பி.சுசீலா. 70களில் பிறந்தவர்களின் பால்யத்தில் நிறைந்திருக்கும் பெண் குரல் அவருடையதாக இருக்கும். தெற்குப் பகுதி திறமைகளுக்கு ஒரு நாளும் பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற என் நம்பிக்கை தவறில்லையெனில் பி.சுசீலா அவரின் பளிங்கு குரலுக்காக லதா மங்கேஷ்கரை விடவும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

நெஞ்சில் ஒரு ஆலயத்தில் ’சொன்னது நீ தானா’ பாடலில் சம்மதம் தானா என்றொரு வரி வரும். அதில் சுசீலாவின் குரல் உணர்த்தும் அர்த்தங்களும் வலியும் நாம் அடுத்த வரியை வந்தடைவதற்கு நேரம் ஆகும். இன்னொரு கைகளிலே நான் நான் நானா என்ற குரல் ஒருவரை காதலித்து இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் எல்லோருமே தாண்டிப் போகாத, போக முடியாத வரி. வரி. என் பதின்ம பருவத்தில் நான் காதலித்த போது பாடல்களே என் காதலின் சிறகுகள் ஆனது. அந்தக் காதல் மிக விசித்திரமானது. மவுனங்களால் நிறைந்த ஒரு காதலுக்கு இசை மட்டும் மனதில் நீரூற்றினபடியே இருந்திருக்கிறது என்பதை இப்போது தெள்ளத்தெளிவாக உணர்கிறேன். அப்போது இளையராஜா கோலோச்சிய காலம். ஜானகி தனது தேன் குரலில் காதலை, காமத்தை, தாபத்தை உச்சரித்து சிரித்து தமிழ் இசையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தார்.

ஜிக்கியின் வீச்சு மங்கத் தொடங்கியிருந்த காலம் அது. ஜிக்கியின் குரல் வழக்கமான குரல்களிலிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பது. மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..இனிக்கும் இன்ப இரவே நீ வா வா என்று அவர் பாடும் போது வறண்ட பாலைவனத்தில் தனிமையைக் கிழிக்கும் ஒற்றைப் பறவையின் இருப்பை அவர் மனதில்  செலுத்திப் போவார். பாடல் ஆரம்பிக்கும் போது வரும் சின்ன ஹம்மிங்கில் ஒரு புது உலகினுள் கேட்போரை அழைத்து செல்லும் மென்விசையோடு இருக்கும். காண்போம் பேரின்பமே என்று பாடும் போது கூட அவர் அதிக எழுச்சியடையாமல் அதிராது அந்த பேரின்பதை இசைப்பது எனக்கு உவப்பாய் இல்லாமல் இருந்தும் என் குடும்பத்தில் என் தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பெண்களுக்கு அந்த சாந்தம் மிகவும் பிடித்த ஒன்றாகத் தான் இருந்திருக்கிறது. ஏ.எம்.ராஜாவின் மென்மையான குரலுக்கு எப்போதும்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் படமொன்றில் ‘நினைத்தது யாரோ நீ தானே’ பாடல் பாடினார். கர்நாடக இசையின் தாக்கம் மிளிரும் குரலின் வசியம் வருடங்கள் கழிந்தும் கரையவில்லை.
ஜானகி உச்சநிலை பாடகியாக வலம் வந்த 80களில் இசையில், இலக்கியத்தில் எனக்கு ஈடுபாடு தொடங்கியிருந்த காலம். காதல் வேறு காற்றின் திசைகளில் அலையும் செடி போல மனதை அலைக்கழித்து கொண்டிருந்தது. சாதி குறுக்கிட்ட காதல் அது. நீண்ட நாளாய் காணாத, பேச முடியாத காதலனிடம் பேசிய ஒரு ஆசையை தீர்த்து வைக்கும் பாடல்கள் ஜானகிக்கே சொந்தம்
என் ஜீவன் பாடுது... உன்னைத் தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
என்று ஜானகி பாட ஆரம்பிக்கும் போது என் காதலனின் முகம் கண் முன் வந்து நிற்கும். காதலை பாடல்களால் வெளிப்படுத்தி, ஆசுவாசப்படுத்திக் கொண்ட காலகட்டம் அது. காதல் ஓவியத்தில் ஜானகியின் பாடல்கள் இன்றும் மனதை விட்டு அகலாததாக வாழ்க்கையை ஆக்கி விட்டது. அப்போது எங்கள் காதல் வாழ்வில் கைக்கூடாது என்பதை இருவரும் உணரத் தொடங்கிய காலம். அதை உரையாடவோ வார்த்தைகளால் வெளிப்படுத்தவோ முடியாத காலகட்டம். நீண்டு கிடக்கும் இடைவெளிகளில் ஓடும் ரயில் போல எங்கள் வாழ்வின் மீது வாழ்க்கை கடந்து சென்றிருந்தது.
அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் போடுமே
விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்
என்ற வரிகளில் எங்கள் காதலின் ஆன்மா தோற்காமல் போன நினைவுகளாய் மாறியதை ஜானகி அறிவாரா என்ன? குரல் என்பது மொழி. ஒரு ஸ்பரிசம். ஸ்பரிசக் காட்டிலும் காதலனின் ஸ்பரிசத்தின் தனித்தன்மை அறிந்த பறவை தான் இசை. தன் சிறகை உணர்வுக்காட்டின் குரல்வெளியில் பரந்து விரிக்கும் பறவை ஒரு வாழ்க்கையை கடக்கிறது.
பெரும்பாலும் தமிழ் திரையிசை பாடல்களில் பெண்கள் பாடியப் பாடல்களில் காதல், காமம், காதல் தோல்வி மட்டுமே அதிகமாக உச்சரிக்கப்பட்டுள்ளன. அதைத்தாண்டிய வாழ்வின் பாரமோ, குழப்பங்களோ அல்லது தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியாய் கொண்டாடப்படும் தத்துவப்ப்பாடல்களோ வெளிப்படவில்லை. ஒவ்வொரு பூக்களுமே போன்ற ஒரு சில பாடல்களே இதற்கு விதிவிலக்கு. ஒரு அன்பற்ற, பகிர்தலற்ற , மூர்க்கமான மனைவியியல், உடல் வன்முறை சார்ந்த திருமண வாழ்வில் நான் இருந்திருக்கிறேன். அப்போது ரஹ்மான் இசையுலகை மெல்ல வசீகரிக்க ஆரம்பித்திருந்தார். ராஜாவை முதல் காதலனாக வரித்த மனது ரஹ்மானை ரசித்தாலும் ஏற்றுக் கொள்ளவோ பகிரங்கமாக ஒத்துக் கொள்ளவோ தயக்கம் காட்டியது. ஆனாலும் அலைப்பாயுதே திரைப்படத்தில் எவனோ ஒருவன் யாசிக்கிறான் பாடலில் ஸ்வர்ணல்தாவின் குரல் விரிக்கும் மாயவலையில் என் காதலனின் வாசத்தை என்னிடம் ரஹ்மான் கொண்டு வந்தார்.
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

உண்மை தான். இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ நான் இறந்திருப்பேன். ஒரு முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த காலகட்டத்தில் ஸ்வர்ணலதா மட்டுமே என் வாழ்க்கைத் தோழி.

நீ எங்கே என் அன்பே...நீயின்றி நான் எங்கே?
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்

நீயின்றி நான் எங்கே?

விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

ஸ்வர்ணலதா என்னை வாழ வைத்தார் என்று சொன்னால் உனக்கு விநோத மாயை நோய் பீடித்திருக்கிறதென்று நீங்கள் சொல்லலாம். உடனிருக்கும் உறவுகள் , ஸ்நேகம் சரி செய்ய இயலாத மனதின் பதட்டத்தை இழப்பை எப்படி ஸ்வர்ணலதாவால் சரி செய்ய இயலும்? எல்லா பெண்களுக்கும் என்னைப் பொறுத்த வரையில் ஒரே முகம் தான். வாழ்க்கை தான் வேறு வேறு.

ஒரு வாழ்க்கையை ஒரு பெண் கடப்பதற்குள் அவள் சந்திக்கும் அனுவங்களும் அதன் பல்வேறு உணர்வுகளும் எல்லா பாடல்களிலும் மொழிப்பெயர்க்கப்படவில்லை, ஏனெனில் நம் தமிழ் சினிமா பெண்களுக்கு தந்த வகையில் அவர்கள் அனுபவித்த உணர்வுகள் வெறும் காதலும் காமமுமே.

சின்னக் குயில் என்று அடையாளப்படுத்தப்பட்டு பிரபலமான சித்ரா பெண்வாழ்வு சார்ந்த சில பாடல்கள் பாடியிருக்கிறார். “கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா? பாடலில் அதிராத ஒரு இறுக்கம் அவர் குரலில் இருக்கும். என் வாழ்வில் ஒரே நாளில் ஆயிரம் முறைக்கும் மேல் கேட்ட பாடலில் முதல் மூன்று இடங்களை இது பிடிக்கும். வலியும் வேதனையையும் கடக்க லட்சியமும் வைராக்கிய பருப்பெல்லாம் வேண்டும். சில பாடல்கள் போதும்.

யோசித்துப் பார்த்தால் சமூக கட்டமைப்பின் பக்கங்களில் பெண்கள் மீதான ஆதிக்கம் பாடல்களில் ஒலிக்கும் பெண் சார்ந்த குரல்கள் சித்தரிக்கும் வாழ்விலும் படர்ந்திருக்கவே செய்கிறது. பாடல்களே வாழ்வாய் ஒரு மாய சித்திரத்தை இன்றும் வரைந்து கொண்டிருக்கும் எனக்கு அதுவே மயக்கமான தெளிவு

மவுனங்களுக்குப் பிறகு வெளிப்படுத்துதலின் அருகாமையில் வெளிப்படுத்த இயலாதவற்றை மொழிபெயர்ப்பது இசையே என்ற அல்ட்ஸ் ஹக்சிலியின் கூற்றை ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கிறது என்னோடு பயணிக்கும் பாடல்களில் ஒலிக்கும் பெண்களின் குரல்கள்.

000






No comments:

Post a Comment