Wednesday 3 July 2019

நடுகல் 2 - கார்த்திகை பாண்டியன் கட்டுரை





















மரபின் நிழலில் சிறகசைக்கும் வெண்கலப் பறவை

(சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந.ஜயபாஸ்கரன் கவிதைகளை முன்வைத்து)

தமிழின் நவீன கவிதைகளில் தற்கொலைக்கு அடுத்தபடியாக அதிகம் கொலை செய்யப்பட்டது கடவுளாகவே இருக்க முடியும். கடவுள் என்பது அதிகாரத்தின் குறியீடாக, எளிய மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான சாதனம் எனும் நிலைப்பாட்டுக்குத் தமிழ்க் கவிதைகள் நகர்ந்து விட்டன. மனித வாழ்வின் துயரங்களுக்கு பொறுப்பாக்கி, அவரது இருப்பை கேள்விக்குள்ளாக்கி, பரிகசிக்கப்பட்டு, கடவுள், அவர் எந்த வடிவத்தில் இருந்தாலும், கொலை செய்யப்படுகிறார், கொடூரமாக அல்லது அமைதியாக சிரித்தபடி, சிலுவையில் அறையப்படுகிறார், தலை சிதறடிக்கப்படுகிறது, நீண்ட கழியினை குதத்தில் செருகி, வன்புணர்ச்சி செய்யப்பட்டு, எல்லா வகைகளிலும் கடவுள் சாகடிக்கப்பட்டிருக்கிறார். சில நேரங்களில் மட்டுமே - கவிஞனின் மனநிலை பொறுத்து - கடவுளுக்கான சுயமைதுனம் அனுமதிக்கப்படுகிறது, அப்போதும் மனிதனின் தோல்வியைக் கண்டு சிறுநகை புரிபவராகவே தமிழ்க் கவிதைகளின் கடவுள் இருக்கிறார்.

கடவுளிடம் தன்னை முழுதாய் ஒப்புக்கொடுத்த, அவனுக்கு முன்பாக தன்னைச் சிறு அணுவுக்கும் கீழாக மதித்த, அவன் வடிவம் காண பேயுரு கொண்ட, அவனுக்காகத் தன் கண்களை அறுத்துத் தந்த, உயிரைத் தர முனைந்த எண்ணற்ற மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டதொரு சமூகம் முற்றிலுமாய்க் கடவுளை, விட்டு விலகிச் செல்லும், மறுக்கும், புறக்கணிக்கும் காலத்தை நாம் வந்தடைந்திருக்கிறோம். ஆனால், முற்றிலும் இதிலிருந்து விலகி, மரபின் தொடர்ச்சியாக, கடவுளை, அதன் கடவுள்தன்மையோடு அணுகும் புள்ளியிலிருந்தே ந.ஜயபாஸ்கரனின் கவிதைகள் உருக்கொள்கின்றன.  

வாசிப்பு எனும் அகம் சார்ந்த செயல்பாட்டின் துணை கொண்டு, தான் வாசித்தன் வழியாகத் தனக்கானதொரு உலகத்தை உருவாக்கி, அதன் மூலமாய் தன் வாழ்வையும் தனதிருப்பையும் அருதியிட முயலுகிறார் ஜயபாஸ்கரன். நீண்ட புகைபோக்கியின் உட்சுவர்களில் அடர்த்தியாய்ப் படிந்திருக்கும் கரியைப் போல, கோவில் பிரகாரங்களில் எப்போதும் உணர முடிகிற வவ்வால்களின் வீச்சமென, அவரது மனம் மரபின் சுவடுகளை எந்தத் தயக்கமுமின்றி சுமந்து அலைகிறது. நவீனத்திலிருந்து விலகி, நீரோட்டத்தின் எதிர்த்திசையில் பயணிக்கும் பரிசலாய், மரபை நோக்கி நீளும் கவிதைகளை எழுதி பார்க்கிறார். இதற்காய் அவருக்குத் துணை புரிவது கடவுள் எனும் தொன்மமும், ஒவ்வொரு அழிவிலிருந்தும் தன்னைத்தானே புதிப்பித்துக் கொண்டு மீண்டெழும் நான்மாடக்கூடல் எனும் மதுரை நகரமும். மதுரை என்பது எதற்குள்ளும் அடங்காத, எப்படியும் வரையறுக்க முடியாத தொன்மம். மீனை உண்டு செறித்து தன் அகன்ற கரங்களால் ஈசன் அள்ளியணைத்து தனதாக்கிக் கொண்ட நகரமெனும் தொன்மம். மதுரையையும் அதனை ஆட்கொண்ட அரனையும் தனது வார்த்தைகளால் தொடர்ந்து அளந்தபடி இருக்கிறார் ஜயபாஸ்கரன், தன்னால் அது ஒருபோதும் முடியாது எனத் தெரிந்தும்.

பொதுவில், மோகினியைக் கண்டு ஈசன் காதல் கொண்டதாகச் சொல்வது மரபு. ஆனால் இன்றைய நவீனத்தில், சின்ன மோகினியான ஜயபாஸ்கரன் – ஷங்கர் தன் பின்னுரையில் அப்படித்தான் குறிப்பிடுகிறார் – ஈசன் மீது பற்றற்ற காதல் கொண்டவராக இருக்கிறார். தன்னையே தாங்கிக் கொள்ள முடியாதவனால், உலகையாளும் அவனை, புலன்களைத் தாண்டி நிலைத்தவனை, எப்படித் தாங்க முடியும் என வினவுகிறார். ஆனால், பக்திக் கவிதைகளிலிருந்து, ஜயபாஸ்கரனின் கவிதைகள் வேறுபட்டு நிற்கும் இடம் மிக நுண்ணியப் புள்ளியாய் இருக்கிறது. கடவுள்தன்மை தாண்டி அதனது எதிர்நிலையையும் இவர் கேள்விக்குள்ளாக்குகிறார். “தன்னைத் தவிர மற்றவர்க்கெல்லாம் வலி வடு தர” இயல்பவன், “பரிவின் தன்மை  உருவு கொண்டனையவன்” என்றாலும் கண்ணப்பனை சற்றே விலகி நிற்கச் சொல்கிறான் எனும்போது அங்கு கடவுள் என்னவாக இருக்கிறார்? ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல கடவுளின் இருப்புக்கும் இன்மைக்கும் நடுவே தொடர்ச்சியாய் ஊசலாடும் மனம் – “என்றுமே இதுதான் கதி என்றாலும் ஆட்படத் தன்னையும் மீறி எப்போதும் தயார் மனம் என்பதுதான் அவலம் உன்னதமும் கூட”.

தனது கவிதைகளில், தொடர்ச்சியாக, தடாதகையின் மூன்றாம் முலை, அங்கம் வெட்டுண்ட பாணன், திருப்பூவணத்துப் பொன்னனையாள், மணல் பாயும் வையை, ஈசனின் மூன்றாம் கண்ணின் வெம்மை, எல்லைக்கல்லான பாம்பின் பல், எனத் தனது மனதுக்கு நெருக்கமான சில படிமங்களைப் பயன்படுத்துகிறார். மறைந்து முகிழ்க்கும் மூன்றாம் முலை சில சமயங்களில் மனதுக்கு உறுத்தலாய்த் தோன்றினாலும் மீனாட்சி கோவிலின் இருள் மண்டபங்களில் அதனைத் தேடித் திரிபவராகவே இருக்கிறார். கடைத்தெருவில் காசு கேட்டு வரும் அர்த்தநாரிக்குத் தருவதும் மூன்றாம் முலைக்காம்பெனும் போது கருணையாய்ப் பொழிந்தும், காலாதி காலமாய் தான் உணர்ந்து ரசித்த மீனாட்சியைத் துப்பாக்கிகளின் பாதுகாப்பில் காண்கையில் அச்சமும் தயக்கமும் மூன்றாம் முலையாகின்றன.

பொன்னனையாளும் வெட்டுண்ட பாணனும் அவரது ஆசையின், சுயத்தின் மறு உருவங்களே. கேள்விக்கு உட்படுத்தப்படும் தனது வாழ்வின் இருப்பும், தனித்திருக்கும் கலைக்கும் நிஜ வாழ்வுக்குமான அர்த்தமற்ற இடைவெளியுமே மணல் நிரம்பிய வையை என உருக்கொள்கின்றன - வையை முலையாய் வியாபாரம் சுருங்கிய கடையில். தன்னிலிருந்து விலகி நின்று தன்னைத் தான் பார்த்துக் கொள்ளவும் வாய்க்கிறது அவருக்கு, மிக நேர்மையாகத் தன்னை மதிப்பிடவும் செய்கிறார். குரலை மிகவும் உயர்த்தக்கூடாது உயர்த்தினால் போதாமை உடைசல் தெரியக்கூடும். அடர்த்தியற்ற எளிய கவிதைகள் என்றாலும் முகமூடிப்பார்வை இல்லை என்பதில் அவருக்கு ஒரு நிம்மதி. சேற்றில் சிக்கிய ஒற்றைக்காலை எப்போதும் விடுவிக்க முடியாத நாரையாகத் தான் இருப்பதை உணர்ந்தே இருக்கிறார். எதிலும் முற்றாய் ஈடுபட முடியாதவனை இருப்புக் கல் அர்த்தநாரி எனக் குறிப்பிடும் தைரியம் அவருக்கு இருக்கிறது. சதா விறைத்த குறியாய்த் துடிக்கும் பஜாரின் இயக்கம் வாய் செத்த வியாபாரியை அச்சுறுத்துகிறது, இரவில் கடைப்பூட்டில் தலைகீழாகத் தொங்கச் செய்கிறது. ஆனால் அதே மனம் பஜாரின் லோட்மேன் தோள் வியர்வைக்கு ஏங்கச் செய்யும் எதிர்நிலையை என்னவென்று அர்த்தம் கொள்வது?

சங்க காலப் பாடல்களின் உருவகங்களும், அவற்றின் இசைத்தன்மையும், எளிய சொற்களும் இந்தக் கவிதைகளின் பலங்கள், அவையே இவற்றின் பலவீனமும் கூட. தனது மொத்த வாழ்கையையும் தன் வாசிப்பின் வழி அர்த்தப்படுத்த முயலுகிறார் ஜயபாஸ்கரன். வாசித்த கவிதைகளின் மேலாக எழுதிப் பார்க்கும்போது இருவகை சாத்தியங்கள் உண்டு. வாசித்ததைத் தாண்டி உங்களுக்கான புதுவுலகத்தை உங்களது கவிதைகளால் நீங்கள் கண்டடையலாம் அல்லது அவை வெறும் சொற்றொடராகவே நின்று போகும் அபாயமும் இருக்கிறது. ஜயபாஸ்கரனுக்கு இவை இரண்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அத்தோடு, சமகாலத்தில் இந்தக் கவிதைகளுக்கான இடம் அல்லது தேவை என்னவாக இருக்கிறது? நவீனத்துடனான உரையாடலுக்கான சாத்தியங்கள் பெரும்பாலும் அற்று, ஒற்றை பரிமாணத்தில் இயங்குகின்றன பெரும்பாலான கவிதைகள். தனிப்பட்ட மனிதனின் அக உலகம், அவனது துயரங்கள், Confessional Poetry  எனச் சொல்லப்படும் கவிதைகளின் உலகம் தற்காலத்தில் எப்படி இயங்குகிறது அல்லது எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்கிறது? கவிதை என்பது மனம் சார்ந்த அகச் செயல்பாடு எனும் நிலைதாண்டி வேறு எப்படி அணுகுவது என்ற கேள்வியும் எழுகிறது.

“எழுத்தாளனின் மரணம்” என்பது பிரதிக்கு வெளியில் மட்டுமே நிகழக்கூடியது, பிரதிக்கு உள்ளே அவன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். வெறும் கவிதைகள் மட்டுமல்லாது, அதை எழுதியவனின் மனநிலையும் சூழலையும் உணர்ந்தால் மட்டுமே சில கவிதைகளோடு பயணிக்க முடியும். அதற்கு ஜயபாஸ்கரனின் கவிதைகளே எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி நன்கறிந்த, அவரது இயல்பும் சூழலும் தெரிந்த, மனிதனொருவருக்கு நெருக்கமாய் உணரமுடியும் இந்தக் கவிதைகளை, அவரைப் பற்றி ஏதுமறியாத ஒருவர் வாசிக்க நேர்ந்தால், அது தொகுப்பின் தலைப்பிலுள்ளதைப் போல ஒருவழிப்பயணமாகவே அமையும்.

இறுதியாக, தனது பலங்களோடு தனது பலவீனங்களையும் முற்றிலும் உணர்ந்த, அதிர்ந்து பேசவும் அறிந்திடாத ஒரு எளிய மனிதரின் எளிய வார்த்தைகளாலான எளிய கவிதைகளால் ஆனது ”சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்”. மரபையும், இலக்கியத்தைப் புரிந்து கொள்ள விழையும் யாரையும் மனதுக்கு நெருக்கமாக உணர முடிகிற, எப்போதும் எதையும் புதிதாய்த் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிற, தனது சிறிய கடைக்குள்ளிருந்து கடைவெளியைப் பார்த்தபடி இருக்கும் அந்த மனிதரை, அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால், அவரது வெண்கலப் பாத்திரங்களோடு அப்படியே விட்டு விடலாம்.

-கார்த்திகை பாண்டியன்

No comments:

Post a Comment