ராசாத்தி
சத்தியப்பெருமாள்
சுருட்டி வீசப்பட்ட சேலையைப்போல் கிடந்தாள் ராசாத்தி.
வீடு இருண்டு கிடந்தது. தாழிடப்படாமல் சாத்தப்பட்டிருந்தது கதவு. தலை முழுவதும் பஞ்சு
ஒட்டியிருந்தது. அழுந்திக்கிடந்த நுனிமூக்கைப் பிடித்துக்கொண்டு வழிந்த கண்ணீரும் சளியும்
தரையில் வட்டமிட்டிருந்தன.
“அலோ அலோ… டட்பட் டட்…. அலோ அலோ நேரமாயிருச்சு
எல்லாரும் மாவிளக்கு கொண்டூட்டு வாரவும்”
“எங்குளுந்து வார்றதுடி…” நாலைந்து சிறிசுகள் சிரித்தன.
“ஏ நானொருக்காப்பா நானொருக்காப் ப்ளீஸ் ப்ளீஸ்”
கெஞ்சிக்கொண்டிருந்தது ஒரு குரல்.
“ஹலோ கொப்பியடிக்க நேரமாச்சு சீக்கரமா மாவெளக்குக்
கொண்டூட்டு வாங்க” முந்திக்கொண்டது ஒரு குரல்.
“டட் பட் டம் டிங் டப்” கயமுயவென்று ஏதேதோ சத்தம்
கேட்டது. மறுபடியும் அமைதி சூழ்ந்தது.
மின்விசிறி மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. ஒரு
பத்து நிமிடமிருக்கும்.
“டப் சப் தப் டப் டப் டப் டப் டப் டப் டப்”
“நாலும்மாட்டுச் சாணிகொண்டு நாற்சதுரம் வளுச்சு
நாற்சதுரம் வளுச்சு
நடுவிலொரு பிள்ளாயால நாயகனா வெச்சு நாயகனாய் வெச்சு
தண்ணிமுத்துன தேங்காயைத் தட்டிமுன்னே வச்சுத் தட்டிமுன்னே
வெச்சு
சாந்து சவாசு எங்கே மணக்குது
சத்தியுள்ள பிள்ளாயா மேலே மணக்குது”
ஏதோ ஓர் பொடிசு பாட மற்ற சிறுசுகள் வாங்கிப்பாடின.
அநேகமாக அந்தத் தனிக்குரல் கன்னியம்மாளின் இளையமகள் மணிமேகலையுடையதாக இருக்கலாம். கூட்டுக் குரலில் மைதிலியின் குரலையோ ரம்யாவின் குரலையோ பிரித்தறிய முடியவில்லை.
திங்களன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்ததுமே
சீருடையைக் கூடக் கழற்றாமல் இரண்டும் முரண்டுபிடித்தன.
“இங்க பாருங்ளே… சீவய எடுத்தன்னா முதுவுத் தோலு
உரிஞ்சு போயிரும். ஒளுங்கு மருகாதியாப் பொச்ச மூடீட்டு இருக்கற வேலையப் போய்ப் பாருங்க”
வலது கையால் பந்தர்க் காலைப் பற்றியபடி இடது கையை நீட்டி அவர்களிருவரையும் வீட்டுக்குள்
போகுமாறு கட்டளையிட்டபடி நின்றிருந்தாள் இவள். இரண்டும் பேசிவைத்துக்கொண்டது போல் அப்படியே
நின்றன. “வெரக்கி வெரக்கிப் பாத்தூட்டிருக்காம ஒளுக்கமா உள்ள வந்துருங்களே”
சின்னவளின் மூக்கு விடைத்துக்கொண்டிருந்தது. பெரியவளின்
கையை இறுகப் பற்றியிருந்தாள். பெரியவள் முகத்தைச் சற்றே வலப்பக்கம் திருப்பிக் கண்ணைச்
சுருக்கி வைத்துக்கொண்டு இவளை முறைத்தாள்.
“படறப் பிச்சு உட்ருவன்ளே. மொறைக்கற முழியாங்கண்ணு
ரண்டயீந் தோண்டிப் போடுவெ. சாலாக்குமயிறு பண்டுட்டிருந்தீங்க நடக்கறதே வேற”
சின்னவள் பெரியவள் கையைப் பிடித்தவாறே ஓரடி பின்னுக்கு
நகர்ந்தாள்.
“சும்மா மெரட்டீட்டிருக்காதீம்மா. இப்ப என்ன கேட்டம்ன்னு
இந்தக் குதி குதிக்கற? நெலாப் பிள்ளக்கிச் சோறு மாத்தலாம்ன்னு
சொன்னதொரு குத்தமா?”
“ஏளெ சின்னக்கொமுரி? இன்னக்கி வாட்டுக் கட்டறதுன்னே முடிவோட இருப்பயாட்ருக்குது”
“ஆமா. எனக்கு அதான் வேலை? வேற வேலையில்ல இல்ல பாரு. ஒரு நெலாப் பிள்ளைக்காச்சு நீ சோறு மாத்தக் குடுத்துட்ருக்கறயா”
“வாய் நீண்டூட்டே போவுதா. இரளே கண்டாரோளி புள்ள
உன்னைய இன்னக்கி வெதுப்பாத உடறதில்ல” சரக்கென்று பந்தலில் சொருகியிருந்த நொச்சிக்குச்சியை
உருவியவள் இருவரையும் விளாச ஆரம்பித்துவிட்டாள். அடி எங்கு விழுகிறதென்று அனுமானிக்கமுடியாமல்
காலிலும் மேலிலும் இரண்டும் வாங்கிக்கொண்டிருந்தன. பெரியவள் எப்படியோ சுதாரித்துக்கொண்டு
வீட்டுக்குள் ஓடிவிட்டாள். இளையவளின் சடை வசமாகச் சிக்கிக்கொள்ள முதுகிலிருந்து கால்
வரைக்கும் சரமாரியாய் விழுந்துகொண்டிருந்தது அடி.
“அடி. அடிச்சுக் கொல்லு. அப்புடியாச்சுஞ் செத்துத்
தொலைக்கறன். உனக்குப் பிள்ளையாப் பொறந்ததுக்குப் பன்னி வவுத்துல பொறந்திருக்குலா” ஐயோ
ஐயோ என்ற கதறல்களுக்கிடேயே சின்னவள் பொரிந்துகொண்டிருந்தாள். இவள் பிடியை விட்டுவிட்டாள்.
அவள் புத்தகப்பையை வீசிவிட்டுத் திரும்பி ஓரே ஓட்டமாக ஓடிவிட்டாள். மூத்தவளும் முட்டிக்கொண்டு
அவள் பின்னாலேயே ஓடினாள்.
பால் தூக்கை ஒரு கையிலும் உழக்குகளை மறுகையிலுமாகப்
பிடித்துக்கொண்டு வீதியில் நின்றபடி இதையெல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த அருக்காணி
ஆயா “ஏ ராசாத்தி இது உனக்கே நல்லாருக்குதா? வயிசுக்கு வரத்தக்கன
இருக்கற பிள்ளீகள இப்பிடிப் போட்டு அடிக்கறயே” என்றார். “எல்லா எனக்குத் தெரியீ… நீ
உம்படத மூடீட்டுப் போ”
“உங்குளுக்குத் தேவைங்ளாங்காயா இது? அந்த வசாரிகிட்டப் போயி வாயுட்டூட்டு” இது எதிர்வீட்டுச் சரசு.
“எவளாச்சும் என்னய நெனச்சீங்கன்னாச் சின்னங்கெடப்
பேசிப் போடுவெ. அவ அவ வேல மசத்தப் போயிப் பாருங்களெ”
வெடுக்கென அவளைத் தூக்கியெறிந்து பேசிவிட்டாளேயொழிய
உள்ளுக்குள் துணுக்கென்றது. இனி ஒரு மூன்று மாதங்களுக்காவது அவளிடம் ஐம்பது நூறு என்று
போய் நிற்கமுடியாது. நாளன்னைக்கு மகளிர் குழுவில் கட்டக் கூட வேறு யாரிடமாவது தான்
கேட்டுப் பார்க்கவேண்டும்.
எரிவாயு தீரும் தருவாயிலிருந்தது. வாங்கி வைத்திருந்த
துணை உருளையை அவசரத்திற்கு நேற்றுத்தான் விற்றிருந்தாள். இரவுக்கு ரசம் வைப்பதற்கான
அளவிற்குத் தான் புளியிருந்தது. நிலாப் பிள்ளைக்குச் சோற்றைக்கூட எப்படியாவது மாற்றிட
முடியுமென்று தோன்றியது. ஆனால் அது அத்துடன் முடிந்துவிடுகிற காரியமல்ல. சோறு மாற்றுகிறவர்கள்
எல்லோரும் மாவும் மாற்றவேண்டும். மாவிடித்துப் பிசையக் குடும்ப அட்டைக்குக் கிடைத்த
பச்சரிசியும் சர்க்கரையும் கூட இருக்கின்றன. அதற்கு மேலான சிறு செலவுகளையும் கூட எப்படியாவது
சமாளித்துவிடலாம். ஆனால் மாவிளக்கன்று எல்லாப் பிள்ளைகளும் புதுத்துணி அணிந்து கொண்டிருக்கும்
போது இவளது குழந்தைகள் மட்டும் பழந்துணியுடன் சுற்றிக்கொண்டிருக்க முடியாது. விதவிதமான
ஒப்பனைகளுடன் மற்ற குழந்தைகள் புகைப்படமெடுத்துக் கொள்ளும் பொழுது இவையிரண்டும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்காது. வாங்கிக்கொள்ளவில்லை என்றால் முகவாண்மைக்காரி ரதியைக் கூட்டிக்கொண்டு
சண்டைக்கு வருவான் புகைப்படக்காரன். அவள் வாயைத் திறந்தாளென்றால் புழுத்த நாய் குறுக்கே
வராது.
இவள்பாட்டுக்குப் பறக்பறக்கென்று வாசலைக் கூட்டித்
தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தாள். அரவம் கேட்டவள்
நிமிர்ந்தாள்.
“ஏளெ நீயெல்லா மனுசியே தானா? இங்க பாரளெ. காலுமேலெல்லா எப்புடித் தடிச்சுக் கெடக்குது”
“அவுளுக பண்றதுக்கு இன்ன நாலு இறுக்கு இறுக்கியிருக்கோணும்.
தப்பிச்சு ஒடியாந்துட்டாளுக” சின்னவள் இவளது அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி நின்றாள்.
பெரியவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி இரண்டடி பின்னுக்கு நின்றுகொண்டிருந்தாள்.
இரண்டு பேரின் முறைப்பும் ஒரே மாதிரியாக இருந்தது.
“வருச வருச இதே போர்க்களந்தான்ளெ கட்டீட்டிருக்கற
நிய்யி. நெலாப்பிள்ளக்கிப் பிள்ளீகளுக்கொரு புதுத்துணியெடுத்துக் குடுக்க வக்கில்லாத
அப்பிடியென்னளெ பொளப்புத்தனம் பண்ணீட்டிருக்கறீங்க புரசனும் பொண்டாட்டியீ?” வாசலில் கிடந்த பாஸ்கரனின் செருப்புகளைப் பார்த்தவாறு உரக்கக் கேட்டாள் அம்மா.
“வேண்டாம் பொன்னாயா. உனக்கு இது நல்லதில்ல. அவுளுகளுக்குச்
சப்போட் போட்டூட்டு வந்தீன்னா உன்னயீங் கண்டபுடி புடிச்சுட்ருவே. நீயீம் உம்பட புத்தரனும்
மருமவளூமே அவளுகளத் தூக்கித் தலமேல வெச்சுட்டு ஆடுங்கொ”
“ஆமாளே… உனக்கூ உந் தங்கிச்சிகாரிக்கீம் அவனொருந்தஞ்
சிக்கியிருக்கறாம் மொட்டையடிக்கொ. ஏ போங்க புள்ளீகளா… பள்ளிக்கோடத்துத் துணீம் பையையீ
எடுத்தூட்டு வாங்கடி. இந்தச் செங்கொரங்கி இப்புடியே ஓரியாக் கெடக்கட்டு”
பொதுக்கென்று முட்டிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிய
இரண்டும் அவற்றை எடுத்துக்கொண்டு அம்மாயியைத் தாண்டி ஓடின.
கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவன் நேராகச் சமயலறைக்குள்
நுழைந்தான். அடுப்பங்கரைமேலிருந்த பண்ட பாத்திரங்களை உருட்டினான். “சோறாக்குலியா” எந்தப்
பதிலும் இல்லாததால் ஏதோ முனகியபடி மறுபடியும் வெளியே சென்றுவிட்டான். கொப்பிச் சத்தம்
சீராகக் கேட்டது. பொடிசுகள் பலதும் இந்நேரம் உறங்கியிருக்கும். பெரியவர்கள் கும்மியடிக்கும்
நேரம் தான் இது.
“கொளத்தோரங் கொடிக்காலா ஏலேலக்கும்மி ஏலேலோ ஏலேலக்கும்மி
ஏலேலோ
கொத்துக் கொத்தா வெத்தலையாம் ஏலேலக்கும்மி ஏலேலோ
ஏலேலக்கும்மி ஏலேலோ
மாமம்பயெம் போடும் வெத்தல ஏலேலக்கும்மி ஏலேலோ ஏலேலக்கும்மி
ஏலேலோ
மாருக்கட்டு மடக்கறுக்கு ஏலேலக்கும்மி ஏலேலோ ஏலேலக்கும்மி
ஏலேலோ
எம்பொறப்பே போடும் வெத்தல ஏலேலக்கும்மி ஏலேலோ ஏலேலக்கும்மி
ஏலேலோ
கோயமுத்தூர்க் கொளுந்து வெத்தல ஏலேலக்கும்மி ஏலேலோ
ஏலேலக்கும்மி ஏலேலோ”
காளீமாத்தை பாடப் பாடக் கிண்டலும் கேலியுமாக வாங்கிப்
பாடிக்கொண்டிருந்தது கூட்டம்.
“பயங்கொஞ்சங்
கருப்புத்தான். ஆனாலு நல்ல ரச்சணொ”
“தூரத்தப் பாத்தம்னா மாப்பள கெடைக்கிமா பொன்னாயா? பிள்ளையொக்கோந்து இன்னக்கி வருசொ மெத்தனை? அக்கம் பக்கத்துல
நாங்கிருக்கறொ. சும்மா ரோசன பண்டீட்டே இருந்தா எப்புடி?”
படித்துப்படித்துச் சொல்லியனுப்பியதை எல்லாம் ஒரு
நொடியில் ஒதுக்கிவைத்தாள். மனசைத் தேற்றிக்கொண்டு நுழைந்த சில நிமிடங்களிலேயே சொல்லிவிட்டாள்.
எழுந்து இடுப்பைப் பார்த்து எட்டி உதைத்தவன் வேட்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டு படாரெனக்
கதவைத் திறந்து வெளியேறினான். “எல்லாருஞ் சேந்து எந்தலையில ஒரு அவுசாரி முண்டயக் கட்டி……………”
இவன் முடிப்பதற்குள் முதலிரவறைக்கு வெளியே படுத்திருந்த
இவளது நங்கையாளும் அவனது பெரியம்மா மகளுமான சரோஜா எட்டி அவனது சட்டையைக் கழுத்தோடு
பிடித்துக்கொண்டு பளார் பளாரென்று அவனது இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி வீசினாள்.
இவளது தாய்மாமன் பொண்டாட்டி இருவரையும் தள்ளிக்கொண்டு இவளைப் பார்க்க உள்ளே ஓடினாள்.
“தெருப்பொறுக்கி நாயே. உன்னையாட்டக் கெட்டளுஞ்ச
குட்டிச் செவுருன்னு நெனச்சயாடா அவள? குத்துவெளக்காட்டப்
புள்ளீடா. உன்னயாட்ட ஒரு வக்கத்தவனுக்குப் பொறந்தங்காட்டித் தான் அவ இந்தூட்ல பூந்திருக்கறா.
எதாச்சு அவளப் பத்தி மறுவார்த்த பேசுனயா சீவக்கட்ட பிஞ்சு போயிரு ஆமா. முடிஞ்சா அவள
வெச்சுப் பொள. இல்லையா? உங்கோயா தொங்குன கவுத்துல மீதி எறவானத்துல
சுத்தித்தா இருக்குது. இப்பவே தொங்கீரு. கருமாதீஞ் சேத்திப் பண்டீர்றொ”
இவனைத்தவிர எல்லோருக்குமே அந்த விஷயம் முன்னரே
தெரிந்திருந்தது என்பது அப்பொழுது தான் இவனுக்குத் தெரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை
இதற்கு எந்தப் பொருளும் இல்லை. எல்லோருக்கும் ஆசைப்பட்டவனையே கட்டிக்கொள்ளக் கொடுத்து
வைப்பதில்லையே. நேரடியாக வீடேறி வந்து பெண் கேட்டவனிடம் “உங்கு வசதி எங்குளுக்கு எட்டாக்
கனி சாமி. எங்குளுக்குத் தவுந்தாப்பல எடத்துல
தெக்கையோ வடக்கையோ பாத்துக் குடுத்துக்கறொ” கையெடுத்துக் கும்பிட்டு மறுத்துவிட்டாள்
பொன்னாயாள். அடுத்தடுத்த அவனது வருகைகளின் போது பொன்னாயாளின் நாக்கு நெருப்பைக் கக்கியது.
இவளுக்கு அவனை என்ன பிடித்தென்ன? உறவுக்காரனாகவும் இருந்தென்ன?
கடைசி வரை பொன்னாயாள் ஒத்துக்கொள்ளவேயில்லை. “அத்தச் சோட்டுச் சமுசாரத்துல
பூந்தா எம்புள்ள தாங்காது” என்பதே அவளது முடிந்த முடிவாக இருந்தது.
மறுபடியும் அவனை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினார்கள்.
மூத்தவளுக்கு மூன்று வயதிருக்கும். தலைவிரி கோலமாகத்
தெருவுக்கு ஓடி வந்தாள். “தாயோளி… கஞ்சாக்குடிக்கி நாயே… டேய் நீ நாசமாப் போயிருவீடா..
அளிஞ்சு போயிருவ. புட்டக்கரேர்னு போயிருவ… மண்ணை வாரி மதிலுக்குள் நின்று கொண்டிருந்தவன்
மேல் வீசினாள். அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டார்கள். “எத்தன நாளக்கித் தா நானூம் பொறுத்துக்கறது? நெதோம் அக்கப்போரு. அடியொதை. ங்கப்பம் பல்லிக்கருவி என்னய வெட்டிக் காவேரியாத்துல
உட்டுருந்தான்னாக்கோட நா நிம்மிதியாப் போயிச் சேந்திருப்பனே. இப்புடிப் பாளுங்கெணத்துல
தள்ளிப் பண்ண ரக்குரி பொறிக்க வெச்சுட்டானே”
குச்சி போன்ற இவளது உடம்புக்குள்ளிருந்து இவ்வளவு
பெரிய சத்தம் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மேடிட்டிருந்த அவள் வயிற்றைக் காட்டி
காட்டிக் எல்லோரும் அவனுக்குப் புத்தி சொன்னார்கள். இவளுக்குச் சமாதானம் சொன்னார்கள்.
யார் என்ன சொல்லியும் இவள் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேயில்லை. பத்தாவது படித்துக்கொண்டிருந்த
தம்பியை வரவழைத்தவள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பேருந்தேறிவிட்டாள். ஆறுமாதம் கழித்து
மாமனாரின் இறப்புக்கு வந்தவள் காரியங்கள் முடிந்ததும் கிளம்பிவிட்டாள். மாமனார் நல்ல
மனிதர். தனது மூன்று மகன்களுக்கும் சொத்துகளை முறையாகப் பிரித்து எழுதி வைத்திருந்தார்.
அதைக் காரணங்காட்டி இவளை இருத்த முயன்று தோற்றுப் போனான் அவன். வேறுவழியின்றித் தனது
தம்பிகளிடமே சொத்தை விற்றுவிட்டு மாமனார் வீடிருந்த அதே தெருவின் அடுத்த கோடியில் வீடொன்றை
வாங்கிக் குடியமரும்படி ஆகிவிட்டது.. வாட்ட சாட்டமாக வளர்ந்து நின்ற மச்சினனும் வசாரி
என்று பேர் வாங்கியிருந்த மாமியாரும் இவன் அவளை அடிக்கக் கை ஓங்கும் போதெல்லாம் நினைவுக்கு
வந்தார்கள். ஆனால் எந்தச் சாமியாலும் மந்திரத்தாலும் இவனது கஞ்சாப் பழக்கத்தை மட்டும்
மாற்றவே முடியவில்லை.
“வடக்கத்தித் தங்கமே கிளிவேணுமா அயிலேலோ
கிளிவேணுமா ஏலேலோ
வளநாட்டுத் தங்கம்மே மான் வேணுமா”
கூடைக்காரி பழனியம்மாள் தான் நீட்டி இழுத்துப்
பாடிக்கொண்டிருக்கிறாள். இரவின் அமைதியில் தங்காயாளுக்காகச் சின்னண்ணனும் பெரியண்ணனும்
கிளிபிடித்துக் கொண்டிருந்தார்கள்.
மாணிக்கனில்லை என்றால் இவள் பிழைப்பு என்றைக்கோ
முடிந்திருக்கும். கல்லூரியில் படிக்கவேண்டுமென்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தவன்
பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததுமே பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.
குழந்தைகளிருவரும் மாமனுடனே உண்டார்கள். உறங்கினார்கள். சொந்தமாகக் கடை வைத்துக்கொண்டபின்
தான் கலியாணம் என்று உறுதியாக நின்றான். அவனுக்குத் திருமணமானதும் வம்படியாக இரண்டையும்
தனது வீட்டிலேயே இருத்திக்கொண்டாள். தினம் தினம் இரண்டும் அடம் பிடிப்பதும் அனுப்ப
மறுத்து இவள் அடித்துத் துவைப்பதும் வாடிக்கையாகின. ஒரு நாள் இரவு அடிக்குப் பயந்து
சின்னவள் பிடித்த ஓட்டம் அவளுடைய அத்தையின் காலைக் கட்டித் தாவிப் பிடித்த பின் தான்
நின்றது. துரத்திக்கொண்டே ஓடியவள் தனது கையில் வைத்திருந்த ஈர்க்குமாற்றால் மகளைச்
சுளீர் சுளீர் என்று விளாச ஆரம்பித்தாள். அத்தையின் கால்களைக் கட்டிக்கொண்டு வீறிட்டாள்
அவள். “உடுங்க்க்கா உடுங்க்கா அடிக்காதீங்க்கா அட அடிக்காதீங்க” தம்பி பெண்டாட்டி எத்தனை
தடுத்தும் நிறுத்தவில்லை இவள். இவளது கைகளிரண்டையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டவள்
“சாமி சாமியா இருப்பீங்க்கா. அடிக்காதீங்க்கா. பிள்ள வீணாப்போயிரும்க்கா”
“லேய் ஊளமூக்கீ…வூட்டுக்கு வாளெ உன்னயப் பேசிக்கறேன்”
என்றவள் ஈர்க்குமாரை வீசிவிட்டுப் படியிறங்கினாள். “அக்கா ரண்டு தோசயாவது சாப்ட்டுப்
போங்க்கா” என்றதும் திரும்பி “ரம்யா வா போலா. அடிக்கமாட்ட வாளே” என்றாள்.
“நாந் தோச தின்னுட்டுத்தா வருவெ”
“ஏள இப்பத்தான நாலு தோசய முளுங்கிப்போட்டு வந்த?”
“தின்னா என்னங்க்கா? வளர்ற பிள்ள தான? இன்ன ரெண்டத் தின்னாத்தா என்ன?”
“இல்ல இல்ல அவ இப்பத்தா நாலு தோச தின்னா. லேய்
மல முளுங்கி. வாளே ஊட்டுக்குப் போலா”
அத்தையை அண்டி நின்றவள் நகரவில்லை.
“இப்ப வாறயா இல்ல மறு பூச குடுக்கட்டுமா”
“ஏண்டி? ரண்டே ரண்டு
தோசயப் போட்டுப்போட்டுப் போதும் எந்துருச்சுப் போயிக் கையக் களுவு கையக்களுவுன்னு நீ
தான கண்ண உருட்டி உருட்டி மெரட்டுன? பசிக்குதுன்னு தான நா ஒடியாந்தெ?
இங்கயீம்மந்து ஏன் நாந் திங்கறதக் கெடுக்கற?” கேவுகேவென்று
கேவ ஆரம்பித்தாள்.
தன் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்துச் சட்டினியைத்
தொட்டு அவள் வாயில் திணித்தாள் அத்தை.
நான்கு நாட்களாக இவளில்லாத நேரமாகப் பார்த்து வீட்டுக்கு
வந்து போய்க்கொண்டிருந்தன இரண்டும். சாயங்காலம் “மாமெ எங்கு ரண்டுபேருக்குஞ் சுடிதார்
வாங்கியிருக்குதே” வாசலருகே வந்து கத்திவிட்டு ஓடிப்போனாள் சின்னவள்.
பாட்டு வழக்கமாகப் பாடும் பாடலாக இல்லை. குரல்
சன்னமாக இருந்தாலும் திருத்தமாக ஒலித்தது. வம்படியாய் முழித்திருக்கும் ஓரிரு சிறுசுகளும்
இந்நேரம் தூங்கிப்போயிருக்குமே? யார் தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள்?
சின்னவள் குரலா?
தலைக்கு மேலே தகதகத்துக் கொண்டிருந்தது நிலவு.
மரங்களினூடாகப் புகுந்த பனி வேர்களை நனைத்துக்கொண்டிருந்தது. பூசத்திற்கு மூன்றே நாட்கள்
தான் இருந்தன. மாரியம்மன் கோயில் சாவடியில் ஊரே கூடியிருந்தது. வண்ணத் தோரணங்களும்
மின் விளக்குகளுமாகத் தொங்கிக்கொண்டிருந்தன எங்கும். உலக்கையைப் பிடித்து வீட்டுக்கரை
கட்டி அதை நடுவாகக்கொண்டு பெரிதாகத் தேர்க்கோலமிடப்பட்டிருந்தது. காவியும் நீலமுமாகத்
தேருக்கு வண்ணம் கொடுத்திருந்தனர். வீட்டுக்கரையின் நடுவே சுற்றிலும் பூக்கள் பொதிந்திருக்க
வீற்றிருந்தது சாணிப் “பிள்ளாரு”. காகிதங்களாலான விளக்குமாப் பூக்கள் பழச்சீப்பில்
குத்தப்பட்டிருக்க இரண்டு தலைதட்டப்பட்ட கூம்புகளாகவும் இரண்டு உருண்டைகளாகவும் வைக்கப்பட்டிருந்தது
விளக்குமா. வெற்றிலை பாக்கும் தேங்காயொன்றும் இருந்தன தட்டில். அழகான மெழுகுவிளக்கொன்று
எரிந்துகொண்டிருந்தது. இப்படிக் கிட்டத்தட்ட முப்பது தட்டங்கள் பிள்ளையாரைச் சுற்றி
வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கும் வெளிவட்டமாக நின்று கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள். அவர்களிடையே அந்த ஒற்றைச் சிறுமியும் நின்றுகொண்டிருந்தாள்.
பச்சைக் கரை வைத்த ரோசா நிறப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அவளது ஆயிரங்கால்
சடையின் நுனியில் ஆரம்பித்து அரைவாசித் தலை முழுகும் வரை செவ்வந்திப்பூ முடியொடு சேர்த்துத்
தைக்கப்பட்டிருந்தது. கையில் நீலநிறக் கண்ணாடி வளையல்கள் குலுங்கிக்கொண்டிருந்தன. நெற்றியில்
நீளமான சாந்துப்பொட்டும் இடது கன்னத்தில் புள்ளியும் வைத்திருந்தாள். காதுகளைத் தொட்டு
நீண்டிருந்தது கண்மை. குனிந்தும் நிமிர்ந்தும்
தாளம் தப்பாமல் கொப்பியடித்துக்கொண்டே பற்கள் பிரகாசிக்க ராகம் போட்டுப் பாடிக்கொண்டிருந்தாள்
அவள். அவளைப் பின் தொடர்ந்து பாடியது கூட்டம்.
“தாரோ ஒறம்பறப் புள்ளயாட்ட இருக்குதே?”
“அட எங்கு பேத்தி”
“?”
“எங்கு பொன்னாயா புள்ள”
“அட வவானிக்காரியா?”
“ஆமா. ராசாஆஆஆஆத்தி”
“தங்கத்தினால் சலங்கைகட்டித் தரையில்விட்ட சாவல்
தரையில்விட்ட சாவல்
தரையில்விட்ட சாவலைத்தான் தடுத்துக் கொண்டவர் யாரோ
தடுத்துக் கொண்டவர் யாரோ”
அந்தக் கிராமத்தைத் தாண்டி மலைகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது
பாடல்.
000
No comments:
Post a Comment