அவன்
ரூபியா ரிஷி
சுண்டுவிரல் அளவுக்குச் சின்னச்சின்னதாக
வெட்டப்பட்ட நீண்ட சணலென என் வடிவமில்லா எண்ணங்கள்
இந்த வீடெங்கும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
ஒற்றைச் சங்கிலியாகப் பின்னவே எப்போதும் விரும்புகிறேன். அது
அவனில்லாத தனிமைகளில் மட்டும் எப்போதாவது சாத்தியப்படுகிறது.
இந்த வீட்டில் கடைசியாக எப்போது
தனித்திருந்தேன் என்பது நினைவிலில்லை. அவன் என்னோடு
எப்போதும் இருக்கிறான் முடிவில்லாமல் பேசுகிறான். உதாரணனாக
இருக்க விரும்புகிறான் அதனாலேயே தொடர்ந்து தோற்கிறான். அவனின்
பல பிரதிகளை ஒரே நேரத்தில் இட்டுத் தூக்கியும் என் எதிர்பார்ப்பின் சாக்கு எடையற்றதாகவே
இருக்கிறது.
வீட்டில் பார்த்துக் கட்டிவைத்தவன் தான். கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை
குறையென்று சொல்ல எதுவும் இருக்கவில்லை அவனிடம்.
எல்லாக் குழந்தைகளையும் போல நானும் வானத்தைத்
தான் முதலில் வரைந்தேன். நிறையப் பறவைகளையும். தோழிகள்
காதலித்த போது அவர்களுக்காக நிறைய ரோஜா பூக்களை வரைந்து தந்தேன். கல்யாணமான
புதிதில் கிடைக்கும் தாள்களில் எல்லாம் பூனைக் குட்டிகளாக வரைந்து தள்ளினேன். சமயங்களில் என்னைத் திருட்டுப் பூனை என்றுகூட அவன் அழைப்பதுண்டு. மாடத்தில் இருந்த வெள்ளைக் கோப்பையில் ஏதாவது வரையவேண்டும் போலிருந்தது.
இந்த வீட்டில் சட்டென யாரும் நுழைந்துவிட முடியாது. அதன்
ஒழுங்கும் சுத்தமும் அப்படி. புதிதாக வருபவர்கள் தங்கள் எடையை எண்ணியெண்ணியே
எடுத்துவைக்க நேரிடும். இவ்வீடு அவன் பராமரிப்பில் இருப்பது. அலுவலகத்திலிருந்து திரும்பியதும் என்னால் அசைவுக்கு உள்ளாகும்
பொருட்கள்கூட அடுத்தநாள் முந்தைய ஒழுங்கில் இருக்கும். பகல்
முழுவதும் தனித்திருப்பவனைக் கொண்டிருந்தாலும் வீடு யாருமற்ற பாவனையையே
கொண்டிருக்கிறது.
ஒரு நாய் வளர்கிறான், லியோ. வீட்டின் முகப்பு,
பின்வாசல் பற்றிய குழப்பங்கள் அதற்கு எப்போதும் உண்டு.
கட்டிப்போடப்படும் இடங்களிலெல்லாம் வீடு பின்பக்கத்தை மட்டும் தன்னிடம் காட்டுவதாக அதன் முகத்தில் ஒரு சலிப்பிருக்கும். வீட்டு முகப்பில் கட்டிப்போடப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறது.
எப்போதாவது குரைக்கவும் செய்யும். வீட்டின்
வலப்புறம் பிரதானமான இரண்டு அறைகள். மூன்றாவதாகக் கழிவறை.
முகப்புக்கூடமும் சமையலறையும் இடப்புறம். பகலில்
பெரும்பாலும் அவன் இரண்டாவது அறையில்தான் இருப்பான். அவனில்லாத
பொழுதுகளில் அவ்வறைக்குள் நுழையும்போது அவனிடம் சொல்லாமல் மறைத்த கடந்தகால
ரகசியங்கள் நினைவுக்கு வந்து அச்சுறுத்துகின்றன. அவை
சித்திரங்களாக சுவர்களில் தங்கிவிடுமோ என்ற பயத்தில் உடனடியாக வெளியேறிவிடுகிறேன்.
கல்யாணமான புதிதில் அவன் பேசுவது
பிடித்திருந்தது. தன்னைப்பற்றிய தெளிவைக்
கொண்டிருப்பவனாக தோன்றினான். எப்படி நடந்துக்கொள்வான் என்பதை
எல்லாச் சூழல்களிலும் தன்னைப் பொறுத்திவைத்து பேசிக்காட்டினான். எப்போதாவது என் தரப்பை சொல்லும் பாக்கியம் வாய்த்ததுண்டு. அது ஏன் தவறென்பதை இரண்டு நாளைக்குப் பேசி 'புரிய'
வைப்பான். பெரும்பாலும் எனக்கென இப்போது
தரப்புகள் வைத்துக் கொள்வதில்லை. ஒரு உலகம் எனக்காக உருவாகக்
கல்யாணம் வரை காத்திருந்தேன், இப்போது அவன் உலகத்தின்
ஓரத்திலொரு கண்ணாடி அறையை ஒதுக்கித் தந்திருக்கிறான்.
மௌனத்தால் உணரவைக்கும் அறிமுகம் அவனுக்கில்லை என்பதையுணர ஓராண்டானது. அலுவலகம் முடித்த மற்ற நேரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும்
வீட்டின் முதல் அறையில்தான் இருப்போம். அவன் என்னிடம் பேசிக்
கொண்டிருக்கிறான். நான் நினைக்க விரும்புபவை, பேச விரும்புபவை எங்களை விட்டு
கொஞ்சம் மேலெழும்பி தங்களை வரைய முற்படுகின்றன.
இங்கே
சிக்கலே அவை ஒரே முயற்சியில் தங்களை வரைந்து
கொண்டதேயில்லை என்பதுதான். அவன் என்னிடம் மட்டுமல்ல, நான் நினைக்க விரும்புவதுடனும் பேச விரும்புவதுடனும் பேசிக் கொண்டேயிருக்கிறான். நானும் அவையும் தொந்தரவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், தனித்தனியாகச் சமயங்களில் கூட்டாக. அவனுக்குப் பதில்
சொல்லக்கிடைக்கும் இடைவேளையில் அவை தங்களை வரைவதை நிறுத்திக்கொள்கின்றன. அவன்பேச தொடங்கியதும் தன்னைத்தானே அழித்துக்கொண்டு முதல் கோட்டிலிருந்து ஆரம்பிக்கின்றன.
அவை முற்றுப்பெறுவதற்குள் சோர்ந்துவிடுகிறேன் அல்லது
உறங்கிவிடுகிறேன்.
பெரும்பாலும் அவன்தான் சமையல். மதியத்திற்கும் சேர்த்து சமைத்து வைத்துச் சென்றிருக்கிறான். உணவுமேஜையில் இருக்கும் அவை என்னைச் செரித்துவிடுவது போலப் பார்க்கின்றன. இந்த வீட்டில் எனக்குப்பிடித்த இடமென்றால் கழிவறைதான். அங்கேயமர்ந்து கால்முட்டிகளை இறுக்க அணைத்துப் பேசிக்கொண்டிருப்பேன்.
கல்யாணத்துக்கு பிறகுதான் மலத்தைத் திரும்பிப்பார்த்தது தண்ணீர்
ஊற்றக் கற்றுக்கொண்டேன். சில நேரங்களில் கழிவறையில்
நடனமாடுவதும் உண்டு. கல்லூரி விடுதியில் இருக்கும்போது
வெளியே துண்டுடன் காத்திருக்கும் தோழியை வெறுப்பேற்ற அப்படிச் செய்ததுண்டு. கழிவறையிலும் அதிக நேரமிருக்க அனுமதியில்லை. தகரக்கதவு
தட்டப்படும். கழிவறையில் அமர்ந்திருக்கும் போது தட்டப்படும்
கதவோசைக்கு ஒரு இயல்புண்டு, அது மலங்கழித்த பிறகும் அடிவயிற்றை
வலிக்கச்செய்யும். தாயோலி, புண்டவாயன் போன்று அவன் இயல்பைக் குறிக்கும் சொல்லைச் சீக்கிரம்
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
தினமணி வாங்கிக்கொண்டிருந்தோம். முதலில் எழுந்திருப்பது அவன்தான். சிலகாலம் நானும்
காலையில் நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தேன், அல்லது
செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு செய்தியை வாசிக்கத்
தொடங்கியதுமே அருகில் அமர்ந்துகொண்டு அது எதைப்பற்றியது எங்கே நடந்தது ஏன்
இப்படியெல்லாம் நடக்கிறது என்பது குறித்து சொல்லத் தொடங்குவான். அவனுக்கு எல்லா விஷயங்களிலும் சொல்ல கருத்துண்டு. அதில்
குழப்பமானவையும் உண்டு. தெளிவானவற்றைச் சொல்லி காட்டவும்,
குழப்பமானவற்றைத் திரும்பத்திரும்ப சொல்லித் தொகுத்துக்கொள்ளவும்
தான் என்னை வைத்திருக்கிறானோ என்று சமயங்களில் தோன்றுகிறது, ஒரு
மனநோயாளியின் குருட்டுநாய் போல. சமீபமாகத் தினமணி வாசிப்பதை
நிறுத்திக்கொண்டேன்.
என்னுடைய கவிதை தான். இளநிலை மூன்றாமாண்டு
கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்திருந்தது.
மறுவீட்டுக்கு நாங்கள் சென்றிருந்தபோது கவிதையை தேடியெடுத்து காண்பித்தேன். கவிதையிருந்த பக்கத்தை காட்டிலும் மற்ற பக்கங்களில் தான் அதிகநேரம்
பார்வையை வைத்திருந்தான். கிளம்பும் வரைக்கும் அதைப்பற்றி
எதுவுமே பேசவில்லை. இரயில் கிளம்பியதும் அவன் திறன்பேசியில்
பிரமிள் என்பவர் எழுதிய காவியம் என்ற கவிதையை வாசிக்கக் கொடுத்தான். அது ஏன் கவிதை என்பதும் என்னுடையது ஏன் கவிதையில்லை என்பதையும் ஊருக்கு வந்துசேரும் வரைக்கும் வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே வந்தான். குடிகாரனின்
மனைவிக்குக் கிடைக்கும் பரிதாப பார்வையை சக பயணிகளிடம் அன்று பெற்றேன். பிரமிள் என்ன பறவையா? பறந்தா பார்த்தார்? ஒரு பறவையை பற்றி அவரெழுதும்போது நேர்மையாக என் வாழ்வை எழுதினால் என்ன
தவறு? அவன் ஊருக்கும் என் ஊருக்கும் ஏழுமணிநேர இரயில் பயணம்.
கல்யாணத்துக்குப் பிறகு நாங்கள் பார்த்த முதல்
திரைப்படம் மாயா. நொடிக்கொருமுறை பயத்தில்
உறைந்துகொண்டிருந்தேன். முதல் இருபது நிமிடங்களுக்கு மட்டும்
பேசாமலிருந்தான். அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காட்சியாக
காதருகே வந்து சொல்லத்தொடங்கினான். அவன் சொன்னது எதுவுமே
திரையில் வரவில்லை. அதில் தோன்றுவதை பார்ப்பதற்கு முன்பு
இவன் காதருகே சொன்னதன் சில்லறை காட்சிகளையும் சேர்த்து பார்த்தேன். எதைத்தான் காட்டினார்கள் என்பதையறிய மீண்டுமொருமுறை அந்தத் திரைப்படத்தை
பார்க்கவேண்டும். அதன்பிறகு நிறையப்படங்களை அவன்
தனியாகத்தான் போய் பார்த்துவந்தான். ஒரு படத்தின்
நீளத்திற்கே கதை சொல்வான். பாகுபலியை மூன்றரை
மணிநேரத்திற்குக் கதை கேட்டிருக்கிறேன், துணி
மடித்துக்கொண்டு திறன்பேசி தடவிக்கொண்டு. இடையில் நிறுத்தினால் கடைசியில் காதில்
விழுந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் திரும்ப சொன்னால் தப்பித்துக்கொள்ளலாம்.
அப்பாவை இப்போதெல்லாம் அவ்வளவு பிடிக்கிறது, அம்மாவையும் கூட. அவள் அப்பா தந்த இரவல் உலகில் வாழவில்லை அவளுக்கென ஒன்றை
உருவாக்கியிருந்தாள். காலையில் எங்கள் வீட்டுச் சிறிய
அறையில் அன்றைய நாளுக்கான உரையாடலில் இருப்பார்கள். கற்றல்
கற்பித்தல் இல்லாத அந்த நாள் அவ்வளவு இலகுவாகக் கடந்து முடியும். இத்தனைக்கும் நாளின் பெரும்பகுதியை அம்மாவுடன்தான் அப்பா கழிப்பார்,
அதீத ஆர்வத்தில் ஆரம்பித்து பிறகு வற்றிய உறவல்ல அது என்பதை அப்பா பேசும்போது
அம்மாவின் கண்களை பார்த்தாலே புரியும், நான் பிறந்தபிறகும்
கூட அம்மாவுக்குக் கொஞ்சமும் சமைக்கத் தெரியாதாம். அப்பா
தான் எல்லாம். ஆனால் அம்மாவுக்கு அப்பா சமைக்க
சொல்லிக்கொடுத்ததேயில்லை. சமைக்கும் போது அம்மாவை கூடயிருக்க
அப்பா அனுமதித்திருந்தார் அவ்வளவுதான். இன்று அப்பாவை விட அம்மா
நன்றாகச் சமைக்கக்கூடியவர். அம்மா சமைக்கும்போது அப்பா
பின்னால் நின்றதில்லை.
அலுவலகத்தில் இருக்கும்போது அவனிடமிருந்து
வரும் தொடர் அழைப்புகளைத் தவிர்க்க மேலதிகாரியின் கோவத்திற்கு ஆளானேன் என்று பொய்
சொல்லவேண்டியிருந்தது. கல்யாணத்தின் போது ஒரு
தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக இருந்தான், மூன்று
மாதங்களில் அந்த வேலையையும் விட்டுவிட்டான். வேறு
நிறுவனத்திற்கு மாற முயற்சி செய்துகொண்டிருப்பதாக சொன்னான்.
ஒருநாள் நகரத்தின் பெரிய வங்கியிலிருந்து அவனுக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்திருக்கிறது,
அன்றைக்கே கிளம்பி உடனடியாக வரச் சொல்லியிருக்கிறார்கள்.
மூன்றுமணிநேரம் பயணித்து அங்கே சென்று யார் யாரையோ சந்தித்து
திரும்பிவந்துவிட்டான். அன்று அப்படியொரு நேர்காணலுக்கு
யாரையுமே அந்த வங்கி அழைக்கவில்லையாம். அவனது அன்றைய நாள்
வீட்டுக்கு வெளியே கழிந்தது. உண்மையில் அந்த நேர்காணல்
அழைப்பைச் செய்தது நான்தான். இதைசெய்ய புதிய சிம்கார்ட்
ஒன்றும், ஒரு குரல்மாற்றி செயலியும்
மட்டும் தேவைப்பட்டது. நிறைய நாட்களுக்குப் பிறகு அவன்
பேசுவதை கேட்க அன்றுமாலை ஆர்வமாக வீட்டுக்குக் கிளம்பிச்சென்றேன்.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, திருக்குறளையோ பாரதியார் கவிதையையோ யாராவது சொல்ல முற்பட்டால்
தொலைக்காட்சியின் ஒலியை அணைத்துவிட்டு, இவன் குரலில்
அவர்களைப் பேச வைப்பான். நீண்ட சொற்றொடர்களை சொல்லிவிட்டு
என் பக்கம் திரும்புவான், அவனுக்கென உருவாக்கிய போலி
புன்னகையை தருவேன். கலவியின் போது காதருகே சொல்ல அவனுக்கு
அப்போதைக்கு அர்த்தமில்லா வார்த்தைகள் கிடைக்கும். 'ம்' அல்லது 'ன்' என்று முடியும் வார்த்தைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறான். ஒவ்வொரு அசைவுக்கும் காதருகே வந்து அன்றைய வார்த்தையை முக்கிச் சொல்வான். ம் வார்த்தைகள் எதுவாயினும் எனக்கு ஊம்ப் என்றே
கேட்கிறது. ஆனால் நான் ஊம்புவதில்லை. கலவி
முடிந்து சோர்வில் உறக்கத்திற்குள் நுழையும்போது அன்றவன்
தேர்ந்தெடுத்த வார்த்தைகளே காதுக்கு பின்னிருந்து ஒலிக்கும்.
உண்மையில் அவனல்ல அவனது வார்த்தைகளே என்னைப் புணர்கின்றன. கலவி
நடந்த நாட்களை மீட்டெடுக்க அவன் பயன்படுத்திய வார்த்தைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். இப்போதெல்லாம் கலவி நடக்கும்
நாட்கள் குறைந்திருக்கின்றன. திருமணமான புதிதில்
பெரும்பாலும் இரவுகளில் தான் நடக்கும் இப்போதெல்லாம் அதிகாலையில் அரைத்தூக்கத்தில்
தான் நடக்கிறது. முன்புபோல அவனால் முடிவதில்லை, சீக்கிரம் வழுக்கிவிடுகிறது சமயங்களில் எழுந்திருப்பதே கூட இல்லை. நல்ல உடல்வாகு கொண்டவன்தான். எந்த கெட்ட பழக்கமும்
கிடையாது.
இளமையில் வறுமையைக் கடந்துவந்த ஆண்களின் அதே கரிய
கட்டையான தோற்றம். கல்லூரி படிப்பை விடுதியில் தங்கி
படித்திருக்கிறான், அப்போதிருந்தே அல்சருக்கு மருந்து எடுத்துக்கொள்கிறான். ஸ்டிராய்டு மற்றும் பாண்டோப்ரசோல் போன்ற மருந்துகளை
ஆண்டுக்கணக்கில் எடுத்துக்கொண்டதன் விளைவு இது.
இப்போதெல்லாம் கலவி அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது என்னுடைய முனகல்
மட்டும் தான் கேட்கிறது. உடல்கள் சேர்ந்து உருவாக்கும்
ஒலியைக் கேட்கமுடிகிறது. இயலாமைக்கான அறிகுறிகள் அவனுடலில்
தோன்ற ஆரம்பித்த பிறகு, இவ்வீட்டில் ஒளிந்திருந்த ஒலிகள் மெல்ல
என் காதை எட்டத் துவங்கி இருக்கின்றன.
நிறையப் பேசும் ஆண்களைப் பெண்களுக்கு
பிடிக்குமென்று யாரோ அவனிடம் சொல்லியிருக்கக்கூடும்.
ஒருத்தி எந்நேரமும் பெண்ணாகவே இருந்துவிட இயலுமா? அபான
வாயுவை அவனில்லாத பொழுதுகளில் கூட அடக்கியே விடுகிறேன். இன்று
மருத்துவமனைக்கு அவனோடு நானும் கூட செல்வதாக இருந்தது. ஆனால்
கடைசி நேரத்தில் என்னை இருக்கச் செய்துவிட்டு அவன் மட்டும் கிளம்பி சென்றுவிட்டான். வரும் நேரம் தான். மனிதர்களுக்கு நிகராக ரோபோக்கள்
உலவும் இந்தக் காலகட்டத்திலும் கூட, ஏன் நோயைத் தக்கவைக்கும்
நீட்டிக்கச்செய்யும் மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை? அவன் கைநிறைய வாங்கிவரும் மருந்துகளுக்கு அப்படியொரு வல்லமை இருந்தால்
எப்படியிருக்கும்? என் ஆசையும்கூட அதுதான். அவன் நோயுள்ள பெருவாழ்வு வாழவேண்டும்.
No comments:
Post a Comment