வெறுங்கால்நடை..
சு.வெங்குட்டுவன்
ஈஸ்வரன்கோவில் வீதியில் மேற்கே வந்து கொண்டிருந்தேன்.
ஆலாமரத்துக்கு அருகாமையில் வடிவேலு எதிர்பட்டார். அவர் கிழக்கே வந்து
கொண்டிருந்தார். நிற்கக்கூட இல்லை. நின்று பேசுமளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய
பழக்கமும் கிடையாது. வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு கடந்து விட்டேன். அவரும்
பதிலுக்கு தலையசைத்தார். இப்படியான சூழ்நிலைகளில் இம்மாதிரியான தலையாட்டல்களுக்கு, நல்லது,
செளக்கியமா, கெளம்பட்டுமா என்றெல்லாம்
அர்த்தம். ஒரு காலத்தில் பூபதியின் சலூனில்
எந்தநேரமும் வடிவேலுவைப் பார்க்கலாம். நானும் பூபதியைத்தேடி போவதும் வருவதுமாக
இருப்பேன். அந்த அளவில் எங்களுக்குள் ஒரு பரிச்சியம் உண்டாகியிருந்தது. அவ்விதம்
பரிச்சியமாகிய பலர் இப்போது நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஏனோ
வடிவேலுவுடனான உறவு மட்டும் அந்த அளவிலேயே நின்றுபோய் விட்டிருந்தது. இப்போது
பூபதி தனது சிகையலங்கார நிலையத்தை வீட்டிற்கே மாற்றிக்கொண்டு விட்டான்.
வடிவேலு மாதிரியான நண்பர்களை சந்திப்பதற்கே வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. எங்கேயாவது கடைவீதிகளில் எதிர்முட்டு போட்டுக்கொள்ள நேர்ந்தால்
மட்டும் இதுபோல தலையாட்டிக் கொள்வதுண்டு.
நாங்கள் எதிர்பட்டுக்கொண்ட இடத்திலிருந்து
கூப்பிடுதூரத்தில் தபால் அலுவலகம் இருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு போஸ்ட்
ஆபிசுக்குள் நுழைந்தேன். மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி
சுழன்றபடியிருந்தது. தன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆபீசர் கணிணித்திரையில்
மூழ்கியிருந்தார்.”கரண்டுபில் கட்டவேணுங்க சார்” என்றேன். “நானும் காலைலயிருந்து போராடிட்டிருக்கேன். நெட்டு சுலோ. வொர்க்கே
ஆகமாட்டேங்குது.. எதுக்கும் அரைமணி நேரம் கழிச்சு வந்து பாருங்க..” என்றார். மின்வாரிய அலுவலகத்தில் சொன்ன அதே பதில். அங்கேயே அரைமணிநேரம்
உட்கார்ந்து சலித்துவிட்டுத்தான் வருகிறேன். இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
கமிசனுக்கு ஈபி பில் கட்டிவிடும் கம்பியூட்டர் சென்டர்களுக்குப் போகலாம் எனத்
தோன்றியது. வெளியே வந்தேன். எனது பைக்கின் இடப்பக்க ஹேண்டிலைப் பிடித்தபடி வடிவேலு
நின்றுகொண்டிருந்தார்.
“உங்கபாட்டுக்கு நிக்காமயே வந்துட்டீங்க..?’
”நீங்க வெக்குவெக்குனு வேகவேகமா நடந்து
போயிட்டிருந்தீங்க.. சரி, ஏதோ அவசர
வேலையிருக்குமாட்டயிருக்குதுனு நானும் எம்பாட்டுக்கு வந்துட்டேன்.. அதையுந்தவிர நிக்கச்சொல்லி கை காட்டீருந்தீங்கன்னா நின்றிருப்பேன். எப்பவும்போல்
தலையொவச்சீங்க.. நானும் தலையாட்டீட்டு வந்துட்டேன்.”
“இல்லே.. நிக்காமயே உங்கபாட்டுக்கு சர்ருனு வந்துட்டீங்ளா.. அதான் மனசுக்கு
கஷ்டமாயிருச்சு. நாம ஒரு தப்பும் பண்ணுலயே.. அப்புறம் எதுக்கு நிக்காமப் போறாருனு
நம்மமேல அப்படியென்ன கோவம்னு ஒரே கொழப்பம். ஒருவேளை நம்முளுக்கு தெரியாமக்கீது
ஏதாவது உங்களுக்கு கெடுதல் பண்ணீருப்பனோன்னும் யோசனை. அதான் எதா இருந்தாலும்
மன்னிப்புக் கேட்ருலாம்னு வந்தேன். எதாயிருந்தாலும் மன்னிச்சிருங்க..”
சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே.. ஒருவேளை குடிச்சிருப்பாரோ என
தோன்றியது. வேண்டுமென்றே நக்கலுக்கோ கிண்டலுக்கோ பேசுகிறமாதிரியும் தெரியவில்லை.
அந்தக்குரலில் உண்மையாகவே வருத்தம் வெளிப்படுகிற ஒரு தொனி இருந்தது. என்னிடம்
ஒருநாளும் அவர் இப்படியெல்லாம் பேசியதுமில்லை. ‘என்ன வடிவேலு.. இன்னிக்கு
வொர்க்கு இல்லியா.. ப்ரீயாட்டயிருக்குது?’ என பூபதி சலூனில் அமர்ந்திருக்கும் அவரிடம் சம்பிரதாயமான கேள்வியொன்றை
கேட்பதுண்டு. ஆமாங்க.. இல்லீங்க என அவரும் ஒற்றை வார்த்தையில் ஒரு பதிலைச்
சொல்லுவார். அதற்குமேல் எங்கள் உரையாடல் நகர்ந்ததில்லை. சலூன் சந்திப்புகள்
அற்றுப்போன பிறகு அதற்கும்கூட வாய்ப்பில்லை. வெறும் தலையாட்டல் மட்டும்தான்.
“சேச்சே.. உங்கமேல எனக்கென்ன கோபம் வடிவேலு? நம்ம
ரண்டுபேருக்குள்ள வாய்க்காத் தகராறா வரப்புத் தகராறா.. நீங்க எங்கியோ
உங்கபாட்டுக்கு இருக்கிறீங்க நான் எங்கியோ எம்பாட்டுக்கு இருக்குறேன். உங்கமேல
வருத்தப்படறதுக்கு என்ன இருக்குது வடிவேலு?”
“சரி, அத வுடுங்க.. நல்லாருக்கீங்களா..?”
“நல்லாருக்கேன் வடிவேலு. நீங்க எப்படி இருக்கீங்க?”
“பார்த்தா எப்படித் தெரியுது?”
“என்னது?”
“இல்லே.. என்னைப் பார்த்தா எப்படி இருக்கற மாதிரி தெரியுதுனு கேட்டேன்?”
வடிவேலு கோடுபோட்ட முழுக்கைச் சட்டையும் லுங்கி வேட்டியுமாக
இருந்தார். முழுக்கையை முழங்கைகளுக்குமேலே மடித்துவிட்டிருந்தார். வேட்டியை
முழங்கால் மூட்டுகளை மறைக்கும்படி மடித்துக் கட்டியிருந்தார். செருப்பில்லாத
பாதங்களிலும் புறங்கால்களிலும் புழுதி படிந்திருந்தது. சட்டைப்பையில் மஞ்சள்
மற்றும் வெளிர்பச்சை நிறமுடைய இரண்டு டெஸ்டர்கள் பேனாவைப்போல் குத்தப்
பட்டிருந்தன. தலைமுடியும் தாடியும் பாதிக்கும் அதிகமாக நரைத்திருந்தது. முன்பு
எப்போதும் இளந்தாடியிலிருப்பார். இப்போது அது முதிர்ந்து அடர்த்தி கூடியிருந்தது.
பின்நவீன ஓவியர்கள்,
கவிஞர்கள், எழுத்தாளர்கள், நெரிசலான நகரங்களின் ஆளரவமற்ற பகுதிகளில் கஞ்சாவைப் புகைத்தபடி
மரத்துநிழலில் படுத்துக் கிடப்பவர்கள் ஆகியோரின் சித்திரமெல்லாம் ஏதோவொருவகையில்
வந்து போயிற்று.
“உங்களுக்கென்ன வடிவேலு? ஜம்முனு இருக்கீங்க.
சாமியார் மாதிரி. ஞானி மாதிரி”
“அப்போ செரைக்க வேண்டாம். இந்த தாடியை அப்படியே வுட்ருலாம்கிறீங்ளா?”
“வுட்ருங்க.. தாடிதான் உங்களுக்கு பவரே”
“அப்போ வண்டிய எடுங்க”
“என்னது?”
“எனக்காக ஒரு பத்து நிமிஷம். எடுத்துட்டு வாங்க. வூட்டுக்குப் போயிட்டு
வந்துரலாம்”
“இல்லெ வடிவேலு.. எனக்கு நெறைய வேலைகள் இருக்குது. அவசரமாப் போயாகோணம்”
“போய்க்கலாம். ஆதார்க் கார்டக் கொண்டா பாஸ்புக்கக் கொண்டா சிலிண்டர்புக்கக்
கொண்டான்னு ஒரே டார்ச்சர்.. எனக்காக வீடு வரைக்கும் வாங்க.. பத்தே நிமிஷம்.”
“சிலிண்டர் ஏதாச்சும் எடுக்கிறதுக்குப் போனீங்களா..? அங்க
இதெல்லாம் வேணும்ன்னுட்டாங்களா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பூபதி எப்படியிருக்காப்டி? நல்லாருக்காப்டியா?”
“என்னது?”
“ஒண்ணுமில்ல.. பத்தே நிமிஷம் எனக்காக வண்டிய எடுங்க. வூட்டுக்குப் போயிட்டு
வந்திரலாம்”
”குடிச்சிருக்கீங்ளா..?”
“என்னப் பார்த்தா குடிச்சிருக்கற மாதிரியா தெரியுது?”
“இல்லே எனக்கு டவுட்டாத்தான் இருக்குது. வாயை ஊதுங்க”
வாயை ஊதினார். லேசான பீடி வாசனை. உணவெடுக்காமல் வெறும்
குடலாக இருக்கும்போது அந்தக் குடல் புண்ணாகாத ஆரோக்கியமான குடலாக
இருக்கும்பட்சத்தில்,
துர்நாற்றமில்லாத ஒர் ஆரோக்கியத்தின் வாசனை வருமல்லவா? அந்த வாசனை. இப்போது குடித்திருக்கவில்லையெனினும் வடிவேலு குடிக்கிற
ஆள்தான். ‘அவருக்கென்னங்க.. கைவசம் நல்ல தொழில் இருக்குது.
ஒருவாரம் வேலைக்குப் போனாலே ஒருமாசத்திக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு
சம்பாதிச்சிருவாரு.. ஆனா என்ன, அந்த ஒரு மாசத்திக்கும்
சாப்பிடறாரோ இல்லியோ உட்கார்ந்து குடிச்சிட்டேயிருப்பாரு.. அதான் பிரச்சனை.’ என ஒருசமயம் பூபதி இவர் குறித்து சொல்லியிருக்கிறான். வடிவேலுவின் கண்களை
சில விநாடிகள் உற்றுப் பார்த்தேன். போய்த்தான் பார்ப்போமே எனத் தோன்றியது. “சரி, உக்காருங்க போலாம்”. என்றேன்.
ஈஸ்வரன் கோவிலைத் தாண்டி வடக்கே போய்க்கொண்டிருந்தோம்.
ஆளரவமும் வாகனரவமும் அற்றுப்போயிருந்த தார்ச்சாலையில் நசுங்கிக்கிடந்த ஓணானை
இரண்டு காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. இறுக்கம் தளர்ந்து மிதமான வேகத்தில்
கீகாத்து அடிக்க ஆரம்பித்திருந்தது. சாலையின் வலப்புறம் வரிசைகட்டி வளர்ந்திருந்த
வேலி மரங்களின் நிழல் சாலையைவிட்டு விலகி பக்கவாட்டு மண்பாதையையும் கடந்து கீழே
ரோட்டுக்குழிக்குள் இறங்கியிருந்தது. ரோட்டுக் குழியெங்கும் பார்த்தீனியமும்
துத்தியும் மண்டிக்கிடந்தன. துத்திச்செடிகளின் மஞ்சற்பூக்கள் கருப்பண்ணசாமி
சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின. காயும் துத்திச்செடிகளின்
வாசனையும்,
வேலிக்கு அப்பாலிருக்கும் தோட்டத்தில் அறுத்து குச்சுக்குச்சாக
ஊன்றப்பட்டிருக்கும் சோளத்தட்டுகள் வாசனையும் கீகாத்தில் கலந்திருந்தது. “இப்போ எங்க வேலைக்குப் போயிட்டிருக்கீங்க வடிவேலு..?”என்றேன்.
“எங்கீன்னு இல்லே… எங்கவேணாலும் போறதுதான்”
“இன்னும் ஒயரிங் வேலைக்குத்தானே போயிட்டிருக்கீங்க?”
“அதே வேலைதான். இருந்தாச் சொல்லுங்க. வந்து செஞ்சு குடுக்கறேன்”
வலப்புறமாகப் பிரிந்த மற்றொரு தார்ச்சாலையில் வண்டியைக்
கிழக்கே விடச் சொன்னார். சற்று தூரத்தில் வீடுகள் தென்பட்டன. பெரிய அரசமரமும்
அதனடியில் சிறு விநாயகர் கோவிலுமாக ஊர் ஆரம்பித்தது. சிலர் கோவில் திண்ணையில்
பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தனர். எதிர்ப்புறம் கொட்டகை மாதிரியான அமைப்பில்
ஒரு கடை இருந்தது. டீக்கடையாக இருப்பின் வடையோ பஜ்ஜியோ சாப்பிட்டு தேநீரும் அருந்திவிட்டுப்
போகலாம் என வண்டியை நிறுத்தினேன். ஆனால் அது மளிகைக் கடை. சிகரெட்டாவது பற்றவைத்து
இழுத்துவிட்டுப் போகலாம் என இறங்க முயற்சிக்க, “ஏனுங்.. என்னாச்சு.. இங்கயே
எறக்கி வுடறீங்க.. வூட்டுவரைக்கும் கொண்டாந்து வுடுங்க.” என்ற வடிவேலுவிடம் “ஒரு சிகரெட் இழுத்துட்டுப்
போயிரலாமே..”என்றேன். “ வூட்டுக்கே
போயிரலாம்போங்க.. அங்கயே இருக்குது” என்றார்.
விநாயகர் கோயிலிலிருந்து மூன்று சிமெண்ட் சாலைகள் ஊருக்குள்
போயின. இடது புறமாக வடக்கே போனதில் வண்டியை விடச்சொன்னார். “கொஞ்ச
தூரம் போனீங்ன்னா ஒரு கரண்டுமரம் வரும். பக்கத்துலயே ஒரு குடிபைப்பு இருக்கும்.
பக்கத்துலயே ஒரு மஞ்சரளி பூத்துக் கிடக்கும். அதையொட்டியே இன்னொரு சிமெண்ட்ரோடு
கிழக்கே பிரிஞ்சு போகும். அதுல விடுங்க என்றார்.
மஞ்சரளிச்செடிப் பிரிவில் கிழக்கே திரும்பினேன். வெள்ளைவேலா
மரத்தின் நிழல்
கூடாராமாய்க் கவிழ்ந்திருந்த இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச்
சொன்னார். பனியன் வேஸ்டுகளில் நூல் பிரித்தபடி சில பெண்கள் அவர் நிறுத்தச் சொன்ன
வீட்டின்முன் சிமெண்ட் சாலையில் அமர்ந்திருந்தனர். வண்டியை மதிற்சுவரின் ஓரமாக
நிறுத்தினேன். அந்தக் காலத்தைய சுவர். ஆளுயரத்துக்கும்மேலே இருந்தது. நூல்
பிரிப்பதையும் பேச்சையும் நிறுத்திவிட்டு, ஒரு கணம் என்னை
கவனித்த பெண்கள் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர். அவ்வளவு பெரிய
மதிற்சுவருக்கு அந்த நடையும் , நடைக்குண்டான தகரக்கதவும்
ரொம்பவும் சிறியதாகத் தோன்றியது. கதவு திறந்து உள்ளேபோன வடிவேலுவைப்
பின்தொடர்ந்தேன்.
கிழக்குப்பார்த்த இரு அறைகளுடைய ஒற்றைக்கோம்பை ஓட்டுவீடு.
வீட்டைவிடவும் வாசல் விஸ்தாரமாக இருந்தது. வாசலின் வடக்கு கிழக்கு எல்லைகளாக மற்ற
வீடுகளின் பின்பக்கச் சுவர்கள் அமைந்திருந்தன. வீட்டிற்கு நேர் வடபுறத்தில்
வாசலின் வடமேற்குப் பகுதியில் தென்னந்தடுக்கு மறைப்பாலான பொடக்காலி இருந்தது.
சலதாரை தண்ணிக்கு முருங்கைமரம் வைக்கப்பட்டு வளர்ந்திருந்தது. வடிவேலு வீட்டின்
நிழல் அதன் முன் சுவரிலிருந்து தரையிறங்கத் துவங்கியிருந்தது. கிழபுற வீட்டின்
நிழல் தரையிலிருந்து அதன் பின் சுவரேற ஆரம்பித்திருந்தது. தென்புறத்திலிருக்கும்
அறையின் கதவைத் திறந்த வடிவேலு ‘உள்ளே வாங்க” என்றார்.
உள்ளே போனேன். பத்துக்கு பதினொன்று அளவுள்ள சிறிய அறை .
”இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்ளா? ”
“ஆமா.”
“அப்பா அம்மாவெல்லாம்..?”
“உங்களுக்குத் தெரியாதா? எங்கப்பன் செத்து பதினாலு
வருசமாச்சே”
“அம்மா..?”
“அவ இன்னும் உசுரோடதான் இருக்கறா. இங்கில்ல.. மேக்கால ஊர்ல இருக்கிறா..”
”வடபுறத்து வீட்ல யாரு இருக்காங்க..?”
“அதை வாடகைக்கு வுட்ருக்கேன். மாசம் ஐநூறு ரூவா.. அதையும் கொஞ்ச நாளா
குடுக்கறதக் காணோம்”
“வாடகை குடுக்காட்டி காலிபண்ணச் சொல்லவேண்டீதுதானே”
“ஆளே கொஞ்சநாளா வாரதக்காணோம். வரட்டும். காலிபண்ணச்சொல்லணும்”
கிழிந்த கோரைப்பாயொன்று நடு அறையில் கோணல்மாணலாக
விரிக்கப்பட்டுக் கிடந்தது. எரிந்த தீக்குச்சிகளும் துண்டுப்பீடிகளும் தரைமுழுதும்
பரவிக் கிடந்தன. கொஞ்சம் தண்ணீரோடு பச்சைநிற ரப்பர் குடமொன்று இருந்தது. அதன்மேலே
ஒரு தட்டும் சொம்பும் வைக்கப்பட்டிருந்தது. பாதி தின்ற நிலையில்
பார்சல் பொட்டலம் வாழையிலையினாலேயே மூடியும் மூடாமலும் புரோட்டா
வைக்கப்பட்டிருந்தது. வடக்குச்சுவரின் மேற்கு மூலையில் மூன்றடுக்கு அலமாரி
இருந்தது. பலதையும் போட்டு ஒரே குப்பைக்காடாக காட்சியளித்தது. 555 சீட்டுக்கட்டுப் பெட்டிகள் கிடந்தன. நடு ஷெல்பில் ஒரு கோல்டுபில்டர்
சிகரெட் பெட்டியும் கிடந்தது. திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமில்லை. பட்டைப்
பின் செல்போன் சார்ஜர் ஒன்றும் கிடந்தது.
“இந்த சார்ஜர் வொர்க் ஆகுமா வடிவேலு” என்றேன்..”புதுசுங்க. என்றபடியே பிளக்பாய்ண்டில்
சார்ஜரைப் பொருத்தி, என் செல்போனை வாங்கி பின்னைக் குத்தி
சுவிட்சை ஆன் செய்து, சார்ஜ் ஏறுவதைக் காட்டினார். “நல்லது. சுவிட்ச்சுப் பொட்டிமேலேயே வச்சுருங்க.. போகும்போது
எடுத்துக்கிறேன்”என்றேன்.
அறையின் வடமேற்கு மூலையில் பழைய காலத்திய நீள்சதுரவடிவ
டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேலே விலையில்லா மின்விசிறி , விலையில்லா
மாவரைப்பான், விலையில்லா சட்னி அரைப்பான் ஆகிய வீட்டு
உபயோகப்பொருட்கள் அட்டைப்பெட்டியோடு அடுக்கப்பட்டிருந்தன. “ஏன்
வடிவேலு இதையெல்லாம் யூஸ் பண்றதில்லையா? பேக்கிங்கே உடைக்காம
வெச்சுருப்பீங்களாட்ட இருக்குதே” என்றேன். “நல்லாப் பாருங்க.. பெட்டி மட்டும்தான் இருக்குது. அதெல்லாம் கொடுத்தப்பவே
யூஸ் பண்ணியாச்சு. மொத்தம் நாலாயிரத்தி எரநூறு ஆச்சு” என்றார்.
தென்கிழக்கு மூலையில் புகைபோக்கியுடன் கூடிய, நின்றுகொண்டே
சமைக்கும்படியான மேடை விறகடுப்பு இருந்தது. சமைத்துத்தான் பலகாலம் ஆகிவிட்டதுபோல.
முனைகள் இடிந்த அந்த அடுப்பினுள் கசக்கியெறியப்பட்ட காகிதக் குப்பைகளாகக்
கிடந்தது. அடுப்பு மேடைக்குக் கீழே கவனித்தேன். காய்ந்த சுள்ளிகளும் சில
பாத்திரங்களும் மட்டுமே இருந்தன. சிலிண்டரைக் காணோம். “எங்க
வடிவேலு.. சிலிண்டரையே காணமாட்டயிருக்குதே ?” என்றேன். ”சிலிண்டர்தான் இல்லையே” என்றார்.
“என்னமோ சிலிண்டர்புக் எடுக்கோணம் ஆதார் கார்டு எடுக்கோணம் அது இதுன்னீங்க?”
“கேஎம் தெரியுமில்ல.. அவுருதான் சொன்னாரு. போயி கேஸ்புக்கு
ஆதார்கார்டெல்லாம் கொண்டுட்டுவாடா.. சிலிண்டர் எடுத்துக்கலாம்னாரு”
எனக்கு என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல இருந்தது. பேச்சை
மாற்றினேன். “அப்போ இந்த வீட்ல நீங்க மட்டும்தான் தனியா இருக்கிறீங்களா”
”ஆமா.. நான் மட்டும்தான் இருக்கேன்”
“சமையல் சொந்தமாவே பண்ணிக்கிறதா?”
“சமையல்லாம் அவ வந்ததுக்கு அப்புறம்தான் பண்ணனும். இப்போதைக்கு கடைல
வாங்கியாந்து சாப்பிட்டுக்கிறதுதான்”
”என்னது? அவளா? உங்களுக்கு
கல்யாணம் ஆகீருச்சா.. சம்சாரம் பிள்ளைபேறுக்கு அவங்க அம்மாவீட்டுக்குக்கீது
போயிருக்கிறாங்ளா?”
”அவள்னா சம்சாரம் அல்ல. சம்சாரம் ஆகப்போறவ..”
மறுபடியும் என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல் இருந்தது.
பேச்சை மாற்றினேன். ” சீட்டுக்கட்டெல்லாம் கெடக்குது. துண்டுப்பீடிக கெடக்கறதையெல்லாம் பார்த்தா
தினமும் சீட்டாட்டம் பட்டையக் கெளப்பும் போலிருக்குதே..”
”தினமுமெல்லாம் நடக்காது. எப்பாச்சு ஒரு நாளைக்கு மூடுவந்தா ஆடறதுதான்.”
“ஓ… சோடிக உள்ளூர்லயே இருக்காங்ளா? வெளிய இருந்து வருவாங்களா?”
“சோடியெல்லாம் யாருமில்ல.. நானே ஆடிக்கிறதுதான்”
“என்னது?”
“ஆமாம். நானே ஆடிக்குவேன். ரெண்டு பக்கமும் ரண்டு கையி. எதுத்தால ஒரு கையி.
எனக்கொரு கையி. நாலுகைக்கும் சர்சர்னு சீட்டப் போட்டுட்டு நாலு கைக்கும் சேர்த்து
நானே ஆடிக்குவேன். செம இன்ட்ரெஸ்ட்டா இருக்கும்”
எனக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது. இருக்கற
வேலையையெல்லாம் விட்டுவிட்டு இந்த கிறுக்கனோடு வந்து உளறிக் கொண்டிருக்கிறோமே என
கொஞ்சம் சலுப்பாகவும் இருந்தது. வடிவேலுவின் கண்களையே உற்றுநோக்கினேன். அந்த
கண்களையே எத்தனை தரம்தான் உற்றுநோக்குவது? உள்ளே என்ன இருக்கிறது
என்பதையெல்லாம் என்னால் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதிலே கண்டுபிடிக்க என்ன
இருக்கிறது? அதீதமான குடி. கொடிய தனிமை. மனம்
பிறழ்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சநாளில் வடிவேலு சட்டை வேட்டியெல்லாம்
கிழித்துவிட்டுக்கொண்டு ரோடுரோடாக திரிந்தாலும் திரியலாம் எனத் தோன்றியது. அவர்
கண்களை உற்று நோக்கினேன் எனச் சொன்னேனல்லவா? அதுவரைக்கும்
அவரும் இமைக்காமல் விலக்காமல் என் கண்களையே பார்த்தபடியிருந்தார். அந்த விழிகள்
கயமையோ தந்திரமோ இல்லாததுவாய் வெறுமனே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத்தான்
வேண்டும். நான் பார்வையை விலக்கிக்கொண்ட பிறகு அவரும் விலக்கிக்கொண்டு
குடத்திலிருந்த தண்ணீரை சொம்பில் மோந்து நீட்டினார். “இந்தாங்க..
குடிங்க.”
வெள்ளையாக செதில்செதிலாக மிதந்தபடி தண்ணீர் குழம்பிக்
கிடந்தது. கடுமையான தோல்நோயுள்ளவன் உடல் தலையெல்லாம் சொறிந்து சொறிந்து உதிர்ந்த
நோய்த் துணுக்குகளையெல்லாம் தண்ணீரிலேபோட்டு நன்றாக கலக்கிக் குடுப்பதுபோல
இருந்தது. இத்தனைக்கும் வடிவேலுவுக்கு ஆரோக்கியமான சருமம்தான். ஆள் அழுக்காகவும்
குளிக்காமலும் சிரைக்காமலும் இருந்தாலுமேகூட அவருக்கு சொரியாஸிஸின் எந்தவொரு
வகைமையும் இருப்பதாகத் தெரியவில்லை. “என்ன வடிவேலு தண்ணி இந்தக்
கண்டிசன்ல இருக்குது. இதை எப்படிக் குடிக்கறது?” என்றேன்.
“ஏனுங்க இந்தத் தண்ணிக்கு என்னங்க..?”
“கருமம். நீங்களே பாருங்க.. என்ன லட்சணத்துல இருக்குதுன்னு”.
சொம்பை வாங்கிய வடிவேலு ஒரே மூச்சில்
குடித்துமுடித்துவிட்டு மீண்டும் அதையே கூறினார் “ஏனுங்க இந்தத் தண்ணிக்கு என்னங்க..?”
“சரி, அதை வுடுங்க. நான் கெளம்பறேன். நீங்க வர்றீங்ளா
வர்லியா?”
“ஏனுங் போகோணமா..? அப்பறமா வெய்யத்தாழப் போனாப்
போவுது..”
“அப்ப நீங்க வர்லியா? என்னமோ சிலிண்டர்புக்கு
எடுத்துட்டுப் போகோணம் அது இதுன்னீங்க..”
“சிலிண்டர்புக்குதான் இல்லையே..”
“ஓ.. அப்பவே சொன்னீங்களே.. நாந்தான் மறந்துட்டேன். சரி வடிவேலு, ஒடம்பப் பார்த்துக்குங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நான் கெளம்பறேன்.”
நீளமான துண்டுப்பீடியொன்றை பற்றவைத்துக்கொண்ட வடிவேலு
புகைவழியும் வாயோடு சின்னப்பையன்களைபோல் கையை இடம்வலமாக ஆட்டியபடி ’டாட்டா’ காட்டினார். “நல்லது. போயிட்டு வாங்க.”
மரத்துநிழல் கிழக்கே போயிருந்தது. உட்கார்ந்திருந்தவர்கள்
யாரையும் காணோம். சிமெண்ட் ரோடு வெறிச்சோடிக் கிடந்தது. சீட்டின்மேல்
உதிர்ந்துகிடந்த வேலாயிலைகளை தட்டிவிட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
தாகமாக இருந்தது. தம்மடிக்கவும் தோன்றியது. விநாயகர் கோவில்
மளிகைக்கடையில் பச்சைநிற பொடாரன் 200மில்லி பாட்டிலொன்று வாங்கி
ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். கேஸ் அடைத்த குளிர்பானம் உள்ளே போனதும் ,
குடலுக்குள்ளிருந்த வாயுவெல்லாம் ஏப்பமாக வெளிப்பட ஆரம்பித்தன.
ஒவ்வொரு ஏப்பமும் ஒரு இலகுவான வயிற்றுநிலையை உருவாக்கியபடியிருந்தது. கோல்டு
பில்டர் ஒன்றை வாங்கி பற்றவைத்தேன். பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தவர்கள்
ஒருவரையும் காணவில்லை. கோயில் திண்ணையில் செம்மிநாயொன்று ஆழ்ந்த
உறக்கத்திலிருந்தது. நெட்டு வேலைசெய்ய ஆரம்பித்திருந்தால் பரவாயில்லை போனவுடன்
கரண்டுபில்லை கட்டிவிட்டு வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்துக்கொண்டேன். பலரையும்
போல அதற்கென இருக்கும் ஆப்பை டவுன்லோடுசெய்து செல்போனிலேயே கரண்டுபில்லை
கட்டிப்பழகிக்கொள்ளவேணும் எனும் எண்ணம் ஓட, அனிச்சையாக சட்டைப்
பாக்கெட்டுக்குப்போன வலதுகை செல்போனைத் தேடியது. ஒரு கணம் பக்கென்று இருந்தது.
அடுத்த விநாடியே வடிவேலு வீட்டில் சார்ஜ் போட வைத்தது ஞாபகம் வர, ’நல்லவேளை இங்கயே பார்த்துக்கிட்டமே.. ஊடுபோயி பார்த்திருந்தா
பெரும்சிரமமாப் போயிருக்கும்’ என நினைத்துக்கொண்டபடியே
வண்டியை திருப்பினேன்.
சற்றுமுன்னர் வெளியே வரும்போது திறந்த நிலையிலேயே
விட்டுவிட்டு வந்திருந்த வடிவேலுவுடைய வீட்டு வெளிமதிற்சுவரின் தகரக்கதவு சாத்தப்பட்டிருந்தது. ’ஆள் எங்கேயாவது கிளம்பிப்போயிருப்பாரோ.. அப்படிப் போயிருந்தா இந்தக்
கிறுக்கன எங்கீனு போயித் தொளாவறது.. ச்சை.. சிக்கல்புடிச்ச வேலை. ’ என மனசுக்குள் புலம்பியவண்ணம் ,என்ன செய்வதென
தெரியாமல் பைக்கில் உட்கார்ந்தபடியே மறுபடியும் கதவைப் கவனித்தவனுக்கு அப்போதுதான்
அது புலப்பட்டது. கதவு பூட்டப்படவில்லை. வெறுமனேதான்
சாத்தப்பட்டிருந்தது. சட்டென்று உண்டான சோர்வு சட்டென்று அகன்று மீண்டும் உற்சாகம்
ஊற்றெடுக்க பைக்கிலிருந்து இறங்கிவந்து கதவைத் தள்ளினேன். திறந்துகொண்டது.
தென்புறத்துவீட்டின் கதவும் சாத்தப் பட்டிருந்தது. பூட்டப்படவில்லை. நாதாங்கியும்
போடப்படவில்லை. நாதாங்கி போடப்படாது வெறுமனே சாத்தியிருந்தால் கதவுக்கும்
நிலைப்படிக்கும் சிறு சந்தாவது இருக்குமல்லவா? அப்படியான
சந்தும் இல்லை. கதவு நிலைப்படியோடு இறுக்கமாக ஒட்டியிருந்தது. அப்படியென்றால்
உள்தாழ் வைக்கப்பட்டிருக்கிறது. அட பாங்கிறுக்கா.. இந்த மத்தியானத்துல
தாழ்போட்டுட்டு படுத்திருக்கிறானே என நினைத்தபடி கதவைத் தட்டுவதற்குப் போனவன்
வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.
உள்ளிருந்து ஏதோ சத்தம் வருவதுபோலத் தோன்றியது. காதைத்
தீட்டிக்கொண்டேன். வடிவேலு யாருடனோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். யாரோ
அவருடைய பேச்சுக்கு ’ம்’ போட்டு கேட்டுக்கொண்டிருப்பதும்
செவிப்புலனாகியது. நம்பவேமுடியாத ஆச்சர்யத்துடன் மேலும் காதை தீட்டிக் கொண்டு
கூர்ந்து கேட்கத் துவங்கினேன்.
அந்த ‘ம்’ ஒரு
பெண்ணினுடையதாக இருந்தது.
000
No comments:
Post a Comment