Tuesday 2 July 2019

நடுகல் 2 -ஆரெக்ஸ்.. சு.வெங்குட்டுவன்





ஆரெக்ஸ்…  

சு.வெங்குட்டுவன்


கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்குப் பிறகு ஆர் எக்ஸ் பழனிச்சாமி மாம்ஸை சந்தித்தேன். எதிர்பாராத சந்திப்பு. கட்டிங்டேபிள் சந்தில் சீனியோடு பழனிச்சாமி சண்டைபோட்டுக்கொண்ட நாளா? அல்லது நடுவயது பெண்ணொருவரோடு அவரை டைமண்ட் தியேட்டரில் பார்க்கநேர்ந்த நாளா? இந்த இரண்டிலே பழனிச்சாமியை கடைசியாகப் பார்த்தது எந்த நாளாக இருக்கும் என கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆர் எக்ஸ் ஐப் பற்றிய நினைவுகள்  ஞாபக வெளியைவிட்டு விலகி வெகுதூரம் போய்விட்டிருந்தன. ஏதேதோ நினைவுகளெல்லாம் மேலெழும்பி  அலைகளை உண்டாக்கியபடி ஓடிக்கொண்டிருக்கும் மனதின் குருட்டு யோசனையோட்டத்தில், பழனிச்சாமி மாம்ஸ் பற்றிய நினைவு கடைசியாக எப்போது மேலெழும்பியது என்பது குறித்துக்கூட  எனக்குள் எந்த தெளிவான பிரக்ஞையும் இல்லை. நான் அவரை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன்.

இப்படியான நிலையில்தான் காங்கயம் கடைவீதியில் ஆரெக்ஸ் ஐ  நேற்று மதியம் எதேச்சையாக சந்திக்க வாய்த்தது. பங்குனி வெய்யில் நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்திருந்தது. ஆழ்வெய்யிலின் அமைதி. வாகனங்களின் சத்தம்கூட அமுங்கியே ஒலிப்பதுபோல பட்டது. பங்குனி மாதத்திலே சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும். மீனம் ஒரு நீர்த்தன்மையுடைய ராசி. அதன் குறியீடு கடல். இப்படி கடல் ராசியிலே சூரியன் இருக்கையில் எதற்காக வெய்யில் இவ்வளவு கடுமையாக அடிக்கவேண்டும் என கேள்வி உண்டானது. கடல் ராசியில் சூரியன் சஞ்சரிக்கையில் கடுமையாக வெய்யில் அடித்தால்தான் கடல்நீர் தேவையான அளவுக்கு ஆவியாகும். அது தேவையான அளவுக்கு ஆவியாகி மேகமானால்தான் பருவத்தில் தேவையான அளவுக்கு மழை பொழியமுடியும் என பதிலும் உண்டானது. சரியான பதிலோ தவறான பதிலோ எல்லாக் கேள்விக்கும் ஒரு பதில் இருக்கிறதுதான்போல.

கடுக்காய்ப்பொடியை செட்டியாரிடம் கேட்டுவிட்டு நின்றுகொண்டிருந்தேன். கொஞ்சம் பொறுங்கள்.. தருகிறேன்” என்ற செட்டியார் அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கியிருந்த மருந்து வகைகளையெடுத்து  அடுக்குகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். நிரந்தர வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்களுக்கு ஒரு அன்புகலந்த உரிமை வந்துவிடுகிறது. அதுதான் இப்படி அவர்கள் வேலைகளை முடிக்கும்வரை காத்திருக்கச் சொல்கிறது என நினைத்துக் கொண்டேன். போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைதான் என்றாலும் வாகனச் சத்தமேயற்ற ஒர் கணமும் வாய்க்கத்தான் வாய்க்குமல்லவா? அப்படியான அரிய கணத்தில்தான் அந்த குரல் கேட்டது. ஏனுங் வெண்தாமரைப்பொடி நாலு பாக்கெட் குடுங்க..”. பின்னால் நின்றிருப்பவரின் குரல் நம் காதில் விழுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? அவ்வளவு நேரம்தான் ஆகியது. அற்றே போயிருந்த ஆர் எக்ஸ் பழனிச்சாமி மாம்ஸின் உருவம் என் மனதில் தோன்றுவதற்கும் அந்தக் குரல் அவருடையது என கண்டுகொள்வதற்கும்.

என் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆச்சர்ய பரிச்சய உணர்வுகள் மற்றும் இதழ்விரியக் காத்திருக்கும் மகிழ்வின் முகிழ்நிலை ஆகியவை ஆரெக்ஸையும் தொற்றிக்கொண்டு விட்டிருந்தது. ஆனாலும் அடையாளங்கண்டு கொள்ளவியலாது திணறினார்.கண்டுபிடிக்கிறாரா பார்ப்போமென சில நொடிகள் காத்திருந்தேன். நீங்க.. உங்களை எங்கியோ பார்த்தமாதிரியே இருக்குதே …” என்றார். யோவ் மாம்சுநான் வெங்குட்டு.. பேட்லாக் டெய்லர் வெங்குட்டுஎன்றேன். அவருக்குள்ளும் அற்றேபோயிருந்த என் உருவத்தையும் ஞாபகத்தையும் எனது குரல் மீட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டும். அட மாப்ளே நீயா..? ஆளே அடையாளந் தெரியாத அளவுக்கு மாறிப் போயிட்டியேடா..?” என்றார். மேற்படி வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் அனிச்சையாக விரிந்த அவரது கைகள் எனை தாவி அணைத்திருந்தன.

ஒரு நிமிஷம் யாருனே தெரியாமக் குழம்பிப் போயிட்டேன். குரலைவெச்சுத்தான் கண்டேபுடிச்சேன். என்னடா மாப்ளேஆளே அடையாளந் தெரியாத அளவுக்கு இப்படி உப்பிப் போயிட்டே..தலையெல்லாம் வேற சொட்டை வுழுந்திருச்சு..?”

வயசாகுதல்லங்க மாம்ஸ்அந்தந்த காலத்துக்குண்டான மாற்றம் ஏற்படத்தானே செய்யும்?’

ஆரெக்சும்கூட மாறிப்போய்த்தான் இருந்தார். வயதாக வயதாக இளமையும் பொலிவும் கூடுகிறதோ எனும்படியான மாற்றம். சிதைந்த பணியாரக் கல்லின் குழிகளை ஞாபகப் படுத்தும் அவரது கன்ன ஒடுக்குகள் மேவி, தினசரி சவரத்தில் மினுமினுத்தன. மீசையையும் மழித்து விட்டிருந்தார். இருபதுகளின் தொடக்கத்தில் தாடிவளர்ப்பதும் நாற்பதிற்குப்பிறகு மீசையையும் சேர்த்து மழித்துக்கொள்வதும் இங்கே பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. கைகூடாத  முதிர்ச்சியின் பாற்பட்ட காதல் தாடி மீசை வளர்க்கவும், கைவிட்டுப்போகிற இளமையின் மேலுண்டான மையல் அவைகளை மழித்துக்கொள்ளவும் காரணமாகிறதோ என்னவோ. வெள்ளையில் காட்டன் சர்ட்டும் நீலக்கலர் ஜீன்ஸுமாக உண்டான வயதிலிருந்து ஏழோ எட்டோ குறைந்தவரைப் போல ஆரெக்ஸ் தோற்றங் காட்டினார்.

நான் வாங்கிய கடுக்காய்ப்பொடிக்கும் அவரே பணம் கொடுத்தார். வெண்தாமரைப்பொடி பாக்கெட்டுகளை ஸ்கூட்டியின் இருக்கையை தூக்கி உள்ளிருக்கும் கேபினுள் வைத்தபடியே கேட்டார். வெயில் கொளுத்துது. போய் ஏதாச்சும் ஜூஸ் சாப்பிடலாமா?”.  பழச்சாறகம் சாலைக்கு மறுபுறம் இருந்தது. நடுவே டிவைடர்கள் வைக்கப் பட்டிருந்தன. வடக்கே போய் ரவுண்டானாவில் திரும்பி தெற்கேவந்து வண்டிகளை பழமுதிர் நிலையத்தின் முன் நிறுத்தினோம்.

பனிக்கட்டியின் துணுக்குகள் மிதந்தபடியிருக்கும் ஆரஞ்சுச்சாற்றை பருகிக் கொண்டிருக்கையில் வினவினேன் இன்னும் அந்த ஆர் எக்ஸ் ஹண்ரேட (RX100) வெச்சுருக்கீங்ளா மாம்ஸ்..?”

இருக்குது. அதை விக்க முடியுமா? இது வூட்ல பொம்பளை ஓட்றதுக்கு செளகரியமா இருக்குமேன்னு வாங்குனது. அப்பப்போ நானும் எடுத்துக்கிறதுதான். ஆரெக்ஸ் ஹண்ரேடக் குடுத்துப்போட்டு என்ன பண்றது? நம்முளுக்கு ஒரு நேம் குடுத்ததே அந்த வண்டிதானே..?”

பதினான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பல்லவா? இந்த பதினான்காண்டு வாசத்தின் ஏற்றயிறக்கங்கள் உவத்தல் காய்த்தல்கள் பற்றி எங்களின் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது அந்த கனெக்சன் என்னாச்சு மாம்ஸ்.. இன்னும் கண்டினியூ ஆகுதா?’ என கேட்கலாமெனத் தோன்றிக் கொண்டேயிருந்தது. ”இத்தனை நாளுக்கப்பறம் உன்னைச் சந்திச்சது என்னத்தையோ கண்டமாதிரி இருக்குது மாப்ளே.. எனக்கு இனி ஊருக்குப்போற வேலைதான். அங்க போயியும் பெருசா வொர்க்கு ஒன்னும் இல்ல.. அததுக்கு ஆளுக இருக்குது. அவுங்க பார்த்துக்குவாங்க. நீயும் ப்ரீதானே மாப்ளே.. போயி ஒரு பீரப் போடுவமா?’’ என்றார். பேருந்து நிலையத்துக்கு அருகாமையிலிருந்த மதுபானக்கடை நீதிமன்ற உத்தரவின்படி மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இடமாற்றம் செய்யப் பட்டிருந்தது.

இப்போது தெளிவாகிவிட்டது.  அந்த நடுவயதுப் பெண்ணோடு கண்டதுதான் நான் ஆரெக்ஸை கடைசியாகப் பார்த்தது. சீனியோடு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்தது.

அன்றைக்கு காலையிலிருந்தே ஆரெக்ஸ் ஒரு மாதிரியாகத்தான் இருந்தார். முகம் உணர்த்தியே இல்லாமல் இருந்தது. அவன் இந்த நாலுமாசமாவே ஒரு மாதிரியாத்தாண்டா இருக்குறான். இன்னிக்கு என்ன புதுசா கண்டுபுடிச்சிட்டே..”  பத்துமணி டீ டைமுக்கு வெளியேவந்தபோது சீனி கூறினான். மூர்த்தியண்ணன்தான் அந்த கம்பனியில் பவர்டேபிள் காண்டிராக்ட் எடுத்திருந்தார். நானும் சீனியும் அவரிடம் பேட்லாக் டெய்லர்களாக பணிபுரிந்தோம். பவர்டேபிள் சிங்கர் செக்‌ஷன்களைத் தவிர கட்டிங் அயர்னிங் பிரிவுகளெல்லாம் கான்டிராக்ட் விடப்படாமல் ஓனரின் நேரடி நிர்வாகத்திலேயே இருந்தது.

கட்டிங் செக்‌ஷனின் ஆஸ்தான கட்டிங் மாஸ்டர்களாக ஆரெக்ஸும் துரையண்ணனும் இருந்தனர். வேலைமிகுந்த சமயங்களில் புதிய கட்டர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் நிறுத்தப்படுவார்கள். ஆனால் இவர்களிருவருக்கு மட்டும் எவ்வளவு டல்லான சீசனாக இருப்பினும் வேலை உண்டு எனும் நடைமுறை இருந்தது. நானும் சீனியும் மூர்த்தியண்ணனின் ஆஸ்தான பேட்லாக் டெய்லர்கள்.  துரையும் மூர்த்தியும் என் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். சீனி கம்பனிக்கு அருகே ராஜீவ்காந்தி நகரில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தான். அவனுடைய சொந்த ஊர் தாராபுரத்திற்கு தெற்கே பழனி போகும் வழியிலிருந்தது. ஆரெக்ஸ் காங்கயத்துக்கு கிழக்கேயிருக்கும் ஒரு சிற்றூரிலிருந்து வந்து கொண்டிருந்தார்.

கம்பனியிலேயே ஆரெக்ஸ்தான் நீண்ட தூரமும் நேரமும் பிரயாணம்செய்து வேலைக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். ஊரிலிருந்து காங்கயம் பஸ்நிலையம்வர டிவிஎஸ் 50 ஒன்றையும், திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கம்பனிக்கு வருவதற்கு யமாஹா ஆர் எக்ஸ் ஹண்ட்ரேடு ஒன்றையும் வைத்திருந்தார். வேலை நேரமான காலை எட்டு முப்பதுக்கு வந்துசேர அவர் வீட்டில் அதிகாலை எழுந்து ஆறுமணிக்கே புறப்படவேண்டியதிருந்தது. சம்பள நாளான சனிக்கிழமைமட்டும் மூர்த்தி துரை ஆரெக்ஸ் நான் என நாங்கள் நால்வரும் ஊருக்குப் போகாமல் சீனியின் அறைக்குப் போய்விடுவது வழக்கமாக இருந்தது. குடிப்பழக்கம் இல்லாதபோதும் சனிக்கிழமை கொண்டாட்டங்களில் ஆரெக்ஸ் எங்களோடு தவறாது கலந்துகொள்வார். காரணம் அவர் சிக்கனை விரும்பி சாப்பிடுவார். நாங்களும் அவரை தவறாது அழைத்துப் போய்விடுவோம். அவர் சிக்கனை பிரமாதமாகச் சமைக்கக் கூடியவராகவும் இருந்தார்.

மதுவகைகளைக் கண்டால் ஆரெக்ஸுக்கு குமட்டிக்கொண்டு வந்துவிடும். ஆகவே ஆகாது..” என மூஞ்சியைத் திருப்பிக் கொள்வார். ஆனால் புகைப்பதில் மன்னன். பீடியோ சிகரெட்டோ எது கிடைத்தாலும் ஊது ஊதுயென ஊதித் தள்ளிவிடுவார். அப்படிப்பட்டவர் பீடிக் கட்டுகளையும் சிகரெட் பெட்டிகளையும் தூக்கி வீசிவிட்டு பியர்பாட்டிலைக் கையிலெடுத்தாரெனில் அதற்குக் காரணம்  அம்பானிதான். யாரும் வாங்கலாம் எனும்படியான மிகக்குறைந்த விலையில் சந்தைக்கு வந்திருந்த ரிலையன்ஸ் செல்போன்கள்தான். அப்படி வாங்கிய செல்போன் மூலம் ஓர் வழிமாறிய அழைப்பின்வழி  ஆரெக்ஸுக்கு கிடைத்த அந்த தொடர்புதான்.

கம்பனியில் ஓனர் மேனேஜர் கணக்குப்பிள்ளைகளிடமெல்லாம் ஏற்கனவே அலைபேசிகள் இருந்தன. மலிவுவிலை ரிலையன்ஸ் போன்களால் லேபர்கள் சைடிலும் மூன்றுபேர் கைப்பேசி உடமையாளர்கள் ஆகியிருந்தனர். அந்த மூவரில் ஆரெக்ஸும் ஒருவர். அந்தக் காலத்தின் மன்னாதி மன்னர்களுக்கெல்லாம்கூட கிடைக்காத பல வாய்ப்புகள் இவ்விஞ்ஞான காலத்திய எளிய கடைக்கோடி மனிதருக்கும்கூட சர்வ சாதாரணமாக வாய்த்துவிடுகிறது. அப்படியான வாய்ப்புகளில் இந்த செல்போனும் ஒன்று. அசோக ஒளரங்கச்சீப் சக்கரவர்த்திகளாகவே இருந்தாலும்கூட அவர்களால் கண்ணுக்கே தெரியாத தூரதூரத்திலே இருப்பவர்களிடமெல்லாம் நேரிலே பேசுவதுபோல் பேசியிருக்க முடியுமா? அல்லது தூரதூரவாசிகள் பேசுவதையெல்லாம் அருகேயிருந்து கேட்பதுபோல் கேட்டிருக்கத்தான் முடியுமா? ஆனால் ஆரெக்ஸ் பேசினார். கேட்டார். யாராரிடமோவெல்லாம் பேசியபடியேயிருந்தார். யார்யாரோ பேசுவதையெல்லாம் கேட்டபடியேயுமிருந்தார்.


 நாலுபேருக்கு நடுவில் நாலுபேருக்கும் கேட்கும்படியான சத்தத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஆரெக்ஸ் , நாளடைவில் யாருமற்ற இடத்தில் யாருக்கும் கேட்காத தொனியில் பேசத் துவங்கினார். நடையில் மாற்றமில்லாவிட்டாலும் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தது. கட்பீஸ்களை எடுத்து அளவுகொடுத்து தைத்து வாங்கி உடுத்திக் கொண்டிருந்தவர், ஆயத்த ஆடைகளுக்கு மாறியிருந்தார். ஜீன்ஸும் டிசர்ட்டும் அவருக்கு எடுப்பாகவும் இருந்தன.  தம்மடிப்பதை விட்டிருந்தார். அதைவிட ஆச்சர்யம் பியர் அடிக்கத் துவங்கியிருந்தார்.” தொடர்ந்து பீர் அடிச்சுட்டு வந்தா கன்னமெல்லாம் உப்பி உடம்பெல்லாம் சதைபோட்டு தோலெல்லாம் மினுமினுன்னு ஆயிருமாமே” என்றார். புகைப்பதை விட்டொழித்ததற்கு அவர் கூறிய காரணம் யோசிக்கவேண்டியது. உளவியல் ரீதியானது. பீடிக்கட்டுகளிலும் சிகரெட் பெட்டிகளிலும் பொறித்து வைக்கவும் வேண்டியது. அந்தக் கருமத்தைக் குடிச்சுக் குடிச்சு உதடெல்லாம் கருகருன்னு போயிருச்சு.. தீயைவெச்சுக் கருக்குனமாதிரி.. அதான் வுட்டுத் தொலச்சிட்டேன்”.  
   
ஏதோவொரு ராங்கால் தொடர்பு பலப்பட்டு காய்ந்துபோன காங்கேயம் காளை கம்மங்காட்டுக்குள் புகுந்திருக்கிறது என மட்டுமே எங்களால் யூகிக்க முடிந்தது. அது யார் என்ன விவரம் என்பது பற்றியெல்லாம் துளியும் கண்டறிய முடியவில்லை. தெரியாமல் பியரில் ஹாட்டைக் கலந்துகொடுத்து உச்சபோதைக்குக் கொண்டுபோய், சீனி கேட்டுப் பார்த்தான். கண்டதையும் உளறிக்கொட்டும் ஆரெக்ஸ் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும்போது மட்டும் மட்டையானார். அல்லது அது யாராயிருந்தாத்தான் உங்களுக்கு என்னடா? வேற நாய மயிரிருந்தா பேசுங்கடா.. இல்லாட்டி மூடீட்டுப் படுங்கடா..” என்றார். அதுக்கில்ல மச்சி.. நாளைக்கு ஏதாச்சு ஒன்னுனா உனக்குன்னு நாலுபேராவது சப்போர்ட்டுக்கு வேணுமே.. எங்களுக்கும் முழுவிவரமும் தெரிஞ்சாத்தானே உனக்கு அந்த சமயத்துக்கு என்ன தேவையோ அதை பண்ணித் தர முடியும்?”  என்றெல்லாம் சீனி சொல்லிப் பார்த்தான். நாங்களும்கூட முயன்று பார்த்தோம். ஆரெக்ஸ் வாயே திறக்கவில்லை. என்னப்பத்தி மட்டும்னா உடனே சொல்லீருவேன். இது இன்னொருத்தரும் சம்பந்தப்பட்ட விசயம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வீணா வாயைக் கிளறாதீங்க”  என்று சொல்லி விட்டார்.

இவ்வளவு பழகியும் நம்ப மறுக்கிறாரே.. மூடி மறைக்கிறாரே எனும் வருத்தம் எங்கள் அனைவருக்கும் இருந்தது. சீனிக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காட்ல மேயற மொயலு கண்ணீல சிக்கித்தாண்டா ஆகோணம். கண்டிப்பா நீயும் ஒருநாள் சிக்கத்தான் போறே.. ஹெல்ப் பண்ணுங்கடா மாப்ளைகளேனு எங்ககிட்டவந்து நிக்கத்தான் போறே..” என சீனி கருவிக் கொண்டிருந்தான். அந்தக் கருவல் கொஞ்சம் விளையாட்டாகவும் இருந்தது. கொஞ்சம் வினையமாகவும் இருந்தது.

நேரமே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவதால் காலை உணவையும் கம்பனிக்கே கொண்டுவந்து முற்பகல் பத்துமணி டீ டைமில் சாப்பிடுவதுதான் ஆரெக்ஸின் வழக்கம். மதிய உணவை பிற்பகல் மூணுமணி டீ டைமில் சாப்பிடுவார். மாலை ஆறுமணி டீ டைமுக்குத்தான் எங்களோடு கடைக்கு வருவார். மூன்றுமணி தேநீர் இடைவேளையில் சாப்பிடும் மதிய உணவிற்கு தொட்டுக்கொள்ள , பிசிர்வெட்டும் பையன்களில் யாரையேனும் அனுப்பி சூடாக பருப்பு வடையோ உளுந்து வடையோ வாங்கி வைத்துக் கொள்வதும் வழக்கம்தான்.

அன்று காலையிலிருந்தே நல்லுணர்த்தி இல்லாமலிருந்த ஆரெக்ஸ் பத்துமணி டீ டைமில் சாப்பிடப் போகவில்லை. எங்களோடு கடைக்கு வந்தார். தேநீர் டம்ளரோடு ஓரமாகப் போய் செல்பேசியை காதில் வைத்தபடி நின்று கொண்டார். பேசுகிறமாதிரியும் தெரியவில்லை. இவர் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் எதிர்முனையில் கால் அட்டெண்ட் செய்யப்படாமல் ரிங் போய்க்கொண்டேயிருக்கிறது என புரிந்தது. ஆள் யாருனு மோப்பம் புடிச்சிட்டண்டா மாப்ளேஇப்ப வேணாம். மத்தியானம் பேசிக்கலாம்” என சீனி கிசுகிசுத்தான்.


டீ டைம் முடிந்து உள்ளே வந்த பிற்பாடு பேட்லாக்மிசினில் பாடிடவர் அடித்தபடியே கட்டிங் டேபிளையும் கவனித்தவாறு இருந்தேன். ஆரெக்ஸின் முகம் மேலும் சுரத்துக் குறைந்து போயிருந்தது. பனியன் ரோலை உருட்டி விரிப்பதும் இரண்டாக மடிப்பதும் பேட்டன் அட்டையை மேலேவைத்து மார்க் செய்வதும் பிறகு சட்டைப் பைக்குள்ளிருந்து செல்போனை எடுத்து பார்ப்பதுமாக இருந்தார். எதிர்பார்த்தபடியேயிருக்கும் எதிர்முனையிலிருந்து அவர் காதுகளுக்கே கேட்காதவண்ணம் ஒற்றைரிங் மிஸ்டுகால் வந்திருக்கலாம் எனும் ஆவலில்தான் அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. சற்று நேரத்துக்கொருமுறை முன்பெல்லாம் பீடி குடிக்கப் போவதுமாதிரி இப்போது கைப்பேசியும் கையுமாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தார்.

மதிய உணவு இடைவேளை. நானும் சீனியும் சாப்பிட்டு முடித்துவிட்டு கட்டிங் டேபிளுக்கும் கட்டிங் பீஸ்கள் அடுக்கப்பட்டிருக்கும் இரும்பு ரேக்குக்கும் இடைப்பட்ட சந்தில் அரைப்படுக்கை நிலையில் சாய்ந்தவாறு சாகவாசமாக அமர்ந்திருந்தோம். ஆரெக்ஸின் சாப்பாட்டுக்கூடை பிரிக்கப்படாமல் அது வழக்கமாக வைக்கப்படுமிடத்தில் அப்படியே இருந்தது. தலையோட நிலமை இன்னிக்கு ரொம்ப டேஞ்சரா இருக்குது போலயே..” என்றேன். அவன் மண்டைல புழுத்து திரியறதுக்கு நாமென்ன பண்ணமுடியும்?” என்று சீனி கூறினான். அவன் வார்த்தைகளை உச்சரித்தவிதம் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இதெல்லாம் சாதாரண விசயம்.  வெறுக்கறதுக்கு என்ன இருக்குது..?”

யாரு வெறுக்கறாங்க.. ஒரு கெழவிக்குப்போய் இப்படி அலையிறானேனு தான்.. நம்மகிட்டயெல்லாம்கூடச் சொல்லாம வீண் பில்ட்அப் பண்ணீட்டுத் திரியுறானேனுதான்..

என்னது கெழவியா..?”

பின்னென்ன கொமுரியா..? போன ஞாயித்துகெழமையன்னிக்கு சென்னை சில்க்ஸ் ரண்டாவது மாடீல அந்த கெழவியும் கையுமாவே இவனைப் பார்த்துட்டேன். இவனும் என்னை பார்த்துட்டாந்தான் போல. பார்க்காத மாதிரியே பம்மீட்டான். அதுக்குப்பிறகு இந்த மூனுநாளா என் மூஞ்சியவே நேருக்கு நேரா பார்க்க மாண்டீங்கறான். நல்லாவே பேச மாண்டீங்கறான். புடிச்சதுதான் புடிச்சான். நல்ல புளியங்கொம்பா புடிச்சிருந்தாலாவது தொங்கீட்டுத் தொலையாறான்னு வுட்ரலாம். புழுத்துப்போன கொம்பாவல்ல புடிச்சிருக்கிறான். சீக்கிரமே வாது முறிஞ்சுபோயி கீழவுழுந்து இடுப்பை முறிச்சுக்கிட்டுத் திரியப் போறான் பாரு..

பரதேசித் தாயோளி .. என்னடா சொன்னே..?” திடுக்கிட்டுப்போய் திரும்பிப் பார்த்தோம். ஆரெக்ஸ் நின்றுகொண்டிருந்தார். அவருடைய முகமும் பார்வையும் சம்பந்தமேயில்லாத யாரோவொரு அந்நியனுடையதைப்போல மாறிப் போயிருந்தன.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வேறு விசயங்களைப் பேசிக் கொண்டிருந்த சீனியிடம் ஆரெக்ஸின் பேச்சை எடுத்ததே நான்தான். அவர் வந்துநின்ற சமயம் சீனி பேசுபவனாகவும் நான் கேட்பவனாகவும் இருக்க அவன் மாட்டிக் கொண்டான். நான் தப்பித்துக் கொண்டேன். சீனியின் வலதுதோள் கழுத்து காதோடுசேர்த்து உதை விழுந்தது. சுதாரித்து எழுந்தவன் ஆரெக்ஸின் வயிற்றில் உதைத்தான். மதிய உணவை உண்ட களைப்பில் பவர்டேபிள் செக்கிங்டேபிள் சந்துகளில் படுத்துக் கிடந்தவர்களெல்லாம் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து விலக்கிவிட முயற்சித்தனர்.


களேபரத்தில் பையிங் ஆபீஸ் இன்ஸ்பெக்‌ஷனுக்காக அடுக்கப்பட்டிருந்த பேக்கிங் செய்யப்பட்ட பனியன் பெட்டிகள் வரிசை குழைந்து கீழே சரிந்தன. பொதுவாகவே இன்ஸ்பெக்‌ஷன் நாளன்று ஓனர் டென்சனாகத்தான் இருப்பார். பெட்டி போடப்பட்ட பனியன்களை பேக்கிங் உடைத்து செக் செய்யும் பையர்கள்  ஏதாவது நொட்டைசொல்லி ரீசெக் செய்யச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணம். சத்தம்கேட்டு தன் அறையைவிட்டு வெளியேவந்த மொதலாளி சீனிக்கும் ஆரெக்சுக்கும் தலா ஒரு அறை விட்டார். கம்பனியைவிட்டு வெளியே போகச்சொன்னார். அவருடைய முகமும் பார்வையுமேகூட சம்பந்தமேயில்லாத யாரோ ஒரு அந்நியனுடையதைபோல மாறிப் போயிருந்தன.

தன்னிடம் பணிபுரியும் டெய்லரை எப்படி அறையலாம் எதுவாக இருந்தாலும் தன்னிடம்தானே சொல்லவேண்டும் என மூர்த்தியண்ணன் ஓனரிடம்போய் நியாயம் கேட்டதும், வேணும்னா நீயும்சேர்ந்து வெளியே போயிரு என முதலாளி சொன்னதும், பிறகு நாங்களனைவரும் கூண்டோடு அந்தக் கம்பனியைவிட்டு நின்றதும் தனிக்கதை. காலப்போக்கில் பனியன் கம்பனி வேலையே வேண்டாமென்று வீட்டிற்கு அருகாமையிலேயே விசைத்தறிக்கூடம் அமைத்து நெசவு நெய்யத் துவங்கிவிட்டேன். திருப்பூருக்கு போவதற்கே சோலியில்லாமல் போய்விட்டது. எப்போதாவது ஏதாவது சொந்த வேலையின் பொருட்டு போவதோடு சரி. அப்படியொருமுறை நான்மட்டும் காதல்கொண்டேன் படத்துக்குப் போயிருந்தபோது டைமண்ட் தியேட்டரில்வைத்து ஆரெக்ஸைக் கண்டேன். அந்த மத்திம வயதுப் பெண்ணும் கையுமாகத்தான். நான்தான் அவர்களைப் பார்த்தேனேதவிர அவர்கள் என்னைப் பார்க்கவுமில்லை. பம்மவுமில்லை.

தாராபுரம் சாலையில் இரண்டுகிலோமீட்டர் தெற்கேவந்து இடதுபுறமாகப் பிரிந்துபோகும் மண்பாதையில்  சற்றுதூரம் கிழக்கே போனதும் கடை தென்பட்டது. ஹாலோபிளாக் கற்களையடுக்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து துரிதகதியில் உருவான கடை. சுவர்கள் பூசப்படாமல் இருந்தன. சுற்றிலும் கொறங்காடுகளாக இருந்தன. செம்மறிகள் வேலாமரநிழலில் ஒன்றின் காலுக்குள் இன்னொன்று புகுந்துகொள்வதுமாதிரி தலைகுத்தி நின்றிருந்தனநாட்டுமாடுகளுக்கு வெய்யில் சோதிக்கவில்லைபோல.  மேய்ந்துகொண்டிருந்தன. கடை இருக்கும் இடமும் இதற்குமுன் மேய்ச்சல் நிலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். வெள்ளைவேலான் வேப்பன் ஊஞ்சல் மரத்தடிகள் சுத்தம் செய்யப்பட்டு டேபிள்கள் போடப்பட்டு பார் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இயற்கையான நிழலும் சுத்தமான காற்றும் கொண்ட ஆர்கானிக் பார்.

காலியாக இருந்த வேப்பமரத்தடி டேபிளில்போய் அமர்ந்தோம். வேப்பன் பூவெடுத்திருந்தது. சின்னஞ்சிறுமிகளின் பொன்காதணிகளை உதிர்ந்துகிடக்கும் வேப்பம்பூக்கள் நினைவூட்டின. கடைப் பையனை வரவழைத்த ஆரெக்ஸ் பக்கார்டி லெமன் ஆப் கொண்டுவா’ என்றார்.

ஏன் மாம்ஸ்.. பீர்தானே அடிக்கலாம்னீங்க? திடீர்னு ஹாட் சொல்லீட்டீங்க?”

அதெல்லாம் வாசம் அடிக்கும்டா மாப்ளேமத்தியானத்திலேயே ஆரம்பிச்சாச்சானு வூட்ல பொலம்பல் தாங்க முடியாது. இது அவ்வளக்கா வாசம் தெரியாது. அதான் சொன்னேன். அதையுந்தவிர பீரெல்லாம் ரொம்பக் குடிக்கக்கூடாதுடா மாப்ளே.. தொந்தி போட்ரும்.

எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன். தேவையான அளவு கன்னங்கள் உப்பி, உடம்பும் சதைபிடித்து, தோலெல்லாம் மினுமினுவென்று மாறிப் போயிருந்த ஆரெக்ஸ் பக்கார்டிலெமனை இரண்டு டம்ளர்களிலும் ஊற்றத் துவங்கியிருந்தார்.   


மூன்றாவது ரவுண்டில் இருக்கும்போது ஆரெக்ஸுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. ஊருக்குத்தான் வந்துகிட்டிருக்கேன்.. வெண்தாமரைப் பொடியா..? வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.. லைனை முடிச்சுட்டு உங்கம்மாவையும் போய் பார்த்துட்டுத்தான் வாறேன்…” டேபிளை விட்டு எழுந்த ஆரெக்ஸ், என்னிடம் ஒலியில்லாமல் வெறும் உதட்டசைவில் மொழிந்தார் ஊட்லயிருந்து சம்சாரம்.. இங்க உக்காந்து பேசுனா பேக்ரவுண்டு சத்தத்தைவெச்சு எங்க இருக்கறேன்னு மோப்பம் புடிச்சுருவா.. அந்தப் பக்கமாப் போயி பேசீட்டு வந்தர்றேன்.

வந்து உட்கார்ந்தபோது இருந்ததைவிட இப்போது வெய்யில் கொஞ்சம் இளகியிருந்தது. செம்மறிகள் மரத்தடிவிட்டு விலகி மேயத் துவங்கியிருந்தன. கரிக்குருவியொன்று பெட்டையாட்டின் மூத்திரவாடையை காற்றுவெளியில் மோப்பம்பிடித்து நின்றுகொண்டிருந்த செம்மறிக்கிடாயின் பிடரிமேலமர்ந்து அதன் காது உண்ணியை கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. மாடுகளின் காலடிகளில் இப்போது கொக்குகள் தென்பட்டன. சிகரெட்டை பற்ற வைத்தேன். இந்த குடியமர்வு மிகவும் திருப்தியாகப் போய்க் கொண்டிருக்கிறது. பழச்சாறகத்தில்  தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்த ஆரேக்ஸ்  இங்கே அதிகமும் என்னைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததை  அவரால் நம்பவே முடியவில்லை. என்னடா மாப்ளே சொல்றே.. அன்னிக்கே கவிதயுங் கிவிதையும் எழுதீட்டுத் திரியுவே.. அப்படியெதாச்சும் எழுதி மயக்கி செமப் பிகரா செட் பண்ணீருப்பீன்னல்ல நெனச்சுட்டிருக்கிறேன்” என்றார். நான் இப்பொழுது ஒரு ஜோதிடராகவும் ஆகிவிட்டேன் என்பது தெரிந்ததும் அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரிசிரி யென்று சிரித்துவிட்டு, “அமைதிப்படை படத்துல ஒரு எடத்துல  சத்தியராஜு சொல்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருது” என்றார். எது அந்த வயசான சோசியரை வூட்டுக்கு வரவழச்சு போட்டுத்தள்றதுக்கு முன்னாடி சொல்றதா?” என்றேன். இல்லயில்லேமந்திரியொருத்தருகூட பேசீட்டு போன வெச்சதுக்கு அப்பறம் தனக்குத்தானே மொணகிக்கிறமாதிரி சொல்வாரே.. கேணப் பையன்இவன் மந்திரி பதவியே இப்பவோ அப்பவோனு இருக்குதாமாஇந்த லட்சணத்துல நம்முளுக்கு மந்திரி பதவிக்கு சிபாரிசு பண்ணப்போறானாமா.. அந்தமாதிரி உனக்கே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கறதுக்கு துப்பில்லை. இந்த லட்சணத்துல ஊர்ல இருக்கறவுனுக்கெல்லாம் எப்பெப்போ கல்யாணம் ஆகும்னு கேரண்டி குடுக்கறே..?

ஆரெக்ஸ் லெளகீக- சம்சாரி வாழ்க்கையில் செமையாகவும் செம்மையாகவும் செட்டிலாகிவிட்டார் எனத் தோன்றியது. அவர் இப்போது பைனான்ஸ் லைனுக்கு வந்துவிட்டாராம். வெள்ளகோயிலில் ஒருநாள், காங்கயத்தில் ஒரு நாள், திருப்பூரில் ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாளைக்கு வசூல் இருக்கிறதாம். மீதி நாட்களில் கோழிப்பண்ணை, கறவை என தோட்டத்திலேயே மாளாத வேலை கிடக்கிறதாம்.  பலவற்றையும் பேசிக்கொண்டாலும் எங்களின் உரையாடல் அந்த ராங்கால் கனக்சனுக்கு மட்டும் போகாமலேயே இருந்தது. ஆரெக்ஸாகவே அதுபற்றி ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான அறிகுறிகள் அவர் மனைவியோடு பேசிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற அந்த தர்பரைவரை தட்டுப்படவில்லை.

சம்சாரத்தோடு சம்பாஷணை. அல்லது வூட்டுக்காரியோடு உரையாடல். ஒருவழியாக முடிந்துவிட்டது போல. ஆரெக்ஸ் வந்துசேர்ந்தார். சின்னவனுக்கு காய்ச்சலாமா.. போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டுப் போகோணும்.” என்றபடியே டம்ளரில் மிச்சம் வைத்துப் போயிருந்ததை காலி செய்தார். இடது உள்ளங்கையால் மீசை வாய் தாடை துடைத்துக் கொண்டார். அவர் முகம் தீவிர யோசனையிலிருந்தது. பையனுக்கு காய்ச்சல்ங்கிறதால மூடவுட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றியது. அந்த ராங்கால் கதையின் கிளைமாக்ஸ் பற்றி எதையும் கேட்கவே முடியாமல் போயிருமாட்டயிருக்குதே என நினைத்துக் கொண்டேன்.

தீவிர முகபாவத்துடன் வெள்ளரித்துண்டை எடுத்துக் கடித்தபடியே
கொழுந்தியா ஒருத்தி இருக்கறாடைவர்ஸ் ஆனவ.. குழந்தையில்ல.. கட்டிக்கறயா..? பேசலாமா?” என்றார்.

தாரளமா பேசுங்க மாம்ஸ்

மிச்சமிருந்த சரக்கை இரண்டு டம்ளர்களிலும் ஊற்றினேன். தண்ணீர் கலந்தேன். என்னுடையதை ஒரே மூச்சில் காலி செய்தேன்.  அந்த கொழுந்தியாளை பார்க்கவேண்டும்போல இருந்தது. அதற்கு முன்பாக அந்த கருமம்புடிச்ச காதல் என்னதான் ஆச்சு..? சொல்லித் தொலையுமைய்யா..” என்று கேட்கவேண்டும் போலவும் இருந்தது. ஒரு வாய் குடித்துவிட்டு டம்ளரை டேபிள்மேல் வைத்த ஆரெக்ஸ் கைப்பேசியையெடுத்து போட்டோ கேலரிக்குப் போனார். தேடியெடுத்த புகைப்படத்தை பெரிதாக்கி பிறகு செல்போனை என்னிடம் நீட்டினார். அந்த புகைப்படத்தில் மூன்று பெண்கள் இருந்தனர். இடதுபுறமாக பச்சை சுடிதாரில் நிற்கும் பெண்தான் கொழுந்தியாள் என்றார். வலதுபுறமாக குழந்தையோடு நிற்கும் பெண் மனைவியாம். சோபாவில் அமர்ந்திருக்கும் நடுவயதுள்ள பெண்மணியை மாமியார் என்றார். மாமியாரையே ஒரு கணம் கூர்ந்து நோக்கினேன்.

விளங்கி விட்டது . அந்த கேள்வியை இனி கேட்கவேண்டிய அவசியமில்லை.   


       

000

No comments:

Post a Comment