Tuesday 12 March 2019

நடுகல் ஒன்றில் வெளிவந்த கட்டுரை




                              








கிராமியம்
வா.மு.கோமு

  மாப்ளே! அப்புறம் மழை துளி பெஸ்சு போட்டுதாட்ட இருக்குதா.. காட்டுல எதாச்சிம் கம்பு சோளம்னு  வெதச்சுப் போட வேண்டீது தானொ!”

  அட ஏம்மாமா நீங்க வேற, டொமீர் டொமீர்னு சாமத்துல தலையில வுழுந்த மாதிரி இடிச் சத்தம் தான் போங்க! மழை எங்க பேஞ்சுது? மாடு மண்டுட்ட மாதிரி .. போக கருக்கல் கட்டுனாவே எங்கூர்ல கரண்டு வேற போயிரும். துளி மழை வேற பெஸ்சு போட்டுதா.. இனிப் பாருங்க போன கரண்டு வந்து சேர ரெண்டு நாளு ஆவிப்போயிரும்.”

  சுப்பக்கா புருசன் மருதாசலம்னா இல்ல மாணிக்கன்னு பேசிட்டு இருக்கே.. இந்தக்கட்டாப்பு மழை இருக்குதுன்னு டிவிலயே சொல்லிட்டான் மாப்ள! தைரிமா டிராக்டரை ஓட்டு காட்டுல.”

  வேணும்ல இங்க! டிரேக்டர் ஓட்டறதாமா. காத்தால ஏம் மாமா பொழுது போவலின்னு இங்க வந்து கழுத்தை அறுக்குறே? நானே காடு கெடந்து சாட்டாதுன்னு நூறு நாளு வேலைக்கி மம்புட்டி சட்டி தூக்கிட்டு போயிட்டிருக்கேன். இவ என்னடான்னா பனியன் வேஸ்ட்டை மூட்டை மூட்டையா போட்டு சர்ரு சர்ருன்னு என்னாரமும் மடியில புள்ளத்தாச்சியாட்ட கட்டீட்டு இழுத்துட்டே இருக்குறா. நோவு மேல நோவு வந்துட்டு இருக்குது. அதை இழுக்காதடி.. பஞ்சு உன் நெஞ்சுல அடச்சி நாளக்கி நூத்தியெட்டுக்கு போனு போட்டு கொய்ங் கொய்ங்குனு சத்தம் போட்டுட்டு தூக்கிட்டு போயி செலவு பண்டோணுமுன்னு சொன்னா கேக்கறாளா ஒன்னா? ஏம் மாமா.. இந்த ஆஸ்துமா ஆஸ்துமாங்கறாங்களே அது தான வந்து சேரும் இப்பிடி இழுத்துட்டு இருந்தா?”

  ஆமா மாப்ள! நானு வேற பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கனா.. எங்கிட்ட நீ கேட்டுப்போட்ட! இப்ப டிவில பாக்கறீல்ல நீயி.. உங்க பேஸ்டுல உப்பிருக்கான்னு நம்மளைப் பாத்து கேக்காங்க. “

  அது பழசு மாமா.. இப்ப உப்போட எலுமிச்சை இருக்கான்னு கேக்காங்க!”

  சரி இனி புளியிருக்கான்னு கேக்க எவ்ளோ நாளாயிடும்னு நினைக்கே? அட பல்லு வெளக்குறதுல போயி கடுகிருக்கா? சீரகமிருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்களே.. அவிங்க தான் என்ன பண்ணுவாங்க மாப்ள? தெனம் தெனம் புதுப் புது கம்பெனிக்காரனுக பேஸ்டோட ப்ரஸ்சு, 100 % எச்சுன்னும், குடுத்துட்டே இருக்காங்க. போயி கடையில நின்னு பாரு. ஒரே கம்பெனிக்காரன்  44 விதமா வெச்சிருப்பான். நான் தான் இன்னம் கருவேலங்குச்சிய சைசா வெட்டிக் கொண்டாந்து ஊட்டுல வெச்சிட்டு கடிச்சு மென்னுட்டு தேச்சிட்டு இருக்கேன். உம்பட பல்லைப்பாரு.. பொண்டாட்டி எப்பிடி மாப்ளெ உன்னையெல்லாம் கிட்ட உடறா?”

  ஆமா இருக்குற இருப்புக்கு இனி அது வேறயா? ஊட்டைப்பாரு மாமா மொதல்ல. பாரு வெள்ளைப்பஞ்சு ஊட்டுக்குள்ள மொகுட்டுல எல்லாம் அப்பிக் கெடக்குது. இதுல பசக புள்ளைகளுக்கு நோவு வந்து சீரழியோணுமேன்னு நான் கவலப்படறது கூட அவளுக்கு தெரியில.”

  அட பொம்பளைங்க கையி சும்மா இருக்காதப்பா! அப்ப வள்ளியம்மா பஞ்சிழுத்துட்டு உன்னை இழுக்கறதில்லீங்கறே! மொறைக்காத மாப்ள சும்மா! நான் தான் இருக்குற காட்டை வித்துப்போட்டு சிவனேன்னு உக்காந்துட்டேன். அங்க எம்பட காடு இருந்த அடையாளமே மாறி கம்பெனிக ஊடுன்னு ஆயிப்போச்சு. கண்ணு மூடி முழிக்கறக்குள்ள செஞ்சு கொண்டாந்து வெச்சமாதிரி ஆயிப்போச்சு மாப்ளெ!”

  உனக்கென்ன மாமா, பசக ரெண்டும் பெங்களூர்ல கம்ப்யூட்டர் பொட்டி முன்னால உக்காந்து சொளையா சம்பாதிக்கறானுக. இப்ப போயி எங்கிட்ட வந்து மழை பெஸ்சு போட்டுது காட்டுல வெதைக்கலியான்னு எங்கிட்ட வந்து எகத்தாளம் பேசிட்டு இருக்குறே! போயி அத்தை மடியில படுத்துட்டு லவ்வு பண்ணிட்டு இருக்கறதை உட்டுட்டு.”

  அடப்போ மாப்ளே! உம்பட அத்தைகாரி முண்டுக்கட்டையிலயே சாத்த வர்றாடா! சம்பாதிக்க துப்பில்லாத மனுசன்னு அவ பசகளாட்டவே பேசிட்டு இருக்குறா. இனி சம்பாதிச்சு நானு என்ன பண்டப் போறேன்?”

  பேங்க்குல  உம்பேருல எத்தன லட்சம் இருக்குது மாமா? எனக்காச்சிம் கொஞ்சம் கடனாக் குடேன். நானு எதாச்சிம் பண்டி பெழைச்சிக்கறேன்.”

  நீ நேரா போயி டாஸ்மார்க்குல உக்காந்து குடிச்சு குண்டி வெடிச்சு செத்துப் போயிடுவெ மாப்ள! அப்புறம் வள்ளியம்மா எனக்கு சாபம் குடுத்துடுவா!”

  நீ ஏம்மாமா உம்பட காட்டை வித்தே? பசகளை மேல படிக்க வெக்கவா?”

  அவனுக படிப்புக்காக நானெங்க வித்தேன் மாப்ள? மழை நல்லா இருந்தா நீயே ரோட்டு வேலைக்கி போவியா சொல்லு பாக்கலாம்? வர்றப்ப உம்பட கெணத்துல தண்ணி கெடக்கான்னு எட்டி பாத்துட்டு தான் வர்றேன். அமுட்டு செடி மொளச்சு நின்னுட்டு இருக்குது. நாங்க பொடியானுகளா இருந்தப்ப என்ன குதியாளம் போட்டம் தெரியுமா அந்த கெணத்து தண்ணியில! “

  நீ குதியாளம் போட்டது இருக்கட்டும், சொல்லு ஏன் வித்தே?”

  யாரு எம்பட தோட்டத்துக்கு கூலிக்கு வந்தா சொல்லு? செடி என்ன வெச்ச ஒடனே அதுவா வளர்ந்துடுதா? பண்டிதம் பாக்கோணுமுல்லொ! அதுக்கு செலவுக்கு ? கூலி பத்தலின்னு கூலிக்காரன் வரமாட்டீங்கறான். தக்காளிய பொறிச்சு கூடை கூடையா வேனு ஏத்தி கொண்டு போனா கிலோ ஒரு ரூவாய்க்கி கேக்கறான். வேனு வாடகைக்கே செரியாப் போயிருது. கணக்கு பண்ணி பாத்துட்டு தான் வித்துத் தொலச்சேன் மாப்ள. ஆனா இப்ப பொண்டாட்டிய வித்து தின்னது மாதிரி கவலையாவே இருக்குது. நீ அப்படி கீது வித்துப்போட்டு என்னையாட்ட சங்கட்டப்பட்டுட்டு இருக்காத மாப்ள.”

  இல்ல மாமா, ஆளுக கேட்டுட்டு தான் இருக்குது. நல்ல வெலை வந்தா குடுத்துடுவேன். எம்பட பசகளும் அப்பத்தான் எங்காச்சிம் வெளிய போயி சம்பாதிச்சு அனுப்புவானுக! நானும் உன்னியாட்ட ஊருக்குள்ள வேட்டி சட்டை போட்டுட்டு சுத்துவேன். அப்ப என்னையும் சேத்திக்கோ கூடவே! ரெண்டு பேரும் ஊடு ஊடா போயி நாயம் பேசிட்டே பொழுதோட்டலாம். என்ன மாமா நாயம் பேசுறே? பையனுக சம்பாதிக்கறானுக.. போயி அந்தக்காசுல நெலம் வாங்கிப் போடு! கெணறு வெட்டு. தென்னைமரம் வரிசியா வெய்யி. தோட்டம் பண்ணு. மழை பெய்யுறப்ப பெய்யட்டும். போரை போடு! நெலத்தை வித்துப்போட்டன்னு கவலைப்படறாராமா!”

  கூலிக்கி ஆளுக்கு எங்க போவேன்? நீயெல்லாம் ரோட்டோரத்துல துளி புல்லை செதுக்கி வீசிட்டு சொளையா 100 ரூவா நொட்டீர்றே! அதும் மரத்தடியில பொம்பளைகளோட உக்கோந்துட்டு மத்தியானத்துல தாயக்கரமாடுறே! அரசாங்கம் பாரு வெளையாட்றதுக்கெல்லாம் காசு குடுக்குது.”

  நீ 150 ரூவா கூலி குடு. நான் வர்றேன் உன்னட காட்டுல வேலை செய்ய.”

  எம்பசங்க பெங்களூர்ல இருந்தே பிஞ்ச செருப்பை தூக்கிட்டு வருவானுக!”

  அப்ப காட்டுக்காரங்க எல்லாரும் சேர்ந்து ஒரு போராட்டம் அறிவிச்சுடுங்க அரசாங்கத்துக்கு எதிரா! 100 நாள் வேலைத் திட்டத்தை அரசாங்கமே உடனே நிறுத்து! இல்லீன்னா நாங்க தீக்குளிப்போம்னு கத்துங்க!”

  என்ன மாப்ளெ உள்ளார கொண்டி மாமனை உக்காத்தி வெச்சு அழகு பாத்துடுவே போலிருக்கே? ஏம் மாப்ள தெரியாமத்தான் கேக்குறேன்.. இந்த டவுன்ல இருக்குற ஆக்களெல்லாம் போராட மாண்டாங்களா இதுக்கு? “

  அவிங்க என்னான்னு மாமா போராடணும்? கருமத்தெ உங்கிட்ட போராட்ட குணமெல்லாம் இன்னம் இருக்கே!

  ஆமா மாப்ளெ! இப்ப டவுன்ல இருக்குறவங்க எல்லாம் ஒன்னு கூடி இந்த விவசாயிகளைப்  பார்த்து, ‘’ ! விவசாயிகளே! எங்களுக்கெல்லாம் உழைத்துச் சோறு போடும் விவசாயிகளே! நீங்க எப்படி விவசாயத்தை உட்டுட்டு டவுனுக்கு காரச்சட்டி தூக்கவும், கண்ட வேலைக்கும் வரலாம்?  இங்கெல்லாம் கூலி வேலைக்கி வரக்கூடாது! வராதே வராதே! ஊர்ல விவசாயமே பார்! அரசாங்கமே! 100 நாள் வேலைத்திட்டத்தை சீக்கிரம் நிறுத்து! அப்படின்னு போராடலாமே.”

  லாமே! ஆமா மாமா லாமே! எப்படியோ எனக்கு தெனமும் 100 ரூவா வர்றது உனக்கு பொச்செரிசலா இருக்குது! அதுக்கு என்ன பண்ணலாம்னு நான் சொல்றங்கேளு. நீ சொன்னாப்ல ரோட்டோரத்துல புல்லை சொறண்டறதுக்கு அரசாங்கம் காசு குடுக்குதுன்னு தான உனக்கு கவலை? அரசாங்கம் நூறு ரூவா குடுக்கட்டும். தோட்டம் வச்சிருக்குறவங்க 100 ரூவா குடுக்கட்டும். கூலி ஆளுகளுக்கு ஒரு நாளைக்கி 200 ரூவா ஆச்சு! அரசாங்கம் விவசாயத்தை காப்பாத்திய மாதிரியும் ஆச்சு பாருங்க மாமா! நீங்களும் பொழச்சிக்கலாம்.”

  மாப்ளெ! நல்ல ஐடியாவாத்தான் சொன்னே போ! ஆனா ஊருக்குள்ள பாதிப்பேரு நெலத்தை வித்துப்போட்டானுகளே! அந்தக்காசுல கார்ல போயிட்டு வந்துட்டு இருக்கானுக. காசைக்கொண்டி கம்பெனி வக்கிறதுலயும், கந்து வட்டிக்கும் உட்டு கெளப்பீட்டு இருக்கானுக. போயி இப்படி செய்யலாமான்னு கேட்டா மேலயும் கீழயும் பாப்பானுகளே!”

  மொதல்ல பசங்க கிட்ட சொல்லி நெலம் வாங்குற வழியப்பாருங்க மாமா! அவனுக என்ன சொல்லுறானுகன்னு கேளுங்க! ஒரு வேளை நீங்க கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங் படிச்சு முடிச்சு பெங்களூருக்கே வாங்கப்பான்னு சொன்னாலும் சொல்லுவானுக மாமா! அப்படி ஒரு வாய்ப்பு இருந்தா அதைப் பாருங்க! இங்க ஊருக்குள்ள ஏன் பொச்செறிச்சலோட சுத்தீட்டு இருக்காட்டி. அத்தையையும் கூட்டிட்டு பெங்களூரே போயி செட்டிலாயிடுங்க! நீங்க சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்துட்டீங்கன்னா அத்தை வீட்டை பார்த்துக்கும்”.

  ஆமா மாப்ளெ! தண்ணிய வேற தமிழ்நாட்டுக்கு தரமாட்டேன்னு அவன் சொல்லிட்டு இருக்கான்.”

  அதை நான் சின்னப்பையனா இருக்கப்ப இருந்தே சொல்லிட்டு தான் இருக்கான் மாமா! அங்கிருந்து இங்க தண்ணி வர்றதுனால தான அவன் தடுத்து தரமாட்டீங்கான்! இங்கிருந்து அங்க போற மாதிரி இருந்தா நாமுளும் தான் தரமாட்டோம். தண்ணிய அவுனுக்கு தந்துட்டு நாம நாக்கு வழிச்சிக்கிறதா? அதனால தண்ணி இருக்குற இடமாப் பார்த்து நீங்க போயிடறது தான் சரி! எதுக்கும் அத்தை கிட்ட பேசிப்பாருங்க இன்னிக்கே!”

000



1 comment:

  1. எழுத்துக்கள் மிகவும் பெரிதாக இருப்பது தரம் குறைந்த படைப்பு போன்று தோன்றச்செய்கிறது. டைப் செய்தவற்றை வேர்டில் காப்பி பேஸ்ட் செய்து 8 பாய்ண்டிற்கு மாற்றி பிறகு அதை காப்பி பேஸ்ட் செய்தால் எழுத்துகள் சரியான அளவில் சிறிதாக கிடைக்கலாம். அல்லது தளத்திலேயே பதிவிடும் இடத்தில் பாண்ட் சைஸ் மாற்றும் வசதி இருந்தால் அதை பயன்படுத்தலாம்.
    -முரளிக்கண்ணன், தேனி.

    ReplyDelete