Monday 11 March 2019

நடுகல் ஒன்றில் வெளிவந்த கதை
பிழைப்பு

ரூபியா ரிஷி

  புது வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வேலையின் நீட்சியாக இல்லாத ஒரு துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு இதே தேர்வறையில் அமர்ந்து கடைசி தேர்வெழுதிய பொழுது, இனி வரவேகூடாத இடமாக இந்தக் கல்லூரியைத்தான் நினைத்திருந்தேன். பல வேலைகள் செய்துபார்த்து, பிறகு வேலையே இல்லாத பகற்பொழுதுகளில், உனக்குக் கற்பித்தல் துறை சிறப்பானதாக இருக்குமென்று யாரோ சொன்னதை, ஒருவேளை எனக்கு நானே சொல்லிக் கொண்டதை முழுவதுமாக நம்பி, படித்த இதே கல்லூரியில் ஐந்து ஆண்டுகளாக வாத்தியாராக முடிவில்லாமல் நின்றுகொண்டிருக்கிறேன். பேருந்து நடத்துநர், ஏடிஎம் காவலாளி, துணிக்கடை விற்பனையாளர் இவர்கள் மீதெல்லாம் மிகப்பெரிய மரியாதையை ஒரு வாத்தியார் எப்போதும் கொண்டிருப்பார். அதிலும் தினம் கடந்து செல்லும் கோயம்புத்தூர் சாலைச் சந்திப்புகளில் கால் மாற்றாமல்கூட நின்றிருக்கும் தலைவர்களின் மீது எனக்குப் பெருமதிப்புண்டு. ஈரச் செங்கற்களின் இடுக்கிலிருந்து வழிந்துவரும் சாந்துபோல, தேர்வறைகளில் உட்கார இடமில்லாமல் கண்காணிப்பாளனாக நிற்கும் தருணங்களில் மனதின் இடுக்கிலிருந்து இப்படியெல்லாம் கடந்தகாலம் வழிந்து வெளிவருகிறது.

  ஒரு பெரிய விளையாட்டு பலகை போன்ற இந்தத் தேர்வறையில், இடைவெளியைத் துல்லியமாக கணக்கிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டக்காரர்கள் போல, மாணவர்கள். பலகையின் எந்த மூலைக்கும் சென்று அவர்களை ஆட்டமிழக்கச் செய்யும் கண்காணிப்பாளனாக, நான். தேர்வறைகளுக்கென்று ஒரு முகத்தை வைத்திருக்கிறேன். எந்தத் தருணத்திலும் சிரித்துவிடக்கூடாத இறுக்கம், அரைநொடிக்கு மேல் எந்தவொரு இடத்திலும் குவியாத ஊசலாடும் பார்வை, பேரங்காடிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பலகை போல, 'நீங்கள் கண்காணிப்பின் கீழ்' என்று சொல்லும் உடல்மொழி. அமர்ந்து தேர்வெழுதிய நாட்களில், நின்றுகொண்டு டீ குடிப்பவர்களைப் பற்றிய ஒரு அருவருப்பான சித்திரத்தை கொண்டிருந்தேன் அதனால், இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு வரவிருக்கும் தேநீருக்காக வாசல் பார்ப்பதை யாரும் கணித்திட கூடாதென்பதில் கவனமாக இருப்பேன்.

  கண்காணிப்பவனுக்கும், கண்காணிக்கப்படுபவனுக்கும் இடையிலான இந்தப் புத்தியின் விளையாட்டு மூன்று மணிநேரம் வரைக்கும் நீடிக்கும். முதலில் யார் யாரைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதிலிருக்கிறது கண்காணிப்பின் சூத்திரம். எப்போதும் என்னைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களையோ, வாய்ப்புகளையோ மற்றவர்களுக்கு வழங்குவதில்லை. தேர்வறைக்குள் நுழைந்ததிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குத் தலையைக் குனிந்தவாறு எதையாவது செய்து கொண்டிருப்பேன், சகஜநிலை திரும்பி கண்காணிப்பாளன் புறக்கணிக்கப்படும் நொடியில் தலையை உயர்த்தி நிற்பவனையோ, சிரித்துக்கொண்டிருப்பவனையோ, இல்லை ஏதாவதொரு அடிப்படையில் எவனையாவது தேர்ந்தெடுத்து, மிகக் கடுமையாக உச்ச குரலில் திட்டி, அதன்மூலம் மற்றவர்களுக்கு ஒரு செய்தி சொல்லி மூன்று மணிநேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என் பாணி. இந்தப் பாணி எனக்கு எப்பொழுதும் கைகொடுத்திருக்கிறது.

  கண்காணிக்க வந்திருப்பவனைப் பற்றிய எந்தவொரு பிரக்ஞையுமின்றி, எழுதத் தொடங்கும் பிள்ளைகளை பெரும்பாலும் கவனிப்பதில்லை. என்னைக் கவனிப்பவனைத்தான் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. நான் பார்க்காத வரையில் என்னையே பார்த்துவிட்டு, நான் பார்த்ததும் விட்டத்தைப் பார்த்து யோசிக்க தொடங்குபவனே என் முதல் இலக்கு. ஒருபோதும் என் பின்பக்கத்தை தேர்வறைகளில் காட்டுவதில்லை. கடைசி இருக்கையிலிருந்து அறையின் முகப்புக்குச் செல்வதாக இருந்தாலும் பின்னோக்கியே நடப்பேன்.

  கணினி அறிவியலும் கிட்டத்தட்ட கணித பாடத்தை போல தர்க்கரீதியாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான். அதைக் கற்பித்தலில் இருக்கும் மிகப்பெரிய  சிக்கலே அதைக் காட்சிப்படுத்துவதுதான், இதுவரை யாருமே பார்த்திராத காட்சிகளை  உவமையாகக் கொண்டு பாடங்களை காட்சிப்படுத்திட வேண்டும், கண்டிராத கனவுகளுக்கு விளக்கமெழுதுவது போல. வாத்தியாரான புதிதில் கற்பித்தலில் எனக்கு நிறையவே சிக்கல்கள் இருந்தன, சில நேரங்களில் இந்த வேலைக்கு எந்த வகையிலுமே நான் தகுதியற்றவன் என்று நினைத்ததுண்டு. ஆனால் நல்ல வாத்தியாருக்கான இலக்கணம் இங்கு வேறு மாதிரியிருந்தது.

  சக மனிதனை எந்த அளவுக்கு நுட்பமாகக் கண்காணிக்க முடிகிறது என்பதிலிருக்கிறது நல்ல வாத்தியாருக்கான இலக்கணம். ஒருவரின் மனக்குறை, பிரச்சனைகள், கற்றல் குறைபாடு, கூச்சம், காதல் காமம் பற்றிய புரிதல் இவையெல்லாம் கண்காணிப்பதல்ல என் பணி. யார் காரில் வருகிறார்கள்? யாரெல்லாம் அப்படி வருவதில்லை? யாருக்குத் தாடி அதிகமிருக்கிறது? எந்தப் பெண்ணும் ஆணும் இடைவெளியே இல்லாமல் நடந்து போகிறார்கள்? ஜீன்ஸ் அணிந்து வகுப்பறைக்கு வருவது யார்? யாரெல்லாம் தொடுதிரை அலைபேசி வைத்திருக்கிறார்கள்? சட்டையை வெளியே விட்டிருப்பது யார்? ஷூ போடாமல் வருவது யார்? தெள்ளத் தெளிந்த ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் யார்? நாடாவை பாவாடையல்லாமல் வேறெங்கும் தொங்கவிடும் பெண்கள் உளரா? வெட்கத்தோடு கையை காதோடு அணைத்துப் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியைகள் யார் யார்? இவர்களை கண்காணித்து அபராதம் பெறுவதே ஒரு வாத்தியாராக எனக்களிக்கப்பட்ட முதல் பணி. என்னை ஒரு கண்காணிப்பு கேமராவாகவே உணர்ந்தேன். என்னைச் சுற்றியிருப்பவர்களை கண்காணிக்க ஒருபோதும் நான் பழக்கப்பட்டவன் அல்ல, எனக்கு அது தண்டனைக்கு இணையானது. சீக்கிரத்திலேயே பிரபலமானவனாக ஆகியிருந்தேன், நீண்ட அனுபவமிக்க, வயதில் மூத்த முனைவர்கள் கூட எனக்காகக் காத்திருந்து முகமன் செய்தனர்,

  சிலரைத் தொடர்ந்து கண்காணிக்கும் போது, அதற்கான நோக்கம் மெல்ல மறைந்து அவர்களின் அந்தரங்கத்திற்குள் நுழைய வழி பிறக்கிறது. அளிக்கப்பட்ட அதிகாரத்தை கள்ளசாவியாகக்கொண்டு அவ்வழி திறக்கப்படுகிறது, தவறவிட்ட டைரிக்குள் ஆபாசப்படம் வைத்துத் திருப்பி தருவது போல. கன்னம்  ஒடுங்கியிருக்கும் பதின்ம வயதினன் சுயமைதுனம் செய்பவன், 'நிறைய' பார்த்தவள் புட்டம் பெருத்தவள், பாதம் நீண்டவள் செலவாளி, உரக்கச் சிரிப்பது ஒருவகையில் 'அழைப்பது', வகுப்பில் குனிந்து ஓரக்கண்ணில் பார்த்துச் சிரிப்பவனுக்கு அதே வகுப்பில் இணை இருக்கிறது. குனிந்ததலை நிமிராமல் நடப்பவள் காதால் பார்ப்பவள், எப்போதும் பேசாதவன் யாருக்கோ சேதி சொல்கிறவன், இரட்டை அர்த்தம் பேசுகிறவன் தந்தையால் வளர்க்கப்பட்டவன், எதற்கெடுத்தாலும் அழுபவள் தாயால் வளர்க்கப்பட்டவள். போனமாதம் இதே நாளில் மெல்ல நடந்துவந்ததை ஒப்பிட்டு, இன்று ஒருத்திக்கு மாதவிடாய் என்று கணிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆண்களைக் கண்காணிப்பது ரேகைகளற்ற வெற்று கைகளுக்கு குறிசொல்வது போல, பெண்கள் அப்படியல்ல. அவர்கள் உடல் ரேகைகளால் ஆனது. கண்காணிப்பு அனுபவத்தின் பலனாக இப்படி நிறையவே என் அகராதியில் உள்ளன.

  அதில் சிக்காமல் வளாகத்தில் சுற்றுபவர்களும் உண்டு. அப்படி ஒருத்தியைத்தான் தேர்ந்தெடுத்து காதலித்தேன். என்னுடையதிலிருந்து இரண்டு இருக்கை தள்ளி அவளுடையது. என் சேமிப்பில் இல்லாத உடல்மொழி அவளுக்கு, சுற்றியிருப்பவர்களை எல்லா வகையிலும் அலட்சியம் செய்து புறக்கணிக்கும் உடல்மொழி. இரண்டொருமுறை அவளிடம் வழியச் சென்று சந்தேகம் கேட்டிருக்கிறேன், தெரியாத ஊரில் புரியாத மொழியில் வழி சொல்பவள் போல, ஏதோ சொல்லி கடந்து போயிருக்கிறாள். அவளை எப்படியாவது கணிக்க துணிந்து தோற்றதே அவள்மீது காதல் கொள்ள வைத்தது. முதல்பார்வையில் எந்தவொரு ஆணையும் எச்சில் விழுங்கவைக்கும் பேரழகி. நெருங்கிச்சென்று பேசுவதற்குமுன் ஒத்திகை பார்த்துவிட வைக்கும் தோரணை. கருப்புநிற ஆடையில்தான் பெரும்பாலும் இருப்பாள். என் இருப்பைத் தவிர்த்து கால்மேல் காலிட்டு அமர்வதற்கு அவள் தயங்கியதேயில்லை. அவள் அந்தரங்கத்துக்குள் நுழைய முடிவெடுத்தேன்.

  'மேடம், பீளமேட்ல சுப்புராஜ்னு ஒரு டாக்டர் இருக்காரு' முகத்தில் எந்தவொரு அசைவும் இல்லாமல் சிலையை பார்ப்பது போல என்னைப் பார்த்தாள்.

  'இல்ல மேடம், உங்க உதட்டுக்கு மேல கொஞ்சம் முடி இருக்கு, அவர்கிட்ட போனீங்கன்னா க்ளியர் பண்ணி விட்ருவாரு'

  குரலை உயர்த்தாமல் முகத்தில் எந்தக் கடுமையும் இல்லாமல் 'இதை சொல்றதுக்குத்தான் உங்க ஊர்லேர்ந்து கெளம்பி இங்க வந்து வேலை பாக்குறீங்களா? ரிசல்ட் அனாலிசிஸ் முடிச்சிட்டீங்களா? போயி அந்த வேலைய பாருங்க சார்என்றாள்.

  உண்மையில் அவள் சமநிலை இழந்திருந்தாள். தன் இருக்கையிலிருந்து எழுந்து அடிக்கடி வெளியே சென்றுவந்தாள். அவளால் கவனிக்கப்பட்டேன். உண்மையில் அவள் உதடுகளின் கவர்ச்சியான வடிவத்துக்கு ரோமங்கள் எந்த வகையிலும் தொந்தரவானதாக இல்லை. அதை அவளிடமும் ஒருநாள் சொன்னேன். இரவுகளைக் கடந்து அலைபேசியில் பேச ஆரம்பித்தோம்.

  ஒருநாள் ஆர்எஸ்புரம் காபி ஷாப்க்கு அழைத்தாள். அவளுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே சென்றிருந்தேன். கீழே ஆர்டர் கொடுத்துவிட்டு படிகளில் ஏறி மேலே வந்தால் தனித்தனியாக ஏலெட்டு மேசைகள் , அதைச்சுற்றி மெரூன் நிறத்தில் சோபா போடப்பட்டிருந்தது. மாலை வெளிச்சம் எந்த வகையிலும் உட்புகாத வகையில், உள்ளே இருட்டை உணர்த்தும் செயற்கை வெளிச்சம்.  பள்ளிக்கூட பிள்ளைகள் என்று கணிக்கும் ஒரு பையனும், பெண்ணும் அருகருகே அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னாலிருந்து பார்ப்பதற்கு ஒரு தலை, இரண்டு உடல்கள், தோள்மேல் கைபோட்டு உட்கார்ந்திருப்பது போலிருந்தன. என் இருப்பு அவர்களால் விரும்பப்படவில்லை. அவர்களைக் கவனிக்காதது போலத் திரும்பி அமர்ந்துகொண்டேன். அவர்களது செய்கைகள் எனக்கு நேரிருந்த கதவு கண்ணாடியில் பிம்பங்களாக பிரதிபலித்தன. செல்வி வருவது வரையிலும் அன்றைய வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு பெண்ணின் தொடுதிரை போனை நோண்டிக்கொண்டிருந்தேன். அதில் அவளது காதலனுக்கு அனுப்பிய காதல் காம குறுஞ்செய்திகள் இருந்தன. அவனை 'புஜ்ஜி' என்று பதிவு செய்து வைத்திருந்தாள். அவனும் என் வகுப்பை சார்ந்தவனாகத்தான் இருக்கவேண்டும். விசாரித்தால் தெரிந்துவிடும்.

  செல்வி தன் இரண்டு தோழிகளுடன் வந்திருந்தாள், கூடப் படித்தவர்களாம். செல்வியை அப்போதுதான் சுடிதாரில் பார்க்கிறேன், இருந்தாலும் புடவைதான் அவள் வடிவத்தைச் சிந்தாமல் வரைந்து காட்டுகிறது. வந்தவர்களிடமிருந்து கலவையான ஒரு வாசம், அது நான் குடித்துக்கொண்டிருந்த காப்பியைத் திகட்ட செய்தது. அதீத ஆர்வத்துடன் அவளது தோழிகள் கேட்ட கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னதால், தொடர்ந்து என்னிடம் உரையாடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. நான் அந்த வட்டமேசையின் மௌன பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். அவர்கள் கிளம்புவதற்கு முன்னமே என்னைக் கிளப்பிவிட்டிருந்தார்கள்.

  கிளம்பி பத்து நிமிடத்திற்குள் 'கண்களைப் மட்டும் பார்த்து பேசும் ஆணை விரும்பச் சொல்கிறார்கள் என் தோழிகள்' என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். வந்தவர்களில் ஒருத்தி பல்லுக்கு கிளிப் போட்டிருந்தாள், அது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. என்னை உறுத்துவதைத் தொடர்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டேன். இதிலென்ன தவறு இருக்கிறது? கிளம்பும் வரையிலும் இன்னொருத்தியின் டாலரில் இருப்பது யாரின் உருவம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. டாலரை அவள் அவ்வளவு இறக்கிப் போட்டிருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்? பெண்கள் தம்மை பார்க்கும் தருணங்கள் தவிர்த்து, ஆண்கள் அவர்கள் கண்கள் பார்ப்பதில்லை என அவளிடம் சொல்லும் தருணம் பிறகு வாய்க்கவேயில்லை. மற்றபடி எங்கள் கதை நான் பணிபுரியும் துறை முழுவதும் பரவியிருந்தது. நானும் கண்காணிப்புக்கு உள்ளானேன்.

  கல்லூரி விடுதி காப்பாளனாகவும் இருக்கிறேன். வாத்தியார்களுக்கென்று ஒரு தளம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்து வாத்தியார்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வாத்தியார்களின் விடுதியறை மாணவர்களின் அறையைக் காட்டிலும் குப்பையாக இருக்கிறது. அவர்கள் ஏன் பேண்ட்டை பாதி புட்டத்துக்கு இறக்கி விட்டுக்கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதேயில்லை. அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து விடியவிடியத் திருட்டு விசிடியில் படங்கள் பார்க்கிறார்கள், சமயங்களில் அவர்களோடு சேர்ந்தே குடிக்கிறார்கள், கற்பிக்கும் மாணவிகளிடம் விடியவிடியப் போனில் பேசுகிறார்கள், கடன்  வாங்குகிறார்கள். இவர்கள் மீது பெரிய மரியாதை எனக்கில்லை. மாணவர்களுக்கு தாங்கள் சலனமின்றி கிடப்பதற்கு 'ஏதாவது' கிடைத்தால் போதுமானது. அப்படிக் கிடைக்காத தருணங்களில் ஒயிட்டனரை உடைத்து கர்சீப்பில் ஊற்றி, அதன் பின்புறத்தை முகத்தில் கட்டிக்கொண்டு நாட்கணக்கில் சலனமற்று கிடப்பார்கள்.

  ஒருமுறை எண்பது பேரை அழைத்துக்கொண்டு ஹைதராபாத்துக்குத் தொழில்முறை விஜயம் செய்தோம். பெயர்தான் அப்படியே ஒழிய உண்மையில் அது உல்லாச பயணம். அடுத்தநாள் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பார்ப்பதாக திட்டம். முன்பதிவு செய்திருந்த ஒரு நடுத்தர விடுதியில் அத்தனை பேருக்கும் அறைகளை ஒதுக்கித் தந்துவிட்டு என் அறைக்குத் திரும்பினேன்.

  என் துறை தலைவர் அழைத்தார். சுற்றிச் சுற்றி பேசி கடைசியில் அவர் சொல்ல வந்தது இதைத்தான் 'சதீஸும், திவ்யாவும் லவ் பண்றாங்களாமா, 'எதுவும்' நடக்காம பாத்துக்க.' அழைத்து வந்திருந்ததில் மூன்று சதீஸ்களும், இரண்டு திவ்யாக்களும் இருந்தார்கள், யாரென்று குறிப்பாக அவருக்குத் தெரியவில்லை. நாளைக்குச் சொல்வதாக சொன்னார், நாளைக்கு வரைக்குமா நடக்காம இருக்கும்?

  என்னிடம் ஒரு சதீஸின் அலைபேசி எண் இருந்தது. அவனை அழைத்தேன்.

  'நீ கூப்ட்டா நா வருணுமாடா மயிரு, வாத்தின்னா பெரிய மயிரா நீ? 402ல தான இருக்க? அங்கனயே இர்றா நீ , இப்போ வந்து உன்ன பொளக்கறேன் டா ..'

  இண்டஸ்ட்ரியல் விசிட்டின் முதல் படிநிலை இதுதான். திரவத்தால் ஆதல். இனி பசங்களிடம்  பேசி எந்தப் புண்ணியமும் இல்லை. அவ்வப்போது சேதி சொல்லும் என் வகுப்பு பெண்ணிடம் பேசினேன். அவள் திவ்யா யாரென்பதை மட்டும் சொன்னாள்.

  திவ்யா அவள் அறையில் தான் இருந்தாள். அவளுடன் சேர்த்து மூன்று பெண்கள் இருந்தனர்.

  பயப்படாம லாக் பண்ணிட்டு படுங்கம்மா. நா இதோ உங்க ப்ளோர்ல இருக்க சோபால தான் தூங்க போறேன். சரியா? விடியிற வரைக்கும் இங்கதான் இருப்பேன்' என்றேன். என்அக்கறைஅவர்களுக்கு புரிந்தது. குட்நைட் சொல்லிவிட்டு அந்தத் தளத்தில் போடப்பட்டிருந்த சிகப்பு சோபாவை இழுத்துப்போட்டுப் படுத்துக்கொண்டேன்.

  நான் பிறந்ததிலிருந்து செய்த தவறுகள் ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வந்தன. சரியான முடிவு ஒன்றை எடுத்திருந்தால் கூட இப்படி விளக்குப்பிடிக்க வேண்டி இருந்திருக்காது. ஓக்காம இருக்க விளக்கு பிடித்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

  அந்தத் தளத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இரவின் வெளிச்சம் அலங்கார கண்ணாடியை ஊடுருவி உள்ளே நுழைந்தது. என் இருபுறமும் பதினாறு அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் சில நொடிகள் இருந்து தாவினேன். விளக்குகள் போடப்பட்டு அணைக்கப்பட்டன. சில விளக்குகள் மட்டும் மங்கிய வெளிச்சத்தைத் துப்பி கொண்டிருந்தன.

  இவள் எதற்காக என் மேல் உட்கார்ந்திருக்கிறாள்?

  திவ்யா, நீ இங்க என்ன பண்ற?

  மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவளது வலது ஆட்காட்டி விரலால் என் உதடுகளைச் சாத்தினாள். அவள் அழுத்தத்தில் என் விரைகள் பயங்கரமாக வலித்தன. எங்கிருந்து வருகிறது இத்தனை வெப்பம்?

  காலையில் மனோஜ்தான் எழுப்பினான். என் தொடையிடுக்கில் வெப்பம் பிசுபிசுத்தது. அணிந்திருந்த நீலநிற சட்டையை முடிந்தவரைக்கும் கீழே இழுத்து விட்டேன்.

  பயணம் முடிந்து அன்றிரவு கல்லூரிக்கு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது திவ்யாவுக்கும், சதீசுக்கும் நேற்றிரவு எல்லாம் முடிந்துவிட்டதாக சொன்னார்கள்.

  'நீங்க நல்லா தூங்கிட்டீங்க சார், சதீஸே மேல மாடிக்கு ஏறிப்போயி, உங்கள தாண்டிகிட்டு திவ்யாவ கூட்டிட்டு வந்துட்டான்

  சினிமாவில் யாரோ அடிவாங்கும் காட்சிக்கு மொத்த பேருந்தும் சிரித்துக்கொண்டு வந்தது.

  நாலாவது மாடி காற்றுக்கு மேஜை மீதிருந்த எஞ்சிய கேள்வித்தாள்கள் தேர்வறையின் வாசலுக்குப் பறந்தன. தேநீர் வந்தது, அதிசயமாக இன்று ஒரு வடையும் தந்தார்கள்.

  இப்போதெல்லாம் யாரையாவது கண்காணித்தால், மல நிறத்திலிருக்கும் ஒரு புழுவின் சித்திரம் கண்முன் விரிகிறது. சக மனிதர்களைக் கண்காணிப்பதை முடிந்த வரைக்கும் குறைத்துக்கொண்டிருக்கிறேன். அதிகமும் நிலம் பார்க்க கண்களைப் பழக்கியிருக்கிறேன். முன்பு போலிருந்தால் அதோ ஜன்னலுக்கருகே இரண்டாவது இருக்கையில் இரண்டு மணிநேரமாக தன் நீலநிற துப்பட்டாவை லாவகமாக இடது தொடையில் விரித்து, அதனடியிலிருக்கும் துண்டுசீட்டை பார்த்து எழுதிக் கொண்டிருப்பவளை பிடித்து, விடைத்தாளைக் கிழித்து வெளியே அனுப்பியிருப்பேன்.

  இரண்டு மணிநேரமாக நான் பார்த்ததை தொகுத்தால், அதில் அவளிருக்கும் காட்சிகள்தான் பாதிக்கும் மேலிருக்கும். முதலில் நெளிந்தவள், பிறகு என் தயக்கத்தை கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேலையைத் தொடங்கினாள். ஒருநீண்ட மௌன உரையாடலை முடிவில்லாமல் தன் அசைவுகள் மூலம் என்னிடத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். கையேட்டின் ஒவ்வொரு பேப்பரையும் திருப்பும்போதும் கள்ளப்பார்வை பார்த்து, உதட்டைச் சுழிக்கிறாள். தேர்வறைக்குள் நுழைந்த உடனேயே அவளது முகவெட்டு என்னைத் தொல்லை செய்தது. அவள்போன்ற முகவெட்டைக்கொண்ட பெண்கள் நிறையப் பேரை எனக்குத் தெரியும், அவர்களெல்லாம் அப்படித்தான். இன்று ஏனோ அவளை நெருங்கி, அவள் துப்பட்டாவை இழுத்து அவளைக் கூச செய்ய எனக்குத் துணிவு வரவில்லை.

  தேர்வு முடிந்து அறைக்கு வெளியே சென்று ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்தாள். ஒரு ஆண் ஒருபோதும் பார்க்க விரும்பாத சிரிப்பு. ஒரு ஆணை வென்றுவிட்ட சிரிப்பு அது. ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் கண்காணிப்பாளன், கடைசியில் அந்தப் பெரிய விளையாட்டு பலகையில் வெட்டுப்பட்டுக் கிடந்தான். அவள் சமர்ப்பித்துவிட்டு சென்ற கையேட்டின் அத்தனை பக்கங்களிலும் என் பேனாவால் செங்குத்தாகக் கோடு கிழித்தேன், அதைத் திருத்துபவர்களுக்கு தவறாக எழுதியதை அடித்தது போலிருக்கும். அவள் ஒருபோதும் இந்தப் பரிட்சையில் தேர்ச்சியடைய போவதில்லை.

  ராஜிவ் இங்கே நூலகராக இருக்கிறார். விடுதிக்குத் திரும்பும் வழியில் அவரிடம் ஏதோ கோபமாக சொன்னேன் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது. அறைக்குத் திரும்பி துணிகளைக் களைந்து, துவைக்கத் தயாரானேன். முப்பத்து நான்கு வயதில், விடுதி அறையில் தனிமையில் துணி துவைப்பது கொடுமையானது. கதவு தட்டும் சப்தம் கேட்டது.

  ராஜிவ் 'கருணா சார், வாஷிங்கா?' என்றார்

  'ஆமாங்க. அப்பப்போ நனைச்சிட்டா ஒருவேலை முடிஞ்சது'

  'யாரைச் சார் சொன்னீங்க?' என்று கேட்டார்

  'நா என்னங்க சொன்னேன்?’

  'பல்ல காட்னப்பவே கண்டாரோலிய கீழ புடிச்சு தள்ளி விட்ருக்கணும்னு சொன்னீங்களே சார்

  சீக்கிரம் இந்த வேலையை விட்டுத் தொலைக்க வேண்டும்.

000


No comments:

Post a Comment