Monday 11 March 2019

நடுகல் ஒன்றில் வெளிவந்த கவிதைகள்
பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்


*
திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப 
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை 
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும் 
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்

சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு 
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை
*


சூரர்பதி கவிதைகள்

பயணம்

ஊருக்கு வெளியே நீள்கிறது
எனது ஒற்றையடிப்பாதை
ஆங்கே
எண்ணங்களின் விம்மல்களும்
பெருமூச்சின் புயற்காற்றும்
கண்ணீரின் ஈரத்தடமின்றி வேறில்லை
சிலசமயம் பறவையின் நிழலும்
சர்ப்பமும் கடக்க
அபூர்வமாய் ஒரு பட்டாம்பூச்சி
முள்ளில் மலரும்
நீண்ட தனிமை குடி கொண்டிலங்கும்
முட்புதர்களின்றி வேறில்லை
தலைமேல் விழும் பனம்பழமின்றி
கொடிக்கால் மழையில் வெடிக்கும் காளான்.
பயங்காட்டும் நிழலுருக்கள்
புணரும் கனவில்
என்னை வேட்டையாட
ஒப்புக் கொடுத்த பின்னும்
வழித்துணையாக வந்த நிழலும்
எங்கோ ஒளிந்து கொள்ள
திக்கற்று நீள்கிறது பயணம்

000

லென்ஸ் சமன்பாடு

ஒரு சிறுத்தை தன் வேட்டையை
ஓடத் தொடங்கும் போது
பின்னனியில்
ஆயிரம் சிம்பொனி இசைக்கப்படுகிறது
            
            கிழிபட காத்திருக்கிறது வாழ்வு
            ஷண நேர சொட்டில்

            உடையை சலவை செய்து
            ஆற அமர பேச விவரிக்க
            நேரமில்லை நண்ப
       
            ஏற்ற இறக்க
            மேடு பள்ளத்தில்
            இசை நிரல்
    
            வாழ்வு இமைக்கப்படுகிறது
            விழிதக அமைவின் குவியத்தூரத்தில்
            குவியும் துயரத்தில்

ஒரு மான் ஒரு வாழ்வு
அலங்கோலமான ஓட்டத்தில்
ஒரு புல்லாங்குழலும் செவிமடுப்பதில்லை

000
இயமன் அல்லது எமனின் வருகை

அந்தி கருக்கல் மழையில்
முள் குத்திய சேற்றில்
முன்னங்கால் நொண்டியடிக்க
கூட்டத்தின் 360 டிகிரி பாகை மேய்ச்சலில்
வழியில் அவனின் வாகனம் கண்டேன்
சாலை விதிகளையறியா
சர்ப்பம் நசுங்க
மழைநாளின் பிஞ்சுத் தவளை
இளம் தோசையாக
வெளுத்த இலை 
பழுத்த கிழமாய் காத்திருக்க
மின்கம்பியில் காகம் எழுந்தமர
சாலையோர நாய் விரைந்தோட
எப்படி வந்திருப்பான்?
எனக்கு முன்சென்ற 
வாகனத்தின் சதைகளை
சாலையில் பரப்பியபடி.

000

.துரை கவிதைகள்

... மேலிருந்து பாறைகளை உருட்டுபவன்...


1

பரந்த அவ்வெற்றிட நிலத்தில்
ஒரு குட்டி கோயிலை சிறுமி சுற்றிக்கொண்டிருந்தாள்
அந்த கோவிலின் விளக்கு பிரயாண வேகத்தில் கண்ணடிப்பது மாதிரிருந்தது
அவளுக்கு என்ன வேண்டுதல் இருக்கும்
இந்த எட்டு மணியில்
எதையோ அவள் இழுத்துக்கொண்டு
சுத்துவது மாதிரி இருந்தது
அத்தனை கனத்தோடு கோயிலை
சுற்றும் அவளின் இரண்டாவது சுற்றை பார்ப்பதற்குள் பேருந்தும் கடந்துபோனது
ஊரில் இப்படிதான் மாமான்களும்
மச்சான்களும் போட்டி போட்டு கிடாய்களை வெட்டி வேண்டுதலிடுவதை பார்த்திருக்கிறேன்
சென்ற வாரம் கூட இளையதங்கை
நெய்விளக்கில் நூல் மதத்து போயிருந்தது எரியவேயில்லை
என்று அம்மாவிடம் பொருமிக்கொண்டிருந்தாள்
இவர்கள் யாரிடமும் இல்லாத கனம்
அந்த சிறுமியிடம் இருந்தது
சரியே ஒருமணிநேர பயணத்தில்
வண்ண வண்ண குடங்களோடு
சாலையோரங்களில் மகளிர்
நிறைந்திருந்தனர் இரவு ஒன்பது
மணிக்கு தண்ணீர் கிடைக்கிற
இந்த தேசத்தில் எட்டுமணிக்கு அந்த
சிறுமி என்ன வேண்டிருயிருப்பாள்
என்பது எனக்கு பிறகுதான் புரிந்துபோனது.!

2

பறவைகள் வீடு திரும்பாத
சாயங்காலத்தை ஒருநாள் பார்த்தேன்
அது சாயங்காலம் மாதிரியே இல்லை
பறவைகள் எங்கே போயிருக்கும்
இந்த சாயங்காலத்தை தூக்கிக்கொண்டுயென
ஒரு நீண்ட நிசப்தமிட்டேன்
அப்போது அவ்வழி வந்த கிணறுகளை தூர்வார்பவன் சொன்னான்
நீண்ட நாளாச்சி சார் சாயங்காலத்தை பார்த்து
இப்போதான் திரும்ப பார்க்கிறேனென்று
மூணு மணிக்கு கிணத்துக்குள்ளாற இறங்குனா மேல ஏற ஏழாகிடும்
வேல முடிலைனா சில பண்ணைக்காரங்க
கிணத்துக்குள்ள பெரிய பல்பை தொங்கவிட்டு வேலைபார்க்க சொல்வாங்க
இந்த சாயங்காலம் புதுசாருக்கு சார்
நீ கூட ஒயின்ஷாப்ல பார்க்குறத விட சாயங்காலத்துல அழகாருக்க சார்
உன் கண்ணு கூட பெரிய கொத்தி
பறவ மாதிரியேருக்கு சார்.!

3

இந்த கடைசி பெக்கையும்
நீயே குடித்திடு நண்பா
சரியென தலையசைத்தபடியே
பாதி சிகரெட்டோடு நிமிர்ந்த நண்பன்
மட்டையாகி கிடந்த
கடவுளை பார்த்து கேட்டான்
அப்ப இவர என்ன பண்றது
ங்கொக்காலி சாவுறான்
நேத்து ஒத்த ரம்மி ஒரு கார்டுதான் கேட்டேன்
அவ்ளோ கெஞ்சுனேனே கொடுத்தானா.!
.
000

No comments:

Post a Comment