Monday 11 March 2019

நடுகல் ஒன்றில் வெளியான அறிவியல் கட்டுரை



                          மது ஸ்ரீதரன்
           பிரபஞ்ச மகா சமுத்திரம்

  ஒரு திரைப்படம் பிரமிக்கும்படி  இருந்தால் பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறோம். உண்மையில் பிரம்மாண்டம் என்று அழைக்கப்பட முழுத் தகுதி வாய்ந்தது பிரம்மாண்டம் தான். (பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம்) அண்டம் பிரம்மாவால் படைக்கப்பட்டதா என்ற வாதத்தை விட்டு விடுவோம். ஸ்டீபன் ஹாக்கிங், குவாண்டம் விதிகளின் படி  பிரபஞ்சம் சூனியத்தில் இருந்து தன்னைத் தானே படைத்துக் கொள்ளக் கூடியது என்கிறார். பிரபஞ்சம் ஆகச்சிறந்த தான்தோன்றி. அதை விடுங்கள்.. நம்மால் நினைத்துப் பார்க்க முடிவதை விட பிரம்மாண்டமானது இந்த அண்டம். பிரபஞ்சம் எப்போதும் கடலுடன் ஒப்பிடப்பட்டு வந்துள்ளது. இரண்டுமே மனிதனை வசீகரித்தன. வசீகரிக்கின்றன.


  தமிழின் விண்மீன் என்ற பிரயோகத்தைக் கவனிக்கவும். நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்று பாடுகிறான் மனிதன். கடலின் பெருஞ்சுழிகளும் சரி, காலக்சிகளும் சரி ஒரே வடிவில் இருக்கின்றன. திருமாலின் பாற்கடல் நத்திங் பட் மில்கி வே! பிரபஞ்சம் கடல் என்றால் அதில் நாம் நம் கணுக்காலை மட்டுமே இதுவரை நனைத்திருக்கிறோம் என்கிறார் கார்ல் சாகன். நிலவுக்கு உண்மையில்  மனிதன் போனானா இல்லையா என்ற சர்ச்சையை விட்டுவிடுவோம். போனான் என்றே வைத்துக் கொள்வோம். நிலவில் கால் வைத்ததால் இந்த கணுக்கால் நனைத்தது  சாத்தியமாயிற்று. இல்லையேல் கடலை ஆவென்று வாய் பிளந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் குழந்தைகளாகவே இருந்திருப்போம். 


  பிரபஞ்சத்தில் மிகவும் வேகமானது என்று கருதப்படும் ஒளிக்கே நம் சூரிய மண்டலத்தைக் கடந்து செல்ல சுமார் 7 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. நிலவை அடைய ஒளி சுமார் 1 நொடியே எடுத்துக் கொள்கிறது என்பதை கவனிக்கவும். இது போல அனாயாசமாக நான்கு ஆண்டுகள் நேர்க்கோட்டில் பயணம் செய்தால் தான் ஒளி நமக்கு 'பக்கத்தில்' உள்ள விண்மீனை அடைய முடியும்! பிரபஞ்சத்தில் தோராயமாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தால் அது வெற்றிடமாக இருக்க 99% சாத்தியம் உண்டு.


  இந்த பிரம்மாண்டத்தில் ஏதோ ஒரு நிராகரிக்கத்தக்க மூலையில்  நாம் ஒரு சிறிய pale blue dot என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு பாறைக்கோளுடன் பந்தப்பட்டுள்ளோம். இந்த பந்தம் சாதாரணமானது அல்ல. நமக்குக் கீழே உள்ள தரை நம்மை 9.8 மீ/செ 2 (1 ஜி ) என்ற வேகத்தில் நொடிக்கு நொடி வந்து இடிக்கிறது. இதற்கு டிமிக்கி கொடுத்து விட்டு நிரந்தரமாக விடுபடுவதென்றால் நாம் வினாடிக்கு சுமார் 11 கி.மீ என்ற வேகத்தில் பறக்க வேண்டும். நம்மை ஈர்ப்பினால் சிறை வைத்திருக்கும் இந்த நீலக் கோள் பாதுகாப்பாகத் தோன்றினாலும் அந்தப் பாதுகாப்பு ஸ்திரமானது அல்ல. அந்தரத்தில் மிதக்கிறது இது. வளிமண்டலமும் ஓசோன் படலமும் காந்தப்புலமும் கவச குண்டலங்கள் போல இதை முடிந்தவரை  பாதுகாக்கின்றன. ஆனாலும் இன்னும் சில கோடி ஆண்டுகளில் சூரியன் எரிபொருள் தீர்ந்து வீங்கத் தொடங்கி இதை விழுங்கி விடும். அதற்காக இன்று இரவு யாரும் தூக்கத்தைத் தொலைக்கப்போவதில்லை தான். வழக்கமான சீரியலைப் பார்த்துவிட்டு பாதாம் பால் சாப்பிட்டு காதலிக்கு வாட்ஸ் அப் செய்து விட்டு  படுத்துக் கொள்ளப் போகிறோம்.
 

  அதை விட்டால் பூமிக்கு சீக்கிரமான ஆபத்துகள் நிறையவே  இருக்கின்றன. உயிரற்ற கோள் என்று அழைக்கப்படும் நம் நிலா மறைமுகமாக பூமியில் உயிர் வாழ்க்கையை நிலை நிறுத்துகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் சுழற்சி  ஓர் அமெச்சூர் குடிகாரன் போல ரொம்பவும் தள்ளாடும். இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பனியுகம் ஒன்று தலை தூக்கும். பனி யுகம் என்றால் பனி விழும் மலர் வனம் என்று ரொமான்டிக் ஆக பனி மழை பொழிவதல்ல. பூமி முழுவதும் பனி போர்த்திக் கொண்டு இருப்பது. விவசாயம் இல்லை; போக்குவரத்து இல்லை; வணிகம் இல்லை. முதலில் சில வாரங்கள் ஆனந்தமாக பனிக்கட்டியை ஒருவர் மேல் ஒருவர் அடித்து விளையாடினாலும் கொஞ்ச நாளில் சாப்பாட்டுக்காக சக மனிதனை அடித்துத் தின்னும் நிலைமைக்கு வந்து விடுவோம். 


  பூமியில் சில பல எரிமலைகள் நித்திரையில் உறங்கிக் கொண்டுள்ளன. இந்தக் கும்பகர்ண மலைகள் எப்போது வெடிக்குமோ தெரியாது. வெடித்தால் அதனால் வளிமண்டலத்தில் வீசி எறியப்படும் எரிமலைச் சாம்பல் சூரிய ஒளியை மறைத்து ஒரு உடனடி பனியுகத்தைக் கொண்டு வர வல்லது. நம் மனித இனம் இப்படிப்பட்ட ஒரு எரிமலை வெடிப்பில் 70000 ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு சென்றதாக சொல்கிறார்கள்.நமது இன்னொரு அதிர்ஷ்டம் பூதாகரமான வியாழன் மற்றும் சனிக்கோள்கள். இவை பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்களை திசை திருப்பி விட்டு விடுகின்றன.


  இல்லையேல் வீட்டை நீங்கி தெருக்கோடிக் கடையில் காபிப்பொடி வாங்கி வருவதற்குக் கூட இரும்பு ஹெல்மெட் போட வேண்டி வரும். இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் அளவே உள்ள ஒரு விண்கல் விழும் பட்சத்தில் அது  ஒரு நகரத்தையே பூண்டோடு அழிக்க வல்லது. ஒரு சில கிலோமீட்டர்கள் விட்டம் உள்ள விண்கல் விழுந்தால் பாதி பூமி மயானமாகி விடும். சூரிய மண்டலம் வெளிப்புறத்தில் Oort cloud எனப்படும் கற்களால் ஆன ஒட்டியாணத்தை அணிந்து கொண்டுள்ளது. இதில் இருந்து கோபித்துக் கொண்டு அடிக்கடி சில பாறைகள் சூரியக் காதலால் பூமி வெள்ளி போன்ற உள் கிரகங்களின் சுற்றுப் பாதையில் குறுக்கிடக்கூடும் .


  எபோலா வைரஸ் பற்றி தெரியும் அல்லவா? சமீபத்தில் உலகையே உலுக்கிய நுண் ராட்சசன். இது போல எப்போது வேண்டுமானாலும் வைரஸ்கள் ஜீன் மாற்றம் பெற்று வெடித்துக் கிளம்பலாம். நாம் கிருமிகளின் கருணையில் வாழ்கிறோம் என்கிறார் பில் பிரைசன்.தண்ணீரை மாற்றினால் நாலு  நாள் இருமும் மனிதனுக்கு  இந்த வைரஸ்கள் ஜீன் மாற்றம் பெற்றால் அது பேராபத்தைக் கொண்டு வரும். நோயை டயக்னாஸ் செய்து மருந்து கண்டுபிடிப்பதன் முன்னரேயே அது அசுர வேகத்தில் பரவி விட்டிருக்கும்.  சரி, இயற்கைப் பேரழிவுகள் இருக்கட்டும். அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் உலகை பல்வேறு முறை கூண்டோடு அழித்தொழிக்க வல்ல அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஐன்ஸ்ட்டின் இப்படிச் சொல்கிறார்: "மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும் என்று எனக்கு சரியாகத் தெரியாது; ஆனால் நான்காம் உலகப்போர் கண்டிப்பாக குச்சிகளாலும் கற்களாலும் நடக்கும்". பூமி அல்லது மனிதகுலம்  நிச்சயம் பேராபத்துகளால் சூழப்பட்டுள்ளது.


  பிரபஞ்சத்தில் வேறு எங்காவது அறிவு சார் உயிரினங்கள் இருக்கின்றனவா என்று இதுவரை தெரியவில்லை. SETI என்னும் அமைப்பு மெகா சைஸ் தொலைநோக்கிகள் கொண்டு வானத்தை கடந்த 50 வருடங்களாக சல்லடை போட்டு சலிக்காத குறையாக ஸ்கேன் செய்து வருகிறது. எந்த சிக்னல் களும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. 


  கார்டாஷேவ் என்ற ஆள் (காராசேவ் அல்ல) நாகரீகங்களை 3 வகையாகப் பிரிக்கிறார். 

  டைப் 1:
  தமது கிரகத்தின் எல்லா ஆற்றலையும் உபயோகப்படுத்தும் வகை தெரிந்தவர்கள்.
  டைப் 2:

  தமது தாய் விண்மீனின் ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

  டைப் 3:
  தமது காலக்சி முழுவதன் ஆற்றலையும் பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.


  நாம் என்னதான் டெக்னாலஜியில் முன்னேறிவிட்டோம், உலகின் அடுத்த முனைக்கு லைவ் -வாக ஸ்கைப்பில் பேசுகிறோம் என்று மார் தட்டிக் கொண்டாலும் மேற்கூறிய  இந்த ஸ்கேலில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். டைப் -0 கூட இல்லை. நம் பூமியின் மொத்த ஆற்றலையே சரிவர நமக்கு பயன்படுத்தத் தெரியவில்லை. நாம் மூன்றாவது வகை நாகரிகத்தை அடைய இன்னும் 10 லட்சம் வருடங்கள் ஆகலாம் என்கிறார் ஜப்பானிய விஞ் ஞானி மிசியோ காகு . இப்போது நம்மிடம் இருப்பது எல்லாம் பொம்மை தொழில்நுட்பம். மாத்யூ ஆண்டர்சன் நம் டெக்னாலஜியை அட்டை வீடு என்கிறார். கீழே உள்ள அட்டைகள் விழுந்தால் ஒட்டு மொத்த சிஸ்டமும் விழுந்து விடும். சமீபத்திய வார்தா புயலின் போது நம் நகரம் அடைந்த நிலையை எண்ணிப் பாருங்கள். பத்து நாள் மின்சாரம் இல்லை. தொலைத் தொடர்பு போய் விட்டது. இன்டர்நெட் இல்லை. ஏ .டி .எம் கள் வேலை செய்யவில்லை.  கற்காலத்துக்குப் போய் விட்ட ஒரு உணர்வு. லேசாக இடி இடித்து தூறல் போட்டாலே மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும் நிலையில் தான் இன்னும் இருக்கிறோம்.

 
  நாம் இன்று நம்முடைய அன்றாட வாழ்வின் அத்தனை செயல்களுக்கும் எலக்ட்ரானிக்ஸ்-சை நம்பி உள்ளோம். மின்சாரம் இல்லாமல் ஒரு பத்து நிமிடம் இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு மாறி விட்டோம். எலெக்ட்ரோ மாக்னட்டிக் பல்ஸ் என்று அழைக்கப்படும் மின்காந்த உயர் துடிப்புகள் (E M P ) சூரியனின் காந்தப் புயல்களால் உருவாகின்றன. அவை நம் ஒட்டுமொத்த பூமியின் எலக்ட்ரானிக் சாதனங்களையும் சத்தமில்லாமல் ஊமையாக்க வல்லன.150 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்தது. அப்போது மின் சாதனங்கள் அதிகம் இல்லை என்பதால் பெரிதாக பாதிப்பில்லை.


  நம் காலக்சியில் டைப் 2 மற்றும் 3 அறிவுசார் நாகரீகங்கள் இல்லை என்றே தோன்றுகிறது. அப்படி இருந்தால் அவர்களின் வெப்பக் கையெழுத்தை (heat signature ) இந்நேரம் நம் தொலைநோக்கிகள் படம் பிடித்திருக்கும். 
ஒருவேளை நாம் டைப் -2 நாகரீகமாக இருந்தால் இந்நேரம் செவ்வாய்க்கும் சனியின் துணைக்கோள்களுக்கும் ஆன்லைனில் விடுமுறையைக் கழிக்க டூர் புக் செய்து கொண்டிருப்போம். போர் அடிக்குது வா பாண்டிச்சேரிக்கு ட்ரைவ் போகலாம் என்று சொல்வது போல பிரைவேட் ஜெட்டுகளை எடுத்துக் கொண்டு ப்ளூட்டோவுக்குப் போய் வருவோம். நாம் இப்போது சூரியனின் பெரும்பாலான ஆற்றலை வீணடிக்கிறோம். டைப் 2 நாகரிக மக்கள் தங்கள் விண்மீனைச் சுற்றி Dyson sphere எனப்படும் பிரம்மாண்ட கோளத்தைக் கட்டி சூரியனின் ஒவ்வொரு போட்டானையும் சிறை பிடிப்பார்கள். 


  சரி, பிரபஞ்சத்தில் நம் மனித இனம் மிகவும் அபூர்வமானது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு செல் உயிரினத்தில் இருந்து சிந்திக்கத் தெரிந்த, கவிதை எழுதத் தெரிந்த,காதலிக்கத் தெரிந்த, ராக்கெட் விட தெரிந்த அல்லது அபத்தமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஆயுதங்களை செய்யத் தெரிந்த அறிவு சார் உயிர்கள் வருவது எப்படி என்றால் குரங்கு ஒன்று டைப் ரைட்டரின் முன் அமர்ந்து கண்டபடி டைப் செய்து ஷேக்ஸ்பியரின் கவிதை ஒன்று வருவது போல. அல்லது இலக்கற்ற புயல் காற்று ஒன்று ஒரு இரும்புப் பட்டறையில் புகுந்து அடித்து இரும்பை அசெம்பிள் செய்து ஒரு ஜெட் விமானம் உருவாவது போல. இத்தனை அபூர்வமான மனித இனம் இயற்கையாகவோ செயற்கையாகவோ அழிந்து போனால் எச்சங்கள் இன்றி ஒரேயடியாக அழிந்து போக வேண்டி இருக்கும். பல பில்லியன் வருடங்களின் பரிணாமம் அர்த்தமற்றுப் போய் விடும்.


  விண்வெளி ஆராய்ச்சியில் காசைக் கொட்டக் கூடாது. முதலில் கோடிக்கணக்கான பூமி மக்களின் பசியைத் தீருங்கள் என்று ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் தொலைநோக்குப் பார்வையோடுதான்  சிந்திக்க வேண்டி இருக்கிறது. உணவும், நீரும், இருப்பிடமும் நம் உடனடித் தேவைகள் தான். 18 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள் பலர் சமூக சேவை செய்கிறேன் என்று சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வெளியே புறப்பட்டிருந்தால் நமக்கு இந்த தொழில்நுட்பங்கள் ,சொகுசு வாழ்க்கை கிடைத்திருக்காது. சூரிய மண்டலத்தின் துணைக் கோள்களிலும் விண் கற்களிலும் தண்ணீர் ஏராளமாகக் கிடைக்கிறது. ஹைட்ரஜன் கிடைக்கிறது. அம்மோனியா கிடைக்கிறது. rare earth தனிமங்கள் இருக்கின்றன. தங்கம் இருக்கிறது. அவற்றை எல்லாம் இங்கே கொண்டு வர முடிந்தால் பல நூற்றாண்டுகளுக்கு மனித இனம் பயனடையும். பெட்ரோல், டீசல், இயற்கை வாயு எல்லாம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குக் கூட தாங்காது. நம்முடைய தேவைகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 



  இந்தக் கோளுக்கு அல்லது மனித குலத்துக்கு ஆபத்து வரும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஒரு நூறு பேர் , இந்த அபூர்வ இனத்தின் வாழும் சாம்பிள்களாக பாதுகாப்பாக வேறு கிரகத்துக்கு குடியேற வசதியாக நம் டெக்னாலஜி முன்னேற வேண்டும். தொலைநோக்குப் பார்வை இங்கே அவசியம். பார்க்கலாம் மனித குலம் இந்த குட்டிக் கோளோடு பந்தப்பட்டு அழிந்து போகிறதா இல்லை பிரபஞ்ச மகா சமுத்திரத்தில்  தடைகளை எதிர்த்து  முன்னேறி தைரியமாக துடுப்புப் போடப் போகிறதா என்று.


No comments:

Post a Comment