Wednesday 13 March 2019

மொழிபெயர்ப்பு படைப்பு


ஆயிரம் வருடங்களின் நற்பிரார்த்தனை
யியூன் லீ
தமிழில் - ஶ்ரீதர்ரங்கராஜ்


  நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. சீனாவில் நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று யாரேனும் கேட்டால் திரு.ஷி இப்படித்தான் சொல்வார். பணிஓய்வு பெற்று விட்டதை மற்றவர்களின் ஆச்சரியத்தினூடே தன்னடக்கத்துடன் அதற்கு அடுத்துச் சொல்வார். திரு.ஷி இந்த வார்த்தைகளை, டெட்ராய்ட்டில் தங்கியிருந்தபோது, ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொண்டார், அவருடைய வேலைகுறித்து அவளுக்கு அவர் விளக்க முற்பட்டபோது, அவருடைய ஆங்கிலம் உதவாது அவரைக் கைவிட்டதும் காற்றில் படம் வரைந்து காட்டினார். “ராக்கெட் விஞ்ஞானி!” என்று அவள் ஆச்சரியத்தோடு வாய்விட்டுச் சிரித்தாள்.

  அமெரிக்காவில் அவர் சந்திக்கும் நபர்கள், அவருடைய வேலையைத் தெரிந்துகொண்டதும்  ஏற்கெனவே நட்பாகி விட்டதுபோலத் தோன்றும், எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மிட்வெஸ்ட் நகரத்திலுள்ள அவருடைய மகள் வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள்தான் ஆகிறது என்றாலும் திரு.ஷி நிறையத் தொடர்புகளை உருவாக்கியிருந்தார். குழந்தைகளை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வரும் அம்மாக்கள் அவரைப்பார்த்துக் கையசைத்தனர். ஒரு வயதான தம்பதி, கணவர் கோட்-சூட்டிலும், மனைவி அரைப்பாவாடையிலும் இருப்பர், தினமும் காலை ஒன்பது மணிக்கு கைகோர்த்தபடி அந்தப் பூங்காவிற்கு வருபவர்கள்; நின்று அவரை விசாரித்துவிட்டுதான் செல்வார்கள், எப்போதும் கணவர்தான் பேசுவார், மனைவி புன்னகையோடு அருகில் நின்றுகொண்டிருப்பார். ஒரு கட்டிடம் தள்ளி அமைந்திருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஒரு பெண்மணி அவரோடு பேசுவதற்காக வருவார். அவளுக்கு வயது எழுபத்து ஏழு, அவரைவிட இரண்டு வயது மூத்தவள், ஈரானிலிருந்து வந்தவள். இரண்டு பேருக்குமே ஆங்கிலம் கொஞ்சம்தான் தெரியும் என்றாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் எந்தச்சிரமமும் இருக்கவில்லை, வெகு சீக்கிரமே நண்பர்களாகி விட்டனர்.
  அவ்வப்போதுஅமெரிக்கா நல்ல நாடு,” என்பாள். “மகன்கள் நன்றாகச் சம்பாதிக்கின்றனர்.”

உண்மையில் அமெரிக்கா வளமான நாடுதான். திரு.ஷியின் மகள் இங்கே கல்லூரியில் கிழக்காசியத் துறையின் நூலகராகப் பணிசெய்கிறாள், அவர் இருபது வருடங்களில் சம்பாதித்தைவிட அதிகமாக, ஒரு வருடத்தில் சம்பாதிக்கிறாள்.

  என் மகளும் நிறையப் பணம் சம்பாதிக்கிறாள்.”

  அமெரிக்கா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் நல்ல நாடு.”

  ஆமாம், ஆமாம். நான் சீனாவில் ராக்கெட் விஞ்ஞானி. ஆனால் மிகவும் ஏழை. ராக்கெட் விஞ்ஞானி தெரியுமா?” கைகளைக் கூம்பாக்கியபடி திரு.ஷி சொல்வார்.

  சீனா எனக்குப் பிடிக்கும். சீனா நல்ல நாடு, மிகவும் பழையது.”

  அமெரிக்கா இளமையான நாடு, இளைஞர்களைப் போல.”

  அமெரிக்கா மகிழ்ச்சியான நாடு.”

  இளைஞர்கள்தான் வயதானவர்களை விடச் சந்தோஷமாக இருக்கிறார்கள்,” என்பார் திரு.ஷி, ஆனால் அவருக்கே வெகுசீக்கிரமாக அம்முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றும். இந்தக்கணம் அவர் வாழ்க்கையில் எப்போதும் இருந்ததைவிட மகிழ்வாகத்தான் உணர்கிறார். காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் நேசிக்கக்கூடிய, அவருக்கு எதிரேயுள்ள அப்பெண்மணியும் சந்தோஷமாகத்தான் தெரிகிறாள்.

  சமயத்தில் அவர்கள் இருவருக்குமே ஆங்கிலம் தீர்ந்துவிடுகிறது. பிறகு அவள், கொஞ்சம் ஆங்கிலம் கலந்த பெர்சிய மொழிக்குத் தாவிவிடுவாள். திரு.ஷிக்கு அவளிடம் சீனத்தில் பேசுவது சிரமமாக இருக்கும். அதற்குப்பிறகு பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு அவள்தான் தனியாக பேச்சை நகர்த்திச்செல்வாள். அவர் தலையாட்டிக்கொண்டு புன்னகையை வெளிப்படுத்துவார். அவள் என்ன சொல்கிறாள் என்பது முழுவதுமாகப் புரியாது, ஆனால் அவரோடு பேசிக்கொண்டிருப்பதால் அவளடையும் சந்தோஷத்தை அவரால் உணரமுடியும், அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவரடையும் அதே சந்தோஷம்.

  காலைவேளைகளில் பூங்காவில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருக்கும் நேரங்களை திரு.ஷி எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். “மேடம்என்றுதான் அவளைக் குறிப்பிடுவார், இதுவரை அவள் பெயர் என்னவென்று கேட்டதில்லை. மேடம் எப்போதும், அவள் வயதிலிருக்கும் பெண்கள் அல்லது அவள் எங்கிருந்து வருகிறாளோ அந்த இடத்துக்குப் பொருந்துமென அவர் கற்பனை செய்திராத வகையில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சளில் ஆடை அணிவாள். அவளிடம் உலோகத்தால் ஆன ஒரு ஜதை கொண்டை ஊசிகள் உண்டு, ஒன்று வெள்ளையானை மற்றொன்று நீலம் மற்றும் பச்சை நிறத்தாலான மயில். அவற்றில் ஒன்று அவளுடைய அடர்த்தியற்ற கூந்தலைத் தளர்ச்சியாகக் கவ்விப்பிடித்திருக்கும் விதம் அவருக்கு அவளுடைய மகளின் சிறுவயதை - முழுவதும் வளர்ந்திராத கூந்தலில், ப்ளாஸ்டிக்கால் ஆன பட்டாம்பூச்சி க்ளிப் நெற்றியில் தொங்கிக்கொண்டிருக்கும் பருவத்தை - ஞாபகப்படுத்தும். திரு.ஷி, சிலசமயங்களில் மேடத்திடம், தன் மகள் சிறுமியாகவும் வாழ்க்கை நம்பிக்கையோடும் இருந்த அந்த நாட்களை எவ்வளவு விரும்புகிறேன் என்று சொல்ல நினைப்பார். ஆனால் அவருக்குத் தெரியும் அவர் ஆரம்பிக்கும் முன்னமே அவர் ஆங்கிலம் அவரைக் கைவிட்டுவிடும். தவிரவும் கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர் வழக்கமல்ல.


            மாலைநேரங்களில், மகள் வீட்டிற்குள் வரும்போது திரு.ஷி இரவுணவைத் தயார் செய்திருப்பார். இதை, சில வருடங்களுக்கு முன்பு, அவர் மனைவி இறந்தபின் சமையல் வகுப்பொன்றில் சேர்ந்து கற்றுக்கொண்டார், கல்லூரியில் எப்படிக் கணிதத்தையும் இயற்பியலையும் ஆர்வத்துடன் பயின்றாரோ அதே ஆர்வத்துடன் இதையும் கற்றுக்கொண்டார். இரவுணவின்போது, ”ஒவ்வொரு மனிதனும் பிறப்பிலேயே, உபயோகிப்பதை விடவும் அதிகத் திறமைகளைக் கொண்டிருக்கிறான்,” என்பார்.

  நான் கற்பனை செய்துகூடப் பார்த்திராத விஷயம், இந்த சமையல், ஆனால் இப்போது பார், கற்பனை செய்ததைவிட நன்றாகச் செய்கிறேன்.”

  ஆமாம், மிக நன்றாக இருக்கிறது,” என்பாள் மகள்.

  அதைப்போலவே,” - என்று மகளை ஒரு பார்வை பார்ப்பார் - “வாழ்க்கையும் நாம் அறிந்ததை விட அதிகச் சந்தோஷங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைப் பார்ப்பதற்காக நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.”

  மகளிடமிருந்து பதில் வராது. அவர் தன் சமையல் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், மகள் அதைப் பாராட்டினாலும், அவள் சாப்பிடும் அளவு மிகக்குறைவானது, கடமைக்காகத்தான் சாப்பிட்டாள். வாழ்க்கையை எவ்வளவு ஆர்வத்துடன் அணுகவேண்டுமோ அவ்வளவு ஆர்வம் அவளிடம் இல்லாதது அவருக்குக் கவலையாக இருந்தது. அவளுக்கு, அதற்கான காரணமும் இருந்தது, ஏழுவருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு சமீபமாக விவாகரத்தானவள். அவருடைய முன்னாள் மருமகன் விவாகரத்துக்குப்பின் நிரந்தரமாக பெய்ஜிங் சென்று விட்டான். அவர்களின் திருமணப் படகு எதனால், மறைந்திருந்த பாறையில் மோதியது என்று திரு.ஷி-க்குத் தெரியாது, ஆனால் எந்தக் காரணமாக இருந்தாலும் அவள் தவறாக மட்டும் இருக்கக்கூடாது. அவள் ஒரு நல்ல மனைவியாக உருவானவள், மெல்லிய குரலும் கருணை நிரம்பிய இதயமும் கொண்டவள், கடமையுணர்ச்சியும் அழகும் நிறைந்தவள், அவள் அம்மாவின் இளையவடிவம் அவள். அவர் மகள் அவருக்கு அழைத்து தன்னுடைய விவாகரத்து குறித்துத் தெரிவித்ததும், திரு.ஷி அவளுடைய தாங்கமுடியாத துயரத்தை உணர்ந்தார், தான் அமெரிக்காவுக்கு வந்து அவள் இயல்புநிலைக்குத் திரும்ப உதவுவதாகக் கூறினார். அவள் மறுத்துவிட்டாள், ஒருமாத ஓய்வூதியம் முழுவதையும் செலவழித்துத் தினமும் அவளுக்குத் தொலைபேசியில் அழைத்து மன்றாடினார். கடைசியில், தன்னுடைய எழுபத்து ஐந்தாவது பிறந்தநாளுக்கான விருப்பமாக அமெரிக்காவைப் பார்க்கவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டாள். அது பொய்தான், ஆனால் அது நல்லதொரு காரணமாக அமைந்தது. அமெரிக்காவும் பார்க்கவேண்டிய இடம்தான்; அதைவிடவும், ஒரு ராக்கெட் விஞ்ஞானி, நன்கு உரையாடக்கூடியவர், அன்பான அப்பா, மகிழ்ச்சியான மனிதன் என அமெரிக்கா அவரைப் புதியதொரு மனிதனாக்குகிறது.

  இரவுணவுக்குப்பின், திரு.ஷியின் மகள் படுக்கையறையில் படிக்கச்சென்றாள் அல்லது வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பினாள். திரு.ஷி அவளோடு வெளியில் செல்ல, அவள் தனியாகப் பார்க்கிறாள் என்று அவர் யூகித்த திரைப்படங்களுக்கு உடன்வரக் கேட்பார், ஆனால் அவள் பணிவாகவும் அதேசமயம் உறுதியோடும் அதை மறுத்துவிடுவாள். தனிமையில் நிறையநேரம் இருப்பது நல்லதல்ல, அதுவும் அவரது மகளைப்போல சிந்தனைவயத்தில் இருக்கிற பெண்களுக்கு நிச்சயம் நல்லதல்ல. அவளது தனிமையைச் சமாளிக்கும் விதமாக அவர் பேசத்துவங்குவார், அவர் கண்முன் நிகழாத அவளது வாழ்க்கையின் மற்றொரு பாகம் பற்றிக் கேள்விகள் எழுப்புவார். அன்றைக்கு வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். களைப்போடு, ‘நன்றாக இருந்தது’ என்பாள். ஆனாலும் இவர் அசராமல் அவளுடன் பணிசெய்பவர்கள் பற்றிக்கேட்பார், ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருக்கிறார்களா, அவர்களுக்கு என்ன வயதாகிறது, அவர்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதா, குழந்தைகள் உண்டா என்று விசாரிப்பார். மதிய உணவாக என்ன சாப்பிட்டாள், தனியாகச் சாப்பிட்டாளா, என்ன மாதிரியான கணினியை உபயோகிக்கிறாள், என்ன புத்தகம் படிக்கிறாள் என்று கேட்பார். இந்த விவாகரத்து விஷயத்தினால் வெட்கப்பட்டு தொடர்பற்றுப் போயிருப்பார்கள் என்று இவர் நினைக்கும் அவளது பள்ளிக்காலத்து நண்பர்கள் பற்றி விசாரிப்பார். அவள் இருக்கும் சூழ்நிலையை மாற்ற வேண்டியதன் அவசரம் குறித்து, அவளுக்குப் புரியும் என்ற நம்பிக்கையில் அவளுடைய எதிர்காலத்திற்கான திட்டம் பற்றி விசாரிப்பார். இருபதுகளில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் திருமணத்திற்குத் தகுதியான பெண்கள் அப்போதுதான் மரத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டலிச்சிபழங்களைப் போன்றவர்கள்; கடக்கும் ஒவ்வொருநாளும் அவர்களைப் பழையதாக்கி விருப்பக் குறைவானதாக மாற்றிவிடும், அவர்கள் தங்கள் மதிப்பை வெகுசீக்கிரமே இழந்து தள்ளுபடி விலைக்கு வந்து கைகழுவி விடப்படுவர்.

  தள்ளுபடி விலை என்பதை அவளிடம் குறிப்பிடக்கூடாது என்பது திரு.ஷி-க்கும் தெரியும். ஆனாலும் வாழ்க்கையின் பயன் குறித்து அறிவுரைக்காமல் இருக்க அவரால் முடியவில்லை. எவ்வளவு பேசுகிறாரோ அவ்வளவு பொறுமை இழந்துகொண்டே வந்தார். ஆனால் அவரது மகளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொருநாளும் சாப்பாடும் பேச்சும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியாக அவர், அவள் தனது வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமோ அப்படியில்லை என்று சுட்டிக்காட்டினால், “இந்த முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்? நான் என் வாழ்க்கையை நல்லவிதமாகத்தான் அனுபவிக்கிறேன்.” என்பாள்.

  ஆனால் அது பொய், ஒரு மகிழ்ச்சியான மனிதரிடம் இவ்வளவு அமைதி இருக்காது.”

  சோற்றுக்கிண்ணத்திலிருந்து பார்வையை உயர்த்தியபடி கேட்பாள். “அப்பா, நீங்களும் அமைதியானவராகத்தான் இருந்தீர்கள், ஞாபகமிருக்கிறதா? அப்போது நீங்கள் மகிழ்ச்சியற்றா இருந்தீர்கள்?”

  மகளிடமிருந்து இவ்வளவு நேரடித்தன்மைக்கு திரு.ஷி தயாராக இல்லாததால் அவரால் பதில் சொல்லமுடியவில்லை. அவள் மன்னிப்புக் கேட்கவும் பேசுகின்ற விஷயத்தை மாற்றுவதற்கும் காத்திருந்தார், இங்கிதமுள்ளவர்கள் தங்கள் கேள்வி அடுத்தவரைச் சங்கடப்படுத்தி விட்டது என்று தெரிந்ததும் அப்படித்தானே செய்வார்கள், ஆனால் இவள் அவரை விடமாட்டாள். மூக்குக்கண்ணாடிக்குப் பின்னாலிருக்கிற அவள் அனுதாபமற்ற கண்கள், அகலத்திறந்து அவருக்கு அவளுடைய குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தும். அவளுக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம், அவர் பின்னால் எங்கெல்லாம் வரமுடியுமோ அங்கெல்லாம் வந்து அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்படி கேட்பாள். அவளுடைய கண்கள் அவள் தாயையும் நினைவூட்டுகின்றன; திருமணம் ஆனபின் ஒருமுறை இதேபோல கேள்வியோடு அவரைப் பார்த்து பதிலுக்காகக் காத்திருந்தாள், ஆனால் அவளுக்கான பதில் அவரிடம் இல்லை.

  அவர் பெருமூச்சுடன், “நான் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறேன்,” என்பார்.

  அப்படிச் சொல்லுங்கள் அப்பா, ஆக நம்மால் அமைதியாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடியும், இல்லையா?”

  உன் மகிழ்ச்சியைப்பற்றி ஏன் என்னிடம் பேசக்கூடாது?” என்பார் திரு.ஷி. “உன் வேலையைப் பற்றிச் சொல்லேன்.”

  நீங்கள் உங்கள் வேலைபற்றி அதிகம் பேசியதில்லை, ஞாபகமிருக்கிறதா? நான் கேட்டாலும் கூட பேசமாட்டீர்கள்.”

  ஒரு ராக்கெட் விஞ்ஞானி என்றால் அப்படித்தான். என் வேலை ரகசியமானது.”

  நீங்கள் எதைப்பற்றியும் அவ்வளவாகப் பேசியதில்லை,” என்பாள்.

  திரு.ஷி வாயைத் திறப்பார் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. பல கணங்களுக்குப் பிறகு, “நான் இப்போது பேசுகிறேன். முன்னேறியிருக்கிறேன், இல்லையா?”
  நிச்சயமாக,” என்பாள்.

அதைத்தான் நீயும் செய்யவேண்டும். நிறையப் பேசு,” என்பார் திரு.ஷி. “இப்போதே ஆரம்பி.”

அவர் மகள் அதில் அதிக முனைப்புக் காட்டமாட்டாள். வழக்கமான அமைதியுடன் வேகமாகச் சாப்பிட்டு அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் வீட்டை விட்டுப் போயிருப்பாள்.

அடுத்தநாள் காலை, திரு.ஷி மேடத்திடம் முறையிட்டுக் கொண்டிருப்பார், “என் மகள், மகிழ்ச்சியாக இல்லை.”

  மகள் இருப்பது மகிழ்ச்சி,” என்பாள் மேடம்.

  அவள் விவாகரத்தானவள்.”

  மேடம் தலையசைத்துவிட்டு பெர்சிய மொழியில் பேச ஆரம்பிப்பாள். மேடத்திற்கு விவாகரத்து என்றால் என்னவென்று தெரியுமா என திரு.ஷிக்கு உறுதியாகத் தெரியாது. வாழ்க்கை மீது இவ்வளவு காதலாக இருக்கிற ஒரு பெண் நிச்சயம் அவள் கணவனாலோ அல்லது அவளது மகன்களாலோ வாழ்வின் மகிழ்ச்சியற்ற தருணங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பாள். திரு.ஷி மேடத்தின் முகத்தைப் பார்த்தார், அவளது பேச்சாலும் சிரிப்பாலும் முகம் ஒளியடைந்திருந்தது, அவளைவிட நாற்பது வருடம் இளமையான தனது மகளிடம் இது இல்லையே என சற்றே பொறாமைப்பட்டார். மேடம் அன்று, பளிச்சிடும் இளஞ்சிவப்புநிறத் துணியில் ஊதாநிறக் குரங்குகள் வரையப்பட்ட சட்டையை அணிந்திருந்தாள், குரங்குகள் குதித்துக்கொண்டும் இளித்துக்கொண்டும் இருந்தன; தலையில் அதே வேலைப்பாட்டில் ஒரு ஸ்கார்ஃப் அணிந்திருந்தாள். அவள் புலம்பெயர்ந்தவள்தான், ஆனால் மகிழ்ச்சியோடு புலம் பெயர்ந்திருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. திரு.ஷி, ஈரான் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றையும் அதன் தற்போதைய வரலாற்றையும் நினைவுகூர முயற்சித்தார்; அவருக்கிருக்கும் குறைந்தபட்ச அறிவைக்கொண்டு, மேடம் ஒரு அதிர்ஷடக்காரப் பெண்மணி என்ற முடிவுக்குத்தான் வரமுடிந்தது. அவரும் அதிர்ஷடம் உள்ளவர்தான், பெரிதும் சிறிதுமான குறைகளோடு.

  வெவ்வேறு உலகிலிருந்து வந்து வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தும் இந்த இலையுதிர்காலத்தின் இளவெயிலில் தானும் மேடமும் சந்தித்துக்கொண்டிருப்பது எவ்வளவு அற்புதமானது என்று யோசிப்பார்.

  சீனாவில் நாங்கள் இப்படிச் சொல்வதுண்டு -  Xiu bai shi ke tong zhou,” மேடம் நிறுத்தியதும் திரு.ஷி சொல்வார். உங்கள் படகில் இன்னொருவருடன் ஆற்றைக் கடக்க முன்னூறு வருடப் பிரார்த்தனை தேவை, இதை மேடத்திடம் ஆங்கிலத்தில் சொல்ல நினைப்பார், ஆனால் பிறகு, மொழிகளுக்குள் என்ன இருக்கிறது? மொழிபெயர்த்துச் சொன்னாலும் இல்லாவிட்டாலும் மேடம் அவரைப் புரிந்துகொள்வாள். “நாம் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச - நம்மை இங்கே வந்துசேர்க்க மிக நீண்டகால நற்பிரார்த்தனை தேவை.” என்று அவளிடம் சீனத்தில் சொல்லி முடிப்பார்.

  மேடம் ஆமோதிப்பாய் புன்னகைப்பாள்.

  ஒவ்வொரு உறவிற்கும் காரணமிருக்கிறது, அதுதான் அப்பழமொழியின் அர்த்தம். கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தைகள், நண்பர்கள் மற்றும் எதிரிகள், நீங்கள் தெருவில் சந்திக்கும் அறிமுகமில்லாதவர் என. நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவரோடு தலையணையில் அடுத்தடுத்துத் தலைவைத்துப் படுக்க மூவாயிரம் வருட நற்பிரார்த்தனை தேவை. அப்படியென்றால் அப்பாவுக்கும் மகளுக்கும்? ஆயிரம் வருடங்களாக இருக்கலாம். மனிதர்கள் ஒன்றும்  தொடர்பின்றி அப்பா-மகள் என்று வந்து முடிவதில்லை, அதுமட்டும் நிச்சயம். ஆனால் என் மகளுக்கு, இது புரிவதில்லை. அவள் அநேகமாக என்னைத் தொல்லையாக நினைக்கக்கூடும். நான் வாயைமூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிறாள், ஏனென்றால் அவள் அப்படித்தான் என்னைப் பார்த்திருக்கிறாள். நான் ராக்கெட் விஞ்ஞானி என்பதால்தான் அவளுடனும் அவள் அம்மாவுடனும் அப்போது அதிகம் பேசவில்லை என்று அவளுக்குப் புரிவதில்லை. எல்லாமே ரகசியம்தான். நாள் முழுதும் வேலை செய்வோம், மாலையானதும் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து நாங்கள் எழுதிய தாள்கள் நோட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஆவணக்காப்பகக் கோப்புகளில் கையெழுத்திடுவோம், அது எங்கள் ஒருநாள் வேலை. என்ன வேலை செய்கிறோம் என்று குடும்பத்திற்குக் கூடச் சொல்லக்கூடாது. பேசக்கூடாதென எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.”

  மேடம், இரண்டு கைகளையும் இதயத்திற்கு மேலாக குவித்துக் கேட்டுக்கொண்டிருப்பாள். திரு.ஷி தன் மனைவி இறந்தபிறகு தன் வயதொத்த பெண்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவதில்லை; அவள் உயிரோடு இருக்கும்போதும் அப்படித்தான், அவளிடம் கூட இவ்வளவு பேசியதில்லை. அவர் கண்கள் பாரமாகின. பூமியின் பாதித்தொலைவைக் கடந்து மகளிடம் வந்து, அவள் இளமையில் பேசவிரும்பி இவர் மறுத்துவிட்ட எல்லா பேச்சுகளையும் இப்போது சரிசெய்ய முயன்றார், ஆனால் அவர் கண்டதோ, அவருடைய வார்த்தைகளில் அக்கறை இல்லாத மகள்.

  அதேசமயம் மேடம், அவருடைய மொழிகூடத் தெரியாத அந்நியள், அவ்வளவு புரிதலோடு இவர் சொல்வதைக் கேட்கிறாள். திரு.ஷி தன் கண்களை இரண்டு கட்டைவிரலாலும் அழுத்தித் தேய்த்துக்கொண்டார். அவர் வயதிலிருக்கும் ஒரு மனிதர் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளுக்கு இடந்தரக் கூடாது; நீண்ட மூச்சுகளை உள்ளிழுத்துவிட்டு, மெலிதாகச் சிரித்தார். “சந்தேகமின்றி மோசமான உறவுநிலைக்கும் காரணங்கள் உண்டுதானே - நான் ஒரு மகளுக்காக ஆயிரம் ஆண்டுகள் அரைமனதோடு பிரார்த்தனை செய்திருக்க வேண்டும்.”

  மேடம் அங்கீகரிப்பாகத் தலையசைத்தாள். அவள் அவரைப் புரிந்துகொள்கிறாள், அவருக்குத் தெரியும், ஆனால் அவர் தன்னுடைய சிறுசிறு துயரங்களால் அவளைச் சுமையாக்க விரும்புவதில்லை.

  நினைவுத்தூசுகளை உதற விரும்புவதுபோல் கைகளைத் தேய்த்துக்கொண்டார். “பழங்கதைகள்,” என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னார். “பழங்கதைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை,” என்றார்.

  மேடம், “எனக்குக் கதைகள் பிடிக்கும்,” என்று சொல்லிவிட்டுப் பேசத் துவங்கினாள். திரு.ஷி கேட்டுக் கொண்டிருந்தார், அவள் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறாள். அவள் தலையில் உள்ள இளித்துக்கொண்டிருக்கும் குரங்கைக் கவனித்தார், அது அவள் சிரிக்கும்போது முன்னும் பின்னுமாக ஆடியது.

  நாம் அதிர்ஷ்டம் செய்வதவர்கள்தான்,” என்றார் அவள் பேசி முடித்ததும். “அமெரிக்காவில் நம்மால் எதுவேண்டுமானாலும் பேச முடிகிறது.”

  அமெரிக்கா சுதந்திரமான நாடு.” மேடம் ஆமோதித்தாள். “எனக்கு அமெரிக்காவைப் பிடித்திருக்கிறது.”

அன்று மாலை, திரு.ஷி தன் மகளிடம், “அந்த இரானியப் பெண்ணை இன்று பூங்காவில் சந்தித்தேன். நீ சந்தித்திருக்கிறாயா?” என்றார்

  இல்லை.”

  நீ கண்டிப்பாக ஒருமுறை அவளைச் சந்திக்கவேண்டும். அவ்வளவு நேர்மறையான சிந்தனை உடையவள். ஒருவேளை அவள் உன் நிலைமைக்கு ஒளியூட்டுபவளாக உனக்குத் தோன்றலாம்.”

  என்ன என் நிலைமை?” சாப்பாட்டிலிருந்து தலையை உயர்த்தாமலேயே கேட்டாள்.
  நீதான் சொல்லேன்,” என்றார் திரு.ஷி. உரையாடலை மேற்கொண்டு நகர்த்துவதற்கு மகள் உதவி செய்யவில்லை என்றதும் அவர் சொன்னார், “நீ இருண்ட காலத்தில் இருக்கிறாய்.”

  அவள் என் வாழ்வில் ஒளியூட்டுவாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

  திரு.ஷி வாயைத் திறந்தார், ஆனால் பதில் தெரியவில்லை. அவரும் மேடமும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதைச் சொன்னால், மகள் அவரை வயதான பைத்தியக்காரன் என்று முடிவுகட்டி விடுவாள் என்று பயந்தார். ஒருகணத்தில் இயல்பாகத் தெரியும் ஒரு விஷயம் வேறொரு வெளிச்சத்தில் அபத்தமாகத் தெரிகிறது. அவர் தன்மகள் விஷயத்தில் நம்பிக்கை இழந்ததுபோல் உணர்ந்தார், தன்னுடைய மொழிபேசக்கூடிய ஒரே ஆள் ஆனால் அவளும் அன்பான தருணங்களைப் பரிமாறிக்கொள்ளத் தயாரில்லை. வெகுநேர மௌனத்திற்குப் பிறகு, அவர் பேசினார், “ஒரு பெண்ணானவள் இப்படி நேரடியான கேள்விகளைக் கேட்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொள். நல்லபெண் என்பவள் பணிவிணக்கத்தோடு இருப்பவள் மற்றும் மற்றவர்களைப் பேசவைக்கத் தெரிந்தவள்.”

  நான் விவாகரத்தானவள், எனவே உங்கள் கணக்கின்படி நிச்சயமாக நான் நல்லபெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.”

  அவள் தேவையில்லாமல் கிண்டலாகப் பேசுவதாக நினைத்து, திரு.ஷி அவள் சொல்வதைப் புறக்கணித்தார், “உன் அம்மா நல்ல பெண்மணிக்கு ஒரு உதாரணம்.”

  அம்மா உங்களைப் பேசவைப்பதில் வெற்றி கண்டாரா?” இதற்கு முன் பார்த்திராத சீற்றத்தோடு இவர் கண்களைப் பார்த்தபடி மகள் கேள்வியெழுப்பினாள்.

  உன் அம்மா இப்படி எதிர்த்துப் பேசமாட்டாள்.”

  அப்பா, முதலில் பேசவில்லை என்றீர்கள். நான் பேச ஆரம்பித்தால், இப்போது தவறாகப் பேசுகிறேன் என்கிறீர்கள்.”

(மீண்டும்)

No comments:

Post a Comment