Wednesday 13 March 2019

மொழிபெயர்ப்பு பகுதி 2ஆயிரம் வருடங்கள் நற்பிரார்த்தனை - பகுதி 2


பேசுவது என்றால் கேள்வி கேட்பது மட்டுமல்ல. பேசுவது என்றால், மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்வது, உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்வதை வரவேற்பது.”

  அப்பா, நீங்கள் எப்போதிருந்து இதில் நிபுணர் ஆனீர்கள்?”

  நான் இங்கிருப்பது உனக்கு உதவத்தான், நான் அந்த விஷயத்தில் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.” என்றார் திரு.ஷி. “உன் வாழ்க்கை விவாகரத்தில் ஏன் முடிந்தது என்று எனக்குத் தெரியவேண்டும். என்ன தவறு என்று தெரிந்துகொண்டு அடுத்தமுறை சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவவேண்டும். நீ என் மகள், நீ சந்தோஷமாக இருப்பதுதான் என் தேவை. நீ இரண்டுமுறை விழுவதை நான் விரும்பவில்லை.”

   அப்பா, இதற்குமுன் நான் உங்களிடம் கேட்கவில்லை, இன்னும் எவ்வளவு நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?”

  நீ சரியாகும் வரை.”

  மகள் எழுந்தாள், நாற்காலியின் கால்கள் தரையில் உராய்ந்து கிறீச்சிட்டன.

  நாம் ஒருவருக்கொருவர்தான் குடும்பம் என்று எஞ்சியிருக்கிறோம்,” என்றார் திரு.ஷி, கெஞ்சும் குரலில், ஆனால் அவர் மேற்கொண்டு பேசுவதற்குள் மகள் தன் அறைக்கதவை மூடிக்கொண்டாள். அவள் மிகக்குறைவாக உண்ட உணவுகளின் மிச்சத்தைப் பார்த்தார். சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட காளான், இறால் மற்றும் இஞ்சியிட்ட தோஃபு, பலவித மூங்கில் குருத்துகள், சிவப்பு மிளகு, மொச்சை சேர்த்தது. ஒவ்வொருநாள் மாலையும் மகள் அவருடைய சமையலைப் பாராட்டினாலும் அது அரைமனதாக உள்ளதை அவர் உணர்ந்தார்; சமையல் அவரது பிரார்த்தனையாக மாறிவிட்டதை அவள் அறியவில்லை, எனவேதான் அவள் அதற்குப் பதிலளிக்காமல் போகிறாள்.

            மறுநாள் காலை மேடத்திடம் திரு.ஷிமனைவி இருந்திருந்தால் இவளை நன்றாகத் தேற்றியிருப்பாள்.” என்றார். இப்போதெல்லாம் அவளிடம் சீனமொழியில் பேசுவதையே இயல்பாக உணர்கிறார். “அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். நான் அப்படியில்லை என்று சொல்லமுடியாது. நான் அவர்களை மிகவும் நேசித்தேன். நீங்கள் ராக்கெட் விஞ்ஞானியாக இருந்தால் அப்படித்தான். நாள் முழுதும் கடுமையாக உழைப்பேன், இரவிலும் வேலை குறித்து யோசிக்காமல் இருக்க முடியாது. எல்லாமும் ரகசியமானது என்பதால் நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் குடும்பத்திடம் சொல்லக்கூட முடியாது. ஆனால் என் மனைவி, உலகத்திலேயே அவள்தான் அதிகமான புரிந்துணர்வுள்ள பெண். நான் வேலையிலேயே மூழ்கிக்கிடப்பேன் என்று அவளுக்குத் தெரியும், எனவே அவள் என் சிந்தனையைக் கலைக்கமாட்டாள், மகளையும் அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டாள். ஆனால் அது என் மகளுக்கு நல்லதல்ல என்று இப்போது உணர்கிறேன். வேலையில் மூழ்கிக்கிடப்பதை நான் அலுவலகத்தோடு வைத்திருக்கவேண்டும். இளமையில் அது புரியவில்லை. இப்போது என் மகளுக்கு என்னிடம் பேச ஏதுமில்லை.”

  உண்மையில் அது அவருடைய தவறுதான், அவர் எப்போதும் மகளிடம் அளவளாவும் வழக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை. பிறகு, அவர் தனக்குள்ளேயே விவாதிப்பார் -  அவர் காலத்தில், அவரைப்போன்ற ஒரு மனிதர், மிகப்பெரிய ஒரு காரியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலரில் ஒருவர், தன் குடும்பத்தைவிட வேலையில்தான் அதிகமான கடமைகள் அவருக்கு இருக்கும். அவர், மரியாதைக்குரியவர் மற்றும் கவலையுடையவர், ஆனால் கவலையுடையவர் என்பதைவிட அதிகமாக மரியாதைக்குரியவர்.

  மாலை, உணவுமேசையில் திரு.ஷியின் மகள் அவருக்காக, கிழக்குக் கடற்கரைப்பகுதி மற்றும் மேற்கில் சுற்றுலாக்கள் நடத்தித்தரும் சீனமொழி பேசக்கூடிய ஒரு நிறுவனத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினாள். “நீங்கள் இங்கே அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க வந்தீர்கள். குளிர்காலத்துக்கு முன் நீங்கள் ஒன்றிரண்டு சுற்றுலாவுக்குச் செல்வது நல்லதென்று நினைக்கிறேன்.” என்றாள்.

  அது விலை அதிகமானதா.”

  நான் கொடுப்பேன் அப்பா. உங்கள் பிறந்தநாளுக்கு நீங்கள் விரும்பியது அதைத்தானே?”

  என்ன இருந்தாலும் அவள் அவருடைய மகளாயிற்றே; அவருடைய விருப்பத்தை ஞாபகம் வைத்திருக்கிறாள், அதை மதிக்கிறாள். ஆனால் அவள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் அமெரிக்காவைத்தான் அவர் பார்க்க விரும்புகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அவளுடைய கிண்ணத்தில் காய்கறிகளையும் மீனையும் இட்டார். தணிவான குரலில், “நீ நன்றாகச் சாப்பிடவேண்டும்.” என்றார்.

  நாளைக்கு அவர்களுக்குப் பேசி சுற்றுலாவுக்குப் பதிவு செய்துவிடுகிறேன்.” என்றாள்.

  இங்கே தங்கியிருப்பதே போதுமானதென்று நினைக்கிறேன். நான் இப்போது வயதானவன், பயணமெல்லாம் எனக்கு ஒத்துவராது.”

  ஆனால் இங்கே பார்ப்பதற்கு அதிகமில்லை.”

  ஏன் இல்லை? நான் பார்க்க விரும்பிய அமெரிக்கா இதுதான். இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான் உனக்கு அதிகம் தொந்திரவாக இருக்கமாட்டேன்.”

அவள் பதில் சொல்வதற்குள் தொலைபேசி அழைத்தது. அதை எடுத்துக்கொண்டு வழக்கம்போல படுக்கையறைக்குள் நுழைந்தாள். கதவு அறையப்படும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவருக்கு முன்னால் தொலைபேசியில் பேசமாட்டாள், அது யாரென்று தெரியாத அழைப்பு அல்லது தொலைபேசியில் எதையாவது விற்பனை செய்ய முயற்சிக்கும் அழைப்பாக இருந்தால் கூட. சில மாலைகளில் தணிவான குரலில் நெடுநேரம் பேசுவாள், கதவில் காதைவைத்துக் கேட்காமல் இருக்க இவர் மிகவும் முயற்சி எடுக்க வேண்டியதாகும்.

  ஆனால் இம்மாலைவேளையில், வேறு முடிவெடுத்தவள் போல, படுக்கையறையின் கதவைத் திறந்தே வைத்தாள். அவள் தொலைபேசியில் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார், இன்று அவளுடைய குரல் அவர் எப்போதும் அறிந்ததைவிடக் கீச்சுக்குரலாக இருந்தது. வேகமாகப்பேசி அடிக்கடி சிரித்தாள். அவள் என்ன பேசுகிறாள் என்று அவருக்குப் புரியவில்லை, அதைவிடவும் அவளது தற்போதைய நடத்தை புரியவில்லை. அவளது குரல், மிகத் தெளிவாக, மிக சத்தமாக, மிகவும் அடக்கமில்லாமல், அவரது காதுக்கு இனிமையற்றதாக இருந்தது, ஒருகணத்துக்கு அவள் நிர்வாண உடலைப் பார்த்துவிட்டது போன்ற உணர்ச்சி, முற்றிலும் அந்நியளாக, அவருக்குத் தெரிந்த மகளல்ல அவள்.

  அவள் அறையைவிட்டு வெளியே வந்ததும் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தொலைபேசியின் பெறுவியை அதனிடத்தில் வைத்துவிட்டு, ஏதும் பேசாமல் மீண்டும் உணவுமேசையில் அமர்ந்தாள். அவர் அவளது முகத்தை ஒருகணம் கவனித்துப் பின் கேட்டார், “தொலைபேசியில் யார்?”

  ஒரு நண்பர்.”

  ஆண் நண்பரா அல்லது பெண்ணா?”

  ஆண்.”

  மேற்கொண்டு அவள் விளக்குவதற்காகக் காத்திருந்தார், ஆனால் அதற்கான முனைப்பு அவளிடம் இல்லை. சிறிதுநேரம் கழித்து இவரே கேட்டார், “இந்த ஆண் - முக்கியமான நண்பரா?”

  முக்கியம்? ஆமாம்.”

  எவ்வளவு முக்கியம்?”

  அப்பா, அநேகமாக இது என்னைப்பற்றிய கவலையைச் சற்று குறைக்கலாம் - ஆமாம், அவர் மிகவும் முக்கியமானவர்,” என்றாள். “என் காதலர். நீங்கள் நினைத்த அளவுக்கு என் வாழ்க்கை ஒன்றும் மோசமாக இல்லை என்று தெரிந்ததும் உங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறதா?”

  அவன் அமெரிக்கனா?”

  ஆமாம், இப்போது அமெரிக்கர், ஆனால் ருமேனியாவிலிருந்து வந்தவர்.” குறைந்தபட்சம் அவன் ஒரு கம்யூனிச நாட்டில் வளர்ந்திருக்கிறான் என்று திரு.ஷி நேர்மறையாக நினைக்க முயற்சித்தார். “உனக்கு அவனை நன்றாகத் தெரியுமா? அவன் உன்னைப் புரிந்துகொள்கிறானா - நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், உன் கலாச்சாரம் - இவைபற்றி? ஞாபகம் வைத்துக்கொள், ஒரே தவறை நீ இருமுறை செய்யக்கூடாது. நீ மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.”

  நாங்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிவோம்.”

  நீண்ட காலமா? ஒரு மாதம் என்பது நீண்ட காலமல்ல.”

  அதைவிட அதிகமாக அப்பா.”

  அதிகபட்சமாக ஒன்றரை மாதம்,  சரியா? கவனி, நீ வேதனையில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு பெண் அவசரப்படக்கூடாது, அதுவும் குறிப்பாக உன் சூழ்நிலையில். கைவிடப்பட்ட பெண்கள் - அவர்கள் தனிமையின் காரணமாக நிறைய தவறுகளைச் செய்வார்கள்.”

  மகள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். “அப்பா, என் திருமண வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல இல்லை. நான் கைவிடப்படவில்லை.”

  திரு.ஷி தன் மகளைப் பார்த்தார், அவள் கண்களில் தீர்மானமும் சுமைத்தணிவும் தெளிவாகத் தெரிந்தன. ஒரு கணத்திற்கு அவள் அவரிடம் வேறெதுவும் சொல்லவேண்டாம் என்றே நினைத்தார், ஆனால் எல்லோரையும் போலவே, அவள் பேச ஆரம்பித்து விட்டால் இவரால் அவளைத் தடுக்க முடியாது. “அப்பா நாங்கள் விவாகரத்து செய்துகொண்டதே இவரால்தான். நீங்கள் அந்தச்சொல்லால் இதைக் குறிக்க விரும்புகிறீர்கள் என்றால், நான்தான் அவரைக் கைவிட்டவள் என்பேன்.”

  ஆனால் ஏன்?”

  திருமண வாழ்வில் தவறுகள் நடக்கும் அப்பா.”

  ஓர் இரவு கணவன் மனைவியாகப் படுக்கையில் இருப்பது நூறு நாட்கள் அவர்களைக் காதலில் வைக்கும். நீ ஏழு வருடங்களாகத் திருமணம் ஆனவள்! நீ எப்படி உன் கணவனுக்கு இதைச் செய்யலாம்? உன் திருமணத்துக்கு வெளியேயான உறவைத் தவிர வேறு என்ன பிரச்சினை?” என்றார் திரு.ஷி. கடைசியில் அவர், தன் மகளை ஒரு விசுவாசமற்றவளாகத்தான் வளர்த்திருக்கிறார்.

  இப்போது அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை.”

  நான் உன் அப்பா. அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை எனக்கு உண்டு.” மேசையில் கையைப் பலமாகத் தட்டியபடி சொன்னார்.

  எங்கள் பிரச்சினை என்னவென்றால், நான் எப்போதும் போதுமான அளவு என் கணவரிடம் பேசியதில்லை. நான் அமைதியாக இருப்பதால், நான் எதையோ அவரிடமிருந்து மறைக்கிறேன் என்று அவருக்குச் சந்தேகம் .”

  நீ அவனிடமிருந்து ஒரு காதலனையே மறைத்திருக்கிறாயே?”

  அவர் மகள் அவரது வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் பேசினாள். “அவர் மீண்டும் மீண்டும் என்னைப் பேசச் சொல்லும்போதெல்லாம் நான் மேலும் மேலும் அமைதியாகவும் தனிமையாகவும் ஆனேன். நீங்கள் சொன்னது போல நான் பேசுவதில் தேர்ந்தவளல்ல.”

  ஆனால் அது பொய். இப்போது தொலைபேசியில் வெட்கமில்லாமல் பேசினாயே! பேசினாய், சிரித்தாய், ஒரு விலைமாதைப்போல!”

திரு.ஷியின் மகள், அவர் வார்த்தைகளின் தீவிரத்தால் நிலைகுலைந்து போனாள், வெகுநேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மெல்லிய குரலில் பேசினாள். “அது அப்படியில்லை அப்பா. நாங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறோம், எனவே அது சுலபமானது. என்னால் சீனமொழியில் அவ்வளவு நன்றாகப் பேசமுடியாது.”

  இதுவொரு அபத்தமான காரணம்!”

  அப்பா, நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைச் சொல்ல உபயோகிக்காத ஒருமொழிக்கு இடையில் வளர்ந்தால், இன்னொரு மொழியைத் தேர்ந்தெடுத்து அம்மொழியில் அதிகம் பேசுவது சுலபம். அது உங்களைப் புதுமனிதராக்கும்.”

  நீ செய்த தவறுக்கு என்னையும் உன் அம்மாவையும் காரணமாகச் சொல்கிறாயா?”

  நான் அப்படிச் சொல்லவில்லை அப்பா!”

  ஆனால் நீ சொல்வதற்கு அர்த்தம் அதுதானே? நாங்கள் உனக்குச் சீனமொழி நன்றாக வருவதற்குச் செய்யவேண்டியவற்றைச் செய்யவில்லை என்பதால் உன் கணவனிடம் நேர்மையாக உன் திருமணவாழ்க்கை குறித்துப்பேசாமல் நீயாகவே உனக்கு ஒரு புதிய  மொழியையும் புதிய காதலனையும் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.”

  உங்கள் இருவருக்குமே உங்களுடைய மணவாழ்க்கையில் பிரச்சினை இருப்பது தெரிந்தும் நீங்கள் பேசிக்கொண்டதே கிடையாது, அம்மாவும் பேசியதில்லை. நானும் பேசாமலிருக்கக் கற்றுக்கொண்டேன்.”

  உன் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்சினை வந்ததே இல்லை. நாங்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.”

  ஆனால் அது பொய்!”

  இல்லை, அது பொய்யில்லை. நான் என் வேலையில் அளவுக்கதிகமாக மூழ்கியிருக்கும் தவறைச்செய்தவன் என்று எனக்குத்தெரியும், ஆனால் என் வேலையின் தன்மை காரணமாகத்தான் நான் அமைதியாக இருந்தேன் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும்.”

  அப்பா,” திரு.ஷியின் மகள் கண்களில் பரிதாபம் வெளிப்படப் பேசினாள். “இது பொய் என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் எப்போதும் ராக்கெட் விஞ்ஞானியாக இருந்ததில்லை. அம்மாவுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும்.”

  திரு.ஷி தன் மகளை வெகுநேரம் வெறித்துப்பார்த்தார். “நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை.”

  உங்களுக்குத் தெரியும் அப்பா. நீங்கள் என்ன வேலையில் இருந்தீர்கள் என்று நீங்கள் பேசியதில்லை, உண்மைதான், ஆனால் மற்றவர்கள் - மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வார்களே.”

  திரு.ஷி தன்னைத் தற்காத்துக்கொள்ள வார்த்தைகளைத் தேடினார், ஆனால் உதடுகள் சத்தமில்லாமல் நடுங்கின.

  என்னை மன்னியுங்கள் அப்பா, உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை.”

  திரு.ஷி ஆழ்ந்து பெருமூச்சு விட்டு, தன் மதிப்பைத் தக்கவைக்க முயற்சித்தார். அது ஒன்றும் கடினமல்ல, அவர் தன் வாழ்க்கை முழுக்க தனக்கு நிகழ்ந்த பேரழிவுகள் குறித்துப் பேசியதே இல்லை. “நீ என்னைக் காயப்படுத்தவில்லை. நீ சொன்னதுபோல உண்மையைத்தான் பேசினாய்,” என்று சொல்லி எழுந்து நின்றார். விருந்தாளிகள் தங்கும் அறைக்கு அவர் திரும்பும் முன் அவர் பின்னே மகள் அமைதியாகச் சொன்னது கேட்டது, “அப்பா, நாளை உங்கள் சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்துவிடுகிறேன்.”


            திரு.ஷி பூங்காவில் அமர்ந்தபடி மேடத்திடம் விடைபெறக் காத்திருந்தார். மகளிடம், அமெரிக்கச் சுற்றுலாக்கள் முடிந்ததும் சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து கிளம்புவதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறியிருந்தார். கிளம்புவதற்கு இன்னமும் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தாலும், மேடத்தைக் கடைசியாக ஒரேயொருமுறை சந்திக்கும் தைரியம் மட்டுமே அவரிடம் இருந்தது, அப்போது தன்னைப்பற்றிச் சொன்ன பொய்களைச் சரிசெய்துவிட வேண்டும். அவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானியல்ல. அவர் அதற்கான பயிற்சி எடுத்தார், நிறுவனத்தில் வேலைசெய்த முப்பத்தெட்டு வருடங்களில் மூன்று வருடங்கள் மட்டுமே அப்பணியில் இருந்தார். இளம்வயதில் தன் வேலைபற்றிப் பேசாமல் அமைதியாக இருப்பது கடினம், திரு.ஷி மனதுக்குள் மறுபடி மறுபடி கூறிக்கொள்வார். ஒரு இளம் ராக்கெட் விஞ்ஞானி, எவ்வளவு பெருமையும் புகழும் உள்ளது அது. நீங்கள் அந்த உற்சாகத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.

  நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு, திரு.ஷி விஷயத்தில் அந்த யாரோ என்பது, இருபத்தைந்து வயதான, நேரக்காப்பாளராக இருந்த ஒரு பெண்ணாக அமைந்தது. அப்போது அவர்கள் நேரப்பதிவர் என்றழைக்கப்பட்டனர், வெகுகாலம் முன்பே அவ்வேலை கணினிகளால் நிரப்பப்பட்டுவிட்டது, ஆனால் வாழ்விலிருந்து மறைந்துவிட்ட எவ்வளவோ விஷயங்களில் அவர் இல்லாக்குறையாக உணர்ந்தது இந்த நேரப்பதிவர்களைத்தான். அவருடைய நேரப்பதிவர். “அவள் பெயர் யிலன்,” திரு.ஷி காற்றுக்கு அப்பெயரை உரத்துச் சொன்னார், யாரோ அந்தப்பெயருக்கு முகமன் கூறிச் சென்றார்கள். மேடம் அவரை நோக்கி இலையுதிர்கால இலைகள் நிரம்பிய கூடையுடன் வந்தாள். அதிலிருந்து ஒன்றையெடுத்துஅழகானதுஎன்று சொன்னபடி திரு.ஷியிடம் அளித்தாள்.

  திரு.ஷி இலையை ஆராய்ந்தார், மெல்லிய கிளைவிட்ட அதன் நரம்புகள், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பின் வெவ்வேறு சாயைகள். உலகத்தை இவ்வளவு உன்னிப்பான விவரங்களோடு இதுவரை அவர் கவனித்ததில்லை. தனக்கு மிகவும் பழக்கமான, மிருதுவாக்கப்பட்ட முனைகளை, மங்கலான நிறங்களை நினைத்துக்கொள்ள முயற்சி செய்தார், ஆனால் கண்புரை நீக்கப்பட்ட நோயாளிபோல எல்லாமும் துல்லியமாகவும் வெளிச்சமாகவும், திகைக்கும்படி இருந்தாலும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. “நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்,” என்றார் திரு.ஷி, மேடம் ஆர்வமான புன்னகையொன்றை வீசினாள். திரு.ஷி இடம்மாறி அமர்ந்துகொண்டார், பின் ஆங்கிலத்தில், “நான் ராக்கெட் விஞ்ஞானியில்லை,” என்றார்.

  மேடம் வேகமாகத் தலையசைத்தாள். திரு.ஷி அவளைப் பார்த்துவிட்டு, வேறுபக்கம் பார்வையைத் திருப்பினார். “நான் ராக்கெட் விஞ்ஞானியாக இல்லாமல் போனதற்கு ஒரு பெண்தான் காரணம். நாங்கள் செய்த ஒரே விஷயம் பேசிக்கொண்டதுதான். பேசுவதில் என்ன தவறு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இல்லை, ஒரு திருமணமான ஆண் மற்றும் திருமணமாகாத பெண்ணிற்கிடையே பேச்சு அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் காலம் அவ்வளவு சோகமான காலமாக இருந்தது.” ஆமாம், சோகம் என்பதுதான் சரியான வார்த்தை, இப்போதைய இளைஞர்கள் அக்காலத்தைக் குறிப்பிடுவதுபோல அது முட்டாள்தனமான காலமல்ல. “பேசுவது எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, ஒருவன் எப்போதும் பேசவிரும்புவான்தானே.” மேலும் பேசுவதென்பது எவ்வளவு சாதாரணமான விஷயம், ஆனால் மனிதர்கள் எப்படியெல்லாம் அதற்கு அடிமையாகிறார்கள்! அவர்களது பேச்சு அலுவலகத்தில் தரப்படும் ஐந்து நிமிட இடைவேளையில் தொடங்கியது, பிறகு அவர்கள் உணவு இடைவேளை முழுவதும் காஃபி பருகும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். தாங்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வான, கம்யூனிசத் தாய்க்கு முதல் ராக்கெட்டைத் தயாரித்துக் கொடுக்கும் அச்செயலின் நம்பிக்கை  மற்றும் அதீத மகிழ்ச்சி குறித்துப் பகிர்ந்து கொண்டார்கள்.

  ஒருமுறை நீங்கள் பேச ஆரம்பித்தால், மேலும் பேசுவீர்கள், மேலும் மேலும். அது வீட்டிற்குச் சென்று உங்கள் மனைவியிடம் பேசுவதிலிருந்து வேறுபட்டது, ஏனென்றால் இங்கே நீங்கள் எதையும் மறைக்க வேண்டியதில்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினோம். உண்மையில் நாங்கள் எங்கள் சொந்த வாழ்வைப்பற்றித்தான் பேசினோம். பேசுவதென்பது கடிவாளமற்ற குதிரையில் பயணிப்பது போல, நீங்கள் எங்கே செல்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது, அதைப்பற்றி நீங்கள் நினைக்க வேண்டியதும் இல்லை. எங்கள் பேச்சும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அவர்கள் சொன்னதுபோல் எங்களுக்குள் உறவெல்லாம் இல்லை. எங்களுக்குள் காதல் எப்போதுமே இருந்ததில்லை,” என்றார் திரு.ஷி, ஆனால் சில கணங்களுக்குத் தன் வார்த்தைகளை நினைத்துக் குழம்பினார். என்ன மாதிரியான காதலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்? நிச்சயமாக அவர்கள் காதலில்தான் இருந்தனர், அவர்கள் சந்தேகப்பட்டது மாதிரியான காதலல்ல அது - எப்போதுமே மரியாதையான ஒரு தூரத்தைக் கடைபிடித்தார், அவர்களின் கைகள் தொட்டுக் கொண்டதேயில்லை. ஆனால் சுதந்திரமாகப் பேசிக்கொண்ட ஓர் அன்பு, மனங்கள் தொட்டுக்கொண்ட அந்த அன்பு - அது காதலில்லையா? அவர் மகளும் அப்படித்தானே தன் திருமணத்தை முடித்துக் கொண்டிருக்கிறாள், இன்னொரு மனிதனுடனான தொடர் பேச்சினால்தானே? திரு.ஷி மாறி அமர்ந்து கொண்டார், அக்டோபர் மாத குளிர்காற்றையும் மீறி அவருக்கு வியர்த்தது. அவர்கள் குற்றம் சாட்டப்பட்டபோது, தாங்கள் நிரபராதிகள் என்று அழுத்தமாகச் சொன்னார்; அவள் மாகாணத்தின் வேறு நகரத்துக்கு மாற்றப்பட்டபோது அவளுக்காக முறையீடு செய்தார். அவள் ஒரு நல்ல நேரப்பதிவாளர், ஆனால் நேரப்பதிவாளர்களே எப்போதும் பயிற்சியளிக்கச் சுலபமானவர்கள். ஆனால், அவர் பொதுவில் தனக்கு உறவிருந்ததை ஒப்புக்கொண்டு தன் தவறை உணர்ந்தால் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்படுவார் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தான் தவறாகக் குற்றம் சாட்டப்படுவதாக நினைத்ததால் அவர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். “நான் முப்பத்தியிரண்டு வயதிலிருந்து ராக்கெட் விஞ்ஞானியாக இல்லை. அதன்பிறகு எந்த ஆராய்ச்சியிலும் நான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை, ஆனால் என் வேலையில் எல்லாமே ரகசியம் என்பதால் மனைவிக்கு இதெல்லாம் தெரியாது.”

  குறைந்தபட்சம் முதல்நாள் இரவுவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார். அவரளவுக்குப் பயிற்சி பெற்றவர்கள் வகிக்கக்கூடியதிலேயே கீழான பதவியை  அவருக்குக் கொடுத்தார்கள் - அதிகாரி மாவோவின் பிறந்தநாளுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் அலுவலகத்தை அலங்கரிப்பார்; அலுவலகத்திற்குள் ஒரு குழுவிலிருந்து மற்ற குழுவிற்கு ஆராய்ச்சிக் கோப்புகளை வண்டியில் வைத்து நகர்த்திச்செல்வார், மாலையில் உடன் வேலை பார்ப்பவர்களின் குறிப்பேடுகளையும் தாள்களையும் சேகரித்துப் பதிவுசெய்து, இரண்டு காவலர்கள் முன்னிலையில் அவற்றை அதற்கான அலமாரியில் வைத்துப் பூட்டுவார். வேலையிடத்தில் தன் கண்ணியத்தைத் தக்கவைத்துக்கொண்டார், வீட்டில் மனைவியிடம்,  அமைதியாக, யோசனையிலேயே இருக்கும் ராக்கெட் விஞ்ஞானியாகப் போய்ச்சேருவார். தன் மனைவி கண்களில் தேக்கியிருக்கும் கேள்விகள் ஒருநாள் மறைந்து போகும்வரை அவள் பார்வையைத் தவிர்த்தார்; மனைவியைப் போலவே தன் மகளும் அமைதியானவளாக, புரிதலுள்ளவளாக, நல்ல சிறுமியாக, நல்ல பெண்ணாக வளர்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தன் வேலையில் முப்பத்தியிரண்டு காவலர்களோடு வேலை பார்த்துவிட்டார், சீருடையோடு காலியான துப்பாக்கி உறைகளை பெல்ட்டில் அணிந்த இளைஞர்கள், ஆனால் துப்பாக்கியில் இருந்த கத்தி உண்மையானது.

  அப்போது அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர் எடுத்த முடிவு - அது தன் மனைவிக்கும் அந்தப்பெண்ணுக்கும் விசுவாசமான முடிவல்லவா? எப்படி அவரால் உறவுண்டு என ஒப்புக்கொள்ள முடியும், தன் நல்ல மனைவியை நோகடித்து, சுயநலவாதியான ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க முடியும் - அல்லது இன்னமும் சாத்தியமே இல்லாத வழியான, வேலையை, மனைவியை, இரண்டு வயதுக் குழந்தையைத் துறந்து, அவ்வளவு பிரகாசமற்ற ஆசையினால் இன்னொரு பெண்ணோடு வாழ்வைக் கழிக்கத்தான் முடியுமா? திரு.ஷி பயிற்சியின்போது அடிக்கடி சொல்லப்படும் வாக்கியத்தைச் சொன்னார் - “நம் தியாகம்தானே வாழ்வை அர்த்தப்படுத்துகிறது”. தலையைப் பலமாக உலுக்கிக்கொண்டார். வெளிநாடு வித்தியாசமான ஒருசிந்தனையைத் தருகிறது என்று நினைத்துக்கொண்டார்.  அவரைப்போன்ற வயதானவர்கள் பழைய நினைவுகளில் அதிகமாக உலவிக் கொண்டிருப்பது நல்லதல்ல. நல்ல மனிதர் என்பவர் நிகழ்காலத்தில் இருக்கவேண்டும், அதுவும் மேடம் போல ஒரு நல்லதோழி அருகில், அழகான ஒரு தங்கநிற ஜின்கோ இலையைக் கையில் வைத்து அவர் பார்ப்பதற்காக வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்தபடி இருக்கையில்.


யியூன் லீ (Yiyun li) - பெய்ஜிங்கில் பிறந்த யியூன் லீ தற்போது வசிப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில். இவரது படைப்புகள் Newyorker, The paris review ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. Frank O’ Corner, Mc Arthur fellow, Granta, PEN/Hemingway award உட்படப் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். இச்சிறுகதை 2005-ல் வெளியான இவருடைய முதல் தொகுப்பின் தலைப்புச் சிறுகதை.


No comments:

Post a Comment