Wednesday, 13 March 2019

வயசுக்கோளாறு.

நடுகல் 1-ல் வெளியான சிறுகதை

லைலா எக்ஸ்
அவளது இரவுகள் அந்தக் காலக்கட்டத்தில் நீண்டதாக மாறியிருந்தன... மெது மெதுவாக விடியும் விடியலைப் பற்றியும், ஒவ்வொரு இரவையும் கடப்பதைப் பற்றியுமான பதட்டம் அந்தந்த மாலையிலேயே துவங்கியவாறிருந்தது. தாய் மடியினைத்தேடி ஓடும் கன்றைப்போல அவளுடைய நினைவுகள் உடலைப்பற்றிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டன. தாலாட்டைப்போல தூங்கும் போதும், பூபாளம் போல விழித்தெழும் பொழுதும், இன்ப துன்பங்களிலும், வெறுமனாக இருக்கும் போதும், வேலையில் இருக்கும் போதும் அவ்வெண்ணங்கள் அவளை போதையிலேயே மந்தமாக வைத்திருந்தன. உடலைப்பற்றிய அப்படியான நினைவுகளின்றி வாழத் தெரியாதவாளாகிப் போயிருந்தாள். அவளை அழ வைக்கவும், சிரிக்க வைக்கவும், கோபப்பட வைக்கவும் தவிக்க வைக்கவுமாக அந்த நினைவுகள் அனைத்து மாயாஜாலங்களையும் நிகழ்த்திக்காட்டியது. உடலின்பத்தைப் பற்றிய எண்ணங்களை நினைத்துப்பார்த்து மனதில் வலியை உள்ளோட்டி ஏதேதோ நினைத்துப்பார்த்தபடி இரவுகளில் படுத்திருப்பாள், பகலிலும் அவ்வப்போது சோகையாக இருக்கிறது என்றுவிட்டு அம்மா திட்ட திட்ட படுத்துக்கொண்டு கனவு கண்டு கொண்டிருப்பாள். அனைத்து பலவீனமான பொழுதுகளிலும் ஏதோ ஒன்று அவளை நோக்கி வருவதாகவும், அது சாவாக இருக்கவேண்டுமென்றும் தவிப்பாள். இப்படியான மனதை வறுத்தும் காமத்தைப்பற்றிய எண்ணங்களிலிருந்தும், சுய இன்பத்தைத் தேடிக்கொள்ளும் செயல்களிலிருந்தும், மேலும், எல்லாவற்றிலிருந்துமே விடுபட்டுவிட வேண்டும் என்ற மீனாவின் முயற்சிகள் முழுத்தோல்வியையே தழுவி வந்திருந்ததால் அஞ்சி நடுங்கினாள், பரிதாபம், அந்த நடுக்கத்திலிருந்து வெளியேறவும் அவளுக்கு அவ்வின்பமே தேவையாக இருந்தது. இன்னும், இன்னும் என்று விரிகிற அவ்வெண்ணங்களில் அவள் ஆழப் புதைந்தவாறிருந்தாள்...

”பெண்” கதை சொல்லி நான் தொடர்ந்து இப்படியாகவே துவங்கும் என் கதைகளைப்பற்றிய ஆயாசத்தில் இனிமையான பெண்ணான கதை வழங்கியிடம் மேற்கூறிய - கதையைத் தொடங்க ஏதுவான - பத்தியை படித்துக்காட்டிவிட்டு, கதையைத் துவங்குவதைப்பற்றிய எங்களுக்குள்ளிருக்கும் முரண்பாட்டினூடாக என் தயக்கத்தை வெளிக்கிட்டேன். அவள் சிரித்துக்கொண்டே, தொடர்ந்து தன் கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். சற்றே நிறுத்தியவள், புதிதாகப்பார்க்க ஏதேனும் செக்ஸ் வலைத்தளங்கள் உனக்குத்தெரியுமா? என்று கேட்டு என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கினாள். ”இல்லை டியர், நான் அப்படிப் பார்ப்பதில்லை” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கதையைக் கூறக் கேட்டுக்கொண்டேன். ”என்ன ஆண்ட்டி நீங்க, எனக்கு ஒரு பியரும் வாங்கித்தரவில்லை, சிகரட் குடிப்பது கூட உங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை - அப்படி இருமறீங்க, அதோடு போர்ன் சைட்டும் காட்டவில்லை எல்லாவற்றிற்கும் மேல் கதையை நான் சொல்வது போல் வேறு தொடங்க மாட்டன்றீங்க என்னவென்று நான் கதை சொல்வது, ம்ம்ம் சரி, எனக்கு சில முத்தங்கள் தந்தால் தொடர்ந்து கதை சொல்கிறேன்” என்று ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளினாள். நான் தயங்கிக் கொண்டிருக்கையிலேயே என் மேல் பூமூட்டையைப் போல் சரிந்து என் உதடுகளைச் சுவைக்கத்துவங்கியவளை நான் எதிர்க்கவில்லை. ஒரு ஆண் இடும் முத்தத்தினை விட கூடுதல் சுவையில் - அவள் அத்தனை ஆழமாக ஒரு ஆணை விட அழகாக முத்தமிடவும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது - ஆழ்ந்த, செறிவான, மயக்கும் நீண்ட சில முத்தங்களின் இறுதியில் அவளது கதைகளை ஒன்றுக்கொன்று தொடர்பின்றி கூறிவந்தாள்.

-1-
மீனா ஏதோ ஒன்று அவளை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உணர்கிறாள், அது என்னவாக இருக்கக்கூடுமென்று புரிந்தும், புரியாமலும் தவிக்கிறாள். தனது வீட்டில் துவங்கும் அல்லது முடியும் சாலையினை நீண்ட நேரமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அச்சாலையில் நேற்றெல்லாம் மீனா ஓடித்திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள். தாவணியை அவிழ்த்த கையோடு சுடிதாரினை மாட்டிக்கொண்டு அவள் ”சில்லு” விளையாடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து அனைவரும் அவள் மேல் கண் போடுவார்கள், ஆனால் அன்று அங்கே மெதுவாகக் கூடிக்கொண்டிருந்த ஜனத்தின் கண்களில் பெருங்கோபம். மீனா தன்னுள் அலைபாயும் குழப்பமான எண்ணங்களால் எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாமல் ஆழமான வெறுமையில் விழுந்து கொண்டிருந்தாள், இதைப்பற்றியது என்றில்லாமல் முற்றிலுமான வெறுமை. ஒரு எதிர்பாராத சம்பவம் அழ வைக்கவும், சிரிக்க வைக்கவும், சிலிர்க்க வைக்கவும், ஆங்காரப்படுத்தவும், வலிகொடுக்கவும், இன்பத்தைக் கொடுக்கவும் முடியுமா? நேற்று வரை ஓடித்திருந்து விளையாடிக் கொண்டிருந்த அதே சாலையில் இதோ இனி நிமிர்ந்து நடக்க இயலாமல் போகப்போகும் சாலையைப்பற்றிய அவளது உணர்வுகளுக்குள் மேற்கூறிய எந்த உணர்ச்சிகளையும் பொருத்திப்பார்க்க முடிந்து விடுகிறது. இப்படியான குழப்பத்திற்குக் காரணமாக யாரை அவளால் குற்றம் சொல்ல முடியும்? அவளையேயன்றி...

தொடர்ந்து பல மணிநேரங்களாக மீனா கால்களை மாற்றி அமர்ந்து கொள்வதைத்தவிர எந்த வேறு எந்த ஒரு சிறு அசைவும் இன்றி உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தில் உள்ள உணர்ச்சிகளை இது தான் என்று பகுத்துக்கொடுத்துவிட இயலாமல் கூடியிருந்த ஜனம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்று தோன்றியது. அங்கே நிலவிய அசாதாரணமான சூழலிலும், மீனாவின் அலட்சியமான இறுக்கமான இருப்பிலும் சட்டென சிறிய அளவில் பதற்றம் ஏற்பட்டாற்போலிருந்தது. அந்தக்கணத்தில் மீனா மேல் முதல் அடி விழுந்தது. முதன்முதலில் தன்னை அடித்தது யாரென்று உணர்ந்த போது மீனாவிற்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது, அது அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணன். அவனுக்கு மீனாவை அடிக்க எல்லா விதமான தகுதிகளும் உள்ளது என்பதை பறை சாற்றிக்கொள்வதைப் போலிருந்தது அவனது அணுகுமுறையும், அவனுடைய அடிகளும், அவனுடைய பார்வைகளும்.

ஒரு நாள் உன் அப்பா ரோட்டில் விழுந்திருக்காரு வா போய் கூட்டிக்கொண்டு வரலாம் என்று இழுத்துக்கொண்டு போனான் கண்ணன் அண்ணனை மீனா தெய்வமாகப் பார்த்தாள். அவனுடன் ஓட்டமும் நடையுமாக சென்றவள் அப்பனின் நிலையைப்பார்த்து சிலையாக நின்றுவிட்டாள். மீனா அப்போது தான் வெளி உலகத்திற்கு தலை காட்டத் துவங்கியிருந்தாள். மீனாவின் உலகம் சிறிது சிறிதாக அப்போது தான் அவள் தெருவின் எல்லை வரை விரியத்துவங்கியிருந்தது.

அந்த தெருவின் இறுதியில், போதையில் குப்புறமாக விழுந்திருந்த மீனாவின் அப்பா கனகுவின் முகத்தில் வாந்தியின் மிச்ச மீதிகள் ஒட்டிக்கொண்டிருந்தன, வாந்தி எடுத்துவிட்டு அதிலிருந்து சற்று தள்ளி வந்து விழுந்திருந்தான். கனகுடைய முகத்தைச் சுற்றி சில ஈக்கள் பறந்து கொண்டிருந்தன, கால்களை விரித்து விழுந்து கிடந்தான். கைகள் மார்புக்குள் பொதிந்து போயிருந்தன, அசாதரணமான நீண்ட கைகளையும், நீண்ட கால்களையும் கொண்டிருந்தான், சட்டை கிழிந்திருந்தது. அவனைக் கண்டும் காணாது சிலர் சுற்றி சுற்றி சென்று வந்து கொண்டிருந்தனர். அது பாக்கெட் சாராயங்களின் காலம். குறைந்த விலையில் சல்லிசாக கிடைத்துக் கொண்டிருந்த சாராய பாக்கெட்டினை குடித்துவிட்டு பல ஆண்கள் மீனாவின் அம்மா கூறுவதைப்போல் “பப்பரப்பா” என்று விழுந்து கிடந்த காலம். மீனாவும் கண்ணனும் வந்து சேர்ந்த சில நிமிடங்கள் கழித்து மீனாவின் அப்பாவை நெருங்கிய கண்ணன் குனிந்து அவரை எழுப்ப முயன்றான். அவர்கள் இருவரும் குடித்து ரோட்டில் விழுந்துள்ளவன் அருகில் நின்று கொண்டு எழுப்புவதைப் பார்த்த சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் நின்று வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர். எவ்வளவு முயன்றும் கனகுவை எழுப்ப முடியாமல் போகவும் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருந்த அவர்களை நெருங்கிய ஒரு ரிக்சாகாரர் தானாகவே முன் வந்து உதவுவதாகக் கூறினார்.

ரிக்சாகாரரின் உதவியால் அப்பனை வீட்டில் இறக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு ரிக்சாவை அனுப்பிவிட்டு கண்ணன் உள்ளே நுழைந்து அப்பனை மேலும் சரிசெய்து படுக்க வைத்தான். அம்மா இல்லையா? என்றவாறே, வெளியே எட்டிப் பார்த்து ஆள்நடமாட்டமின்மையையும் கணக்கில் கொண்டு ஈ என்று இளித்தவாரே தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். மீனா தன் அப்பனை அந்தக்கோலத்தில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அப்போதும் விடுபடவில்லை. ஆனால் அப்பன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது தான் அங்கே கண்ணன் நின்று கொண்டு இருப்பதை உணர்ந்துகொண்டவள் போல், எதையோ நினைத்துக்கொண்டு உள்ளே சென்று சொம்பில் தண்ணீரை கொண்டுவந்து நீட்டினாள். கண்ணன் அவளுடைய மாராப்பை பார்த்தபடிக்கு தண்ணீரை குடித்துவிட்டு, சொம்பை பக்கத்தில் வைத்துவிட்டு, பட்டென திரும்பி மீனாவை சுவற்றோடு சாய்த்து, மீனா மேல் முழுதுமாக மூர்க்கமாக சாய்ந்து அவளது மார்பகங்களை கசக்கத்துவங்கினான். மீனாவிற்கு அதற்கு எப்படி எதிர்வினை புரிவது என்றும், என்ன செய்வது என்றும் தெரியாமல் மிகச்சிறிது நேரத்தை கடத்திவிட்டு “தூத்தேறி..” என்று அவனை அறைந்து, தள்ளி விட்டாள். தனக்குள் ஏதேதோ முணகிக் கொண்டே, சற்று நடுக்கத்துடன் ஓட்டமாக உள் அறைக்குள் நுழைந்து பட்டென கதவைச் சாத்தித் தாளிட்டாள். கண்ணன் சில முறை கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே வெளியேறினான்.

சற்று நேரம் சென்று அவசர அவசரமாக வீட்டில் நுழையும் அம்மாவை மீனா தூக்கதிலிருந்தாலும் நன்றாகவே உணர்ந்தாள். கணவன் சாப்பிடாமல் படுத்திருக்க கூடுமென்பதை உணர்ந்தவள் கணவனை வசதியாக கிடத்தி போதையைத் தெளிய வைக்கும் எத்தணிப்புடன் முகத்தை அழுத்தித் துடைக்கத் துவங்கினாள், அந்தக் கவனிப்பில் இலேசாக நினைவு திரும்பியவன் ”பசிக்குது” என்று சொல்லி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். மீண்டும் தெளிந்து எழுந்தவன் தன் காலடியில் உட்கார்ந்தவாரே சாப்பாட்டை பிசைந்து கொண்டிருந்த மனைவியை எட்டி ஒரு உதை கொடுத்தான். திடுக்கிட்டு பட்டென எழுந்தவள் சோற்றை காப்பாற்றிக் கொண்டாலும், வாய்பேசாது கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “எவங்கூடடீ படுத்துக்கிடந்த, எவனோட என்னை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த, தேவடியா... ”. அடுத்த ஒரு மணிநேரம் அடியும், உதையும், திட்டுக்களுமாக கொடுத்தவன் இறுதியில் சோர்வுறவும் அப்பனுக்கு சுடச்சுட அம்மா சோறு பறிமாறினாள். அதன்பிறகு தன்னையும் பறிமாருவாள் என்றும், அதன் பிறகு தான் பரம நிம்மதியுடன் அம்மாவால் உறங்க முடியும் என்று மீனா கடுப்புடன், குரூரமாகவும் நினைத்துக்கொண்டு அந்த எண்ணங்கள் கொடுத்த வெம்மையில் தூங்கிப்போனாள். வருடத்தில் கணக்கெடுத்தால் ஏறக்குறைய தொன்னூறு நாட்களை இப்படித்தான் அவர்கள் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

-2-
இரண்டு ஆண் குழந்தைககளுக்குப் பிறகு பிறந்த மீனாவின் மேல் உயிரையே வைத்துள்ள அப்பனாக இருந்தாலும் கனகு அந்த வீட்டைக் குடித்தே அழித்துக் கொண்டிருந்தான். உள்ளாடையில்லாமல் கால்களில் குருதிவழிய ஒருநாள் மீனா நின்றதைப்பற்றி மீனாவின் அம்மாவின் மூலமாக கேள்வியுற்றவன், அதன் பிறகு சற்று நல்லவன் அவதாரமெடுத்து வீட்டை சற்று நன்றாக நடத்தத் துவங்கினான், அதாவது வீட்டுக் கை செலவிற்கு போதுமானதாக பணம் கொடுக்கத்துவங்கினான். ஆனால், குடிப்பதும், அடிப்பதும், கேவலமாகப் பேசுவதும் அதன் பிறகு கூடுவதும் எப்போதும் போல் ஜரூராக நடந்து கொண்டிருந்தது, ஏதோ இந்த அளவிற்காவது வீட்டைப் பார்க்கிறானே என்று மீனாவின் அம்மாவும் முந்தி விரித்துக் கொண்டிருந்தாள்..
மீனா ஒருநாள் வீட்டிலிருந்த அனைத்து சீடியையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு சிடீயாகப் போட்டுப்பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் தேடிக் கொண்டுருந்தது மீனாவின் விருப்பத்திற்குறிய நடிகனின் காதல் பாடல்களை. அது சிடிக்களின் காலம், தன் அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு சிடி பிளேயரை இரண்டாம் கையாக வாங்கிவந்திருந்தாள். சிடியில் கோடுகள் விழ விழ அதுக்கென உள்ள லிக்விட்டில் துடைத்து துடைத்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த காலம். மீனா ஒரு சீடியைத் போட்டுப்பார்த்த போது திரையில் ஓடிக்கொண்டிருந்த போர்ன் வீடியோவினைப் பார்த்து துணுக்குற்றாள், தன் பெரிய அண்ணன் தான் பார்த்திருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டு திரையை மூடப்போனவள், தான் முழு தனிமையில் இருப்பதை உணர்ந்துகொண்டு என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம் என்று குறுகுறுவென கண்களை குறுக்கி காணொளியை முழுதாகப்பார்த்து முடித்தாள். அன்று தான் மீனா ஒரு போர்ன் வீடியோவினை முதன் முதலில் பார்த்திருந்தாள். அதன் பிறகு அவளுடைய நடவடிக்கைகளில் தோன்றிய சிறுசிறு மாறுதல்களையும் கூர்ந்து கவனித்து ஏதோ சரியில்லை என்பதைக் கண்டடைந்த மீனாவின் அம்மா அவளை ஒரு ஜோசியம் பார்த்துக்கொண்டவாரே மிதமான பேய்களை ஓட்டும் ஒரு பூசாரியிடம் கொண்டு போய் நிறுத்தினாள்.

நிற்க - ”நில்லுங்க கதையை அப்பறம் சொல்லறேன் நீங்க எனக்குச்சொல்லுங்கள் ஆண்ட்டி, ஏன் பெரும்பாலான பேய்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி வரும் ஆண் பேய்கள் மட்டும் ஏன் பெரும்பாலும் நல்லவர்களாகவும் மேலும் லூசுகளாகவும் இருக்கிறார்கள்.. அத்துடன் ஏன் பேயாகும் பெண்கள் மட்டுமே பாலியலை வேண்டி பேயாவதாக(மோகினி) புனைகிறார்கள். ஏன் பெண்களுக்கு மட்டுமே அதிக அளவில் பூசாரிகள் பேய் ஓட்டுகிறார்கள், ஏன் சூன்யக்காரிகள் என எதிர்மறையுடனும், மந்திரவாதிகள் என்று நேர்மறையுடனும் விளிக்கிறார்கள்” என்று என் கதை சொல்லி கேட்டபோது நான் பெரிதாக சிரித்து வைத்தேன். “அழகி, இதை உமா மகேஸ்வரி ஏற்கனவே எழுதிட்டாங்கம்மா... ” என்று கூறி மேலும் சிரித்துவைத்தேன்.. என்ன சொல்வது என்று எனக்கு புரிவதில்லை. எழுதுவதைப் போல் சூழல்களை எதிர் கொள்வது எளிமையில்லை அல்லவா? இக்கதையில் என் கதை வழங்கியை நான் சுமாராக சித்தரிக்கிறேன் ஆனால் அவள் பேரழகி... க்ராஜியஸ். அவள் பெரிதாகப்பேசினாலும் பெரிதாக ஒன்றும் அறியாதவளாகத்தான் தெரிந்தாள். அல்லது, இந்த என் எண்ணம் தான் ஆண் மையப்பார்வையோ?!

அதன் பிறகு மீனாவின் ஒவ்வொரு அசைவையும் அவளுடைய அம்மா கவனிக்கத் துவங்கினார்களாம்.. அவளது அம்மா, அவளுக்கு கால்களில் கொலுசுவாங்கி மாட்டி விட்டாள். கைகளில் கண்ணாடி வளையல்களைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தினாள். அடுக்கடுக்காக உடுத்தவேண்டிய உள்ளாடைகளைப் பழக்கப்படுத்தினாள். சிறிதும் ஆபாசமின்றி அல்லது அதைப்பற்றிய சிறு சுவடினைக்கூட பெண் அடைய முடியாமல் பொத்திபொத்தி காப்பாற்றுவதாய் பாசாங்கு செய்தாள். தன் கணவனைப் போல ஒரு தருதலைக்கே கல்யாணம் செய்து கொடுக்கும் நிலை வரலாம் என்று மீனாவின் அம்மா அறிந்திருந்த போதும் இவற்றை செறிவாகச் செய்து வந்தாள். மீனா பார்வைக்கு சுமாராகத் தான் இருந்தாள்.

மீனாவின் வீட்டில் இருந்த குருட்டுக்கிழவி - அப்பாவின் அம்மா - மீனாவுடைய கைகளைப்பற்றிக் கொண்டு இரவில் மீனாவின் அருகிலேயே உட்கார்ந்திருப்பதை மீனா ஒரு இரவில் அறிந்தாள். பாட்டி ஏதோ பாசத்தில் செய்கிறது என்று எண்ணிக்கொண்டாள். ஆனால், ஒரு நள்ளிரவில், ஆழமான தூக்கத்திலிருந்து எதனாலோ விடுபட்ட போது தன் மார்பை தடவிக்கொண்டிருந்த தன் சொந்த சின்ன அண்ணனை கண்டுகொண்டவள் திடுக்கிட்டுப் போனாள். அந்த நிகழ்விற்குப் பிறகு பாட்டியையும் சின்னண்ணன் தொட்டிருக்கக்கூடும் என்று பாட்டியை பாவமாகப் பார்த்துக்கொண்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு பல நாட்கள் கடந்தபின் ஒரு நன்னாளில் உன் சின்னண்ணன் செக்ஸ் படங்களைப் பார்க்கறான்டி, எனக்கு என்ன பண்ணன்னே தெரியல, உங்க அப்பாவிடம் சொல்லவும் பயமா இருக்கு. இப்பல்லாம் அவனைத் தொட்டுப்பேசக் கூட பேசப்பிடிக்கலை என்று மறுவிக்கொண்டிருந்த அம்மாவை மீனா பரிதாபமாகப்பார்த்தாள். அதே அண்ணனுக்கு தான் அன்று காலை அப்பாவிடம் திட்டு வாங்கி, கேவலப்பட்டு நூறு ரூபாய் வாங்கித் தந்திருந்தாள். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் அண்ணன் வயதுக்கு பெரிய தொகையில்லையா. அதை அவன் எதற்கு செலவளிப்பான் என்று மற்ற மூவருமே அறிந்திருந்தாலும் அவனைத் தாங்குவதே வீட்டவர்களின் தலையான கடமையாயிருந்தது. அதற்கான காரணங்கள் அம்மாவுக்கும், பெண்ணிற்கும் பிடிபடவில்லை. அது அப்படித்தானே, அது அப்படித்தான் எங்கெங்கும் நடக்கிறது. அதனால் தான் அன்று மீனா கல்லாக உட்கார்ந்திருந்த போது கோபத்தில் பெரியண்ணன் வெளியேறிவிட, சின்னண்ணன் அவளை வீட்டில் நுழைந்தும் நுழையாமல் இழுத்துப்போட்டு நீண்ட நேரம் பலமாக அடித்தான். அப்படி அடிக்கையில் அவளது மார்பகங்களை மற்றும் சிலப்பல ரகசிய இடங்களை அவன் தொடாமலில்லை, அதை அவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என்பதை மீனாவும் அறிந்து தான் மேலும் இறுகிப்போனாள்.

குலைந்த மனநிலையில் கவர்ந்திழுக்கும் வேதனைகளுடன் எல்லா இரவுகளும் மீனா தூக்கமின்றி பிரண்டு கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கம் அத்தனை எளிதாக வருவதாக இல்லை. அவன் - அவளுடைய சொந்த அண்ணன் - எண்ணங்களுருவில் அவளுள் அலைந்து கொண்டிருந்தான். அவனது எச்சரிக்கையாக பாதுகாக்கப்பட்ட உருவங்களை, அவனது அசைவுகளை அவளுள்ளிருந்து சிதைக்க முற்பட்டு இரத்தம் கசிந்துகொண்டிருக்கிறாள். அந்த துரதிஷ்டம் பீடித்த நாட்களை, எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட வாதைகளால், இழந்துவிட விரும்பாத ஒரு ரணத்தை போல், ஏதேதோ கற்பனையான உலகில் சஞ்சரித்து நகர்த்திச்சென்று கொண்டிருக்கிறாள். அப்படியான இரவுகளைக் கையாளத் தெரியாமல் அதன் இருன்மைக்கரங்களுக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறாள். தொடர்ந்து எத்தனை நாட்கள் சரியாக உறங்காமலிருக்கிறாள் என்ற கணக்கை கைவிட்டு நாட்கள் எண்ணிக்கைகளின்றி அவள் நினைவுக் குறிப்புகளிலிருந்து கலண்டு கொண்டிருந்தன. ஒட்டிக்கொண்டிருக்க நாட்களின் நொடிகளனைத்திலும் அந்த அண்ணன் மாத்திரமே அவளுள் பயமாய் நிறைந்திருப்பது எதேச்சையல்ல. அவள் கண்ணிரண்டிலும் ஒரே எரிச்சல், உடலில் எல்லா இணைப்புகளும் தூக்கமில்லாமல் வலித்தது, இமைகளில் கணம் ஏறி மூடித்திறத்தல் ஏகத்துக்கும் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நினைவுகளற்ற பார்வை வெறிப்புகள், என்ன செய்ய எத்தனித்தோம் என்று மறந்து நின்று விடும் கைகள், ஏதோ ஒரு கணத்தில் கரைந்து சுயநினைவே இல்லாமல் எங்கோ சென்றுவிடுகிற, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நல்லது மட்டுமல்ல, கெட்டது நடக்காமல் இருக்கக் கூட ஒரு கொடுப்பினை தான் வேண்டும். அந்தாட்களில் தான் அவள் சுய இன்பத்தை பழகியிருந்தாள். சுகம் தரும் விடயங்களை அவளுக்கு பழகித்தந்த விசயங்கள் அனைத்துமே ஆச்சரியமன்றி அவளது நெருங்கிய உறவுகளிடமிருந்தே வந்திருந்தன.

பள்ளியிலிருந்து தாமதமாக வரும் மீனாவையும், மருண்டு மருண்டு விழிக்கும் சின்ன அண்ணனையும் பார்த்த மீனாவின் அம்மா, அவனைத் தன் அம்மா வீட்டிற்கு அனுப்பினாள். மீனாவின் அம்மா எதையும் நிச்சயமாக உணர்ந்திருக்க மாட்டாள். அவளுக்கு அப்படியெல்லாம் யோசிக்கத்தெரியாது. சின்னண்ணன் வீட்டிலிருந்து சென்றுவிடவும், தன் சாவை தன் சின்னப்பையன் வீட்டில் நிழத்த வேண்டுமென்று கிழவியும் வீட்டிலிருந்து சென்றுவிட மீனா தனிமையில் வீழ்ந்தாள்... மீனாவின் இளமையையும், தனிமையும் எத்தனை கண்கள் பார்வையுற்றன என்று அவளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் எண்ணம் வந்தது...

ஒரு தடவை தன் தோழியைப்பார்க்க சென்றிருந்த மீனாவை அந்த மாமி பிடித்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் கணவனின் அருகில் உட்காரவைத்து, “செத்த உட்காருடி குழந்தை தோ வந்துடறேன், மாமா நன்னா தூங்கறார், இந்தா செத்த விசிறி விட்டுடுட்டே இரு, எழுந்ததும் காப்பி கேப்பா..” என்று விசிறியை கையில் திணித்து விட்டு பால் வாங்கச் சென்றாள். மாமியின் முந்தானை மறைந்ததும் மாமாவின் கைகள் தூக்கத்திலேயே மீனாவின் மேல் பட்டது அதுவும், மார்பு மேடுகளில் சரியாக ஏறி இறங்கியது... மீனா சிரித்துக் கொண்டே விசிறியை வீசி எறிந்துவிட்டு பாவாடை சரசரக்க வெளியே ஓடினாள். மாமி தெய்வ விக்கரகமாட்டம் இருக்கா இல்ல என்று மீனாவில் அம்மா மாமியின் அழகில் மாய்ந்து மாய்ந்து போவாள்.

மாமியின் பெண் இவளது நெருக்கமான ஒரே தோழி, ஒருநாள் மாமி, ”பாப்பா கூட யாரும் இல்ல, நாங்களெல்லாம் வெளிய போறோம், பாப்பாவுக்கு பீரியட்ஸ் அதனால் துணைக்கு இரு கண்ணு” என்று குழைந்துவிட்டு, மீனாவை அவளது அம்மாவிடம் கேட்டு கூட்டி கொண்டு போய் தன் வீட்டில் விட்டுச்சென்றாள். தோழி லெட்சுமியுடன் மீனா குழந்தைத்தனமாக ஓடித்திருந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது லெட்சுமி சட்டென கொள்ளை புறத்துக்குச் சென்று தன் காதலைனை கூட்டிக் கொண்டு அவளது வீட்டில் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள், ஒன்றும் புரியாமல் விழித்த மீனா, லெட்சுமியின் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த லெட்சுமியை பார்த்த மீனா அவளிடம் ஓடிச்சென்று மீண்டும் லெட்சுமியை விளையாடக் கூப்பிட்டாள், லெட்சுமி ”போடி இவளே” என்றுவிட்டு தூங்கிப்போனாள்.

உதடுகளின் புன்னகை விரிப்பாக, கண்களில் திரண்டு நிற்கும் கண்ணீராக, நெஞ்சிற்கும் தொண்டைக்குமிடையே பயணிக்கும் வலியாக, காம எண்ணங்களைப் பற்றிக்கொண்ட கை, கால்களின் நடுக்கங்களாக, முலைகளின் அடியிலிருந்து பரவும் ஆழமான வலிகளாக, காமத்தின் தவிப்பில் யோனியின் மேல் குவியும் விருவிருவென மகாவாதையாக அவன் என் அங்கங்களெங்கும் பரவியுள்ளான். அவனைவிட்டு எப்படி வெளியேறுவது? அவனை விட்டு வெளியேறுதலென்பது சாவதற்கு சமமென்கிறேன், நெற்றியை விரல்களால் அழுத்தத்தடவிக்கொண்டு, கால்களை தட்டிக்கொண்டு, நெஞ்சில் வலி உணர்ந்து, யோனியில் உணரும் உணர்சிகளுக்குள் நெகிழ்ந்து காமம் தரும் தொல்லையை சமாளிக்கும் கணங்களின் வாதையை எல்லா இடங்களிலும் கால நேரமின்றி, இடம் பொருளன்றி உணர்கிறேன். ஒரு சொல், ஒரு பாட்டு, ஒரு வாசம், ஒரு தேதி, ஒரு கிழமை, ஒரு மணி கொடுக்கும் அவன் நினைவுகளை, கிளரும் காமத்தை என்ன செய்வது? தத்துவங்களுக்கும், சாமி பூதங்களுக்கும் உணர்ச்சியை அடக்கும் திறனுள்ளதா?

இப்படியாக மேற்கண்டவாறு லெட்சுமி ஒரு மாதிரியாக கவிதை எழுதி மீனாவிடம் திணித்தாள். அந்நேரத்தில் லெட்சுமியின் அம்மா வீட்டிற்கு வந்து வெடுக்கென்று மீனாவைப்பார்த்து திரும்பிக்கொண்டு உள்ளே நுழைந்துகொண்டாள். நாங்கள் லெட்சுமி அம்மாவின் அப்படியான நாடகத்தால் கமுக்கமாக சிரித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி சைக்கிளில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தோம்.. அப்போது தோழி சங்கடமாக நெளிந்து கொண்டு அவர்களது குளியலறைக்கு அருகில் சென்று கதவில் காதுகளை வைத்து கவனித்துவிட்டு, நீ வீட்டுக்குப்போடி என்று மீனாவைத் துரத்தி விட்டாள். சில நாட்கள் சென்று லெட்சுமியின் மற்றொரு தோழி உமா மீனாவிடம் ”உன்னால் தான் லெட்சுமி கெட்டுப்போனாள், நீ எழுதிய அந்தக் காமக்கடிதம் படித்துவிட்டு லெட்சுமியோட அம்மா எப்படி கோவிச்சிக்கிட்டாங்க தெரியுமா” என்று மீனாவிடம் கோவித்துக் கொண்டாள். மீனாவிற்கு ஒன்றும் புரியாமல் பே என்று விழித்துக் கொண்டிருந்தாள்.

இதோ மீனா குத்துக்கல்லாக அவளுடைய வீட்டில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள். மீனாவிற்கு தன் முன்னால் விரிந்து படர்ந்திருக்கும் மனிதர்களின் மீதான பிம்பங்கள் மற்றும் நிதர்சனங்கள் அவளைத் தூக்கிச் சுற்றி மேலிழுத்து பறக்க வைத்தது. லெட்சுமி மாமி இவளையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் மாமியிடம் கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள். லெட்சுமி மாமியைப்பார்த்ததும் தன் சூழலையும் மறந்து, ”மாமா நன்னா தூங்கராரா மாமி” என்று கத்த வேண்டும் போலிருந்தது. அப்போது மீனா மேல் வீசப்பட்ட முதல் வசையின் சொற்களின் மூலம் லெட்சுமியின் அம்மாவாகத்தான் இருந்தது. அதன் பிறகு பலரும் பலவாராக மீனாவை ஏசத்துவங்கினார்கள். மீனா அவ்வார்த்தைகளால் மென்மேலும் இறுகிக்கொண்டு தன் கைவளையல்களை உருட்டிக்கொண்டு அவற்றையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இப்போது சற்று துளிர் விட்டிருந்தது... ”இதுங்களெல்லாம் பேச வந்துடுச்சிங்க, மூஞ்சிகளையும், முகரைகளையும் பார்த்துக்க” என்று அவளுக்குள் அலட்சியம் தட்டியது.

-4-
தன்னை தூக்கிச்சுற்றிய மில்கார அண்ணா, கடன் கேட்டு அம்மா அனுப்பும் வீடுகளில் மடியில் அமர்த்திக்கொண்ட மாமாக்கள், தெருவில் படுத்திருந்தால் தொடுவதற்கு முயலும் முகமறியா ஆண்கள், பஸ்களில், கூட்டங்களில் உடல் அணைக்கும் கரங்கள் என்று மீனாவைத் தூண்டாத விசயங்களே இல்லை. இத்தனைக்கும் பிறகும் இன்பங்களை உணராமல் இருக்க மீனா தன்னை என்ன கல்லா என்று யோசித்துக் கொண்டாள். “ஒருவேளை ஆண்ட்டி இது ஏதாவது ஒரு பரம்பரை வியாதியாக இருக்குமோ.... ” என்று டக்கென்று என் கதை சொல்லி கதையை நிறுத்தி என்னிடம் கேட்டாள்... “இல்ல கண்ணா, அப்படியெல்லாம் குழம்பாத., உடலுக்கான உணர்வுகள் அத்தனை ஒன்றும் பிரச்சனைக்குறிய நோய்மையான விசயம் இல்லை விடு... ” என்றேன்.

மீனா ஒரு பெரிய குழிக்குள் தனது சைக்கிளைத் தவறுதலாக விடுகிறாள், அந்தக்குழி மீனா சைக்கிள் பழகும் சாலையின் மையத்தில் இருந்தது. அப்படியாக குழிக்குள் சைக்கிளை விட்டதில் அவளுடைய அந்தரங்கப் பகுதிகளில் அதிர்வலைகளை உருவாக்கி குறுகுறுவென உணர்வைத்தந்தது, சட்டென மீனாவிற்கு இப்படித்தான் என்று அருதியிட்டுக் கூற இயலாத பேருணர்வு மேலேற மீனா அதை முழுதாக உணர்ந்தவாறே இறக்கத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றாள். இதென்ன உணர்வு, என்ன இது இப்படியான சுகம் என்பதைப்பற்றிய புரிதல்கள் ஏதுமின்றி மீனா வீட்டை அடைகிறாள். வீடு உள்புறம் பூட்டியிருக்க, இருமுறை கதவைத்தட்டியும் திறக்காததால் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பினாள். அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கியிருக்க வேண்டும் என்று மீனாவின் மனம் கணக்கிட்டுக்கொண்டது. அந்த நேரத்தில் மீனாவிற்கு முழு சுதந்திரத்துடன் உலகமே காலடியில் இருப்பதைப்போல் இருந்தது. மீனாவிற்கு சைக்கிள் ஓட்டுவது என்றால் கொள்ளை விருப்பம்,
சைக்கிள் ஓட்டிக்கொண்டே ஒரு பக்கம் உண்மைகளின் கொடுமையான கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு தன்னை விடாமல் பின் தொடரும் சேகரைப் பற்றிய நினைவுகள் எரிச்சல் நிறைந்தவையாக துன்புறுத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஏதோ ஒரு இன்பமான கற்பனை கொடுக்கும் சேகரைப் பற்றிய நிகழ்வுகள் மயிலிறகால் ஆன கனவுகளாக சாமரம் வீசி வலிகளைக் கலைத்துக்கொண்டுள்ளது.

சேகர் மீனாவுடனேயே வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறான், அதை எதிர் கொள்ளும் திராணியில்லாமல் தவித்துக்கொண்டு வேகமாக சைக்கிளை பிரேக்கிட்டு சைக்கிளிலிருந்து இறங்கி நிற்கிறாள். முதல் நெருக்கத்தில் சேகர் மீனாவை பார்வையால் பயணித்ததை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் மீனா சிலிர்த்துக் கொண்டிருந்தாள். அந்த முறையாவது சேகர் ஏதேனும் பேசுவானா என்று பார்த்தாள். அதைப்பற்றிய சுவடுகளே இல்லாமல் சேகர் அவளைக் கடந்து சென்றுவிட்டான். அப்படியான நிகழ்வுகள் வெறுமையாகவே மீனாவின் எண்ணங்களுக்குள் படர்கிறது, சேகரைப்பற்றிய ஆசையான எண்ணங்களுக்குள், உடலைப்பற்றிய எண்ணங்களை செலுத்தினால் மீனாவின் மனம் அதில் லயிக்காமல் அவசர அவசரமாய் அந்த உணர்வுகளைக் கடந்து சென்றுவிடுகிறது. எதையெதையோ எண்ணிக்கொண்டு அதிலேயே ஆசையில் நிலைக்கும் கனவுப்பெண் தான் மீனா. சேகரின் நினைவுகளைப் பற்றிக் கொண்டிருக்கும் மீனாவின் கனவுச் சங்கிலியினை விடுவிப்பதற்காகவேணும் சேகர் அவளிடம் பேசியிருக்கலாம், ஆனால் சேகர் வேண்டுமென்றே தான் செய்யவில்லை, அது சேகரின் புன்னகையிலேயே தெரிந்தது.

வயதில் இப்படியான செயற்பாடுகளில் விதியால் விழுந்து, தானே ஈடுபட்டுக் கொண்ட சிலப்பல விசயங்களில் லயித்திருப்பதில் மிகப்பெரிய கொடுமை காமத்தை நிகழ்த்திப் பார்ப்பதைப் பற்றிய கனவு, அது பெருவாதை, உடல் வாதை, மேலும் மீனாவில் பாதையில் ஊனும் உடம்புமாக ஒரு ஆண் குறிக்கிட்ட பிறகு அது சுய இன்பத்தைக் கூட நிகழ்த்தவிடாமல் அடிக்கும் பெரும் வாதையென்று உடலைப் பற்றிய தேவையைக் கண்டுகொண்டாள். அதைக் காதல் என்று புரிந்துகொள்ளும் அளவு மீனா அதிஷ்டவசமாக முட்டாளாக இருக்கவில்லை. சேகர், அவளுக்கு சுகம் தரக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் தெரிந்தான். சேகர் அப்படி வேறு சிலப் பெண்களுடன் பழகுவதை மீனா அரசல் புரசலாக கேள்வியுற்றிருந்தாள். இப்படியான எண்ணத்தில் தான் இருப்பது சேகருக்குத் தெரியுமா என்று மீனாவிற்கு முழுவதுமாக புரியவில்லை. ஆனால் இப்படியான எண்ணங்களுடன் ஒரு பெண் பார்ப்பதையோ அல்லது அப்படியான விசயத்தை அவள் ”தன்னுடன்” மறுக்கமாட்டாள் என்பதைப் பற்றிய குறிப்புகளை உதிர்ப்பதையோ ஆண்கள் அறிந்துதான் இருக்கவேண்டும். இப்படியான செய்கைகள் மற்றும் குறிப்புகள் மீறுதலில் சேர்த்தியா அல்லது இயல்பில் சேர்த்தியா என்று தான் மீனா குழம்பிக்கொண்டிருந்தாள். இவ்வுணர்ச்சிகள் அவளுள்ளாகவே உண்டானதா அல்லது அவள் எதிர்கொண்டவற்றிலிருந்த ஒரு பிரச்சனையா என்றும் குலைந்து கொண்டிருந்தாள்.

எத்தனை நபர்களுடன் படுத்தாலும் போதாமல் போகக்கூடிய பெருங்காமம் உடலால் மட்டுமே நிறைவடைந்து போய்விடுவதில்லை என்பதை தாமதமாகத்தான் நான் உணர்ந்தேன் ஆண்ட்டி என்று என்னிடம் சொன்ன கதை சொல்லியை ஆழமாகப் பார்த்தேன், அவள் ஒரு பெரிய பூ மாதிரி இருந்தாள், ஆனால் என்னவெல்லாம் பேசுகிறாள், எப்படியெல்லாம் செய்கிறாள், செய்துள்ளாள் என்று ஆச்சரியமாக இருந்தது.., நான் அதை அவளிடம் கூறவும் செய்தேன், சிரித்தாள். ”என்னைப்பார் டியர் எப்படி ஆம்பளையாட்டம் இருக்கேன்” என்று என்னைப்பற்றி குறை கூறினேன்.. அவள் என் கை விரல்களைப் பற்றிப் பார்த்தாள். அவளது கைவிரல்கள் பூவை விட மென்மையாக இருந்தன. அவள் வேண்டுமென்றே என் கால்களில் அவளுடைய குளிர்ந்த கால் விரல்களால் தொட்டாள்.. எனக்கு கூச்சமாக இருந்தது, என் ஆண் பிள்ளைத்தனமான செயல்பாடுகளில் உள்ள என் பெருமையை அவள் அந்த உரசலில் தூக்கிச்சாப்பிட்டாள்.. என்னால் பெண்களிடம் ஆண்கள் அடையும் தோல்வியை இப்போது முழுதாகப் புரிந்துகொள்ள முடிகிறது...

சரி கதைக்கு வருவோம், சேகரின் அருகாமைக்கொடுக்கும் சுகத்திற்கு முன் ஆயிரம் சுய இன்பச் சிலிர்ப்புகளின் இன்பம் ஒன்றுமில்லையென்று மீனா மறுகினாள். சேகரை உடலாக மீனாவிற்குள் முழுமையாக நிறைத்துக் கொள்ள ஆசை வந்துவிட்டது என்பதால் அவளது நாட்கள் அவ்வாறான ரணத்தால் நிறைகிறதா? அல்லது அது அப்படித்தானா என்று குழம்பினாள். சேகரின் நினைவுகளைப் பற்றிக்கொண்டிருக்கும் சங்கிலியை விடுவிக்கும் சக்தியொன்றை மீனா எதிர்நோக்கிக் காத்துக்கிடந்தாள், அது சேகரிடமிருந்து தான் கிடைக்கும் அவனிடமிருந்து தான் வரவேண்டுமென்பதையும் மீனா அறிந்திருந்தாள்.

ஒரு நாள் தைரியமாக வெட்கம் விட்டு இருவரும் ஒதுங்கிய ஒரு குடிசையில், இறுகிய சில நிமிட அணைத்தலின் பிறகு, முழு இச்சை உணர்வு மீனாவிற்குக் கூடி வர உடலிணைவினை சேகர் நிராகரித்து யோசித்து யோசித்து மருண்டு கொண்டிருந்தான். முன் மாலையிலேயே அன்று இருட்டாகியிருந்தது. “நீ நான் பாக்க வளந்த பொண்ணு, இன்னுமும் சின்னப் பொண்ணுடி நீ, உன்னைப்போய்...” என்று நிறுத்தி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தான், அவனைத் தொடர்ந்து மீனா நெருங்கினாள். மீனாவை விட சேகர் பத்து பதுமூன்று வயது பெரியவன். அதையெல்லாம் உணரும் கட்டத்தை மீனா தாண்டியிருந்தாள். சற்று நேரம் மௌனத்தில் கழிந்த பின் கோபத்தில் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். மழை கொட்டத்துவங்கியது... “நல்ல மழை, நிக்க போறதில்லை, கிளம்பறேன். என் மூஞ்சிலயே முழிக்காதீங்க” என்று கத்தி விட்டு கொட்டுகிற மழையில் ஓடி வந்தாள். ஆங்காரத்தை கரைத்துக் கொள்ளலாம், காமத்தைக்கூட மழை கரைக்குமா என்ன? அடித்து பெய்யும் மழையில் மெதுவாக சென்று கொண்டிருந்தாள், அந்த மழை அவளை மேலும் அவ்வுணர்ச்சிகளில் மூர்க்கமாக ஆக்கியதை சுய எள்ளலுடன் தான் எதிர்கொண்டாள். காமத்தைக்கோரும் பெண்ணை யாராவது விலக்கி கேட்டுள்ளீர்களா? அதுவும் காமுற்றவனே, அந்த உணர்வுகளை என்னவென்று வரையறுப்பது. மேலும் சிறப்பாக இத்தனை நடந்த பிறகும்.. மீனா அவற்றைத் தவறாக உணரவில்லை, எதையோ பெரிதாக இழந்துவிடதாக அவள் உணர்ந்தாள்.. அவனை விரும்பின ஒரு தவறைத்தவிர அவள் வேறு தவறு இழைக்கவில்லை. அவளுக்கு ஆங்காரத்தில் கண்ணீர் வந்தது, காமத்திற்காக யாராவது அழுதுள்ளார்களா? இதற்கு பின்னால் இருக்கும் வலியை அவனுக்கு எப்படி உணர்த்துவது என்று மீனாவிற்கு பிடிபடவில்லை... “ஆண்ட்டி, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாக வழியச்சென்று காமம் கோரும் போது அதை எதிர்கொள்ளும் திராணி இல்லை, ஆண்கள் அப்போது அப்பெண்களை மூர்க்கமாக வெறுக்கத் துவங்கிவிடுகிறார்கள்” என்று ஏதேதோ யோசனையுடன் கூறினாள், அவள் என்னை ஆண்ட்டி, ஆண்ட்டி என்று அழைத்துக் கொன்று கொண்டிருக்கிறாள், அதிலிருந்து விடுபடவாவது இந்தக்கதையை சீக்கிரம் முடிக்க வேண்டும்...

ஆனால் சேகர் மீனாவிடம் மீண்டும் வந்தான், அவர்கள் குடிசையில் சந்தித்திருந்த அதே வாரத்தின் வெள்ளி இரவு மீனாவின் அம்மா-அப்பா அடுத்த நாள் சனிக்கிழமை மதியம் வந்துவிடுவதாகச் சொல்லி அவளைத் தனியாக விட்டுச்சென்ற அந்த இரவில் சேகர் சரியாக சொல்லி வைத்ததைப் போல் வந்தான். எத்தனை மணிவரை பேசித் திழைத்திருந்தார்கள் என்று அறியாமல் மணிக்கணக்காய் ஒரு படுக்கையில் படுத்துக்கொண்டு பேசித்திழைத்திருந்தார்கள், நொடிமுட்களும், நிமிடமுட்களும், மணிமுட்களும் கூட அவர்களுடன் பயணிக்கவில்லை. நேரமற்றுப்போன அந்த இரவில் அவர்கள் கட்டுண்டு கிடந்த கணங்கள் எந்த ஒரு கால நேரத்தையும் தனக்குள் கொண்டில்லை. அவர்கள் யுக யுகமாகவோ, இன்னும் பிற அறிந்தில்லாத மிகப்பெரிய கால அளவில் எண்ணிக்கையில்லாத எண்ணிக்கையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பேச ஆயிரம் இருந்தது... அவளுக்கு இனிவரும் அத்தனை காலவெளிகளையும் அந்த கணங்களுக்குள் கரைத்துவிடும் எத்தனிப்பு. ஒருவேளை அதுதான் இறுதியானதும், முதலானதுமான வேட்கையின் வெளிப்பாடுகளாயிருக்கும் என்று அவர்கள் உள்ளுணர்வு கூறியிருக்க வேண்டும். அது அப்படித்தான் ஆனது, எந்த ஒரு காரண காரியங்களுமின்றி, பெரிதாக அது தடைபட்டுப்போனது. நினைக்கும் கணமெல்லாம் உடலெங்கும் சிலிர்த்து அடங்கும் நினைவுகளாக சேகரமாகிப்போன அந்த இரவை எல்லா இரவுகளும் மீனா கடக்கிறாள், இன்னும் அந்த இரவைக் கடந்தபாடில்லை. அந்த இரவின் வீச்சம் முழுதாக இத்தனை வருடங்களான போதிலும் மீனாவிற்குள் குறையவில்லை.

துள்ளித்திருந்துகொண்டிருந்த மீனா, அந்தப் பின் இரவில், விடியலுக்கு சற்று முன்னர் அவளுடைய அம்மா அப்பாவிடம் மாட்டிக்கொண்டு விடிய விடிய கற்சிலையாக அமர்ந்திருக்க ஊரே அவளை மாலை வரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை போல் ஆடி ஓடித்திரிந்து கொண்டிருந்தவள் அன்று பெரிய மனுசியைப்போல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள். அவளுடைய அப்படியான இருப்பு அங்கிருந்தவர்களை மென்மேலும் எரிச்சல் படுத்தியது.. ஆனால் மீனா அசராமல், கொஞ்சமும் சளைக்காமல் அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கு புதிதாக எதுவும் தவறாக நடைபெற்றுவிடவில்லை என்ற அழுத்தம் அவளை அப்படி இருக்கிவைத்திருந்தது...

-5-
”அன்னைக்கு நடந்ததை தவறாக சொல்ல அங்கே யாருக்கு தகுதி இருக்கிறது என்ற அழுத்தம் என்னிடம் இருந்தது ஆண்ட்டி. உங்களையெல்லாம் எதிர்கொள்ள இப்புணர்ச்சி எனக்கு ஒரு ஆயுதம். நீங்களெல்லாம் என்னை அடித்து புனிதராகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இந்த உலகில் புனிதரென நிறுவிக்கொள்வது உங்களுக்கெல்லாம் எத்தனை துன்பமானதும் மற்றும் இயலாததுமான ஒரு கடினமான காரியம்? என்று மனதில் நினைத்துக்கொண்டேன் ஆண்ட்டி, இப்பயா இருந்தா உங்களில் யார் பரிசுத்தமானவரோ அவர் என் மேல் கல் எறியுங்கள் என்று நினைச்சிருப்பேன் ஆண்ட்டி” என்று கூறிவிட்டு புன்னகைத்தாள்

”அப்பறம் எப்பதான் எழுந்திருச்ச நீ” என்று கதைசொல்லி நான் ஆர்வத்தில் கேட்டேன், அவள் சிரித்துக்கொண்டு “நிறைய பேர் திட்டினாங்க ஆண்ட்டி, சில பேர் அடிக்க கூட செய்தாங்க., அம்மா கூட அப்பப்ப அடிச்சாங்க... அப்பா அந்த நாள் பூராவும் குனிஞ்சே உட்கார்ந்திருந்து விட்டு ரெண்டே மணியில் குடியில் மூழ்கிட்டாரு, அப்பறம் அவர் சாகும் வரை என்ட்ட ரெண்டு மூனு வார்த்தை தான் பேசியிருப்பாரு. வீட்டுக்கு வந்திருந்தவங்கல்லாம் போயிட்டிருந்தாங்க. நான் மூன்று நாட்கள் அப்படியே சோறு இல்லாம, எல்லாரும் படுத்த பின் இரவில் பாத்ரூம் போயிட்டு, தண்ணி குடிச்சிட்டு வந்து திரும்பவும் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருந்தேன், அப்பப்ப ஆள் நடமாட்டம் இல்லாதப்ப லேசா அப்படியே காலை மடக்கிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து கொண்டேன். அஞ்சாவது நாள் எனக்கு வீட்டிற்கு தூரமாகிப்போச்சி, அன்றைக்கே சூடா எனக்கு பிடித்த சாம்பார், சட்னியுடன் தட்டுல இட்லி வந்துடுச்சி. கட்டிக்க இருந்த மாமா பையன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அக்கம் பக்க கிராமங்களில் விசயம் தெரிந்து யாரும் கட்டிக்க வரலை. அம்மா அப்பாக்கும் வேறு வழி இல்லாம போயிடுச்சி, அடுத்த மாசமே நான் கேட்ட மாதிரி “கம்பியூட்ட சயின்ஸில்” ஆர்ட் அன் சயிஸ் காலேஜில் சேத்துட்டாங்க.. இதோ இப்ப அமெரிக்கா வரை அந்த படிப்பு கூட்டிபோய் வந்துடுச்சி” என்று கண்களைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தாள்.

அல்ப புணர்ச்சி என்று அடை மொழியப்பட்ட அப்பேருணர்ச்சிகள் இல்லையென்றால் மீனா அந்த வாழ்வில் தோற்றுப் போயிருப்பாள். தான் எதிர்கொண்ட துன்பங்கள் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, ஒரு தனியான வெற்றிப் பாதையில் போக மீனாவிற்கு அந்த அல்பப் புணர்ச்சியே உதவியது, இதோ இந்த உலகத்தை சுற்றத்தை சூழலை ஒரு புதிய பார்வையில், புதிய கோணத்தில் பார்க்க, அணுக மற்றும் அனுபவிக்க அந்த புணர்ச்சி தான் வழி கொடுத்தது. அந்தப்புணர்ச்சி, அந்த அல்பப் புணர்ச்சி மட்டும் இல்லையென்றால், மீனா ஏதோ ஒரு கிராமத்தில் எளியவன் ஒருவனின் மனைவியாக அவளைப் பொருத்தமட்டில் போலி மதிப்பீடுகளில் நாட்களை வீணாக எவனுக்கோ சேவகம் செய்து, சமையலறையில் வெம்மையில் கழித்திருப்பாள். மீனாவை இந்த உலகம் மென்மேலும் மோசமாக மிஸ் யூஸ் செய்திருக்கும்... என்று கதையை முடித்துவிட்டு மீனாவிடம் படித்துக்காட்டினேன்..

மீனா அவளது அழகிய கண்களை உருட்டி என்னைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு அருகில் வந்தாள். ”இப்படியெல்லாம் காவியமா அணுக புணர்ச்சியில் பெரிதாக ஒன்னும் இல்லை ஆண்ட்டி, அந்த வயதில் அந்த வாழ்வில் அது இயல்பான, சாதாரணமான ஒரு விசயம் தான். என்னைப் பொருத்த வரை அதுவும் பசியைப்போல ஒரு உணர்வு தான். யாராவது பசியாற்றிக்கொள்வதற்கு இப்படி குற்ற உணர்வு கொள்வார்களா? இந்த விசயத்தை இத்தனை அழகுபடுத்தாதீங்க, அதுவே நிரடலா, குற்ற உணர்வுடன் இருப்பது போல இருக்கு” என்றுவிட்டு, அய்ந்தாம் பாகத்தின் (மேற்கண்ட) மூன்றாவது பத்தியை அழித்துவிட்டு, இரண்டாவது பத்தியின் இறுதியிலேயே தொடர்ந்து தட்டச்சு செய்தாள்.

பிறகு, மீனா ஒரு சிறு அணைப்பினை கொடுத்துவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு அவளுடைய அப்பார்ட்மெண்டிற்கு கிளம்பினாள், அங்கே மீனாவிற்காக அழகான இரு ஆண் குழந்தைகளும், பாசமான கவர்ச்சியான கணவரும் காத்திருப்பார்கள்.... - இப்படியாக கதையின் முடிவை தட்டச்சிவிட்டு மீனா, ஒரு சிறு அணைப்பினை கொடுத்துவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு அவளுடைய அப்பார்ட்மெண்டிற்கு கிளம்பினாள்.
000

No comments:

Post a Comment