குரைக்கும்
பியானோ
ச.துரை
*
அன்றொரு ஞாயிறு
தாமதமாகதான் எழுந்தேன் வீடு தனது எளிமையான உடையை அவிழ்த்து போட்டு பூதகரமாக
இருந்தது. விடுமுறையின் தேநீரை நானே தயாரிப்பது எனக்கு
பிடித்தமானது. அப்படி தயார் செய்த தேநீரோடு நாளிதழ் செய்திகளை துண்டு துண்டாக வாசிக்கும்
போதுதான் அந்த வித்தியாசமான அறிவிப்பிருந்தது. அதாவது.
"இதை ஒரு
வேடிக்கையான வேண்டுதலாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் இத்தனை சிரமப்படுகிற
என்னால் வேறு என்ன செய்யமுடியும் வேண்டதான் முடியும். என் பிரச்சனைகான தீர்வு
இங்கு எங்கோ மறைந்திருக்கிறது.
எனக்கு பியானோக்களை பழுது பார்க்கும் திறமையான கலைஞர்கள் தேவைபடுகிறார்கள். பன்னிரண்டு வருடமாக தேடிக்கொண்டிருக்கிறேன்.
யாரும் சரிசெய்யவில்லை. நிறைய
மனஅழுத்தப்பட்டிருக்கிறேன். யாராவது இருந்தால் உதவலாம் ஆனால் பியானோவை வீடு வந்து அதுவும் இரவுகளில் பழுது பார்க்க கூடியவராக இருக்க
வேண்டும்" என்ற அறிவிப்போடு முகவரியிருந்தது.
அந்த முகவரி என்
அறையின் பின் தெருவிலுள்ளது ஆர்வம் மேலோங்கி விழித்தது
யார் இவர்? பன்னிரண்டு வருடமாக ஒரு பியானோவோடு
போராடுகிறாரா?
அப்படி என்ன
இருக்கிறது அந்த பியானோவில் எதாவது சுவாரஸ்யம் இருக்கும் தெரிந்து கொள்ள
ஆர்வமாயிருந்தது.
ஞாயிறின் மதிய
உணவை தயாரித்து உண்டு பொழுதுபோகாமல் படுத்துருண்டு கொண்டிருந்த போது அந்த முகவரி
மீண்டும் நினைவுக்குவர போகலாமே என கிளம்பினேன். மெல்லமாக நகரின் சாலையை ஆறுதுண்டுகளாக
வெட்டினேன். நகர்புறங்களில் இப்படியான அமைதி ஞாயிறு தெருக்களில் மட்டுமே கிடைப்பவை
நல்ல அமைதியான
தெரு. வீட்டின் வெளிபுறம் அத்தனை ஈர்ப்பான பொலிவெல்லாம் இல்லை கதவினை தட்டி
காத்திருந்தேன்.
யாரோ கொஞ்ச
நேரம் கதவின் மறுபுறம் நிற்பது மாதிரிப்பட்டது. நான் என்னை அறிமுகப்படுத்துவதற்காக
தயார் நிலையில் இருந்தபோது வேகமாக சப்ததோடு தாழ்கள் நீங்க மெல்ல கதவு திறந்தது
எனக்கு பெரும் அதிர்ச்சி கதவை திறந்தது மெக்ஸிகோ பார் சண்டைகாரன்.
நான் யாங்கூர்
கடற்கரைப்புற படகுகளுக்கான சிறுபொருள் விநியோகிக்கும் நிறுவனமொன்றில் பணியாற்றியபோது அங்கிருந்த மெக்ஸிகோ மதுவிடுதிக்கு
போவது வழக்கம்
அப்போது இவனை பார்த்திருக்கிறேன். அடிக்கடி அவ்விடுதி
சிப்பந்திகளிடம்
சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவான் ஆனால் இவனுக்கு காதுகேட்காது. எதையும் ஒன்றுக்கு மூன்று முறை
சொல்லவேண்டும்.
நான் இந்த
அமைதியான ஞாயிறை ஒரு செவிடனோடு கழிக்க விரும்பவில்லை
வீடு மாறிவந்துவிட்டேன்
மன்னியுங்கள் என கூறியபடியே கையசைத்தேன்
அவன் தனது
நீள்வட்டமான தலையை மரப்பொந்துகளில் இருந்து வெளிநீட்டுகிற
பட்சிகளை மாதிரி கதவுக்கு உள்ளிருந்து வெளியே தலையை நீட்டி, நீங்கள் சரியாக
தான் வந்திருக்கிறீர்கள் உள்ளே வாருங்கள்! என்றான்.
எனக்கு ஆச்சரியமாக
இருந்தது. இவனுக்கு காது கேட்கிறது. இந்த அமைதியான ஞாயிறு வீணாகவில்லை வீட்டிற்குள் நுழைந்தேன் எனது மிக சிறிய அறையின் பூதாகரத்தை அந்த முழுவீடும் உட்புறம்
அணிந்திருந்தது அவன் எனக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தான்
”உங்கள் பியோனோ எங்கே?” அவன் திரும்பி பார்த்து, ’என்னது?’ என்று கேட்டான்
’பியானோ’ என திரும்ப கூறினேன்
இடதுபுறமிருந்த
ஒரு அறையை காட்டினான். நான் மெல்ல என் பாதணியற்ற வெற்றுக்கால்களால் வீட்டின் வலுவலுப்பான தரையை
சுழற்றி சுழற்றி அறையை அருகே வரவைத்தேன். அதன் கைப்பிடி நீண்ட நாட்களாக தொடுதலற்ற சாயலை கொண்டிருந்தது. கொஞ்சம் கடினமாக அழுத்தி திறந்து எட்டிப்பார்த்தேன். அறைக்குள் ஒரு சின்ன நாற்காலி, புத்தகமடங்கிய அலமாரி, விசாலமான மெத்தை, நீண்ட நாட்களாக ஓடாத மின்விசிறி மட்டுமேயிருந்தது. மீண்டும் அவரை பார்த்து இங்கு எங்கே பியானோ
இருக்கிறது? என கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே எனது பிரச்சனையே அதான். அந்த மெத்தைதான் எனது பியானோ. அதில்தான்
இத்தனை ஆண்டுகளாக இசைத்தேன். இப்போது பழுதாகிவிட்டதென்றார்.
எனக்கு இப்போது
தெளிவாகி விட்டது நான் இந்த ஞாயிறை ஒரு செவிடனிடம் இருந்து
காப்பாற்றிவிட்டு பைத்தியத்திடம் சிக்கக் கொடுத்து விட்டேன்
”என்னை பைத்தியமென்று நினைக்கிறீர்கள்” என்றான். நான் இல்லையென்பது போல தலையாட்டினேன்
”பன்னிரண்டு வருடமாக தேடிக்கொண்டிருக்கிறேன் நல்ல திறன்மிக்க பியானோ பளுது நீக்கிகள்
யாருமில்லை எனக்கு. என் நிசியின் பியானோ வேண்டும் அதை என் விரல்களால் இசைக்க வேண்டும்” என்றார்.
சற்று
மெத்தையின் முன்புறம் அமர்ந்து அவற்றை பியானோவாக இசைக்கிற
ஒருவனை
நினைத்துப் பார்த்தேன். விநோதமான நகைசுவையாய் இருந்தது.
அவனே பிறகு
தொடர்ந்தான்.
”எனது பிரச்சனை விநோதமானது என்கிறார்கள் எனக்கு அதன் தரம் பிரித்து சோதனையிடுவதில்
எல்லாம் ஆர்வமில்லை. அது மொத்தத்தில் பிரச்சனை அதை நீக்கவேண்டும் அதைதான் விரும்புகிறேன்” என்றான். நான் எனது காதுகளை இப்போது கூர்மையாக்கி
கொண்டேன்.
”உங்கள் பெயர்?” என்று கேட்டான்
”என் பெயர் வில்சென்ட்”, என்றேன்
”என்ன பெயர்?” என்று கேட்டான்
”வில்சென்ட்”, என்று திரும்ப கூறினேன்
”மிஸ்டர் வில்சென்ட் நீங்கள் இந்த வாழ்வில் உங்கள் காதுகளை வெட்டிப்போட
எண்ணியிருக்கிறீர்களா?” நான் அதிர்ந்துபோய் இல்லையென அவசர அவசரமாக தலையாட்டினேன்
”நான் எண்ணியிருக்கிறேன் இந்த காதுகளை வெட்டுவதற்கான எல்லா கொடூர முயற்சிகளையும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில்
எடுத்துவிட்டேன் எனக்கு எல்லாம் கேட்கும் ஆனால் செவிடனென்கிறார்கள்” என்றான்.
”ஆமாம் நான் கூட அப்படிதான் நினைத்தேன்”
”என்ன நினைத்தீர்கள்?”
”செவிடனெற்று”
அவர் தனது
அரக்கு கண்களை விரித்து பார்த்தார். ”சரி வில்சென்ட் எனக்கு நீங்கள் உதவமுடியுமா? எனது பியானோவை
சரி செய்ய வேண்டும்” என்றார்.
எனக்கு மீண்டும் அந்த விநோதமான நகைசுவைகாட்சி நினைவு வரத்தொடங்கியது என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கத் தொடங்கினேன்.
”உங்களை எனக்கு பிடித்துவிட்டது வில்சென்ட் என்ன உண்கிறீர்கள்?” என உற்சாகமாக
கேட்டார்.
”சர்க்கரை கம்மியாக ஒரு தேநீர்”
ஐந்து
நிமிடமென்றபடியே வேகவேகமாக சமையலறை சென்றார். நல்ல மனிதர் தான். என்ன அடிக்கடி
அந்த பியானோ பற்றி பேசுவதுதான் எரிச்சலூட்டுவதாக தோன்றுகிறது. ஆமாம் ஏன் காதுகளை அறுக்க முற்படுகிறார் சரி
நமக்கெதற்கு அதெல்லாமும்? வேகமாக இங்கிருந்து முதலில் வெளியேறுவோம் என்றிருக்கையிலே அவர்
தேநீரோடு வந்தார். இருவரும் ஆளுக்கொரு கோப்பைகளை
எடுத்துக்கொண்டோம்
இப்போது
நான்தான் ஆரம்பித்தேன் ”உங்களின் இன்றைய நாளிதழ் அறிவிப்பை பார்த்துதான் உங்களை தேடிவந்தேன்” என்றேன்.
”ஓ! அப்படியா மகிழ்ச்சி ஆனால் நான் அந்த அறிவிப்பை முழுமையாக வெளியிடவில்லை
ஒருவேளை அப்படியாக வெளியிட்டிருந்தால் நீங்கள்
என்னை தேடி வந்திருக்க
மாட்டீர்கள். இந்த மோசமான தேநீரீடமும்
தப்பித்திருப்பீர்கள்” என்றார். இருவரும் சிரித்தோம்
அவர் தனது வலது
பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை
எடுத்து கொடுத்தார்.
இதான் எனது முழு
அறிவிப்பு செய்தி. இதை அப்படியே அறிவிக்கதான் முதலில் எண்ணினேன். பிறகு ஓரிரு வரிகளாக மாற்றி விட்டேன். இதை நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டும். ஆனால்
இங்கில்லை உங்கள் வீட்டில், என்றார் நானும் அதை பத்திரமாக வாங்கி வைத்தபடி எழுந்து கைகுழுக்கினேன். அழகான
சிரிப்போடு விடை பெற்றோம்
000
வெளியே வந்தபோது
ஞாயிறு மெல்ல இரவுக்கு தயாராகிக்கொண்டிருந்தது. ஆமாம் அவர் என் பெயரை கேட்டார். நான் ஏன் அவர் பெயரை கேட்கவில்லை? என தோன்றியது. இந்த ஞாயிறின் ஒன்றிரண்டு மணிநேரங்கள் பெயர் தெரியாத ஒருவருடன்
கழிந்திருப்பதை எண்ணியபடியே அந்த அமைதியான தெருவின் சாலைகளை
மீண்டும் ஆறுதுண்டுகளாக்கி அறைக்கு வந்தேன். அறை தனது பூதகரமான சுவர்களை பெருத்து வீங்க வைத்து மீண்டும் குன்ற வைத்துக்
கொண்டிருந்தது ஒரு பெரிய குடுவை நிறைய தண்ணீர் குடித்து மெத்தையில் சாய்ந்தேன் அந்த விநோதமிகு நகைச்சுவை காட்சி திரும்ப நினைவு வந்தது
மெத்தையை ஒருவன்
எப்படி பியானோவாக்குவான் என சிந்திக்கத் தொடங்கினேன்.
ஒரு சிகரெட்
புகைக்கலாம் போலிருந்தது நான் சிகரெட்
புகைத்து நீண்ட நேரமாகிவிட்டது. இவ்வளவுக்கும் சிகரெட் எனது பேண்ட்
பாக்கெட்டிலேயே
இருந்தது. பாக்கெட்டில் கையை நுழைத்த போது அவன் கொடுத்த அறிவிப்பு மடல் இருந்தது. மெத்தையில் மடலை வைத்துவிட்டு சிகரெட்டை பற்ற
வைத்தேன்.
சிகரெட்
புகைகளில் வளைவில் அவன் அமர்ந்து அறை
முழுக்க உலாவி உலாவி
மெல்ல வாசி மடலை
வாசி, என கூறுவது மாதிரிபட்டது.
மெல்ல மடலை திறந்தேன்
அது அறிவிப்பு மாதிரி இல்லை ஒரு டைரி குறிப்பு. புலம்பலைப் போலிருந்தது முழுதையும் வாசித்து
முடிக்கையில்தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானதென்று. அவசர அவசரமாக
அறையை விட்டு வெளியேறி அவன் வீட்டை சென்றடைந்தேன். வீடு பூட்டியிருந்தது உடம்பு நடுங்க ஆரம்பித்தது. அவன் பெயரை கூட
கேட்கவில்லையே என
வருந்த தொடங்கினேன். அங்கேயே அமர்ந்திருந்தேன். அவன் நிச்சயம்
வீடு வருவானென நம்புகிறேன். அந்த அமைதியான தெரு இப்போது கலோபரமாக தன்னை மாற்றியது அன்றிரவுதான். தெருவின் சாலைகள் இரவுகளில் புரண்டு படுப்பதை
பார்த்தேன். மடலை கைகளில் நன்கு பற்றிக்கொண்டேன்.
*
அதாவது மடலில்
அன்பு
வின்சென்ட்,
எனக்கு
பியானோக்களின் பழுது நீக்கும் தேர்ந்த கலைஞன் ஒருவன் தேவைப்படுகிறான் அவரால்தான் என் பிரச்சனைகளை சரிசெய்ய
முடியும். சில தினங்களாகவே அவர்களைத் தேடி அலைந்து பல கலைஞர்களை பார்த்தும் பகிர்ந்தும் கூட என் பிரச்சனைக்கான
தீர்வை யாராலும் கொடுக்க முடியவில்லை நான் சிரமப்படுவதை வெளிகாட்டிக்
கொள்ளமாட்டேன் என்பதே கூட அவர்களின் அலட்சியத்திற்க்கு காரணமாக இருந்திருக்கலாம்.
பியானோவை பழுதுபார்க்க கூடியவர்கள் வேண்டுமென்பதால் என்னை ஒரு பியானோ இசை கலைஞன்
என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள் எனக்கு பியானோவெல்லாம் வாசிக்க தெரியாது பொதுவாகவே நான் பார்த்த
அதிகமான பியானோ இசைக் கலைஞர்கள் தாடி இல்லாதவர்களே. அதனாலே முதற்காரணம் நான் பியானோ இசைத்தால் அத்தனை பொருத்தமற்றதாயிருக்கும். ஆனால் ஒரு தேர்ந்த பியானோ இசை கலைஞனை மாதிரி
எனக்கு பாவிக்க தெரியும் .
என் நிசிகளில்
நான் தனித்து எழுந்து ஒரு பியோனோ வாசிக்கிறவன் கட்டைகளை இயக்குவதை போல மெத்தைகளின்
சுருங்கள்களை இயக்கி இசைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு முன் அன்றைய நிசியில் அதே போலதான் சற்றே குனிந்த தலையோடு என் மொத்தையின் சுருங்கல் கட்டைகளை இசைத்தேன். அதன் ஏ பி மற்றும் ஏ சி கட்டைகளை அழுத்திய போது வழக்கத்துக்கு மாறாக
"டொள்" என்று சப்தம் கேட்டது. அது ஒரு பியானோவின் சப்தமே இல்லை ஒரு கனத்த குரல் கொண்ட நாயொன்று பியானோவுக்குள் புகுந்து "லொள்"ளென்று குரைப்பது மாதிரி இருந்தது. மீண்டும் அடுத்தடுத்து கட்டைகளை வேகமாக
இயக்கினேன். டொள் டொள் டொள்ளென படுவேகமாக சுழன்றது. எனக்கு லொள் லொள் லொள்ளென பியானோ குரைப்பது மாதிரிபட்டது என்னால் நிசியில் பியானோ வாசிக்காமல் இருக்க முடியாது
அன்றிரவு
முழுக்க அதே சப்தத்தோட வாசித்தும் முடித்தேன். மறுநாள் காலை அந்த சப்தத்தோடுதான் விடிந்ததும் வெகு இயல்பான விடியலை மாதிரியே இல்லை.
நிசியின் பியானோவுக்குள் விழுந்த அச்சப்தத்தை அந்நீள வாசிப்பில் நேசிப்பது மாதிரி நான் வாசித்திருக்ககூடாது. அறைக்குள் வந்த அம்மா சில ரூபாய் தாள்களை
நீட்டி
"ஒரு கிலோ டொள்
வாங்கிட்டு வா" என்றதும் எனக்கு படுஅதிர்ச்சியாய் இருந்தது. இது நிசியின்
பியானோ சப்தமாகிற்றே! அம்மா எப்படி உச்சரிக்கிறாள் என்று குழம்பத்தொடங்கினேன். அதன் பின்னேயே வந்த அலைபேசி சப்தம், தூரத்து கோவில்
பாட்டு, அப்பா வெளியே செய்திதாள் போடுபவோடு பேசுகிற சப்தமென அத்தனைக்குள்ளும்
"டொள்" சப்தம் கனம் விட்டு விட்டு கேட்பதை உணரமுடிந்தது.
.
என் சகாக்கள்
யாரிடமுமே நான் இதை பகிரவில்லை அப்படி பகிர்ந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்
நகைப்பார்கள் என்றுதான் எனக்கு பட்டது. நான் அன்றைய நிசியில் முதல் "டொள்"
சப்தம் கேட்டபோதே போர்த்தி உறங்கியிருக்கலாம். இத்தகைய பிரச்சனை நீண்டிருக்காது. ஆனால் யார்தான்
வாசிக்காமல் விடுவார்கள்? சதா ஒவ்வொரு நிசிகளிலும் மெத்தை சுருங்கள்களில் பியானோவின் இசை வழிந்தால்
யார்தான் நிரப்பாமல் தவிர்ப்பார்கள். நானும் அதைதான் செய்தேன். அந்நாளின் இரவிலே இருப்பு கொள்ளாது வெளியேறி
எங்காவது தற்கொலைத்துக் கொள்ளலாம் போல் தோன்றியது. டொள்ளுக்குள் விழுகிற சொல்லை தேடி எடுப்பதில்
ஒரு படுதேர்ந்த ஆய்வாளனை போல என்னை நடத்த வேண்டியிருந்து நிறைய சமாளிக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில் வேண்டுதலோடு பலரை நிராகரிக்க வேண்டியிருந்தது. ரகசியகரமான விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள
சிரமமாயிருந்தது.
எந்த சப்தமும்
விழாது செவிகளை அறுக்காது, இரத்தம் காணாது, இப்படியே இந்நோய்மை தீரும்வரை மயங்க வேண்டும் போல் தேன்றியது. நாம் ஏன்
பியானோ பழுது பார்க்கிறவனோடு நம் அறையை பகிர கூடாது. அவனால்தான் நமது நிசியின் பியானோவில்
ஏற்பட்ட பழுதை சரிபார்க்க முடியும் என்கிற நினைவோடு பழுது பார்க்கிறவர்களை பன்னிரண்டு வருடங்களாக தேடியலைய
தொடங்கினேன்.
நிறைய பழுது
பார்க்கிறவர்களை பார்த்தும், அவர்கள் வீடு வந்து சரி செய்ய முடியாது
நீங்கள்தான் உங்கள் பியானோவை கொண்டு வர
வேண்டுமென்கிறார்கள். நான் எப்படி காண்பித்தாலும் என் பியானோ அவர்களுக்கு மெத்தையாகதான் தெரியும்.
எப்படி நான்
விளக்குவது என்கிற குழப்பம் அதிகரிக்கவே செய்தது. வீடு தேடி வந்த சில பழுது பார்க்கிறவர்களும்
மெத்தையை பியானோ என்கிறான் பைத்தியம், என்று திட்டினார்கள்.
வீடே என்னை
பைத்தியகாரனை மாதிரி பார்க்கத்தொடங்கி விட்டது. என்னால் என் பியானோவை சரி செய்ய முடியாதா? என்கிற
போதுதான் இணையங்களில் பார்த்த ஒரு முகவரியை
சென்றடைந்து அங்கு அத்தனையும் விளக்கி கூறினேன்.
அவர்கள் சற்றே
ஆச்சரியப்பட்டாலும் வீடு வந்து பார்த்தார்கள். என்னை பியானோவை இசைக்க சொன்னார்கள்
"இந்த பியானோ
இரவுகளில் மட்டும் இசைகொடுக்கும் நீங்கள் என்னோடு ஒரு இரவு தங்கினால் சரியாக்கி விடலாமென்றேன்"
பழுது பார்க்க
வந்தவள் பெண் என்பதால் படுமோசமான வார்த்தைகளில் என்னை வசை பாடியபடி சென்றாள்
இப்போதெல்லாம்
மெல்ல மெல்ல குறுகி மூன்று வார்த்தைகளுக்கு இடையே கேட்ட டொள் இப்போது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையே
கேட்க தொடங்கிவிட்டது. பல நேரங்களில் யாராவது பேசினாலோ எதாவது சப்தங்களோ டொள் டொள் டொள் என வரிசையாக
கேட்கிறது. என் பிரச்சனை தெரியாத எல்லோரும் புகார்களை முன் வைக்கிறார்கள். எதை கூறினாலும் காது கேட்காதவனை போல திரும்ப
திரும்ப கேட்கிறானென்றார்கள். இதனாலே பல மருத்துவர்களை பார்க்க வேண்டி வருகிறது
ஆனால் எனக்கு
தெரியும் என் நிசியின் பியானோவை யாரோ பழுதாக்கி விட்டார்கள் அதான் என் பிரச்சனை. அதுசரியானால்
அத்தனையும் சரியாகிவிடும்.
வேறு வழியில்லை
நான் வேண்டித்தான் ஆக வேண்டும். உங்களுக்கு தெரிந்த டொள் பழுது பார்க்கிற, தேர்ந்த டொள்
கலைஞர்கள் டொள் இருக்கிறார்களா? ப்ளீஸ் டொள் பண்ணுங்களேன்! -வின்சென்ட்"
நான் படபடப்போடு
அந்த மடலை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். நான் பேசும் போதெல்லாம் அவர்
சரியாகதானே பதில் சொன்னர். அப்படியே டொள் டொள் சப்தங்கள் கேட்டிருந்தால் எனது எந்தெந்த வார்த்தைகளில் கேட்டிருக்கும் என
யோசிக்கத்தொடங்கினேன். உண்மையிலே அவர் சொன்னது போல பிரச்சனையை தரமாதிரியாக பிரித்தெடுப்பதை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகளைதான் தேட வேண்டும்
அப்போது யாரோ
எதிர் வீட்டின் கதவை திறந்து வெளிவந்தார். ’யார் டொள் நீங்க
இந்நேரத்தில்
இங்க என்ன டொள் பண்றீங்க?’ என்றார்
எனக்கு
இவ்வாழ்வில் முதன் முறை என் காதுகளை அறுத்துப்போட வேண்டும் போல் அப்போது
தோன்றியது.
000
நடுகல் 3
No comments:
Post a Comment