Tuesday, 12 March 2019

நடுகல் முதல் இதழ் தலையங்கம்





 உங்களோடு,
 எல்லோருக்கும் முதல் வணக்கம்!

  ஒரு சிற்றிதழ் துவங்கி நடத்த வேண்டும் என்கிற ஆசையை நான் முன்னெப்போதோ முடித்துக் கொண்டேன். நடுகல் 1991 ஆவணியில் முதல் இதழ் திருப்பூரிலிருந்து வெளிவந்தது. முதல் ஆறு இதழ்கள் மாதம் தவறாமல் வர காரணம் என் நண்பர்கள். அதன்பிறகு அச்சகத்தில் எழுத்துப் பொறுக்க்கியாக இருந்த நான் நினைத்த போது இதழை பல வடிவங்களில் கொண்டு வருவதை வழக்கப்படுத்தியிருந்தேன். சந்தா ஒவ்வொன்றும் ஒருதுளி ரத்தம் என்றெல்லாம் அறிவிப்போடு முதல் இதழ் வெளிவந்தது. சந்தாக்களும் சில கிட்டின. ஆறு இதழ்களுக்கும் பின்பாக தமிழகம் முழுக்க படிக்கும் ஆசையுள்ளோருக்கு இலவச பிரதியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். இதனால் அப்போது பல இலவச இதழ்கள் மாற்று இதழ்களாக எனக்கும் கிட்டின. அப்படி வந்தது தான் சுகன் இதழ். சுகன் இதழிலும் கோவையிலிருந்து வந்த முங்காரி இதழிலும் எனது கதைகள் வெளிவரத் துவங்கின.  மேலும் பல கவிதை இதழ்கள் வந்து சேர்ந்தன. மவ்னம் என்றொரு இதழை லக்குமிகுமாரன் ஞானதிரவியம் அப்போது நடத்திக் கொண்டிருந்தார்.

  எப்படியாயினும் சர்ரியலிசம் சாம்பார் இசமென பல புதிய வடிவ முயற்சிகளை அப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தேன். எழுதிய எனக்கும் புரியவில்லை. இந்த தடத்தில் என்னை இழுத்து விட்டு வேடிக்கை பார்த்த என் தந்தையாருக்கும் நான் என்ன எழுதுகிறேன் என்று புரியவில்லை. அவரின் மறைவுக்குப் பிறகு அவரது கவிதைகளை மட்டுமே தாங்கி நடுகல் இதழ் 21 வந்தது. அத்துடன் ஷட்டர் சாத்தப்பட்டு விட்டது.

  பின்பாக இறக்கை என்றொரு இதழை நடுகல்லில் இருந்து விலகிய வடிவில் ராசமைந்தன் என்கிற புனைப்பெயரை வைத்துக்கொண்டு கொண்டு வந்தேன். சரி இவற்றையெல்லாம் எதற்காக நடத்தினேனோ அந்த இலக்கை அடைந்து விட்ட பிறகு இதழ் நடத்தும் எண்ணமில்லாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது. மீண்டும் நடுகல் பதிப்பகத்தை நண்பர்கள் துவங்க ஒத்துழைத்தார்கள். அதில் பத்து புத்தகங்கள் வரை கொண்டு வந்துள்ளோம். இந்த இதழ் எண்ணத்தை மீண்டும் கிளப்பி விட நண்பர்கள் புதிதாய் கிளை விரித்தார்கள்.

  இதழ் நடத்துவது சாதாரண காரியமல்ல என்பதை இதழ் நடத்துபவர்கள் அறிவார்கள். படைப்புகளை படைப்பாளர்களிடம் சேகரம் செய்வது என்பது என்னால் இயலாத காரியம். ஆனாலும் நண்பர்கள், ‘அதெல்லாம் பார்த்துக்கலாம்! நாமளே எழுதுனாப் போவுது!’ என்ற அடுத்த அஸ்திரத்தையும் விட்டார்கள். காலம் மாறிப்போய்க் கிடக்கிறது. 20 பக்கம் 30 பக்கம் உள்ள சிற்றிதழை நடத்துவது சாத்தியமில்லை. கையில் எடுத்தால் கனமாக இருக்க வேண்டும். கனமாக இருக்க கனமான படைப்புகளும் வேண்டும். முகநூல் அதை எளிமையாக சாத்தியப்படுத்திவிட்டது.

  நடுகல் இதழுக்கு படைப்புகள் தேவை என்று முகரைப் பொத்தவத்தில் நான் பதிவிடுகையில் கவிதைகள் என்கிற வார்த்தையை சேர்க்கவில்லை. கதைகள் பல வரத்துவங்கின. எல்லாவற்றையும் சேகரித்து வாசித்துப் பார்க்கையில் கனம் குறைவான இதழாக வருமோ? என்ற அச்சம் தோன்றியது. ஆரம்ப எழுத்தாளர்கள் கூட மகிழ்வாய் கலந்திருந்தார்கள். சிலருக்கு உள்பொட்டியில் கதையின் தன்மை பற்றி சொன்னேன். எப்படி எழுதுவது? என்கிற விளக்கம் கேட்டார்கள். சிலருக்கு விளக்கம் சொல்லும் நிகழ்வும் நடந்தது. ஒரு கட்டத்தில் அது கூட சோர்விற்கு என்னை தள்ளிவிட்டது.

  இதழுக்கு என்று எழுதிய படைப்பாளிகள் அனைவரும் நல்ல கதைகளையே அனுப்பியிருந்தார்கள். அவைகள் கதைகள். அதை எழுதிய அனைவருமே சிறப்பாகவே செய்திருந்தார்கள். நம் இதழ் இலக்கியம் சார்ந்த இதழ் என்பதை விளக்க நான் முயற்சிக்கவேயில்லை. பலரை யாரெனக் கூடத் தெரியாது எனக்கு. எப்படியாயினும் இந்த பகுதியை எழுதிக் கொண்டிருக்கையில்  எத்தனை பக்கம் இந்த இதழ் வருமெனக் கூட எனக்குத் தெரியாது. எந்த வடிவில்? அளவில் வருமென இன்னும் கூட முடிவெடுக்கவில்லை.

  கறாராக இருக்க வேண்டிய அவசியமேதுமில்லை படைப்புகள் தேர்வில். என்னால் இயன்ற அளவு சிறந்த கதைகளை இதழில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்கிறேன். படைப்புகள் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதழில் இடம்பெற்றிருக்கும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! இதழை அரையாண்டு இதழாக கொண்டு வருவதையே விரும்புகிறோம். இப்போது ஈரோடு கண்காட்சியை  முன்னிட்டு முதல் இதழ். இரண்டாம் இதழ் பிப்ரவரி 2018-ல் வரும்.  ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

அன்போடே என்றும்
வா.மு.கோமு
பேச : 9865442435 
vaamukomu@gmail.com

தொடர்புக்கு : வா.மு.கோமு, வாய்ப்பாடி (அஞ்) விசயமங்கலம் (வழி) .கு.எண். 638056. ஈரோடு மாவட்டம்.
000

No comments:

Post a Comment