சந்திரசேகர் பட்டாபிராமன் கவிதைகள்
புலரி
துப்புரவு பணியாளர்கள்
குப்பையை அல்ல
ஆரம்பிக்கிறார்கள்
பிச்சைக்காரன் ஒருவன்
புரண்டு படுக்கிறான்
ஆளற்ற சாலையின்
நடுவில் பைத்தியம் ஒன்று
அழுதும் சிரித்தும்
நடந்து செல்கிறது
ஏனோ இரவுக்காவளர்கள்
பணி முடிந்து
வீடு திரும்பும்பொழுது
தலை கவிழ்ந்தபடியே
செல்கிறார்கள்
புலரி எல்லோருக்குமானது அல்ல
அன்பின் பாதைகளை சிலருக்கு பலவந்தமாய் மூடிக்கொள்கிறது
இருளின் முடிவில்லா கம்பளத்தை அப்பொழுது தான் விரிக்கிறது
கனத்த இதயத்தோடு
நான் என் சக மனிதர்களை
கடந்து செல்கிறேன்
ஏனோ என் தலையும்
கவிழ்ந்து தான் இருந்தது
அப்பொழுது....
மழை
பற்றி எரியும்
நிலத்தை நோக்கி
முதல் மழைத்துளி வந்தது
என்னை குளிர்விக்க
போதுமான மழை
உன்னிடம் இருக்கிறதா
என்று கேட்டது
என் அன்பை
சந்தேகிக்கிறாயா
என்று கோபித்துக்கொண்டு சென்றுவிட்டது
புறக்கணிக்கப்பட்ட
அன்பை நினைத்து
நான் நடுங்கத்தொடங்கினேன்
மீண்டும்
எரியத்தொடங்கியது நிலம்
இம்முறை அது
அவ்வளவு
உக்கிரமாக இல்லை....
,____________________
சின்னஞ்சிறிய குழந்தை
புரண்டு படுக்கிறது
காற்றில் மத யானை ஒன்று
பெருமூச்சு விடுகிறது
சூரியனின் ஒளி கிரணங்கள்
பட்டு கண் சிமிட்டுகிறது
துயில் நீங்கிய பூனை
ஒரு கண் சிமிட்டலை போல
ஒரு பெருமூச்சை போல
ஒரூ புரண்டுபடுத்தலை போல
இந்த நாள்
மிக எளிதாக
கடந்துவிடாதா
இந்த அபத்தங்களை எல்லாம்
நினைத்து பூமி
மறு சுழற்சிக்கு தயாராகிறது...
Last
Seen
காலை, மதியம், இரவு
எப்பொழுதும்
உன்னுடைய
last
seenஐ
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்..
அது ஓரிரு
நிமிடங்களுக்கு முன்னாள்
உனது இருப்பை
உணர்த்தியது
நீயும் நானும்
இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறோம் என்ற
நம்பிக்கையில்
தூங்கச்செல்கிறேன்
பெருமழை ஓய்ந்த
பெருநகரத்தின்
பாதாள சாக்கடை ஒன்றில்..
சின்னஞ்சிறிய எலி ஒன்று
நடுங்கிக்கொண்டிருக்கிறது..
இன்னும் மழை
பெய்கிறதோ என்று..
000
தெனாவட்டு
ரத்தினமூர்த்தி
*************
பதினஞ்சு நாள் சாட்டு
பதினஞ்சாம் நாள் பொங்கல்
பொங்கல் முடிஞ்சதும் கெடாவெட்டுனு
ஊரே கலகலப்பாயிடும்னு
மாடசாமிக்கு ஒரே கொண்டாட்டம்
“ஊருக்குள்ள கெடாவெட்டு முகலமா
இருக்கறதென்னமோ நெசந்தே
ஆனா, ஆண்டாண்டுக்கு பொங்கல் வந்தாலும்
பச்சரிசி பொங்கச் சோறுதே
நமக்குக் கொடுப்பின
பெத்துப் பொறப்புக்கு
ஒருவா மொளகுத் தண்ணி
ஊத்திப் பாக்க வக்கிருக்கா…
ஊரு மகராசருங்க கொட்டற
மிச்சம் மீதிலதே
எத்தினி நாளைக்கு நானும்
வண்டு கட்டி வடிச்சுப் போடறது
ஊருக்கு நல்ல புள்ளையா இருந்துட்டு
தெனாவட்டாச் சுத்தற புருஷனுக்கு
வாக்கப் பட்டதுக்கு வதுலா
ஒரு சாமியாருக்கு வாக்கப் பட்டிருக்கலாம்
அவரு பேச்சக் கேட்டு
மனசக் கொன்னுபோட்டு
பொறவுக்குச் சுத்திட்டு இருந்திருக்கலாம்
ஊருபூரா போய்
விருந்துச் சோறு திங்கற நாம
ஒரு நாளைக்காச்சும் விருந்துபோட
துப்பில்லையான்னு….”
ஒவ்வொரு பொங்கலப்பவும்
மூக்கச் சிந்தி நம்ம அழுக்கு வேட்டில
தடவுறான்னு மாடசாமி
நொந்துதே போய்ட்டான் பாவம்
குண்டடம் சந்தைல ரங்கனிடம் சொல்லி
ஒரு கெடாக் குட்டி வாங்கியாச்சு
இனி மேற்கொண்டு செலவுக்கு
சமாளிச்சாப் போதும்
அதுக்கு என்ன வழின்னு
ஊரு சேரி அழப்புக்குப் போற எடமெல்லாம்
யோசனையோடவே அலைஞ்சான்
அழப்புக்குப் போற எடத்தில
ஆளுக்கு அஞ்சு பத்து கொடுத்தாங்கன்னா
கெடாவெட்ட சமாளிச்சிடலாம்னு
நெனச்சாலும் அது ஆகறதா தெரியல
பொங்கலுக்கு வாங்கன்னு சொல்வானா
இல்ல… பொங்க வைக்க காசு
கடனாக் கொடுங்கன்னு கேட்பானா
சனந்தே என்ன நெனைக்கும்னு
எச்சைய முழுங்கிட்டு வந்திடுவான்
காச நெனச்சு நெனச்சு
பைத்தியம் புடிக்கிற நெலமைக்கு
ஆளான மாடசாமி
குட்டிச் செவுத்துமேல உக்காந்திட்டு
புண்பட்ட மனச பொகையுட்டு
ஆத்திட்டு இருந்தான்
அந்த நேரத்தில வேகுவேகுன்னு
ரங்கன் சவரப்பெட்டியோட
யாருக்கொ முடிவெட்டப் போனத
பார்த்த மாடசாமிக்கு
பளீர்னு மின்னலாட்டம் ஒரு யோசன
வந்து உதிச்சுது
இவனும் வேகவேகமா
பொஞ்சாதியப் பார்க்க ஓடினான்
தான் போட்ட திட்டத்த சாமி மேல
பாரத்தப் போட்டுச் சொல்லிக்கிட்டே
என்னோட யோசன எப்படின்னு
பொஞ்சதிய தெனாவட்டாப் பார்த்தான்
மனுஷன் நல்ல பேச்சுத்தே
பேசறான்னு மெச்சிக்கிட்டா அவளும்
மாடசாமியோட திட்டம் என்னான்னா…
கெடா வெட்டுக்கு ஆகுற செலவ
எப்படியாச்சும் வசூல் பண்ணிடணும்
அப்பத்தே கடன கட்ட முடியும்
அதனால…. தன்னோட
பெரிய பையனுக்கு மொட்டை
போடறதா முடிவு செஞ்சிட்டான்
******
ஞா. தியாகராஜன் கவிதைகள்
1.
அப்படியே இருக்கிறது இந்த பகல் நேற்றை போல
நிறுத்தப்பட்ட வாகனங்கள் கிளப்பப்படாத நிலையில்
இதே நேரத்திற்கு திறக்கப்படும் முடிதிருத்த நிலையத்திலிருந்து
பத்தி வாசனை கமழ்கிறது
இந்த நேரத்திற்கு நிகழுமெல்லாம் ஒழுங்கு குழையாது
ஒரு நாடகத்தைப் போல் தொடங்குகிறது
எவனோ சொருகிய ஒரு வாளிலிருந்து வழியுமென் குருதியை
தடவிப்பார்க்கிறேன் விரல்களில்
பின் வெளிச்சம் வரும் சாத்தியங்களை அடைக்கிறேன்
நினைத்து மாயும் ஆன்மாவிலிருந்து என் முட்டாள்
தனங்கள் வழிகின்றன
இந்த இருப்பை நியாயமாக்க எனக்கொரு எளிய வாய்ப்பு
நல்குங்கள்
அல்லது நான்
நீங்கள் விரும்பாத ஒரு அதிகாலை காட்சியாக துலங்க
விரும்புகிறேன்.
2.
என்னுடைய இந்த தனிமைக்காக நானென் ஒரு கண்ணை
சிதைத்துகொள்ள இருக்கிறேன்.
பிழைப்பின் கீழ்மட்ட வேலைகளுக்கு தகுதியுரித்தவர்களை
மனமொப்பி கடந்துவிடும் மனிதர்கள்
சரியாக நான் வெளியே நிறுத்தப்பட வேண்டியவன் என்றார்கள்
முரணாக திரிபவனின் சுவடுகள் சந்தேகத்துக்குரியவை
சில நிழல்கள் தங்கள் கிரகத்திற்குள் விழும் தங்களைப்
போன்ற அந்நிய நிழல்களை
இருட்டடிப்பு செய்தன
நிழல்களுக்குரியவர்கள் எளிதாக பீடி குடிக்கும்
போராட்டத்தை மேற்கொண்டனர்
புரியாமல் எழுந்து சென்றேன் வாஷ்பேஷனுக்கு
குழாய் திருகிலிருந்து வெளிப்பட்ட விமர்சகர் என்
எழுத்தை இரவில் திவாலாக்கி விடுவதாக
கூறினார்.
கைகளை துடைத்துகொண்டு திறப்புகளை திறந்து வெளியே
வந்தேன்
பின் நானே எழுதினேன் சில மணி நேரங்களுக்கு முன்
ஒரு படைப்பாளன் மரித்து விட்டானென.
3.
என் பெயர் வேறு ஒரு சௌகரியத்திற்காக
முட்டாளென அழைக்கப்பட்டேன்
எனக்கும் முன்பொரு காலத்தில் தரையில் விழும் கருமையான
நிழல் இருந்தது
அசந்தர்ப்ப வாதங்களால் நானொரு கையலாகதவனாக புனையப்பட்டேன்
சில வரிகளை வாசித்து முடிக்கும் முன் எனக்கு சில
கட்டளைகள் விதிக்கப்பட்டன
சாலையில் தீட்டப்பட்ட ஓவியத்திலிருந்து வருமானத்தை
பொறுக்கி கொள்ளும்
ஒரு அதி உன்னத வாழ்வு சித்திரமாய் வரையப்படுவதற்குரியது
நேர்மறையாக சிந்திக்க சொல்லும் பயிலரங்குகளின்
கண்ணாடி கதவுகளை தள்ளிகொண்டு
வெளியே வந்து அவசரமாக சிகரெட் புகைத்தேன்.
காலி பாட்டில்களை சேகரம் செய்யும் வீடற்றவனின்
சேர்க்க முடியாத சுருதி நான்
ஒருகால் நீங்கள் நேர நிர்வாகியாக இருந்தால்
உங்கள் கைப்பையை இங்கே வைக்க முடியாது
எதிலோ வயப்பட்டவனாக காணப்பட்டதால் இவர்கள் ஒரு
வசதிக்காக
அவனை சோம்பேறி என்று விளித்தார்கள்.
விலக்கப்பட்டவன் நியாயம் கோரினான்
பதிலளிப்பதே பொருட்படுத்துவதாகி விடுமென நினைத்திருக்கலாம்..?
4.
நான் எனக்கு பொருத்தமான ஜோடி கால்களை தேடினேன்
நான் ஒரு பேயாக இருப்பதால் இரவுகள் குறித்து அதிகம்
எழுதப்பட்டிருந்தது அதில்
இன்றோடு இறந்து விடுவேனென மீண்டும் நம்பினேன்
பொருந்தாத பாவனைகளுடன் நிறுத்தப்படும்போது
அது குறித்து பின்னால் வருத்தப்படுபவனாக இருந்தேன்
எல்லாவற்றையும் கடக்க தோணி தந்தார்கள்
தனியே மிதந்து செல்லும் அதன் அழகை வியந்தோதும்
போது
முற்றாக தொடர்பற்றவனானேன்
மாயயதார்த்த கதைகளை போல வேண்டாவிட்டால் மறைந்துவிடும்
கதாபாத்திரமாக எழுதப்பட ஆசைப்பட்டேன்
துவராங்களற்ற
சுவர்களை திறக்க கைப்பிடிகளை துழாவும் என் கரங்களை
தெரியாமல் மறைத்துக்கொள்ள முயன்றேன்
முடிவாக கட்டை விரலை அறுத்துகொண்டு அழுது அரற்றலாமென
தோன்றியது
அவசர வேலையாக அதற்குள் வந்தது நேற்றே முடிவு செய்திருந்த
அதிகம் அழுத்தம் கொடுக்காத நீலநிற கயிறொன்று
No comments:
Post a Comment